Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரூம் மேட்டை அனுசரித்துப் போவது ஏன் படுகஷ்டமாக இருக்கிறது?

ரூம் மேட்டை அனுசரித்துப் போவது ஏன் படுகஷ்டமாக இருக்கிறது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ரூம் மேட்டை அனுசரித்துப் போவது ஏன் படுகஷ்டமாக இருக்கிறது?

“நான் சுத்தம்னா சுத்தம், படுசுத்தம். ஆனால், வீட்டிற்குள் நுழையும்போது என் ரூம் மேட் தரையில் படுத்து டிவி பார்த்துக்கொண்டிருப்பான். அவனை சுற்றிலும் நாலா புறமும் பேப்பர்களும் பாப்கார்னும் சிதறி கிடக்கும். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் நான் பார்க்கப்போகும் அதே காட்சி மனத்திரையில் வந்து மறையும். ‘அந்த ரூமுக்குள் கால் வைக்கவே பிடிக்கவில்லை’ என்று எனக்குள் புலம்புவேன்.”​—டேவிட்.

“என் ரூம் மேட் செல்லமாக வளர்க்கப்பட்டு கெட்டு குட்டிச்சுவரானவள். என்னமோ வேலைக்காரியும், சமையற்காரனும் கூடவே இருப்பதாக அவளுக்கு நினைப்பு. எல்லாவற்றையும் தன் இஷ்டப்படிதான் செய்வாள்.”​—ரனே. a

“முன்பின் தெரியாத ஒருவரின் வினோதமான செயல்களை சகிக்க கற்றுக்கொள்வது, வளைந்து கொடுப்பதையும் விட்டுக்கொடுப்பதையும் . . . கற்றுத்தரலாம்” என யூ.எஸ். நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்டில் வந்த ஒரு கட்டுரை கூறியது. “ஆனால் இவ்வாறு கற்றுக்கொள்வது பெரும்பாலும் வேதனைமிக்கதே” என்றும் அக்கட்டுரை கூறியது. ஒரு ரூமை மற்றவருடன் பகிர்ந்துகொண்டவர்கள் இதை ஆமோதிப்பார்கள்.

பல்கலைக்கழக மாணவர்களில் அநேகர், ஆகும் செலவை குறைக்க மற்றொருவருடன் ரூமில் தங்கி படிக்கின்றனர். சில இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பி ஒரு ரூம் மேட்டோடு போய் வாழ்கின்றனர். இளம் கிறிஸ்தவர்களோ ஆவிக்குரிய இலக்குகளை அடைய உதவியாய் இருப்பதற்காக ஒரு ரூம் மேட்டை தெரிவு செய்திருக்கின்றனர். (மத்தேயு 6:33) வாழ்க்கை செலவுகளை பகிர்ந்துகொள்ள ஒருவர் இருப்பது முழுநேர ஊழியர்களாக சேவிக்க வழிசெய்வதை அவர்கள் கண்டிருக்கின்றனர். சில சமயங்களில், மிஷனரியாகவோ, யெகோவாவின் சாட்சிகளுடைய பல்வேறு கிளை அலுவலகங்களிலோ சேவிக்கையிலும்கூட ஒரு ரூம் மேட்டோடு வாழ வேண்டிய அவசியம் ஏற்படலாம். b

ரூம் மேட்டுகளோடு வாழ்ந்திருந்த அநேக இளம் ஆண்களையும் பெண்களையும் விழித்தெழு! பேட்டி கண்டது. ரூம் மேட் என்பவர் வாடகையைப் பகிர்ந்துகொள்பவர் மட்டுமல்ல, நட்புறவிற்கும், பேச்சு துணைக்கும், சேர்ந்து காரியங்களை செய்வதற்கும் ஏற்றவர் என்பதை அனைவருமே ஒப்புக்கொண்டனர். “ராத்திரி முழுக்க கண் முழிச்சு ஊர் கதை எல்லாம் பேசுவோம் அல்லது சினிமா பார்ப்போம்” என லின் நினைவுபடுத்தி கூறுகிறாள். “ரூம் மேட் உற்சாகத்தையும் அளிக்கலாம். வேலை, செலவுகள், பிரசங்கிப்பு என எல்லாவற்றையும் சமாளிக்க முயலுகையில் உங்களை உற்சாகப்படுத்த ஒரு ரூம் மேட் இருப்பது சில சமயங்களில் சந்தோஷமானதே” என்கிறாள் ரனே.

