Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் தெய்வீக பாதுகாப்பை எதிர்பார்க்க வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் தெய்வீக பாதுகாப்பை எதிர்பார்க்க வேண்டுமா?

பைபிளின் கருத்து

கிறிஸ்தவர்கள் தெய்வீக பாதுகாப்பை எதிர்பார்க்க வேண்டுமா?

தம்மை வணங்குவோரை ஆபத்திலிருந்து பாதுகாக்க கடவுளுக்கிருக்கும் வல்லமை பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. “கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்” என தாவீது ராஜா கூறினார். (சங்கீதம் 140:1) இன்று, வன்முறை, குற்றச்செயல், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை சந்தித்த கடவுளுடைய வணக்கத்தாரில் அநேகர் மரணமடைவதிலிருந்து அல்லது காயமடைவதிலிருந்து மயிரிழையில் தப்பித்திருக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பங்களில், கடவுள்தான் தங்களை அற்புதகரமாக பாதுகாத்தாரோ என சிலர் யோசித்திருக்கின்றனர். ஏனெனில், வேறு சில சந்தர்ப்பங்களில் கடவுள் பயமுள்ள சிலர் தப்பிக்காமல், பெருந்துன்பத்தை ஏன் கொடூரமான மரணத்தையேகூட தழுவியிருக்கின்றனர்.

யெகோவா தேவன் சிலரை ஆபத்திலிருந்து பாதுகாத்துவிட்டு சிலரை தவிக்க விட்டுவிடுகிறாரா? வன்முறை, பேரழிவுகள் போன்றவற்றிலிருந்து அற்புதமாய் காப்பாற்றுவார் என இன்று நாம் எதிர்பார்க்கலாமா?

அற்புத பாதுகாப்பு பற்றிய பைபிள் பதிவுகள்

தமது வணக்கத்தாரை பாதுகாக்க கடவுள் அற்புதம் நிகழ்த்தியதைப் பற்றிய அநேக பைபிள் பதிவுகள் உள்ளன. (ஏசாயா 38:1-8; அப்போஸ்தலர் 12:1-11; 16:25, 26) வேறு சில சந்தர்ப்பங்களில், யெகோவாவின் ஊழியர்கள் ஆபத்திலிருந்து காக்கப்படாததைப் பற்றியும் வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. (1 இராஜாக்கள் 21:1-16; அப்போஸ்தலர் 12:1, 2; எபிரெயர் 11:35-38) எனவே, யெகோவா விரும்பும் சமயத்தில் ஏதோவொரு காரணத்திற்காக அல்லது நோக்கத்திற்காக பாதுகாப்பளிக்க அவர் தீர்மானிக்கலாம் என்பது தெளிவாக உள்ளது. ஆகவே, தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் சோதனைகளிலிருந்து பாதுகாப்பை பெறாதபோது கடவுள் தங்களை கைவிட்டுவிட்டதாக முடிவு செய்துவிடக்கூடாது. யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படலாம் என்ற உண்மையை நாம் ஏற்க வேண்டும். ஏன் அவ்வாறு நிகழ்கிறது?

கடவுளுடைய உண்மை ஊழியர்களுக்கு ஆபத்துகள் ஏற்பட காரணம்

நாம் அனைவரும் ஆதாம், ஏவாளிடமிருந்து பாவத்தையும் அபூரணத்தையும் பெற்றிருப்பது அதற்கு ஒரு காரணமாகும். ஆகவே, துன்பம், துயரம், மரணம் போன்றவற்றை பெறும் வாய்ப்பே நமக்குள்ளது. (ரோமர் 5:12; 6:23) நாம் கடைசி நாட்களில் வாழ்வது மற்றொரு காரணமாகும். இன்றுள்ள மக்கள், “சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என பைபிள் விவரிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) கற்பழிப்பு, கடத்தல், கொலை, கொடூரமான குற்றச்செயல்கள் போன்றவை பரவலாக இருப்பதே இதற்கு அத்தாட்சி அளிக்கிறது.

கடவுளுடைய உண்மை ஊழியர்களில் பலர் பழிபாவத்திற்கு அஞ்சாத மக்கள் மத்தியில் வாழ்ந்து, வேலை செய்வதால் சில சமயங்களில் அவர்களுடைய கொடுமைக்கு இலக்காகின்றனர். நாம் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருப்பதால் உயிருக்கே உலை வைக்கும் சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளலாம். அதோடு, “சமயமும் எதிர்பாராத சம்பவமும் அவர்கள் அனைவருக்கும் நேரிடும்” என சாலொமோன் கூறியதன் நிஜத்தையும் நாம் சந்திக்கிறோம்.​—பிரசங்கி 9:11, NW.

மேலுமாக, கிறிஸ்தவர்கள் கடவுளை வணங்குவதால் அவர்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவார்கள் என அப்போஸ்தலன் பவுல் கூறினார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்றார் அவர். (2 தீமோத்தேயு 3:12) இது சமீப ஆண்டுகளில் அநேக நாடுகளில் உண்மையாக நிரூபித்திருக்கிறது.

