Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாய்மாரின் தடை தாண்டும் ஓட்டம்

தாய்மாரின் தடை தாண்டும் ஓட்டம்

தாய்மாரின் தடை தாண்டும் ஓட்டம்

தாயாக இருப்பது ஓர் அபூர்வமான, அருமையான அனுபவம். அரிய தருணங்களை அம்மாக்கள் அனுபவிக்கிறார்கள்; எந்த காரியத்திற்காகவும் அந்தத் தருணங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆனாலும், சிலர் எச்சமயத்திலும் நிலைகுலைந்துவிடும் நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். ஒரு தாயாக, ஹெலன் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை தடை தாண்டும் ஓட்டத்திற்கு ஒப்பிடுகிறார். கால ஓட்டத்தில் இன்னும் அதிகமதிகமான, பெரிய பெரிய தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது.

பிள்ளைகளை நல்ல முறையில் கவனிப்பதற்காக, தாய்மார் ஓய்வுக்காகவும் தோழமைக்காகவும் செலவிடும் நேரத்தை தியாகம் செய்கிறார்கள். “நான் எந்த நிமிஷமும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்செல்ல வேண்டும்” என கூறுகிறார் ஐந்து பிள்ளைகளுக்கு தாயான எஸ்தர். “ஆசை தீர குளித்ததெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் காக்கா குளியல்தான், விதவிதமாக சமைத்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு, இப்போ ‘மைக்ரோவேவ் அவன்’ சமையல்தான். என்னால் நிறைய இடங்களுக்கு போக முடியறதில்லை, பல இடங்களை சுற்றி பார்க்க முடியறதில்லை, நிறைய காரியங்களை செய்ய முடியறதில்லை. ஆனால் துணிமணிகளை மட்டும் எப்படியும் துவைத்து மடித்து வைக்கிறேன்!”

பிள்ளைகளை வளர்ப்பதிலுள்ள அலாதி சந்தோஷத்தைப் பற்றி பெரும்பாலான தாய்மார்கள் சொல்வது உண்மைதான். “அவ்வப்போது அழகான புன்முறுவல் புரிவது, மழலை மொழியில் ‘தாங்க்யூ மம்மி’ என்று சொல்வது, அன்போடு கட்டித் தழுவுவது⁠—இவற்றினால்தான் வண்டியே ஓடுகிறது” என சொல்கிறார் எஸ்தர். a

வேலைக்கு செல்கிறாள் தாய்

பாரம்பரிய குடும்ப பொறுப்புகளை தலையில் சுமப்பதோடு பண கஷ்டங்களை சமாளிக்க அம்மாக்கள் வேலைக்கும் சென்று பாடுபட வேண்டியிருக்கிறது. இதுவே தடை தாண்டும் ஓட்டத்தில் தாய்மைக்கு சவாலளிக்கும் மிகப் பெரிய தடை. இவர்களில் பலர் விருப்பத்தினால் அல்ல, கட்டாயத்தின் காரணமாகவே வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டில் இருந்துவிட்டால், தங்கள் குடும்பங்களுக்கும் முக்கியமாக பிள்ளைகளுக்கும் பல சௌகரியங்கள் கிடைக்காமல் போகும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வாங்கும் சம்பளம் ஆண்களுடைய சம்பளத்தைவிட குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு அது மிகவும் முக்கியம்.

உதாரணமாக, பிரேஸிலிலுள்ள சாவோ பாலோவில் வேலைக்குச் செல்பவர்களில் 42 சதவீதத்தினர் பெண்களே. முழுநேரமும் வீட்டிலிருந்து குழந்தையை கவனிக்கும் தாய்மார்களை “அழிந்துவரும் இனங்கள்” என அங்குள்ள ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டது. ஆப்பிரிக்க கிராமங்களில், தலையில் விறகு கட்டுகளையும் முதுகில் குழந்தையையும் சுமந்து செல்லும் தாய்மார்களை காண்பது சர்வ சாதாரணம்.