என்றாலும், ஒரு ரூம் மேட்டோடு, அதிலும் ஆரம்பத்தில் முன்பின் அறியாத ஒருவரோடு வாழ்வது பெரும் சவாலாக இருக்கலாம். “ஒத்துப்போகும் இருவரை ரூம் மேட்டுகள் ஆக்குவதற்கு கல்லூரிகள் பெரும் பாடுபட்டாலும் திருப்தியற்ற விளைவுகள் ஏற்படுவது சகஜமே” என கல்லூரி சூழ்நிலை பற்றி யூ.எஸ். நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிட்டது. உண்மையில், கல்லூரி ரூம் மேட்டுகள் மத்தியிலுள்ள பிரச்சினைகள் வன்முறைக்கும் வழிநடத்தியுள்ளன! முடிவற்றதாக தோன்றும் தங்கள் ரூம் மேட்டுகளின் தொல்லைகளை வெளிப்படையாக கூற உதவும் அநேக இன்டர்நெட் வெப் சைட்டுகள் முளைத்துள்ளன. ஒரு ரூம் மேட்டோடு வாழ்வது அநேக சமயங்களில் ஏன் கடினமாக உள்ளது?

முன்பின் அறியாதவரோடு வாழ்வது

“பரிச்சயமில்லாதவரோடு சேர்ந்து வாழச் செல்வது ஓரளவு ஆர்வமிக்க அனுபவமே” என மார்க் கூறுகிறான். “ஏனெனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்பது உங்களுக்கு தெரியாதே” என்கிறான். எந்த விதத்திலும் ஒத்துவராத அல்லது கொஞ்சநஞ்சமே ஒத்துப்போகும் ஒருவரோடு வாழ வேண்டும் என்று நினைக்கும்போதே ஓரளவு கஷ்டமாக இருக்கலாம். கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏராளமான பொது விஷயங்களும் பேசுவதற்கு நிறைய காரியங்களும் இருக்க வேண்டும் என்பது உண்மையே. என்றாலும், டேவிட் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “இன்னொருத்தருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அதிக பயத்தை ஏற்படுத்தியது.”

என்றாலும், டேவிட்டின் ரூம் மேட்டும் அதேபோன்ற பின்னணியிலிருந்து வந்தது சௌகரியமாகிவிட்டது. ஆனால், எல்லா ரூம் மேட்டுகளுமே இவ்வளவு நன்றாக ஒத்துப்போவது கிடையாது. “என்னுடைய பழைய ரூம் மேட் நாலு வார்த்தை கலகலவென பேச மாட்டான். இன்னொருவரோடு சேர்ந்து வாழும்போது பேசித்தானே ஆகணும். ஆனால் அவன் வாயே திறக்க மாட்டான். அது எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது” என மார்க் கூறுகிறான்.

வளர்ந்து வந்த சூழ்நிலைகள் காரணமாகவும் மற்ற பிரச்சினைகள் தலைதூக்கலாம். “நீங்கள் முதன்முதலாக வீட்டுக்கு வெளியே வாழச் செல்கையில் எல்லாவற்றையும் உங்கள் விருப்பப்படி செய்ய விரும்புவீர்கள். ஆனால், மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதை சீக்கிரத்திலேயே புரிந்துகொள்வீர்கள்” என லின் கூறுகிறாள். குடும்பம் என்ற பாதுகாப்பான கூட்டிலிருந்து பறந்து சென்ற உங்களுக்கு, காரியங்களை மற்றவர்கள் நோக்கும் விதம் வெகுவாக வித்தியாசப்படுவதை பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கலாம்.

பற்பல பின்னணிகளும் வெவ்வேறு வழிகளும்

எந்தளவுக்கு ஒருவர் பெற்றோரிடமிருந்து பயிற்சி பெற்றார் அல்லது பெறவில்லை என்பதே அதிக முக்கியம். (நீதிமொழிகள் 22:6) “எனக்கு பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டும், என் ரூம் மேட்டோ அழுக்கு மூட்டை. துணிமணிகள் வைக்கும் இடத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்களேன்: அவனோ அவற்றை கண்ட இடத்தில் வீசுவான். நானோ துணிகளை ஒழுங்காக அடுக்கி வைப்பேன்” என இளம் ஃபெர்னான்டோ கூறுகிறான். சில சமயங்களில், இந்த வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம்.