ஆகவே, வன்முறை, குற்றச்செயல், இயற்கை பேரழிவு, அகால மரணம் போன்றவற்றின் விளைவுகளிலிருந்து கடவுள் பயமுள்ளோர் விசேஷமாக பாதுகாக்கப்படுவர் என சொல்வதற்கில்லை. வாழ்க்கையில் எந்த அசம்பாவிதமும் நடக்காதபடி யெகோவா தம்முடைய மக்களைச் சுற்றி வேலியிட்டு பாதுகாக்கிறார் என்ற வாதத்தை உபயோகிக்க சாத்தான் முயன்றிருக்கிறான். (யோபு 1:9, 10) ஆனால் அது உண்மையல்ல. இக்கட்டான சமயத்தில் யெகோவா நம்மை அற்புதமாய் காப்பாற்றாவிட்டாலும் தம்முடைய மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.

இன்று யெகோவா தம் மக்களை பாதுகாக்கும் விதம்

யெகோவா, தம் மக்களை பாதுகாக்க தமது வார்த்தை மூலம் வழிநடத்துதலை அளிக்கிறார். ஆவிக்குரிய தன்மையும் பைபிள் அறிவும் நமக்கிருந்தால் நல்நிதானிப்பையும், தெளிந்த புத்தியையும் பெறுவோம்; அனாவசிய தவறுகளை தவிர்த்து, ஞானமான தீர்மானங்களை செய்ய இவை நமக்கு உதவும். (சங்கீதம் 38:4; நீதிமொழிகள் 3:21; 22:3) உதாரணமாக, பாலுறவு ஒழுக்கக்கேடு, பேராசை, கோபம், வன்முறை போன்றவற்றில் பைபிள் அறிவுரையை பின்பற்றுவதால் கிறிஸ்தவர்கள் அநேக ஆபத்துகளிலிருந்து தப்பியிருக்கிறார்கள். மேலும், கெட்டவர்களோடு நெருங்கிய சகவாசம் வைக்காதிருந்தால் ஆபத்து நிகழக்கூடிய இடத்தில், அதாவது தவறான நேரத்தில், தவறான இடத்தில் நாம் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறையும். (சங்கீதம் 26:4, 5; நீதிமொழிகள் 4:14) பைபிள் நியமங்களின்படி வாழ்வோர் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இதனால் பெரும்பாலும் உள்ளத்திலும் உடலிலும் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

விரும்பத்தகாத காரியங்களை கடவுள் அனுமதித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள போதுமான பலத்தை தம்மை வணங்குவோருக்கு அளிப்பார் என அறிவதே நமக்கு அதிக ஆறுதலளிக்கிறது. “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என அப்போஸ்தலன் பவுல் நமக்கு உறுதியளிக்கிறார். (1 கொரிந்தியர் 10:13) பேராபத்துக்களை சகிக்க “இயல்பிற்கு அப்பாற்பட்ட வல்லமை” நமக்கு கிடைக்கும் எனவும் பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—2 கொரிந்தியர் 4:7, NW.

கடவுள் தமது சித்தத்திற்கு இசைவாக செயல்படுகிறார்

வரவிருக்கும் ஒவ்வொரு பேராபத்தில் இருந்தும் கடவுள் தங்களை அற்புதமாய் காப்பாற்றுவார் என கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கலாமா? அதை பைபிள் ஆமோதிப்பதில்லை.

யெகோவா தேவனே நேரடியாக தலையிட்டு தமது ஊழியர்களில் ஒருவரை பாதுகாக்க தீர்மானிக்கலாம். ஆகவே, கடவுள் தலையிட்டு தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றியதாக ஒருவர் நினைத்தால் யாரும் அவரை குறைகூறக்கூடாது. அதே சமயம், யெகோவா தலையிடாதபோது அதை அவருடைய வெறுப்பின் அத்தாட்சியாக யாரும் நினைக்கவும் கூடாது.

நாம் எந்தவொரு சோதனையை அல்லது சூழ்நிலையை சந்தித்தாலும் தமது உண்மை ஊழியர்களை யெகோவா நிச்சயம் பாதுகாப்பார் என்பதை உறுதியாக நம்புவோமாக. அந்தச் சூழ்நிலை நம்மைவிட்டு நீங்கும்படி செய்வதன் மூலம், அதை சகிக்க தேவையான பலத்தை கொடுப்பதன் மூலம் அல்லது நாம் இறந்தால் அவருடைய புதிய உலகில் நித்திய ஜீவனை அனுபவிக்க நம்மை உயிருடன் எழுப்புவதன் மூலம் அவர் இதை செய்வார்.​—சங்கீதம் 37:10, 11, 29; யோவான் 5:28, 29. (g02 4/8)