Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது?

ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது?

“ஒரு நாள் ஊழியம் செய்கையில் திடீரென எனக்கு தெரிந்த ஒருவனைப் பார்த்தேன். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்! என்னோடு ஊழியம் செய்தவர்தான் உதவிக்கு வந்து அவனிடம் பேசினார்.”​—ஆல்பெர்டோ.

“இந்த வீதியில் என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்னு தெரியும், அதனால் எல்லா வீட்டிலும் அண்ணனையே பேச சொன்னேன். கொஞ்ச நேரத்தில் அண்ணன் சோர்ந்து போனதால் அடுத்த வீட்டில் என்னை பேச சொன்னான். சரியென்று கதவை தட்டினால், ஐயோ, என் பிரண்ட் அல்லவா வருகிறான்? நான் ரொம்ப பயந்து போயிட்டேன்!”​—ஜேம்ஸ்.

மதத்தைப் பற்றி பேசுவது “இயல்பான” விஷயம் என இளைஞர் பெரும்பாலும் நினைப்பதில்லை. உண்மை கிறிஸ்தவர்களாக உள்ள இளைஞர்களோ, தங்கள் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள கடவுள் கொடுத்த அரிய வாய்ப்பை மதிக்கின்றனர். ஆகவே, ஆயிரக்கணக்கான இளம் யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்கின்றனர். ஆனால், தங்கள் பள்ளியில் படிக்கும் யாரையாவது சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தோடுதான் சிலர் அதில் பங்குகொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு மேல்நிலை பள்ளி படிப்பை முடித்துவிட்ட ஜெனிஃபர், “என்னுடைய ஸ்கூல் பசங்களை ஊழியத்திலே இப்போ பார்த்தாலும் பயந்து நடுங்குகிறேன்” என்று கூறுகிறாள்.

நீங்கள் ஓர் இளம் கிறிஸ்தவராக இருந்தால் சில சமயங்களில் இவ்வாறு உணரலாம். மற்றவர்களால் ஒதுக்கப்படுவதை யாருமே விரும்புவதில்லைதான்; ஆகவே, ஸ்கூல் பிள்ளைகளிடம் மதத்தைப் பற்றி பேச கொஞ்சம் பயப்படுவது மிகவும் இயல்பானதே. a ஆனால், பயத்தினால் செயலிழந்து போக வேண்டிய அவசியமில்லை. ‘அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு’ என பைபிள் அழைப்பவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டவற்றை அவர் நம்பினார். என்றாலும், “யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷ”னாக இருந்தார் என யோசேப்பைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. (யோவான் 19:38) உங்கள் நட்புறவை இரகசியமாக வைக்க விரும்புகிற நண்பர் இருந்தால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? (லூக்கா 12:8, 9) ஆகவே, எல்லா கிறிஸ்தவர்களுமே தங்கள் விசுவாசத்தை “அறிக்கை பண்ண” வேண்டுமென கடவுள் எதிர்பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. (ரோமர் 10:10) உங்கள் பள்ளியிலுள்ள இளைஞரிடம் பேசுவதும் இதில் அடங்கும்.

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, இயேசுவின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்குமளவிற்காவது தன் பயத்தை மேற்கொண்டார். உங்கள் பயத்தை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம்?

பிரசங்கிக்க விருப்பத்தை வளர்த்தல்

தன் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள அப்போஸ்தலன் பவுல் துளியும் தயங்கவில்லை. பைபிளின் செய்தியை அறிவிக்க விரும்பியதாக ரோமர் 1:15-⁠ல் தன்னைப் பற்றி கூறுகிறார். அவர் ஏன் அப்படி விரும்பினார்? 16-⁠ம் வசனத்தில் அவர் கூறுவதாவது: “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; . . . விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது.” நீங்கள் எப்படி? இதுதான் சத்தியம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? (ரோமர் 12:2, NW) பைபிளின் செய்தி “இரட்சிப்பு உண்டாவதற்கு . . . தேவ பெலனாயிருக்கிறது” என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?

