Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

கொழுகொழு செல்லப்பிராணிகள்

“நாய்களையும் பூனைகளையும் பாதிக்கும் நம்பர் 1 நோய் அவை கொழுகொழுவென பருமனாக இருப்பதே” என கனடாவின் த குளோப் அண்டு மெயில் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “மனிதரையும் மிருகங்களையும் பொருத்ததில் காரணங்கள் ஒன்றே: மோசமான உணவுப் பழக்கங்களும் உடற்பயிற்சி இன்மையும்.” கனடாவின் கால்நடை மருத்துவ அசோஸியேஷன் கவுன்சிலைச் சேர்ந்த பர்னி பூகே செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் வாழ்க்கை முறையையே அதற்கு குற்றம்சாட்டுகிறார்: “நாம் படுபிஸியாக இருப்பதால் போதுமானளவு உடற்பயிற்சி செய்வதில்லை. எஜமானர் பிஸியாக இருப்பதால் நாய்க்கும் போதுமான உடற்பயிற்சி கிடைப்பதில்லை. நமக்கு மாவுச்சத்துமிக்க உணவு இருந்தால் பரமதிருப்தி, செல்லப்பிராணிக்கும் அதுவேதான்.” “அளவுக்கதிக எடையுள்ள செல்லப்பிராணிகளுக்கு சர்க்கரை வியாதி, இருதய வியாதி, உயர் இரத்த அழுத்தம், மூட்டு அழற்சி போன்றவை வர அதிக சாத்தியமிருக்கிறது. . . . ஆரோக்கியமான விலங்குகளைக் காட்டிலும் அவற்றிற்கு ஆயுள் குறைவு” என குளோப் எச்சரிக்கிறது. குண்டாக இருக்கும் செல்லப்பிராணிகளுக்கான கால்நடை சிகிச்சையில் பொதுவாக திட்ட உணவும், நாய்களைப் பொருத்ததில் அதிகளவு உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. (g02 5/8)

புதிய ஒளி-மாசு அட்லஸ்

“பால்வீதி மண்டலத்தின் திடீர் மறைவுக்கு, அண்டத்தில் ஏற்பட்ட ஏதோ எழுச்சி அல்ல, ஆனால் பெருகி வரும் நம் நகரங்கள் கக்கும் பிரகாசமான ஒளிக்கற்றைகளே காரணம்; இவற்றால் நம் பால்மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களை பெரும்பாலான ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் காண முடியாமல் போய்விடுகிறது. இந்தச் செயற்கை ஒளிப்பிரவாகம், வான் ஆராய்ச்சியாளர்களின் கூர்ந்த ஆராய்வுக்கு இடைஞ்சலாய் இருந்து அவர்களை மனமுடைந்து போக செய்திருக்கிறது” என சயன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இப்படி மனமுடைந்த நட்சத்திர ஆய்வாளர்களுக்கு உதவுவதற்காக இத்தாலியிலும் ஐக்கிய மாகாணங்களிலும் உள்ள விஞ்ஞானிகள் உலகளாவிய ஒளி தூய்மைக்கேட்டை கோடிட்டுக் காட்டும் புதிய அட்லஸை உருவாக்கியுள்ளனர். “இரவில் கண்டம் முழுவதும் பரவலாக காணப்படும் பிரகாசமான ஒளிகளை” மட்டுமே சுட்டிக்காட்டிய முந்தைய வரைபடங்களைப் போல் அல்லாமல் இன்டர்நெட்டிலும் பார்க்க முடிந்த இந்தப் புதிய அட்லஸில் “கண்டங்களின் வரைபடங்களும், இன்னுமதிக விவரங்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நட்சத்திரங்களை எவ்வளவு தெளிவாக காண முடியும் போன்ற விவரங்கள் உள்ளன” என்கிறது சயன்ஸ். (g02 5/22)

