அவளுடைய முயற்சி பலன் தந்தது
அவளுடைய முயற்சி பலன் தந்தது
யெகோவாவின் சாட்சிகளில் இளைஞர்கள் பலர் தங்களுடைய விசுவாசத்தைக் குறித்து தைரியமாக பேசுவதில் சிறந்த முன்மாதிரியாய் விளங்குகின்றனர். கிரீஸிலுள்ள சலோனிகாவில் வசிக்கும் ஸ்டெல்லா என்ற பருவ வயது பெண்ணை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவள் சொல்கிறாள்: “யெகோவாவைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கு நம்முடைய வீடியோக்களை பயன்படுத்துவதற்குரிய வழிகளைப் பற்றி கிறிஸ்தவ கூட்டங்கள் ஒன்றில் சிந்தித்தோம். யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோவை பயன்படுத்துவதற்கு ஒரு வழியை நான் யோசித்துப் பார்த்தேன். அடுத்த நாள் என்னுடைய பள்ளி முதல்வரிடம் பேசி, இந்த வீடியோவை பள்ளிக்கூடத்தில் போட்டு காட்டும்படி ஆலோசனை கூறினேன். ஆசிரியர்கள் ஒத்துக்கொண்டால், அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
“பின்பு அதே நாளில் முதல்வர் என்னிடம், அடுத்த வாரத்தில் அந்த வீடியோவை போட்டுக் காட்டலாம்—ஆனால் பள்ளி முடிந்த பிறகுதான்—என கூறினார். அது ஏமாற்றமாக இருந்தது, ஏனென்றால் அந்த வீடியோவைப் பார்ப்பதற்கு ஓய்வு நேரத்தை தியாகம் பண்ணி என்னுடைய கிளாஸ்மேட்ஸ் வரமாட்டார்கள் என நினைத்தேன். இருந்தாலும், அடுத்த நாள் எல்லாரையும் கூப்பிட்டேன். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதோடு, மற்ற வகுப்பு மாணவர்களையும் அவர்கள் கூப்பிட்டார்கள். இறையியல் பேராசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் அந்த வீடியோவைப் பார்க்க வந்தார்கள்.
“எல்லாரும் கூர்ந்து கவனித்தார்கள். அதற்குப் பிறகு, கேள்வி-பதில் கலந்தாலோசிப்பிற்கு தலைமை தாங்கும்படி முதல்வர் என்னை அழைத்தார். அந்த வீடியோவில், யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் செய்யப்படும் வாலண்டியர் வேலை அநேக மாணவர்களுடைய மனதைக் கவர்ந்தது. ‘அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாதபோதிலும், தங்களுடைய வேலையை சந்தோஷமாக செய்கிறார்கள்!’ என ஒரு மாணவி வியந்து பாராட்டினாள்.
“வந்திருந்த எல்லாரிடமும், பைபிள் அடிப்படையிலான நம்முடைய பிரசுரங்களைப் பற்றி சொன்னேன். ராஜ்ய செய்தி எண் 36, “நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்ற துண்டுப்பிரதியையும் எல்லாருக்கும் கொடுத்தேன். வீடியோ பார்க்க வராத ஆசிரியர்களுக்கு கொடுப்பதற்காக இன்னும் நிறைய பிரதிகளை முதல்வர் கேட்டார்.
“அதற்குப் பிறகு, இந்த வீடியோவைப் பற்றி மாணவர்கள் நிறைய பேர் தங்களுடைய நண்பர்களிடம் பேசினார்கள். சாட்சி கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. என்னுடைய கிளாஸ்மேட்ஸ் எனக்கு ரொம்ப மரியாதை காண்பிக்கிறார்கள்; ஆனால் மிக முக்கியமாக, நான் வணங்கும் கடவுளுக்கு மரியாதை காண்பிக்கிறார்கள்!” (g02 5/8)