வேலைப் பளு

இந்தத் தடைகளோடுகூட வேலை பார்க்கும் இடங்களில் தாய்மார்கள் அதிக நேரத்திற்கு வேலை செய்ய வேண்டியிருக்கலாம். தலைவலி இத்துடன் தீர்ந்துவிடுவதில்லை. மரியா என்பவர் கிரீஸில் வாழ்ந்து வருகிறார். அவர் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு தரும்படி அவருடைய முதலாளி கேட்டார். மூன்று வருடங்களுக்கு குழந்தையை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அந்தப் பத்திரத்தில் உறுதியளிக்க வேண்டும். அப்படியே கர்ப்பமாகிவிட்டால் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அதற்கு மரியா சம்மதித்து அந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். ஆனால், ஒன்றரை வருடங்களுக்குப் பின்பு அவர் தாய்மை அடைந்தார். அப்போது முதலாளி அந்தப் பத்திரத்தை அவருக்கு எடுத்துக் காண்பித்தார். கம்பெனியின் பாலிஸியை எதிர்த்து மரியா நீதிமன்றத்திற்கு சென்றார். இப்போது தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

நிலைமை இந்தளவுக்கு செல்லாவிடினும் சில இடங்களில் குழந்தை பிறந்து கொஞ்ச நாட்களிலேயே வேலைக்கு வரும்படி தாய்மாரை முதலாளிகள் வற்புறுத்துகிறார்கள். அவர்கள் வேலைக்கு வந்த பிறகு வேலை நேரம் பொதுவாக குறைக்கப்படுவதும் இல்லை. இவ்வாறு, ஒரு பச்சிளம் குழந்தையை கவனிக்க வேண்டிய அவர்களது பொறுப்புகளுக்கு எந்த சலுகையும் காட்டப்படுவதில்லை. பண நெருக்கடியால் அதிகமாக லீவு எடுக்கவும் முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றனர். தாய்மார், மட்டமான குழந்தை பராமரிப்பு வசதிகளையும் சர்க்கார் அளிக்கும் குறைந்தளவு சலுகைகளையும் வைத்து சமாளிக்க வேண்டியிருக்கலாம்.

மறுபட்சத்தில், சில தாய்மார்களோ பணத்திற்காக அல்ல ஆனால் ஆத்ம திருப்திக்காகவே வேலைக்குச் செல்கிறார்கள். ஸான்ட்ரா என்ற தாய் தன் இரண்டு குழந்தைகள் பிறந்த சமயத்திலும் வேலைக்குச் செல்ல தீர்மானித்தார். திடீரென கையில் ஒரு குழந்தையோடு வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலை வந்தபோது, “சில சமயங்களில் ஜன்னல் பக்கம் நின்று வெளியே வெறித்துப் பார்த்தவாறு, உலகத்தில் என்னதான் நடக்கிறது என யோசித்துப் பார்ப்பதுண்டு” என அவர் கூறுகிறார். வேலைக்குச் செல்வதன் மூலம் குடும்ப பாரத்திலிருந்து நழுவ வழிதேடுகிறார்கள் சில அம்மாக்கள். பிரிட்டனின் டெய்லி டெலிகிராஃப் இவ்வாறு குறிப்பிட்டது: “பெற்றோர் சிலர் தொல்லையின்றி அமைதியாக இன்னும் அதிக நேரம் வேலை செய்ய வழிதேடுவதால் பிள்ளைகளோடு செலவிடும் நேரம் குறைந்து விடுகிறது. இதனால் பிள்ளைகள் மேன்மேலும் அக்கறையற்றவர்களாக, மூர்க்கத்தனமானவர்களாக, மோசமான வழியில் செல்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். ஆகவே, ஒரு பிரச்சினையை தீர்க்கப்போய் பல பிரச்சினைகள் உருவான கதைதான்.”