மணமாகாத பெற்றோரின் பிள்ளைகள்​—பெருகிவரும் பிரச்சினை

யூரோஸ்டேட் எனப்படும் ஐரோப்பிய புள்ளிவிவர ஏஜென்ஸியின்படி, தற்போது ஐரோப்பிய யூனியனில் பிறக்கும் 4 குழந்தைகளில் ஒன்று, மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறப்பதாக ஜெர்மானிய நாளிதழான வெஸ்ட்டாய்ட்ஷா ஆல்கிமைனா ஸைட்டுங் அறிக்கை செய்கிறது. 1980-⁠ல் இந்த விகிதம் 10-⁠க்கு 1 என்பதற்கும் குறைவாகவே இருந்தது. கிரீஸில் மணம் செய்துகொள்ளாதவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக, அதாவது 4 சதவீதம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மறுபட்சத்தில் அதற்கு நேர்மாறாக ஸ்வீடனில் பிறக்கும் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் மணமாகாத பெற்றோருக்குப் பிறப்பவையே. அயர்லாந்தோ மாபெரும் மாற்றத்தைக் கண்டது. மணம் செய்துகொள்ளாதவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1980-⁠ல் 5 சதவீதமாக மட்டுமே இருந்தது 2000-⁠ல் 31.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, “திருமணத்தையும் குடும்பத்தையும் பற்றியதில் ஐரோப்பியர்களின் மனப்பான்மையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. (g02 5/8)

100-லும் ஆனந்தமும் ஆரோக்கியமும்

“100 வயதைக் கடந்தவர்களில் 80 சதவீதத்தினர் தாங்கள் எந்நாளும் உடலிலும் உள்ளத்திலும் நலமுடன் இருப்பதாக உணருகிறார்கள்” என யோமியுரி ஷீம்புன் செய்தித்தாளில் வெளியான அறிக்கை காட்டுகிறது. ஜப்பானில் நூறாண்டு வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 1981-⁠ல் முதன்முறையாக 1,000-ஐக் கடந்தது, அந்த எண்ணிக்கை 2000-⁠ல் 13,000-ஐ எட்டியது. சமீபத்தில் சுகத்துக்கும் பலத்துக்குமான ஜப்பானிய ஸ்தாபனம் ஒன்று, நூறாண்டு காலம் வாழ்ந்த 1,900-⁠க்கும் அதிகமானோரை வைத்து சுற்றாய்வு நடத்தியது; 100 வயதைத் தாண்டிய முதியவர்களை வைத்து “வாழ்க்கை தரத்தின்” பேரில் இதுவரை செய்யப்பட்டிராத மாபெரும் சுற்றாய்வு இது. “25.8 சதவீத பெண்களோடு ஒப்பிட பெருமளவு ஆண்கள், அதாவது 43.6 சதவீதத்தினர் தங்கள் ‘வாழ்க்கைக்கு நோக்கம் இருப்பதாக’ சொல்வதாய்” அந்த செய்தித்தாள் அறிவித்தது. நூற்றாண்டு கண்ட பெரும்பாலோர் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கங்களைப் பற்றி சொல்லுகையில், “குடும்பம்,” “நீண்ட கால வாழ்க்கை,” “நல்லாரோக்கியத்தை அனுபவித்து, சந்தோஷமாக வாழ்வது” போன்றவற்றைக் குறிப்பிட்டனர். எனவே “வாழ்க்கைக்கு நோக்கம் இருப்பது நீண்ட கால வாழ்க்கைக்கு வழிசெய்கிறது” என யோமியுரி ஷீம்புன் ஆலோசனை அளிக்கிறது. (g02 5/8)

செக்ஸில் ஈடுபடும் டீனேஜர்கள்

“பெற்றோர் பிரிந்து வாழ்கிறவர்களாக அல்லது பெற்றோர் மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்கிறவர்களாக இருந்தால் அவர்களுடைய” டீனேஜ் பிள்ளைகள் “செக்ஸில் ஈடுபட்டிருக்க இருமடங்கு வாய்ப்புள்ளது” என பிரிட்டனின் குடும்ப விவகாரங்களுக்கான நிறுவனத்தின் அறிக்கை காட்டுவதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் சொல்கிறது. செக்ஸில் ஈடுபடும் 13 வயதுக்காரர்களில் கால் பாகத்தினர் குறைந்தது நான்கு பேரோடாவது செக்ஸ் வைத்திருந்தனர், 5 இளம் டீனேஜர்களில் ஒருவர் தங்கள் கற்பை பறிகொடுத்த சமயத்தில் குடிபோதையில் இருந்தனர். “நல்ல முறையில் பிள்ளைகளை வளர்க்க மணவாழ்க்கை சூழலே சிறந்தது என வலியுறுத்துவதன்” அவசியத்தை அந்த அறிக்கை அழுத்திக் காட்டுகிறது. ‘பருவ வயதினரும் பெற்றோரும் ஒட்டுதலே இல்லாமல் இருப்பதாலும், இருவரும் அத்திப்பூத்தாற்போல் பார்த்து பேசுவதாலும், பிள்ளைகளை மேற்பார்வையின்றி விடுவதாலும்’ பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. “இளம் டீனேஜர்களை உடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடத்தைக்கு அதிகளவு பொறுப்பேற்காத வரை பாலுறவில் ஈடுபடும் டீனேஜர்களின் எண்ணிக்கை குறையவே குறையாது; பருவ வயதில் கருத்தரிப்பதும், பாலுறவால் பரவும் வியாதிகளும் தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும்” என அந்த அறிக்கை முடிக்கிறது. (g02 5/8)