உங்கள் பெற்றோரோடு கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வது மட்டுமே போதாது. “அம்மா, அப்பா சொல்வதால் கூட்டங்களுக்கு போகிறோம், அதில் கஷ்டமே இல்லை. ஆனால் பைபிளைப் பற்றி யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல என்னால் முடியாது” என டெப்ரா என்ற இளம் பெண் கூறுகிறாள். அதைப் போலவே, “இதுதான் சத்தியம் என்று நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என மி யங் என்ற இளைஞனும் ஒப்புக்கொள்கிறான்.

பைபிளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள எது உங்களை தூண்டும்? பைபிளை தனிப்பட்ட விதமாக படிப்பதே. “பைபிளை தனிப்பட்ட விதமாக படிக்கும்போது சத்தியத்தை உங்கள் சொந்தமாக்கி கொள்கிறீர்கள். உங்களுக்காகவே நீங்கள் படிக்கிறீர்கள்” என ஷான் என்ற இளைஞன் கூறுகிறான். படிப்பதில் அனைவருக்குமே ஆர்வமில்லை என்பது உண்மையே. ஷவான் என்ற பெண் இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “எனக்கு படிக்கவே பிடிக்காது. ஆகவே, காவற்கோபுரம், விழித்தெழு!-வை வாசிப்பது அல்லது பைபிளை தினந்தோறும் படிப்பது ஆரம்பத்தில் பெரும்பாடாக இருந்தது. ஆனால் போகப் போக பழகிவிட்டது.”

அப்படிப்பட்ட ஊக்கமான படிப்பால் என்ன பலன்? “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (ரோமர் 10:17) உங்கள் விசுவாசமும் உறுதியும் அதிகரிக்கையில் உங்கள் மனப்பான்மை நிச்சயம் மாறும். “ஒரு கிறிஸ்தவராக இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல பெருமைப்பட வேண்டிய விஷயமே” என பிரேஸிலைச் சேர்ந்த எலிஸான்ஜெலா என்ற இளம் பெண் முடிவுக்கு வருகிறாள். உங்கள் விசுவாசம் வளர வளர, உங்கள் ஸ்கூல் பிள்ளைகள் உட்பட மற்றவர்களிடம் பேச வேண்டும் என்ற உந்துவித்தலை பெறுவீர்கள். “விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்” என பவுல் கூறினார். (2 கொரிந்தியர் 4:13) அதோடு, உயிரளிக்கும் இந்த அறிவை நீங்கள் தினந்தோறும் சந்திக்கும் இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள தவறினால், எப்படி அவர்களுடைய ‘இரத்தப்பழிக்கு நீங்கி சுத்தமாயிருப்பீர்கள்’?​—அப்போஸ்தலர் 20:26, 27.

பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேச தங்களுக்கு தெரியவில்லை என சில இளம் கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். “என்ன சொல்வதென்றே தெரியாதபோது பிரசங்கிப்பதில் சந்தோஷமே இல்லை” என்று இளம் ஜாஷுவா கூறுகிறான். பைபிளைப் பற்றிய ஆழமான புரிந்துகொள்ளுதலை பெற்றால் அதை உங்களால் திறம்பட்ட விதமாக உபயோகிக்க முடியும். (2 தீமோத்தேயு 2:15) யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலுள்ள இளைஞர், போதிக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட உதவி வேண்டுமென்றால் சபை மூப்பர்களை அணுகலாம். “பைபிள் பிரசுரங்களை மட்டும் கொடுத்துவிட்டு வராமல் உண்மையில் ஜனங்களோடு உரையாட ஆரம்பித்த பிறகே பிரசங்கிப்பதை அனுபவிக்க ஆரம்பித்தேன்” என ஜெர்மனியைச் சேர்ந்த இளம் மாத்தியாஸ் கூறுகிறான்.