மூச்சுக்கு முந்நூறு வேலைகள்

வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு வெளி வேலையையும் சமாளிப்பது எளிதல்ல. நெதர்லாந்திலுள்ள ஒரு தாய் பின்வருமாறு சொன்னதை அநேக தாய்மார்கள் ஒப்புக்கொள்வார்கள்: “எப்போ பாத்தாலும் களைப்பு, களைப்பு, களைப்புதான். காலையில் எழுந்திருப்பதே களைப்போடுதான். வேலை முடித்து வீட்டுக்கு வந்தால் சோர்வு என்னை ஒரேயடியாக அமுக்கிவிடுகிறது. பிள்ளைகள் வேறு, ‘அம்மாவுக்கு எப்போதும் களைப்புதான்’ என்று சொல்வது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. வேலையை விட்டுவிட எனக்கு விருப்பமில்லை, அதேசமயத்தில் எல்லாருடனும் நன்கு பழகுகிற, நினைத்ததை எல்லாம் சாதிக்கிற ஒரு தாயாக இருக்கவும் நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அம்மா என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று நாலு பேர் சொல்ற அளவுக்கு என்னால் இருக்க முடியவில்லையே.”

பிள்ளைகளோடு ‘தரமான நேரத்தை’ செலவிடுவது, அம்மா இல்லாத மற்ற நேரங்களை ஓரளவுக்கு சரிக்கட்டிவிடும் என்ற கருத்துடைய கோடிக்கணக்கான தாய்மார்களில் இவரும் ஒருவர்; ஆனால் இந்தக் கருத்து சரியானதல்ல என்பதையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். வேலைப் பளுவோடு வீட்டு வேலையும் சேர்ந்து கொண்டு, தலைக்குமேல் வேலையையும் போதாத சம்பளத்தையும் வைத்துக்கொண்டு படாதபாடுபட வேண்டியிருப்பதாக இன்று தாய்மார் பலரும் புலம்புகிறார்கள்.

பெண்கள் வெளியில் அதிக மணிநேரம் செலவிடும்போது பிள்ளைகளுக்கு மிகத் தேவையானது​—அம்மாவின் நேரமும் கவனிப்பும்​—கிடைக்காமல் போய்விடுகிறது. ஒரு தாயின் பங்கை அந்தத் தாயைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நிறைவேற்ற முடியாது என பிரேஸிலைச் சேர்ந்த பாலர் உளவியல் நிபுணர் ஃபெர்னான்டா எ. லிமா கூறுகிறார். “ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அதன் முதல் இரண்டு வருடங்களே மிகவும் முக்கியமான கட்டம்” என அவர் கூறுகிறார். “அம்மா ஏன் பக்கத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ள அதற்கு வயசு போதாது.” குழந்தையை கவனிப்பதற்கு யாரையாவது நியமிப்பது அம்மாவை குழந்தை தேடாதபடி செய்தாலும் அந்த நபரால் அம்மாவின் இடத்தை நிரப்ப முடியாது. “அம்மாவின் அரவணைப்பு தனக்கு இல்லை என்பதை குழந்தை உணர்ந்துகொள்கிறது” என கூறுகிறார் லிமா.

சிறு குழந்தையை உடைய கேத்தி முழுநேர வேலைக்குச் செல்பவர்; அவர் கூறுவதாவது: ‘நான் அவளை [நர்சரியில்] அம்போவென்று விட்டுவிட்டதைப் போன்ற பயங்கர குற்றவுணர்வு ஏற்பட்டது. குழந்தை வளர்ந்து பெரிதாவதை பக்கத்திலிருந்து பார்க்கும் பாக்கியம் இல்லாததை எண்ணுகையில் சங்கடமாக இருக்கிறது; உங்களைவிடவும் நர்சரி பள்ளியோடு அவள் அதிகமாக ஒட்டிக்கொண்டிருப்பது ஜீரணிக்க முடியாத விஷயம்.’ மெக்ஸிகோவிலுள்ள விமான பணிப்பெண் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பிள்ளைக்கு உங்களையே அடையாளம் தெரிவதில்லை, நீங்கள் அவனை வளர்க்காத குற்றத்துக்காக அவன் உங்களை மதிப்பதில்லை. நீங்கள்தான் அம்மா என்று பிள்ளைகளுக்கு தெரிந்தாலும் தங்களை கவனித்துக்கொள்ளும் நபருடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.”