“எனக்கு ஒரு ரூம் மேட் இருந்தாள், அவளுடைய பெட் ரூம் அசல் குப்பைத் தொட்டிதான்! சாப்பிட்ட பிறகு மேஜையை துடைக்காமல் அல்லது இரண்டு, மூன்று நாட்களுக்கு பாத்திரங்களை கழுவாமல் அப்படியே போட்டு வைக்கும் ரூம் மேட்டுகளும் இருந்திருக்கின்றனர்” என ரனே நினைவுபடுத்தி கூறுகிறாள். வீட்டு வேலை என வரும்போது, “கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்” என கூறும் நீதிமொழிகள் 26:14-⁠ன் மறு உருவமே தாங்கள்தான் என சில ரூம் மேட்டுகள் நிரூபித்துள்ளனர்.

மறுபட்சத்தில், தொட்டதற்கெல்லாம் சுத்தம் பார்க்கும் ரூம் மேட்டோடு வாழ்வதும் சுலபமல்ல. ஒரு ரூம் மேட்டை பற்றி லீ என்ற இளம் பெண் இவ்வாறு கூறுகிறாள்: “அவளைப் பொறுத்தவரை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். நான் சோம்பேறி இல்லை என்றாலும் சில சமயங்களில் புத்தகங்களை படுக்கையிலேயே போட்டுவிடுவேன். அதை அவள்தான் சொல்லி திருத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.”

உடல் சுத்தத்திலும் ரூம் மேட்டுகளின் கருத்துக்கள் மாறுபடலாம். “என் ரூம் மேட் கடைசி நேரத்தில்தான் எழுந்திருப்பான். வாஷ்பேசின் கிட்ட ஓடி போய் கொஞ்சம் தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவான்” என மார்க் விளக்குகிறான்.

வளர்ந்த விதமும் குணாதிசயங்களும் வேறுபடுவதால் பொழுதுபோக்கு சம்பந்தமாகவும் வித்தியாசமான விருப்புவெறுப்புகள் இருக்கலாம். “எனக்கு பிடித்த இசை அவனுக்கு பிடிக்காது” என தன் ரூம் மேட்டைப் பற்றி மார்க் கூறுகிறான். என்றாலும், ஒருவரையொருவர் மதித்து நடந்தால் இப்படிப்பட்ட வித்தியாசங்கள் பலனளிக்கலாம்; சில சமயங்களில், தங்கள் விருப்பங்களை விரிவுபடுத்த இருவருக்குமே அது உதவலாம். ஆனால், அநேக சமயங்களில் இந்த வேறுபாடுகள் சண்டைக்கே வழி வகுக்கின்றன. “எனக்கு ஸ்பானிஷ் இசை என்றால் உயிர், என் ரூம் மேட்டோ எப்ப பார்த்தாலும் அதை கிண்டல் பண்ணுவான்” என ஃபெர்னான்டோ கூறுகிறான்.

ஃபோன்​—மற்றொரு பிரச்சினை

ஃபோனை உபயோகிப்பதில்தான் பெரும் தகராறுகளே ஆரம்பமாகலாம். மார்க் இவ்வாறு கூறுகிறான்: “நான் தூங்க வேண்டுமென்று நினைப்பேன். என் ரூம் மேட்டோ நடுராத்திரி வரை உட்கார்ந்து வளவளவென ஃபோனில் பேசித் தள்ளுவான். கொஞ்ச நேரத்துக்கு சமாளிக்கலாம், பின்னர் படு எரிச்சலாக இருக்கும்.” லின்கூட இவ்வாறு நினைவுபடுத்தி கூறுகிறாள்: “சில சமயங்களில் காலங்காத்தாலே மூன்று, நான்கு மணிக்கு என் ரூம் மேட்டின் ஃபிரண்ட்ஸ் ஃபோன் பண்ணுவார்கள். அவள் இல்லாவிட்டால் நான்தான் எழுந்து ஃபோனை எடுக்க வேண்டியிருக்கும்.” பரிகாரம்? “நாங்க தனித்தனி ஃபோன் வைத்துக்கொள்ள தீர்மானித்தோம்” என்கிறாள்.