கடைசியாக, தைரியமாய் பேச உதவும்படி நீங்கள் கடவுளிடம் ஜெபிக்கலாம். (அப்போஸ்தலர் 4:30) இந்த விஷயத்தில் கடவுளுடைய உதவியை அப்போஸ்தலன் பவுல் நேரடியாக அனுபவித்தார். “வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம்” என 1 தெசலோனிக்கேயர் 2:2-⁠ல் அவர் கூறுகிறார். இந்த வாக்கியத்தை, “கடவுள் எங்கள் இருதயங்களிலிருந்து பயத்தை நீக்கிவிட்டார்” என்றும் மொழிபெயர்க்கலாம் என ஒரு புத்தகம் கூறுகிறது. ஆகவே, உங்கள் இருதயத்திலிருந்து பயத்தை நீக்கிவிட கடவுளிடம் ஏன் ஜெபிக்கக்கூடாது?

உங்களை அடையாளம் காட்டுதல்

அந்த ஜெபத்திற்கு இசைவாக தைரியமான ஒரு காரியத்தை நீங்கள் செய்யலாம். “நீங்கள் ஒரு கிறிஸ்தவரென உங்கள் ஸ்கூல் பிள்ளைகளிடம் கூறுங்கள்” என்று பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஷிக் கூறுகிறாள். ‘அந்தரங்க சீஷனாயிருக்க’ நீங்கள் விரும்பவில்லை அல்லவா? தெரிந்த யாரையாவது ஊழியத்தில் பார்த்துவிடுவோமோ என ஒரு காலத்தில் பயந்ததாக ரிபெகா என்ற இளம் பெண் ஒப்புக்கொள்கிறாள். ஆனால், “நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வீர்கள் என அவர்களிடம் கூறினால், ‘என் வீட்டிற்கு எப்போது வருவாய்?’ என சில சமயங்களில் கேட்பார்கள்” என்பதை தான் கண்டுபிடித்ததாக கூறுகிறாள்.

ஆனால், எதிர்பாராமல் ஒருவரை சந்திக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? ஸ்கூல் பிள்ளைகளிடம் சத்தியத்தை பேச வாய்ப்புகளை தேடுங்கள். “அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” என அப்போஸ்தலன் பவுல் எழுப்பிய கேள்விகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? (ரோமர் 10:14) ஸ்கூல் பிள்ளைகள் கேள்விப்பட வேண்டுமென்றால் உங்களால்தான் உதவ முடியும். “பள்ளி என்பது நாம் மட்டுமே ஊழியம் செய்ய முடிந்த பிராந்தியமாகும்” என இரைடா என்ற இளம் பெண் கூறுகிறாள். ஆகவே, அநேக இளைஞர் தங்கள் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு சந்தர்ப்ப சாட்சி கொடுக்கின்றனர்.

சில சமயங்களில், உங்கள் பள்ளி பாடங்கள்கூட பைபிள் சத்தியங்களை பகிர்ந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கும். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி என்ற பெண் இவ்வாறு கூறுகிறாள்: “சயன்ஸ் க்ளாசில் பரிணாமத்தை பற்றி கலந்தாலோசித்தோம், அப்போது என் நம்பிக்கைகளை விளக்கினேன். யெகோவாவின் சாட்சிகளுக்கு அறிவு பத்தாது, அவர்கள் பள்ளியில் படிக்கவே லாயக்கற்றவர்கள் என்று ஒரு பையன் என்னை கிண்டலடித்தான். உடனே வகுப்பிலிருந்த மாணவர்கள் எல்லாரும் சேர்ந்துகொண்டு எனக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.” தெளிவாகவே, கிறிஸ்தவளாக சிறந்த முன்மாதிரி வைத்து நல்ல பெயர் எடுத்திருந்ததால் அவளுக்கு பலன் கிடைத்தது. “அதனால், உங்கள் மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? b என்ற புத்தகத்தை என்னுடன் படிக்கும் பெண்ணுக்கு கொடுக்க வாய்ப்பு கிடைத்தது” என ஜேமி தொடர்ந்து கூறுகிறாள்.