மறுபட்சத்தில், நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்து பிள்ளைகளை கவனிக்கும் தாய்மார், கைநிறைய சம்பாதிப்பதை பெரிதாக நினைக்கும் சமுதாயத்தினரால் இகழப்படுவதையும் மட்டந்தட்டி பேசப்படுவதையும் சகிக்க வேண்டியுள்ளது என கூறுகிறார்கள். சில சமுதாயங்களில் வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்களை யாரும் மதிப்பதில்லை; ஆகவே பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் தங்களுக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

தனியாக நின்று போராடுவது

அம்மாக்களின் தடை தாண்டும் ஓட்டத்தில் இன்னொரு தடையாக சேர்ந்து கொள்ளும் ஒன்று இது: நாள் பூராவும் கஷ்டப்பட்டு உழைத்து களைத்து வீடு திரும்பும் அம்மாக்களுக்கு காத்திருப்பது ஓய்வு அல்ல, வீட்டு வேலைகளே. தாய்மார் வேலைக்குச் செல்கிறார்களோ இல்லையோ வீட்டையும் பிள்ளைகளையும் கவனிப்பது பெரும்பாலும் அவர்களுடைய பொறுப்பாகவே கருதப்படுகிறது.

அம்மாக்கள் பலரும் அதிக நேரம் வேலை செய்தாலும் அப்பாக்கள் எப்போதுமே அவர்களுடன் ஒத்துழைப்பதில்லை. லண்டனிலுள்ள த ஸண்டே டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு எழுதியது: “அப்பாக்களின் கவனிப்பு இல்லாத தேசமே பிரிட்டன்; ஏனெனில் ஆண்கள் ஒருநாளில் 15 நிமிடங்களே தங்கள் பிள்ளைகளுடன் செலவிடுகிறார்கள் என ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. . . . ஆண்கள் பலருக்கும் தங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதில் அந்தளவுக்கு விருப்பம் இல்லை. . . . ஆண்களோடு ஒப்பிட, பிரிட்டனில் வேலைக்கு செல்லும் ஒரு தாய் ஒரு நாளில் 90 நிமிடம் தன் பிள்ளைகளோடு செலவிடுகிறாள்.”

மனைவிமார் வேலைகளை தங்களுடன் பகிர்ந்துகொள்ள சிரமப்படுவதாக சில கணவர்கள் குறைகூறுகிறார்கள்; ஏனெனில் எல்லாவற்றையும் அவர்கள் செய்துவரும் விதமாகவே கச்சிதமாக செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக சொல்கிறார்கள். “இல்லையெனில் அதை கந்தரகோளமாக்கி விட்டதாக” சொல்வார்களென கணவர்கள் கூறுகிறார்கள். ஆகவே கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் களைப்படைந்த மனைவி வீட்டு வேலைகள் சிலவற்றை செய்வதில் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுப்பவளாக இருக்க வேண்டியிருக்கலாம். மறுபட்சத்தில் கணவர்களோ அதையே சாக்காக வைத்துக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருந்துவிடக் கூடாது.

தடைகளுக்கு மேல் தடைகள்

ஊறிப்போன பாரம்பரியங்களும் தடைகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தலாம். ஜப்பானிலுள்ள தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளை அவர்களுக்கு ஒத்த வயதுடைய மற்ற பிள்ளைகளைப் போலவே வளர்க்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். மற்ற பிள்ளைகள் பியானோ வாசிப்பதை அல்லது ஓவியம் தீட்டுவதை கற்றுக்கொண்டால் தன்னுடைய பிள்ளைகளும் அதையே கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை தாய் உணருகிறாள். மற்ற பிள்ளைகளைப் போல தங்கள் பிள்ளைகளையும் இதுபோன்ற இதர பாடத் திட்டங்களில் சேர்க்கும்படி பெற்றோரை ஆசிரியர்கள் வற்புறுத்துகிறார்கள். அதற்கு இணங்காவிட்டால் மற்ற பிள்ளைகள், ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர் ஆகியோரின் உபத்திரவத்திற்கு ஆளாகிறார்கள். பிற நாடுகளிலும் இதே நிலைதான்.

