Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வனவிலங்குகளை கண்காணித்தல்

வனவிலங்குகளை கண்காணித்தல்

வனவிலங்குகளை கண்காணித்தல்

உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து ஆராய்வதற்காக ஒரு சிறிய ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உங்கள் முதுகில் இணைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். திருமதி கிப்சன் என பெயர் சூட்டப்பட்ட சுற்றித்திரியும் ஆல்பட்ராஸ் பறவையின் வாழ்க்கையே அப்படித்தான். அதன் மீதும் அதேபோல மற்ற பறவைகள் மீதும் பொருத்தப்பட்டுள்ள சிறிய டிரான்ஸ்மிட்டர்கள் அனுப்பும் சமிக்கைகளை விண்கோள்கள் பெற்று அவற்றை மறுபடியும் பூமிக்கு அனுப்புகின்றன; அவற்றின் உதவியால் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பறவையை பற்றி ஆராய முடிகிறது. இப்படி கிடைத்திருக்கும் தகவல் இந்த அருமையான பறவைகளைப் பற்றிய சில புதிய விஷயங்களை புரிய வைத்துள்ளது; அந்தப் பறவைகளைப் பாதுகாப்பதில் இந்தத் தகவல் உதவும் என நம்பப்படுகிறது.

சுற்றித்திரியும் ஆல்பட்ராஸ்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 300 கிலோமீட்டர் தூரம் பறப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக ஆஸ்திரேலியா, விக்டோரியாவிலுள்ள லெ டிரோப் பல்கலைக்கழக அறிக்கை ஒன்று கூறுகிறது; சில சமயங்களில் அவை ஒரு நாளில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரம்கூட பறப்பதுண்டு. அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் 340 சென்டிமீட்டருக்கும் அதிகமாகும்; இன்றுள்ள பறவைகளில் இதுவே மிக நீளமானது. அவை கடலின் மேல், ஒரு கூட்டமாக அரை வட்டங்களில் மிதப்பது கண்கவர் காட்சியாகும்; இவ்வாறு அவை மாதக்கணக்கில் மிதந்து 30,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை கடக்கின்றன. ஐக்கிய மாகாணங்களிலும் இதைப் போன்ற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஹோனலுலூவிற்கு வடமேற்கில் உள்ள டர்ன் தீவில் வசிக்கும் லேசன் ஆல்பட்ராஸ் தனது ஒரேவொரு குஞ்சிற்கு உணவு தேடுவதற்காக அலூஷியன் தீவுகளுக்கு நான்கு முறை பயணித்ததாக அந்த ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தின; இதற்காக அது ஒவ்வொரு முறையும் 6,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

சுற்றித்திரியும் ஆல்பட்ராஸ்களில் ஆண் பறவைகளின் எண்ணிக்கையைவிட பெட்டைகளின் எண்ணிக்கை படுவேகமாக குறைய காரணம் என்ன என்பதையும் இந்த ஹை-டெக் ஆராய்ச்சிகளே தெளிவாக்கியிருக்கலாம். அடைகாக்கும் ஆண் பறவைகள் அன்டார்க்டிகாவிற்கு அருகிலேயே மீன் பிடிக்கின்றன; மாறாக அடைகாக்கும் பெட்டைகளோ உணவு தேடி இன்னும் வடக்கே, நீளமான இழைகளை உபயோகித்து மீன் பிடிக்கும் படகுகள் இருக்கும் இடம் வரை செல்வதாக அவற்றின் பயணப் பாதைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் படகுகளுக்கு பின்னால் இணைக்கப்பட்ட இரைகளைப் பிடிக்க இவை ‘டைவ்’ அடிக்கையில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடுகின்றன. அடைகாக்கும் சில பறவைக் கூட்டங்களில் பெட்டைகளைவிட ஆண் பறவைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மற்ற ஆல்பட்ராஸ் இனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உண்மையில், 1990-களின் மத்திபத்தில், ஆஸ்திரேலியாவிலும் நியூஜீலாந்திலும் வருடத்திற்கு சுமார் 50,000 பறவைகள் இப்படிப்பட்ட படகுகளுக்கு பின்னால் மாட்டிக்கொண்டு செத்தன. அதனால் பல்வேறு இனங்கள் அடியோடு அழிந்துவிடும் நிலைக்கு உள்ளாயின. உண்மை என்னவெனில், சுற்றித்திரியும் ஆல்பட்ராஸ் அழிந்து வரும் இனமாக ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள், மீன் பிடிக்கும் முறைகளை மாற்றியமைக்கவும் சுற்றித்திரியும் ஆல்பட்ராஸின் மரண எண்ணிக்கையை குறைக்கவும் வழி செய்துள்ளன. இருந்தாலும், குஞ்சு பொறிக்கும் பல்வேறு முக்கிய ஸ்தலங்களில்கூட இந்த இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பறவைகளுக்கு வளையம் கட்டுதல்

