Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

தவறான உதவி?

ஜப்பானிய பெருந்தலை ஆமைகளை அழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படும் சில முயற்சிகள் கேள்விக்குள்ளாகி உள்ளன என்று த டெய்லி யோமியூரி கூறுகிறது. ஆமை முட்டைகளை தோண்டியெடுத்து, குஞ்சு பொரிக்க வைத்து பிறகு அவற்றை கடலில் விடுவது ஆமைகளின் இயல்பான கடற்பயண திறமைகள் வளருவதற்கு இடையூறாக இருக்கலாம். இயல்பாகவே, குஞ்சு பொரிக்கும் ஆமைகள், “மணலில் ஊர்ந்து செல்கையில் பூமியின் காந்தப் புலத்தை கண்டுணர்வதால் திசைக் காணும் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்கின்றன” என்று அந்த செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. “செயற்கையாக குஞ்சு பொரிக்க வைக்கையில், [அவற்றை] கடலின் இயற்கை சூழமைவில் கொண்டு விடுவதற்கு முன்பாக சிறிய ஆமைகள் நெரிசலான இடத்தில் வைக்கப்படுகின்றன; இதனால் திசைக் காணும் உள்ளுணர்வையும் கடலில் சுயமாக வலம்வரும் திறமையையும் அவற்றால் வளர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது” என்றும் அது கூறுகிறது. (g02 4/22)

உன்னத புன்னகை

“நண்பர்களை சம்பாதிக்கவும் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் சிறந்த வழி புன்னகைப்பதே” என லண்டனின் த டைம்ஸ் குறிப்பிடுகிறது. பெரும்பாலானோர் ஒருவரின் புன்னகையையே முதலில் கவனிப்பதாக ராயல் மெயில் சார்பாக செய்யப்பட்ட தேசிய சர்வே ஒன்று காட்டுகிறது. சர்வே செய்யப்பட்டவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர், சிநேகப்பான்மையற்றவராக காட்சியளித்தவரோடு வியாபாரம் செய்ய மாட்டார்கள் என கூறினர். முக்கியமாய் பெண் முதலாளிகள், புன்னகை சிந்தும் வேலையாட்களுக்கு பதவி உயர்வு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. “சமுதாயத்தில் புன்னகைக்கு இருக்கும் மதிப்பை இந்த ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது இரகசியங்கள், நம்பிக்கைகள், பணம் ஆகியவற்றை புன்னகை சிந்துபவர்களோடு பகிர்ந்துகொள்ள எப்போதுமே விரும்புகிறோம்” என மனித முகம் என்ற ஆங்கில புத்தகத்தின் இணை ஆசிரியர் பிரையன் பேட்ஸ் கூறுகிறார். புன்னகை பூக்கையில் வலியை குறைக்கும் என்டார்ஃபின்கள் உடலில் அதிகமாக உற்பத்தியாகின்றன என்றும் இயல்பாகவே புன்னகை புரிவோர் “தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியிலும் வெற்றி மேல் வெற்றி காண்பர்” என்றும் கூறுகிறார். (g02 4/22)

மிகத் துல்லியமான கடிகாரம்

“அறிவியலில் பொதுவாக உபயோகிக்கப்படும் மிகச் சிறிய நேர அளவீடான ஒரு ஃபெம்டோ வினாடி வரை துல்லியம்” கொண்ட பாதரச-அயனி கடிகாரத்தை ஐ.மா. விஞ்ஞானிகளின் குழு ஒன்று தயாரித்திருப்பதாக லண்டனின் த டைம்ஸ் அறிக்கையிடுகிறது. இது, “உலகமுழுவதிலும் நேரம் காக்கும் தர அளவான ஒருங்கமைத்த பொதுக் காலத்தைக் (Co-ordinated Universal Time [UTC]) காட்ட உதவும் அணு இயக்க கடிகாரங்களைவிட சுமார் 1,000 மடங்கு அதிக துல்லியமாய் இருப்பதாக” கூறப்படுகிறது. “அண்டத்தைப் பற்றி இன்னும் முழுமையாக புரிந்துகொள்வதற்கு இது அடிப்படை இயற்பியலில்தான் உடனடியாக பயன்படும்” என இயற்பியலாளரான ஸ்காட் டிடம்ஸ் விளக்குகிறார். காலப்போக்கில், தொலைபேசி நெட்வர்க்குகளும் கடற்பயண விண்கோள்களும்கூட இதனால் பயன் பெறும். நேரம் காக்கும் இந்தக் கருவியே “உலகின் மிகத் துல்லியமான கடிகாரம்” என்று கூறும் டிடம்ஸ் இதில் இன்னும் முன்னேற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார். (g02 4/22)