விளம்பரமும் நுகர்வோர் கலாச்சாரமும் அது வேண்டும் இது வேண்டுமென பிள்ளைகளை அடம்பிடிக்கச் செய்யலாம். வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள தாய்மார் தங்கள் பிள்ளைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தாக வேண்டுமென நினைக்கலாம்; ஏனெனில் மற்ற தாய்மார்கள் அப்படி செய்வதை அவர்கள் காண்கிறார்கள். வாங்கிக் கொடுக்க முடியாமல் போகையில் அவர்கள் தங்களை லாயக்கற்றவர்களாக நினைக்கிறார்கள்.

இன்றைய தாய்மாரைப் பற்றிய இந்தக் கலந்தாய்வு, கடினமாக உழைத்து தங்களையே மெழுகுவர்த்தி ஆக்கிக்கொள்ளும் கோடிக்கணக்கான தாய்மார்களின் அரும் பணிகளை மூடிமறைத்துவிட கூடாது; உயர்ந்த இலட்சியங்களில் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, அதாவது மனித குடும்பத்தின் வருங்கால சந்ததியை உருவாக்குவதற்கு அவர்கள் தங்களாலானதைச் செய்கிறார்கள். இது ஒரு பாக்கியம். “பிள்ளைகள் கர்த்தர் அருளும் ஆசீர்வாதமும் பரிசும் ஆகும்” என பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 127:3, கன்டெம்பரரி இங்லீஷ் வர்ஷன்) இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான மிரீயம் இப்படிப்பட்ட தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார், அவர் கூறுவதாவது: “சவால்கள் ஒருபுறமிருந்தாலும், தாயாக இருப்பதில் தன்னிகரற்ற சந்தோஷங்களும் உண்டு. பிள்ளைகள் பயிற்றுவிப்பையும் சிட்சையையும் ஏற்று சமுதாயத்தில் பொறுப்புள்ள அங்கத்தினர்களாவதைக் காண்பது தாய்மார்களாகிய எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது.”

தங்கள் பரிசை இன்னும் நிறைவாக அனுபவித்து மகிழ தாய்மார்களுக்கு எது உதவும்? சில நடைமுறை ஆலோசனைகளை அடுத்த கட்டுரையில் காணலாம். (g02 4/8)

[அடிக்குறிப்பு]

a இக்கட்டுரைகள் மணமான தாய்மார்களை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. ஒற்றை தாயாரும் மணமாகாத அம்மாக்களும் எதிர்ப்படும் சவால்களை பற்றி இனிவரும் விழித்தெழு! விளக்கும்.

[பக்கம் 6-ன் பெட்டி]

“தாய்மார் தினம்”

வறுமையிலும் வறுமை, படிப்பறிவின்மை, பொறுப்பற்ற ஆண் துணைவர்கள், சதா கொடுமை, எய்ட்ஸ் நோய் ஆகிய இவையே தென் ஆப்பிரிக்க தாய்மார்களின் அவல நிலை. சமீபத்தில் தாய்மார் தினத்தன்று த ஸிட்டிஸன் என்ற தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் இவ்வாறு அறிவித்தது: “தாய்மார் தினத்தின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் துணைவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள், சிலர் தங்கள் உயிரையே இழப்பார்கள்.” இப்படிப்பட்ட பிரச்சினைகளால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தென் ஆப்பிரிக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கைவிட்டுவிடுகிறார்கள். சமீப இரண்டு வருடங்களில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகமதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொள்வது இன்னும் கொடுமை. சமீபத்தில், வறுமையில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் கட்டிப் பிடித்தவாறு, பாய்ந்து வந்துகொண்டிருந்த ரயில் முன் போய் நின்றாள். அனைவரும் பலியானார்கள். வாழ்க்கையை ஓட்ட சில தாய்மார் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், சட்ட விரோதமாக போதைப் பொருட்களை விற்கிறார்கள் அல்லது அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட தங்கள் பெண் பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்கள்.