பறவைகளில் சில இனங்களை கண்காணிக்க மிகச் சிறிய எலக்ட்ரானிக் கருவிகள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றன; அதேசமயம், மிக மலிவான, எளிய முறைகளும் பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்துள்ளன. அதில் ஒன்றுதான் பறவைகளுக்கு வளையம் கட்டுதல்; அது, கணுக்கால் காப்புபோல ஒரு சிறிய உலோக அல்லது பிளாஸ்டிக் வளையத்தை பறவையின் காலில் கவனமாக கட்டுவதாகும்.

பறவைகளுக்கு வளையம் கட்டுதல், 1899-⁠ல்தான் முறையான ஓர் ஆராய்ச்சி ஏதுவாக பயன்பட ஆரம்பித்தது; அப்போது, டென்மார்க்கை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ஹான்ஸ் கிறிஸ்டியன் மார்டன்சன், “தனது பெயரும் விலாசமும் பொறிக்கப்பட்ட, தானே தயாரித்த உலோக வளையங்களை 165 இளம் ஸ்டார்லிங் பறவைகளின் கால்களில் கட்டினார்” என ஸ்மித்சோனியன் பத்திரிகை கூறுகிறது. வளையம் கட்டுதல் இன்று சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது; இது, பறவைகள் காணப்படும் இடங்கள், அவற்றின் இடப்பெயர்ச்சி பழக்கங்கள், நடத்தைகள், சமூக அமைப்பு, இனங்களின் எண்ணிக்கை, உயிர்வாழும் வீதம், இனப்பெருக்க வீதம் போன்ற விஷயங்களின் பேரில் பயனுள்ள தகவலை அளிக்கிறது. வேட்டையாட அனுமதி இருக்கும் இடங்களில், வேட்டையாடப்படும் பறவைகளின் நீண்டகால பாதுகாப்பை கட்டுப்படுத்தும் சட்டங்களைத் தீட்ட வளையம் கட்டுதல் அரசாங்கங்களுக்கு உதவுகிறது. பறவைகள் எவ்வாறு வியாதிகளாலும் இரசாயன நச்சுகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதையும் வளையம் கட்டுதல் காட்டிக் கொடுக்கிறது. மூளை அழற்சி, லைம் வியாதி போன்ற மனித நோய்கள் சில பறவைகளுக்கும் இருக்கலாம்; ஆகவே, அவற்றின் உயிரியலையும் பழக்கங்களையும் அறிவது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவியாக இருக்கலாம்.

வளையம் கட்டுதல் கொடூரமானதா?

