தாய்மாரின் சுமைகள்
தாய்மாரின் சுமைகள்
காலை 4:50 பாதி தூக்கத்தில் அழுதுகொண்டே அம்மாவிடம் தவழ்ந்து வருகிறான் ஹெலனின் மகன் அலெக்ஸ். மற்ற இரண்டு பிள்ளைகளும்—பென்னி (5 வயது), ஜோயன்னா (வயது 12)—கணவர் நிக்கும் அயர்ந்த நித்திரையில். அலெக்ஸை அள்ளி அணைத்து பாலூட்டுகிறார் ஹெலன். அத்துடன் அவருடைய தூக்கம் கலைந்துவிடுகிறது.
காலை 5:45 ஹெலன் சத்தமில்லாமல் சமையலறைக்கு சென்று காபி போடுகிறார், எதையோ வாசிக்கிறார்.
காலை 6:15–7:20 நிக் எழுந்து விடுகிறார். பென்னியையும் ஜோயன்னாவையும் ஹெலன் எழுப்பி விடுகிறார், காலை டிபன் தயாரிக்கிறார், இடையிடையே மற்ற வீட்டு வேலைகளையும் செய்கிறார். காலை 7:15-க்கு வேலைக்கு கிளம்புகிறார் நிக், போகும் வழியில் ஜோயன்னாவை ஸ்கூலில் இறக்கிவிட்டுச் செல்கிறார். அலெக்ஸை கவனித்துக்கொள்ள ஹெலனின் அம்மாவும் வந்து விடுகிறார்கள்.
காலை 7:30 பென்னியை கின்டர்கார்டனில் கொண்டு போய் விடுகிறார் ஹெலன். வேலைக்குச் செல்லும் சமயத்தில் ஒரு தாயின் நிலையை சிந்தித்துப் பார்க்க ஹெலனுக்கு நேரம் கிடைக்கிறது. “என் அனுபவத்தில் இதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை” என்று அவர் சொல்கிறார்.
காலை 8:10 ஆபீஸுக்கு வந்ததும் மேஜையில் வேலை குவிந்து கிடப்பதை ஹெலன் பார்க்கிறார். இன்னொரு குழந்தை உருவானால் இந்த வேலை பறிபோய்விடுமே என கவலைப்படுகிறார். குடும்பத்திற்கு அவருடைய வருமானம் தேவை.
காலை 10:43 ஃபோன் வருகிறது—அவருடைய பிள்ளைகளை பற்றித்தான். பேசிவிட்டு ரிசீவரை கீழே வைக்கையில், “பிள்ளைகளை நீங்க கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிறீங்க” என்று சொல்லி ஹெலனை ஆறுதல்படுத்துகிறார் அவருடன் வேலை பார்க்கும் நான்ஸி. அதைக் கேட்டதும் ஹெலனின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோட ஆரம்பிக்கிறது.
மதியம் 12:05 சான்விட்சை மள மளவென அள்ளிப் போட்டுக்கொண்டே முதல் பிள்ளை பிறப்பதற்கு முன்பிருந்த சமயத்தை எண்ணிப் பார்க்கிறார் ஹெலன். அப்போதெல்லாம், “சும்மாயிருக்கிற” நேரத்தில் நிறைய காரியங்களை செய்வதற்கு திட்டமிட்டிருந்தார். ‘எல்லாம் மனக்கோட்டைதான்!’ என சொல்கிறார்.
மாலை 3:10 அலெக்ஸ் செய்கிற குறும்புகளை பற்றி ஃபோனுக்கு மேல் ஃபோன் வருகிறது. அதையெல்லாம் அட்டென்ட் செய்த பிறகு, பிள்ளைகள் மீதுள்ள தனி பாசத்தைப் பற்றி ஹெலன் குறிப்பிடுகிறார்: “வேறு யார்கிட்டேயும் நான் இப்படியொரு பாசத்தை கொட்டினதில்லை.” இந்த ஆழமான பாசம்தான் ஆரம்பத்தில் ஏற்பட்ட எல்லா கஷ்டங்களையும், எதிர்பாராமல் தலைதூக்கிய பிரச்சினைகளையும் சமாளிக்க அவருக்கு உதவியது.
மாலை 5:10 ஜோயன்னாவை ஸ்கூலிலிருந்து அழைத்துக்கொண்டு வரும் வழியில் ஹெலன் சில சில்லறை வேலைகளை முடிக்கிறார். நிக்கிற்கு ஃபோன் செய்து, அன்றைக்கு பென்னியை அழைத்து வரவேண்டியது அவருடைய வேலை என்பதை நினைப்பூட்டுகிறார்.
மாலை 6:00-7:30 வீட்டிற்கு வந்தவுடன் அலெக்ஸை கவனிக்கும் டியூட்டியிலிருந்து அம்மாவை விடுவிக்கிறார். வீட்டுக் காரியங்களை கவனித்துவிட்டு இரவு சாப்பாட்டை தயாரிக்கிறார். ஒரு குழந்தையின் தேவைகளைப் பற்றி கேட்கும்போது, ஹெலன் இவ்வாறு பெருமூச்சுடன் சொல்கிறார்: “ஒரு குழந்தைக்கு எப்போதும் அம்மா, அம்மா, அம்மாதான்: எப்போதும் கையில் தூக்கி வைக்கணும், கொஞ்சி விளையாடணும், பாலூட்டணும், கொஞ்ச நேரம்கூட கண்ணயர முடியாது.”
இரவு 8:30–10:00 அலெக்ஸுக்கு பாலூட்டியவாறே ஜோயன்னாவுக்கு ஹெலன் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பென்னிக்கு நிக் அரைமணி நேரம் வாசித்துக் காட்டும்போது, மிச்சமீதியுள்ள வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கிறார் ஹெலன்.
இரவு 11:15 பென்னியும் ஜோயன்னாவும் தூங்க சென்ற பிறகும் அம்மாவின் கையில் இன்னும் தூங்காமல் கொட்டுக்கொட்டு என்று விழித்துக் கொண்டிருக்கிறான் அலெக்ஸ். ஒருவழியாக அவனும் தூங்கிவிடுகிறான். “இவனை தூங்க போட்டுவிடலாம்னு நினைக்கிறேன்” என அரை தூக்கத்திலிருக்கும் நிக்கிடம் ஹெலன் சொல்கிறார். (g02 4/8)