இளைஞரின் டயட்டிங்

சமீபத்தில், கனடாவைச் சேர்ந்த 12 முதல் 18 வயது நிரம்பிய 1,739 பெண்களிடம் ஒரு சர்வே நடத்தப்பட்டது; அதில் 27 சதவிகிதத்தினரிடம் சாப்பிடும் கோளாறுகளுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாக குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் கூறுகிறது. சாப்பாட்டு பழக்கங்களையும் உடல்வாகு பற்றிய அதிருப்தியையும் கணித்த ஒரு கேள்விப் பட்டியலை அதில் பங்குகொண்ட நகர, புறநகர, கிராமப்புற பெண்கள் பூர்த்தி செய்தனர். அதில், 12 வயது நிரம்பிய சில சிறுமிகள்கூட வயிறுமுட்ட சாப்பிட்ட பின் வலுக்கட்டாயமாக வாந்தியெடுப்பது அல்லது எடையை குறைப்பதற்காக டயட் மாத்திரைகள், மலமிளக்கிகள், சிறுநீர் போக்கிகள் போன்றவற்றை உபயோகிப்பது தெரிய வந்தது. முக்கியமாக பெண்கள், “உணவு, உடற்பயிற்சி சம்பந்தமாக சரியான மனநிலை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் உடல்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும், விளம்பரங்களில், பத்திரிகைகளில், ராக் வீடியோக்களில் அவர்கள் காணும் சரீரங்கள் இயல்பானவை அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று டோரன்டோவின் யுனிவர்ஸிட்டி ஹெல்த் நெட்வர்க்கின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெனிஃபர் ஜோன்ஸ் கூறுகிறார். “பருவ வயதில் கொழுப்பு சேருவது சகஜம்தான் என்பதையும் இயல்பான வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது என்பதையும் அநேக டீனேஜ் பெண்கள் அறியாதிருக்கின்றனர்” என்றும் குளோப் கூறுகிறது. (g02 4/22)

கைகொடுக்கும் களைகள்

“வெங்காய தாமரை, லான்டானா, பார்தீனியம் போன்ற களைகளின் எதிர்ப்புத்தன்மை விரிவாக்க பணியாளர்களை நோகடித்திருக்கிறது” என்று இந்தியா டுடே கூறுகிறது. வேலிக்காக 1941-⁠ல் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட லான்டானா கேமரா 2,00,000-⁠த்திற்கும் அதிக ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டது; கைகளாலோ, இரசாயனங்களாலோ, உயிரியல் ரீதியிலோ அதை அடியோடு அழிப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிட்டது. அந்தக் களையின் நச்சுத்தன்மை மற்ற செடிகளையும் வளர விடுவதில்லை, அவற்றின் தாக்குதலுக்கு பிறகு முழு கிராமங்களே இடம்மாறி செல்ல வேண்டியிருந்திருக்கிறது. ஆனால், லச்சிவாலா கிராமத்தாருக்கோ அந்தக் களை கொழுத்த லாபம் தருவதாக இருந்திருக்கிறது. லான்டானாவோடு மண்ணையும் சேர்த்து வீடு, கோழிக் கூடாரம் போன்றவற்றை கட்டுகின்றனர். பூச்சிகள் அண்டாத இந்தக் களையின் பட்டையை உரித்துவிட்டு அருமையான மரச்சாமான்கள், கூடைகள் போன்ற பொருட்களை செய்யலாம். லான்டானா இலைகள், கொசு விரட்டியாகவும் ஊதுவத்தியாகவும் உபயோகிக்கப்படுகின்றன. அதன் வேர்களை பொடியாக்கி, பல் தொற்று நீக்கியாக உபயோகிக்கின்றனர். (g02 4/22)