ருமேனியாவிலுள்ள 14 வயது பெண் ரோக்சானாவும் அதே போன்ற அனுபவத்தை கூறுகிறாள்: “மதுபானம், புகையிலை, போதைப் பொருட்கள் பற்றி க்ளாசில் உரையாடுவோம் என்று டீச்சர் கூறினார். ஆகவே, ‘புகைப்பதை எப்படி நிறுத்தலாம்?’ என்பதை கலந்தாலோசிக்கும் மார்ச் 22, 2000, தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையை எடுத்து சென்றேன். அதைப் பார்த்தவுடன் ஒரு தோழி அதை எடுத்துக்கொண்டு திருப்பி தர மறுத்துவிட்டாள். அதை வாசித்த பிறகு, புகைப்பதை நிறுத்த தீர்மானித்திருப்பதாக கூறினாள்.”

எப்போதுமே நீங்கள் சொல்வதை இவ்வாறு கேட்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; . . . எது வாய்க்குமோ என்று . . . நீ அறியாயே” என பிரசங்கி 11:6 நம்மை உந்துவிக்கிறது. பள்ளியில் உங்கள் விசுவாசத்தைப் பற்றி பேசுவதால் பயன் ஏதும் இல்லாவிட்டாலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஸ்கூல் பிள்ளைகளைப் பார்த்துவிட்டால் சந்தோஷமாக கலந்துபேசவாவது அது வழிசெய்யும். “உங்கள் ஸ்கூல் பிள்ளைகளிடம் சாட்சி கொடுப்பது ரொம்ப சுலபம், உங்களுக்குத்தான் அவர்களை ஏற்கெனவே தெரியுமே” என இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெசிக்கா என்ற பெண் கூறுகிறாள். உங்கள் நம்பிக்கைகளை அறிந்துகொள்ள ஸ்கூல் பிள்ளைகள் சிலர் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கலாம்.

எல்லாருமே உங்களை தயவுடன் ஏற்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், இயேசு பின்வரும் நடைமுறையான ஆலோசனையைக் கொடுத்தார்: “எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டை . . . விட்டுப் புறப்படும் போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.” (மத்தேயு 10:14) அதாவது, அவர்கள் செய்தியைக் கேட்க மறுத்துவிட்டால் உங்களை அவமதித்ததாக நினைக்காதீர்கள். கேட்க ஆர்வமுள்ளவர்களை தேடி சமாதானத்தோடு அங்கிருந்து சென்றுவிடுங்கள். செவிகொடுக்க ஆர்வமுள்ளவர்களாயும், சத்தியத்திற்காக தாகமுள்ளவர்களாயும் இருக்கும் நேர்மை இருதயம் படைத்தவர்களை எப்போதாவது சந்திப்பீர்கள். அவர்களில் ஒருவர் உங்கள் பள்ளி தோழராக இருந்தால் பெருமகிழ்ச்சி அல்லவா? அப்படியிருந்தால், உங்கள் விசுவாசத்தைப் பற்றி ஸ்கூல் பிள்ளைகளிடம் பயப்படாமல் பேசியதற்காக சந்தோஷப்படுவீர்கள். (g02 3/22)

[அடிக்குறிப்புகள்]

a மார்ச் 8, 2002 தேதியிட்ட எமது இதழில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ஸ்கூல் பிள்ளைகள் யாராவது பார்த்துவிட்டால்?” என்ற கட்டுரையைக் காண்க.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

“பைபிளை தனிப்பட்ட விதமாக படிக்கும்போது சத்தியத்தை உங்கள் சொந்தமாக்கி கொள்கிறீர்கள்.”​—ஷான்.

[பக்கம் 10-ன் படம்]

நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என கூற பயப்படாதீர்கள்

[பக்கம் 10-ன் படம்]

பைபிள் சத்தியங்களை பகிர்ந்துகொள்ள பள்ளி பாடங்கள் அடிக்கடி வாய்ப்பளிக்கின்றன