என்றாலும், சொந்தமாக ஃபோன் வைத்துக்கொள்ள எல்லா இளைஞர்களுக்கும் வசதியில்லை என்பதால் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அநேகருக்கு ஏற்படுகிறது. இதனால் படு டென்ஷனான சமயங்கள் வரலாம். ரனே இவ்வாறு கூறுகிறாள்: “என் ரூம் மேட்டுக்கு ஒரு பாய் ஃபிரெண்டு இருந்தான், அதனால் அவள் அடிக்கடி மணிக்கணக்காக ஃபோனில் பேசுவாள். ஒரு மாதம் அவளுடைய ஃபோன் பில் 4,000 ரூபாயைத் தாண்டிவிட்டது. ஃபோன் பில்லை சமமாக பிரித்துக்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டிருந்ததால் எல்லாரும் அந்தத் தொகையைப் பகிர்ந்துகொள்ளும்படி எதிர்பார்த்தாள்.”

ஃபோனை உபயோகிக்க முடிவதே மற்றொரு பிரச்சினையாக இருக்கலாம். “ஒரு சமயம் என்னைவிட வயதில் மூத்தவள் என் ரூம் மேட்டாக இருந்தாள். எங்களுக்கு ஒரேயொரு ஃபோன்தான் இருந்தது. எனக்கோ எக்கச்சக்கமான நண்பர்கள், எப்போதுமே நான்தான் ஃபோனை உபயோகிப்பேன். அவள் எதுவுமே சொன்னதில்லை. ஃபோன் பேச வேண்டுமென்றால் அவளே வந்து கேட்பாள் என்று நினைத்தேன். ஆனால், கரிசனை இல்லாமல் நடந்துகொண்டேன் என்பதை இப்போது உணருகிறேன்” என லீ கூறுகிறாள்.

தனிமை பறிபோதல்

“எல்லாருக்குமே கொஞ்சம் தனிமை தேவை. சில சமயங்களில் எதுவுமே செய்யாமல் ஹாயாக படுத்திருக்க விரும்புவேன்” என டேவிட் கூறுகிறான். ஆனால், நீங்கள் இன்னொருவரோடு ரூமை பகிர்ந்துகொள்ளும்போது தனிமை என்பது எட்டாத கனியாகலாம். மார்க்கும் இவ்வாறு ஒப்புக்கொள்கிறான்: “நான் கொஞ்ச நேரமாவது தனியாக இருக்க விரும்புவேன். அதனால் தனிமை கிடைக்காததே எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் ஒரே ஷெட்யூல்தான். அதனால், தனிமையை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.”

இயேசு கிறிஸ்துவும்கூட சில சமயங்களில் தனிமையை விரும்பினார். (மத்தேயு 14:13) ஆகவே, ஒரு ரூம் மேட் இருப்பதால் வாசிக்க, படிக்க அல்லது தியானிக்க கடினமாயிருந்தால் அல்லது முடியாமல் போனால் அது வெறுப்பூட்டலாம். “ரூமில் ஏதாவது நடந்துகொண்டே இருப்பதால் படிப்பது ரொம்ப கஷ்டம். அவனுடைய நண்பர்களை ரூமுக்கு அழைத்திருப்பான் அல்லது ஃபோனில் பேசுவான், அல்லது டிவி பார்ப்பான் அல்லது ரேடியோ கேட்பான்” என மார்க் கூறுகிறான்.

ரூம் மேட்டை அனுசரித்துப் போவது கடினமாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதில் வெற்றி கண்டுள்ளனர். இந்தத் தொடரில் இனி வரும் கட்டுரைகள், ரூம் மேட்டோடு வாழ்வதில் வெற்றி காண சில நடைமுறையான வழிகளை கலந்தாலோசிக்கும். (g02 4/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இந்த ஆலோசனைகள் முக்கியமாக இளைஞருக்கே என்றாலும், துணையைப் பறிகொடுத்தல் போன்ற சூழ்நிலை மாற்றங்களால் ஒரு ரூம் மேட்டோடு வாழ நேரிடும் முதியவர்களுக்கும்கூட இவை உதவியாக இருக்கலாம்.

[பக்கம் 14, 15-ன் படம்]

இசையில் வித்தியாசமான ரசனைகள் சவாலாக அமையலாம்

[பக்கம் 16-ன் படம்]

யோசனையற்ற நடத்தை டென்ஷனை கிளப்பலாம்