அவநம்பிக்கையின் பாதிப்பு

“வியாதியாயிருக்கும் சிலர் பிழைத்துக்கொள்கையில் சிலர் மட்டுமே ஏன் சாகின்றனர்?” என்று சான் அன்டோனியோவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்ஸஸ் ஹெல்த் சயன்ஸ் சென்டரின் மனநல துறையைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் எல். ஸ்டர்ன் கேட்கிறார். “நம்பிக்கை இருப்பது அல்லது இல்லாதிருப்பதே இந்தக் கேள்விக்கான ஒரு பதிலாக இருக்கலாம்” என்பதையும் கூறுகிறார். அவநம்பிக்கையே சீக்கிரம் இறப்பதற்கு பெரும்பாலும் வழிநடத்துவதாக, வயதான 800 அமெரிக்கர்களை வைத்து செய்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. என்றாலும், குழந்தைப் பருவ அனுபவங்கள், மனச்சோர்வு, கலாச்சார பின்னணி, பொருளாதார பாதுகாப்பு போன்றவற்றை சார்ந்து அவநம்பிக்கையின் பாதிப்பு நபருக்கு நபர் வேறுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (g02 4/22)

காலந்தாழ்த்துவதும் உடல்நலமும்

“காலந்தாழ்த்தினால் உங்கள் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படலாம்” என வான்கூவர் சன் செய்தித்தாளில் வெளிவந்த ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. சமீபத்தில், அமெரிக்க மனநல சங்கத்தின் மாநாடு ஒன்று கனடாவிலுள்ள டோரன்டோவில் நடந்தது. அப்போது, கனடாவைச் சேர்ந்த 200 பல்கலைக்கழக மாணவர்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் கணிப்பு அங்கு சமர்ப்பிக்கப்பட்டது. “காலந்தாழ்த்துவோர் நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போடுவதால் கடும் அழுத்தத்தை எதிர்ப்படுகின்றனர், அதனால் மற்றவர்களைக் காட்டிலும் அழுத்தம் சம்பந்தப்பட்ட ஏராளமான நோய்களை வரவழைத்துக் கொள்கின்றனர். . . . பரீட்சை நெருங்க நெருங்க காலந்தாழ்த்துவோரின் அழுத்தம் மளமளவென அதிகரித்தது. அவர்களுடைய பொறுப்பற்ற ஜாலியான ‘மூட்’ மாறி தலைவலி, முதுகு வலி, ஜலதோஷம், தூங்குவதில் கஷ்டங்கள், அலர்ஜிகள் போன்றவை அதிகரித்தன. சுவாசக் கோளாறுகள், தொற்றுகள், ஒற்றைத் தலைவலி போன்றவையும் அதிகமாயிருந்ததாக கணிப்பு காட்டியது.” (g02 4/8)

