Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயர் இரத்த அழுத்தம்—தவிர்ப்பதும் கட்டுப்படுத்துவதும்

உயர் இரத்த அழுத்தம்—தவிர்ப்பதும் கட்டுப்படுத்துவதும்

உயர் இரத்த அழுத்தம்​—தவிர்ப்பதும் கட்டுப்படுத்துவதும்

பிரேஸிலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மேரியனுக்கு ஒரே பயம்! ஏனெனில், திடீரென அவள் மூக்கிலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. “அவ்வளவுதான் சாகப்போகிறேன் என்றே நினைத்தேன்” என அதை நினைவுபடுத்தி கூறுகிறாள். உயர் இரத்த அழுத்தம் (arterial hypertension) காரணமாகவே மூக்கிலிருந்து இரத்தம் வடிந்ததாக டாக்டர் கூறினார். “ஆனால் எனக்கோ எந்தப் பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லையே” என மேரியன் பதிலளித்தாள். “உயர் இரத்த அழுத்தம் இருப்பதே அநேகருக்கு தெரியாது, ஏனெனில் அதற்கு அறிகுறிகள் என எதுவும் இருப்பதில்லை” என டாக்டர் கூறினார்.

உங்களுடைய இரத்த அழுத்தம் எப்படியுள்ளது? இப்போதைய வாழ்க்கை முறையால் எதிர்காலத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்பிருக்கிறதா? இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்? a

இரத்த ஓட்டத்தினால் இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தமாகும். இதை அளவிட, காற்று ஊதியதும் விரியும் ரப்பர் உறை ஒன்று கையில் சுற்றப்பட்டு, அழுத்தத்தை பதிவு செய்யும் கருவியோடு இணைக்கப்படும். இரத்த அழுத்தம் இரண்டு எண்களால் குறிக்கப்படுகிறது. உதாரணமாக, 120/80. முதல் எண், இதயத் தமனிகள் சுருங்கும்போது (சிஸ்டால்) உள்ள இரத்த அழுத்தத்தை குறிப்பதால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது. இரண்டாவது எண், இதயத் தமனிகள் விரிகையில் (டயஸ்டால்) உள்ள இரத்த அழுத்தத்தை குறிப்பதால் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மெர்குரியின் மில்லிமீட்டர் அளவுகளில் அளவிடப்படுகிறது. ஒருவரின் இரத்த அழுத்தம் 140/90-⁠க்கு அதிகமாக இருந்தால் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர்கள் கருதுகின்றனர்.

இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணம் என்ன? உங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். தண்ணீர் பைப்பை திறக்கும்போது அல்லது தண்ணீர் பாய்ச்சும் குழாயின் விட்டத்தை அல்லது குறுக்களவைக் குறைக்கும்போது தண்ணீரின் அழுத்தம் அதிகரிக்கிறது. இரத்த அழுத்தமும் அவ்வாறே ஏற்படுகிறது: இரத்த ஓட்டம் அதிகரித்தால் அல்லது இரத்தக் குழாயின் குறுக்களவு குறைந்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் எப்படி ஏற்படுகிறது? இதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம்.

உங்கள் கட்டுப்பாட்டிலில்லாத காரணிகள்

நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் ஒருவர் அந்த வியாதியால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு கருமுட்டைகளிலிருந்து உருவாகும் இரட்டையரைவிட ஒரே கருமுட்டையிலிருந்து உருவாகும் இரட்டையர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. “உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமான ஜீன்களை கண்டுபிடிப்பதை” பற்றி ஓர் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது; இது, உயர் இரத்த அழுத்தத்திற்கு பரம்பரை காரணிகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த உதவும். வயதாக ஆக இரத்த மிகு அழுத்தம் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாகவும் இதனால் கருப்பர் இன ஆண்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காரணிகள்