பறவைகளுக்கு வளையம் கட்டுதல் பின்பற்றப்படும் நாடுகளில் அதற்குக் கட்டுப்பாடு உள்ளது, வளையம் கட்டுபவர்கள் பொதுவாக உரிமம் பெற வேண்டும். ஆஸ்திரேலியாவில், “பறவைகளை காயப்படுத்தாமல் பிடித்து, துன்புறுத்தாமல் வளையம் கட்ட, வளையம் கட்டுபவர்களுக்கு கவனமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வருடங்கள் நீடிக்கும் இந்தப் பயிற்சிக்கு அதிக அனுபவமும் தேவை” என ஆஸ்திரேலிய இயற்கை பாதுகாப்பு ஏஜென்ஸி கூறுகிறது. ஐரோப்பா, கனடா, ஐக்கிய மாகாணங்கள், இன்னும் பிற நாடுகளில்கூட இதேபோன்ற சட்டங்கள் அமலில் உள்ளன.

பறவை வளையங்கள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும், நிறங்களிலும், பொருட்களிலும் உள்ளன. பெரும்பாலான வளையங்கள், அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பாரமற்ற பொருட்களால் ஆனவை; ஆனால் நீண்ட காலம் உயிர் வாழும் அல்லது உப்புநீர் சூழலில் குடியிருக்கும் பறவைகளுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது சேதமடையாத பிற பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றன. வண்ண வண்ண வளையங்களைக் கட்டினால் பறவைகளை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதற்காக பல வளையங்களைக் கட்ட வேண்டியிருந்தாலும், அடையாளம் கண்டுகொள்ள அந்தப் பறவையை மீண்டும் பிடிக்கும் அவசியமில்லாததால் அதற்கு பிரச்சினை குறைவே.

எந்த விதமான வளையம் கட்டுதலை அல்லது குறியிடுதலை உபயோகித்தாலும், அதனால் பறவைகளுக்கு உறுத்துதல் ஏற்படாதபடியும் அவற்றின் நடத்தை, உடலியல், வாழ்நாள் காலம், சமூக வாழ்வு, வாழ்க்கை சூழல் அல்லது உயிர்வாழும் வாய்ப்புகள் போன்றவை பாதிக்கப்படாதபடியும் ஆராய்ச்சியாளர்கள் கவனமாக இருக்கின்றனர். உதாரணமாக, பளபளப்பான பட்டைகளை ஒரு பறவையின் இறக்கைகளில் பொருத்தினால் அது மற்ற விலங்குகளின் கண்ணில் எளிதில் படலாம் அல்லது அதன் இனச்சேர்க்கையை பாதிக்கலாம். சில இனங்கள் அவற்றின் கால்களிலேயே கழிவதால் அந்தப் பறவைகளுக்கு வளையம் கட்டினால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குளிர் பிரதேசங்களில், வளையங்களில் பனிக்கட்டி உருவாவதால் முக்கியமாக நீர்ப்பறவைகளுக்கு அவை ஆபத்தாக அமையலாம். இவை, பறவைகளுக்கு குறியிடுவதில் உட்பட்டுள்ள சில அம்சங்கள் மட்டுமே. என்றாலும், இத்திட்டம் திறம்பட்டதாக செயல்படவும் அதேசமயம் பறவைகளிடம் ஜீவகாருண்யத்துடன் நடந்துகொள்ளவும் அவற்றின் உயிரியல் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞானப்பூர்வ அறிவு எவ்வளவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

வளையமிட்ட அல்லது பட்டையிட்ட விலங்கைக் கண்டால் என்ன செய்வது?

கண்டெடுக்கப்படும் வளையங்களில் அல்லது பட்டைகளில் சில சமயம், தொலைபேசி எண் அல்லது விலாசம் காணப்படலாம்; உரிமையாளரோடு அல்லது பட்டை கட்டியவரோடு தொடர்புகொள்ள இது உங்களுக்கு உதவும். a பிறகு, அந்தப் பட்டையை எங்கே, எப்போது கண்டுபிடித்தீர்கள் போன்ற தகவல்களை அவருக்கு தெரிவிக்கலாம். உதாரணத்திற்கு அது மீனாக இருந்தால், அதற்கு பட்டை கட்டிவிட்டதிலிருந்து எவ்வளவு வேகத்தில் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதை தீர்மானிக்க உயிரியல் வல்லுனருக்கு அந்தத் தகவல் உதவும்.

உலகமுழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் உழைப்பு, தாங்கள் கண்டுபிடிக்கும் வளையங்களையும் பட்டைகளையும் பற்றி தகவல் தெரிவிக்கும் நல்மனமுள்ளவர்களின் முயற்சி ஆகியவற்றால் வனவிலங்குகள் பற்றிய ஆச்சரியமான விவரங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. சான்ட்பைப்பர் குடும்பத்தைச் சேர்ந்த 100 முதல் 200 கிராம் எடையுள்ள ரெட் நாட் என்ற பறவையை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். சில ரெட் நாட்டுகள் ஒவ்வொரு வருடமும், கனடாவின் வடக்கு முனையிலிருந்து தென் அமெரிக்காவின் முனை வரை சென்று திரும்பும் விவரத்தை விஞ்ஞானிகள் இப்போது அறிந்திருக்கின்றனர்; இது சுமார் 30,000 கிலோமீட்டர் தொலைவாகும்!

வயதானாலும் ஆரோக்கியமாயிருந்த ஒரு ரெட் நாட்டின் வளையம், அது 15 வருடங்களாக இவ்வாறு பயணித்திருக்கலாம் என காண்பித்தது. ஆம், இந்தச் சிறிய பறவை 4,00,000 கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கலாம்; இது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள சராசரி தூரத்தைவிட அதிகமாகும்! அற்புதமான இந்த சின்னஞ்சிறிய பறவை தன் உள்ளங்கையில் அமர்ந்திருக்க இயற்கை எழுத்தாளரான ஸ்காட் வைடன்சால் இவ்வாறு கூறினார்: “இப்பரந்த உலகை இணைக்கும் இந்தப் பயணிகளைக் கண்டு மலைப்போடும் மரியாதையோடும் என் தலையை ஆட்டுகிறேன், என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதுவே.” பூமியிலுள்ள பல்வேறு படைப்புகளைப் பற்றி அதிகமதிகமாக அறிந்துகொள்கையில், “வானத்தையும் பூமியையும் . . . அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கின” யெகோவா தேவனுக்கான பயபக்தியும் மரியாதையும் நமக்குள் மிகுதியாக பெருகுகின்றன.​—சங்கீதம் 146:5, 6. (g02 3/22)

[அடிக்குறிப்பு]

a அதிலுள்ள விவரங்கள் தெரியாதளவிற்கு வளையங்கள் அல்லது பட்டைகள் பழையதாகலாம். என்றாலும், எட்சிங் திரவத்தை உபயோகித்து கண்ணுக்கு புலப்படாத இந்த விவரங்களையும் படித்துவிட முடியும். ஐக்கிய மாகாணங்களில் அமைந்த பறவைகளுக்கு வளையம் கட்டும் ஆய்வுக்கூடத்தில் பணிபுரிவோர் ஒவ்வொரு வருடமும் அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான வளையங்களை படித்து புரிந்துகொள்கின்றனர்.

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

குறியிடுவதிலும் தடம் கண்டுபிடிப்பதிலும் பல்வேறு உத்திகள்

பறவைகள் மட்டுமல்லாமல் அநேக விலங்குகளும் ஆராய்ச்சிக்காக குறியிடப்படுகின்றன. விஞ்ஞான குறிக்கோள்கள், அந்த விலங்குகளின் உடல் அமைப்புகள், பழக்கங்கள் போன்றவற்றை பொருத்தே குறியிடும் உத்திகளும் மாறுபடுகின்றன. கால் வளையங்கள் மட்டுமல்ல, கொடிகள், பானர்கள், பட்டைகள், பெயின்டுகள், பச்சைக் குத்துதல், சாயங்கள், தழும்புகள், கழுத்துப் பட்டைகள், ரேடியோ கருவிகள், மைக்ரோ கம்ப்யூட்டர்கள், (குறியிட்ட பட்டைகள் பொருத்தப்பட்ட) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அம்புகள், கட்டை விரலில், காதில், வாலில் கொஞ்சத்தை வெட்டிவிடுதல் போன்ற பல்வேறு உத்திகளையும் கருவிகளையும் ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கின்றனர். இவற்றுள் சில மிகவும் மலிவானவை. காம்கார்டருடன் கூடிய சிறிய எலக்ட்ரானிக் கருவி போன்ற மற்றவையோ மிகவும் விலையுயர்ந்தவை; 15,000 டாலர் மதிப்புள்ள இக்கருவி சீல்களின் ‘டைவ்’ அடிக்கும் பழக்கங்களை ஆராய உபயோகிக்கப்படுகிறது.