ஹாங்காங்கிலிருந்து வரும் அறிக்கை சொல்வதாவது: “நெருக்கடிகளை சமாளிக்க வழியில்லாத இளம் தாய்மார் சிலர் பிரசவித்ததும் குழந்தையைக் கொன்றுவிடுகிறார்கள் அல்லது குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.” ஹாங்காங்கிலுள்ள மணமான இளம் தாய்மார்கள் சிலர் “மிகுந்த மன அழுத்தத்தை அனுபவிப்பதால் அவர்களது மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களையே மாய்த்துக்கொள்ள தூண்டும் அளவுக்கு மோசமடையலாம்” என சௌத் சைனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டது.

[பக்கம் 7-ன் பெட்டி]

தாய்மார்—பல்வேறு நாடுகளில்

அற்பசொற்ப நேரம்

❖ வேலை பார்க்கும் தாய்மார்களில் 60 சதவீதத்தினர் பிள்ளைகளை கவனிப்பதற்கு போதுமான நேரமாக தாங்கள் கருதும் நேரத்தைக்கூட செலவழிப்பதில்லை என ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது. வேலை பார்க்கும் பெற்றோரின் மூன்று வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் 20 சதவீதத்தினர், வார நாட்களில் வீட்டில் தங்குவதில்லை, பொதுவாக தங்கள் தாத்தா பாட்டியோடு வாழ்கிறார்கள்.

மெக்ஸிகோவில் உள்ள பெண்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது கவனிப்பதற்காக தங்கள் வாழ்க்கையில் சுமார் 13 வருடங்களை செலவழிக்கிறார்கள்.

தாய்மார்களும் வேலையும்

அயர்லாந்தில் 60 சதவீத பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். கிரீஸ், இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் சுமார் 40 சதவீத பெண்கள் இப்படி செய்கிறார்கள்.

அன்றாட வீட்டு வேலைகளைச் செய்தல்

ஜப்பானில் குடும்பத்தில் யாராவது ஒருவர் அன்றாட வீட்டு வேலைகளில் ஒத்தாசை புரிந்தால், அதிலும் முக்கியமாக நோய்வாய்ப்படுகையில் ஒத்தாசை புரிந்தால் நன்றாயிருக்கும் என 80 சதவீத இல்லத்தரசிகள் சொன்னார்கள்.

நெதர்லாந்தில் ஆண்கள் ஒருநாளில் சுமார் 2 மணிநேரம் பிள்ளைகளுடன் செலவிடுகிறார்கள், 0.7 மணிநேரம் வீட்டு வேலைகளை செய்கிறார்கள். பெண்கள் சுமார் 3 மணிநேரம் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார்கள், 1.7 மணிநேரம் வீட்டு வேலைகளை செய்கிறார்கள்.

அழுத்தத்தில் தத்தளிக்கும் தாய்மார்கள்

ஜெர்மனியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்கள் அழுத்தத்தில் தத்தளிப்பதாக உணருகிறார்கள். சுமார் 51 சதவீதத்தினருக்கு தண்டுவட மற்றும் முதுகெலும்பு வட்டு (spine and intervertebral disks) சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் எப்போதுமே களைப்போடும் மனச்சோர்வோடும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 30 சதவீதத்தினர் தலைவலியால் அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.

துஷ்பிரயோகம் செய்யப்படும் தாய்மார்கள்

ஹாங்காங்கில் ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் 4 சதவீதத்தினர், கர்ப்ப காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சொன்னார்கள்.

ஜெர்மனியில் ஃபோக்கஸ் என்ற பத்திரிகை நடத்திய ஆய்வின்படி, ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தாய்மார்கள் தாங்கள் பெற்ற பிள்ளையின் கைகளாலேயே குறைந்தபட்சம் ஒருமுறையாவது அடிவாங்கியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்

[பக்கம் 7-ன் படங்கள்]

வேலையையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க பெண்கள் பலர் போராடுவதால் தாயாக இருப்பது பெரும்பாடாய் இருக்கலாம்