உங்கள் உணவை கட்டுப்படுத்துங்கள்! சிலருடைய, முக்கியமாய் சில கருப்பர்கள், முதியோர், சர்க்கரை வியாதி உள்ளோர், மிக அதிக இரத்த அழுத்தம் உள்ளோர் ஆகியோரில் உப்பு (சோடியம்) இரத்த அழுத்தத்தை மளமளவென அதிகரிக்கலாம். இரத்த ஓட்டத்தில் அதிகளவு கொழுப்பு இருந்தால் இரத்தக் குழாய்களின் உட்புற சுவர்களில் கொலெஸ்டிரால் படிய ஆரம்பித்து (இரத்தக் குழாய் தடிப்பு [atherosclerosis]), குழாய்களின் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். உடல் எடை, சராசரியைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது. உணவில் பொட்டாஷியம், கால்ஷியம் ஆகியவை அதிகம் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையலாம் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

புகைபிடித்தால் இரத்தக் குழாய் தடிப்பு, சர்க்கரை வியாதி, மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகியவை தாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆகவே, உயர் இரத்த அழுத்தக்காரர்கள் புகைபிடிப்பது ஆபத்தானது, இருதய நோய்கள் வருவதற்கும் இது வழிநடத்தலாம். இதற்கான அத்தாட்சி முரண்படுகிற போதிலும், காபி, டீ, கோலா பானங்கள் ஆகியவற்றிலுள்ள கஃபேனும் சரீர, மன உளைச்சல்களும் உயர் இரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கலாம். மேலும், அளவுக்கு அதிகமாக அல்லது வெகு நாட்களாக மதுபானங்களை பருகுவதும், உடல் உழைப்பு இல்லாததும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

உயர் இரத்த அழுத்தம் வரும் வரை சாதகமான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அக்கறை காட்ட வேண்டும். இன்று கவனமாயிருந்தால் நாளை நலமுடன் வாழலாம்.

உயர் இரத்த அழுத்தம் பற்றிய மூன்றாவது பிரேஸிலிய ஒப்பந்தம் (Third Brazilian Consensus on Arterial Hypertension), இரத்த அழுத்தத்தை குறைக்கும் வாழ்க்கை முறைக்குரிய மாற்றங்களை விவரித்தது. உயர் அல்லது சகஜநிலை இரத்த அழுத்தம் உள்ளோருக்கு அவை உதவியளிக்கும்.

குண்டாயிருப்போர் சமநிலையான, குறைந்த கலோரி உள்ள உணவு சாப்பிடும்படி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதேசமயம், அதிவேக, ‘அற்புத’ டயட்டுகளை தவிர்த்து மிதமான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஒரு நாளைக்கு ஆறு கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பைவிட அதிகமாக சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். b அதாவது, உணவு தயாரிக்கையில் உப்பு உபயோகிப்பதை வெகுவாக குறைப்பது, மேலும் பதனப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள், குளிர்பதன உணவுகள் (சலாமி, ஹாம், சாசேஜ் போன்றவை), புகையால் பதனப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறைப்பதும் அவசியமாகும். சாப்பாட்டில் கூடுதல் உப்பு சேர்க்காமல் இருப்பதும், சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவை அறிய பதனப்படுத்தப்பட்ட உணவின் லேபிள்களை வாசிப்பதும் உப்பு உட்கொள்வதை குறைக்கும் வழிகளாகும்.

பொட்டாஷியத்திற்கு “உயர் இரத்த அழுத்தத்தை எதிர்க்கும் பண்பு” இருப்பதால் அதை அதிகம் உட்கொள்ளும்படி பிரேஸிலிய ஒப்பந்தம் ஆலோசனை அளித்தது. ஆகவே, அளவான ஆரோக்கியமான உணவில் “குறைந்த சோடியமும் அதிக பொட்டாஷியமும் உள்ள உணவுகள்”​—பீன்ஸ், கரும்பச்சை நிற காய்கறிகள், வாழைப்பழம், தர்பூசணி வகைகள், காரட், பீட்ரூட், தக்காளி, ஆரஞ்சு போன்றவை—​இடம்பெற வேண்டும். மதுபானம் குடிப்பதை மிதமாக வைப்பதும் அவசியம். உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படும் ஆண்கள் ஒரு நாளைக்கு 30 மில்லிலிட்டர் ஆல்கஹாலைவிட அதிகமாக பருகக்கூடாது என்றும் பெண்களும் எடை குறைவாக உள்ளோரும் ஒரு நாளைக்கு 15 மில்லிலிட்டரைவிட அதிகம் பருகக்கூடாது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். c