பாஸிவ் இன்டகிரேட்டட் டிரான்ஸ்பான்டர் என அழைக்கப்படும் ஓர் எலக்ட்ரானிக் கருவி, மயக்கமூட்டப்பட்ட விலங்கின் தோலுக்கு அடியில் அல்லது உடலுக்குள் செலுத்தப்படலாம்; பின்னர், விசேஷித்த கருவியை உபயோகித்து வெளியிலிருந்தே தகவலறியலாம். நீலத்துடுப்பு சூரை மீனை ஆராய, ஆர்கைவல் டாக் அல்லது ஸ்மார்ட் டாக் என்ற ஒரு சிறிய கம்ப்யூட்டரை விஞ்ஞானிகள் மீனுக்குள் பொருத்துகின்றனர். இந்த மைக்ரோ சிப்புகள், தட்பவெப்பம், ஆழம், ஒளியின் அளவு, நேரம் போன்ற தகவல்களை ஒன்பது வருடங்கள் வரை சேகரித்து, சேமித்து வைக்கின்றன. அந்த டாக்கை திரும்ப வெளியே எடுக்கையில் ஏராளமான அரிய தகவலைப் பெறலாம். ஒளி அளவையும் நேரம் பற்றிய தகவலையும் ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் அந்த மீனின் பயணத்தைப் பற்றியும் அறியலாம்.

பாம்புகளுக்கு குறிப்பிட்ட செதிள்களை வெட்டுதல், ஆமைகளின் ஓட்டில் வடு ஏற்படுத்துதல், பல்லிகளுக்கு கட்டை விரலை வெட்டுதல், அலிகேட்டர்களுக்கும் முதலைகளுக்கும் கட்டை விரலை வெட்டுதல் அல்லது வாலிலுள்ள கடினமான தோல்களை நீக்குதல் மூலம் குறியிடலாம். சில விலங்குகளின் தோற்றத்தில் இயற்கையாகவே போதுமான அளவு வேறுபாடுகள் இருக்கும், ஆகவே புகைப்படங்களை வைத்தே ஒவ்வொன்றையும் வேறுபடுத்துவது எளிது.

[படங்கள்]

கருங்கரடிக்கு காது பட்டையிடுதல்; டாம்செல்ஃபிஷ் மீதுள்ள ஸ்பகெட்டி பட்டை; அலிகேட்டர்களின் வாலிலுள்ள பட்டைகள்

விண்கோள் டிரான்ஸ்மிட்டர் பொருத்திய பெரெக்ரைன் வல்லூறு

அக டெலிமெட்ரி கருவி பொருத்தப்பட்ட ரெயின்போ டிரவுட்

[படங்களுக்கான நன்றி]

கரடி: © Glenn Oliver/Visuals Unlimited; டாம்செல்ஃபிஷ்: Dr. James P. McVey, NOAA Sea Grant Program; அலிகேட்டர்: Copyright © 2001 by Kent A. Vliet; பக்கங்கள் 2-லும் 15-லும் உள்ள வல்லூறு: Photo by National Park Service; மீனுடன் மனிதர்கள்: © Bill Banaszewski/Visuals Unlimited

[பக்கம் 13-ன் படம்]

ஷார்ப்-ஷின்டு ஹாக்கிற்கு வளையம் கட்டுதல்

[படத்திற்கான நன்றி]

© Jane McAlonan/Visuals Unlimited