கொசுப் பொறி

பூச்சிக்கொல்லி இரசாயனங்களை உபயோகிக்காமல் கொசுக்களை கொல்லும் ஒரு கருவியை சிங்கப்பூரிலுள்ள கம்பெனி ஒன்று தயாரித்து வருகிறது. 38 சென்டிமீட்டர் நீளமுள்ள அந்தக் கறுப்பு பிளாஸ்டிக் பெட்டி, “மனித உடலைப் போலவே வெப்பத்தையும் கார்பன்டை-ஆக்ஸைடையும் வெளிவிடுகிறது” என லண்டனின் தி இக்கானமிஸ்ட் அறிக்கை செய்கிறது. உடல் வெப்பத்தையும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை-ஆக்ஸைடையும் வைத்தே கொசுக்கள் இரை தேடிச் செல்வதால், இந்தக் கருவி “இன்றைக்கு சரியான வேட்டைதான் என்ற நினைப்பை ஏற்படுத்தி கொசுக்களை ஏமாற்றுகிறது.” இந்தப் பெட்டி மின்சாரத்தால் சூடாக்கப்படுகையில், அதிலுள்ள ஒரு சிறிய உறை கார்பன்டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. கொசுக்களை பெட்டியிலுள்ள ஒரு திறப்பிடம் கவர்ந்திழுக்க பளபளக்கும் லைட்டுகள் அங்கு உள்ளன. பிறகு, கீழே இருக்கும் தண்ணீரில் மூழ்கி சாகும்படி ஒரு மின்விசிறி அவற்றை கீழே தள்ளுகிறது. இந்தக் கருவியால் ஒரே இரவில் 1,200 கொசுக்களை கொல்ல முடியும். மலேரியாவை ஏற்படுத்தும் இரவு நேர அனோபிலிஸ் கொசுவையும் மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பகல் நேர ஏடெஸ் கொசுவையும் கொல்ல ஏற்றபடி இதை மாற்றியமைக்க முடியும். இது, பட்டாம்பூச்சிகள் போன்ற தீங்கற்ற பூச்சிகளைக் கொல்லாது என்பதே இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். (g02 4/8)

ஆண்களே, மீன் சாப்பிடுங்கள்

மீனே சாப்பிடாத ஆண்களோடு ஒப்பிட, சால்மன், ஹெர்ரிங், மாக்கரல் போன்ற கொழுப்புச் சத்துள்ள மீன்களை அதிகமாக சாப்பிடும் ஆண்களுக்கு விந்து சுரப்பி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு, மூன்று மடங்கு குறைவதாக ஸ்டாக்ஹோமில் உள்ள காரோலின்ஸ்க் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 6,272 ஆண்களை வைத்து 30 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி புகைபிடித்தல் போன்ற ஆபத்தான பழக்கவழக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. முக்கியமாய் எண்ணெய் பசையுள்ள மீன்களில் காணப்படும் “ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என அழைக்கப்படும் அமிலம், விந்து சுரப்பி புற்றுநோயின் வளர்ச்சியை தடை செய்யலாம்” என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். அதே கொழுப்பு அமிலங்கள், “மாரடைப்பு ஏற்படும் ஆபத்தையும் குறைக்கின்றன” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆகவே, “வாரத்தில் ஓரிரு முறை” மீன் சாப்பிடும்படி வல்லுனர்கள் அறிவுரை கூறுகின்றனர். (g02 4/8)

அரிசி தவிடுமரங்களின் பாதுகாவலன்

வடக்கு பெருவிலுள்ள செங்கல் தொழிற்சாலைகள், விறகிற்குப் பதில் அரிசி தவிட்டை எரிபொருளாக பயன்படுத்துவதால் அழியும் நிலையிலுள்ள காரப் மரங்களில் அதிகமானவை விறகிற்காக வெட்டப்படாமல் பாதுகாக்கப்படுவதாக பெருவின் செய்தித்தாளான எல் கோமெர்சியோ அறிக்கை செய்கிறது. 21 செங்கல் தொழிற்சாலைகள், வேளாண் கழிவுப் பொருளான அரிசி தவிட்டை உபயோகிப்பதால் கார்பன்டை-ஆக்ஸைடு வெளியாகும் அளவும் குறைந்துள்ளது. கவசம்போலிருந்து வெப்பம் வீணாவதை குறைக்கும் மணல், களிமண், சர்க்கரை பாகு ஆகியவற்றின் கலவையை சூளையின் சுவர்களில் பூசுவதால் அதன் திறன் 15 சதவிகிதம் அதிகரிக்கிறது. அரிசி தவிட்டின் சாம்பலை செங்கல் கலவையோடு சேர்ப்பதற்கும் பரிசோதனைகள் நடக்கின்றன; இது செங்கல்லின் பலத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. “இவ்வாறு உபயோகிப்பதால் தூய்மைக்கேடும் குறைகிறது கழிவுப் பொருட்களை சேமிக்கும் பிரச்சினையும் இல்லை” என எல் கோமெர்சியோ கூறுகிறது. (g02 4/8)