தவறாமல் உடற்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தை குறைப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக பிரேஸிலிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகளை 30 முதல் 45 நிமிடங்கள், வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறைகளாக செய்வது பயனளிக்கும். d புகைபிடிப்பதை நிறுத்துதல், இரத்த கொழுப்பையும் (கொலெஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடு) சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்துதல், கால்ஷியம், மெக்னீஷியம் போன்றவற்றை போதுமானளவு உணவில் சேர்த்துக்கொள்ளுதல், சரீர, மன உளைச்சல்களை கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளும் அதிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டவை ஆகும். மூக்கடைப்பு நிவாரணிகள், சோடியம் அதிகமாகவுள்ள அமில எதிர்ப்பிகள், பசியை மிதப்படுத்தும் மருந்துகள், கஃபேன் உள்ள ஒற்றை தலைவலிக்கான வலி நிவாரணிகள் போன்ற சில மருந்துகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உணவு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் எது நல்லது எது கெட்டது என ஆலோசனை கொடுக்க மிகச் சிறந்த நிலையிலிருப்பவர் உங்கள் டாக்டரே. உங்கள் சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு மட்டுமல்ல குடும்பத்திலுள்ள எல்லாருக்குமே நல்லது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மேரியன் தன் வாழ்க்கையில் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. உடல்நலக் கோளாறு இருந்தாலும் மருந்து சாப்பிட்டுக்கொண்டே இப்போது இயல்பான வாழ்க்கை வாழ்கிறாள். உங்கள் நிலைமை எப்படியுள்ளது? அனைவருமே ஆரோக்கியமாக வாழும், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்”லாத அந்தக் காலம் வர காத்திருக்கையில் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள்!​—ஏசாயா 33:24. (g02 4/8)

[அடிக்குறிப்புகள்]

a எந்த விதமான சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை, ஏனெனில் இது அவரவரது சொந்த தீர்மானமாகும்.

b உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அல்லது இதய, ஈரல், சிறுநீரக வியாதிகள் இருந்து அதற்காக மருந்து சாப்பிடுகிறீர்கள் என்றால் தினந்தோறும் உணவில் எந்தளவு சோடியமும் பொட்டாஷியமும் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

c 30 மில்லிலிட்டர் ஆல்கஹால் என்பது 60 மில்லிலிட்டர் (விஸ்கி, வொட்கா போன்ற) காய்ச்சி வடித்த பானங்களுக்கும், 240 மில்லிலிட்டர் ஒயினுக்கும் அல்லது 720 மில்லிலிட்டர் பீருக்கும் சமம்.

d உடற்பயிற்சி திட்டம் தேவையா என்பதைப் பற்றி உங்கள் டாக்டரிடம் கலந்து பேசுங்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி]

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்தல்

1. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுபவை

• உடல் எடையை குறையுங்கள்

• உப்பு சாப்பிடுவதை குறையுங்கள்

• பொட்டாஷியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்

• மதுபானங்களை குறையுங்கள்

• தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

2. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மற்றவை

• கூடுதலான கால்ஷியமும் மெக்னீஷியமும்

• அதிக நார் சத்துள்ள சைவ உணவு

• அழுத்தத்தை எதிர்க்கும் சிகிச்சை

3. சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்

• புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

• கொலெஸ்டிரால் அளவை கட்டுப்படுத்துங்கள்

• சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துங்கள்

• இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மருந்துகளை தவிருங்கள்

[படத்திற்கான நன்றி]

உயர் இரத்த அழுத்தம் பற்றிய மூன்றாவது பிரேஸிலிய ஒப்பந்தத்தைத் தழுவி எழுதப்பட்டது.​—ரெவீஸ்டா பிராஸிலேரா டெராபெயூடிகா.

[பக்கம் 25-ன் படங்கள்]

தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் உதவும்