தூங்கிவழியும் டிரைவர்கள்

டிரைவர்கள் படுசோர்வாக இருக்கையில் வண்டி ஓட்டாதிருக்கும்படி போக்குவரத்துப் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் சேர்ந்து தூக்க நிபுணர்களும் அறிவுரை சொல்வதாக ஃப்ளீட் மெய்ன்டனன்ஸ் & சேஃப்டி ரிப்போர்ட் அறிக்கை செய்கிறது. இரவு தோறும் குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் உறங்க வேண்டுமென தூக்க ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிற போதிலும் பெரும்பாலோர் அதற்கும் மிக குறைந்தளவே உறங்கி சமாளிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மற்ற வயதுக்காரர்களைவிட 19-⁠க்கும் 29-⁠க்கும் இடைப்பட்ட வயது டிரைவர்களே பெரும்பாலும் தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுவதாகவும் தூக்கம் சொக்குகையில் அவர்கள் வண்டியின் வேகத்தை அதிகரிக்க முயலுவதாகவும் சுற்றாய்வுகள் காட்டுகின்றன. “மதுபானம் அருந்திவிட்டு வண்டியோட்டுவதும் தூங்கிவிழ வைக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ரேடியோ “ஆன்” செய்து வைப்பது அல்லது சன்னல் கதவை சற்று கீழிறக்குவது உங்களை விழிப்புடன் இருக்க வைக்காது, ஆனால் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு வருவது உங்கள் தூக்கத்தை போக்க உங்களுக்கு உதவலாம் என அமெரிக்காவின் மோட்டார் வாகன போக்குவரத்து பாதுகாப்பின் கூட்டமைப்பினுடைய மேலாளர் டேவிட் வில்லஸ் குறிப்பிடுகிறார். “தூக்கக் கலக்கத்துக்கு ஒரே பரிகாரம் தூங்குவதுதான்” என அடித்துச் சொல்கிறார் வில்லஸ். (g02 5/8)

மன நோயைப் புரிந்துகொள்ளுதல்

“உலகில் நால்வரில் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு காலகட்டத்தில் மன நோயால் அல்லது நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்” என அறிக்கை செய்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). பலவிதமான மன நோய்களை சிகிச்சையில் குணப்படுத்த முடிந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் மருத்துவ உதவியை நாடுவதே இல்லை. “மன நோய் தானாகவே வருவித்துக்கொள்ளும் குறைபாடில்லை” என்கிறார் WHO-வின் டைரக்டர் ஜெனரலான டாக்டர் க்ரோ ஹார்லம் பிரன்ட்லான். “அப்படி ஒரு குறைபாடு இருக்கிறதென்றால், மன நோய், மூளை கோளாறுகள் உள்ளவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதமே உண்மையில் அதற்குக் காரணமாக இருக்கலாம். நீண்ட காலமாக நிலவி வந்த சந்தேகங்களையும் கொள்கையையும் ஒதுக்கி தள்ளவும் மனநலனைப் பொருத்ததில் புதிய பொதுநல சகாப்தத்தைப் படைக்கவும் இந்த அறிக்கை உதவும் என நம்புகிறேன்” என்கிறார் அவர். இன்றைய ஆரோக்கிய போக்கின்படி “மன அழுத்தக் கோளாறுகள் . . . மற்ற எல்லா நோய்களையும் தாண்டி, குருதியோட்டக் குறைவால் வரும் இருதய நோய்க்கு அடுத்ததாக, 2020-⁠ல் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கிறது WHO. எனினும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகையில் பாதிக்கப்பட்டவர்கள் “பயனுள்ள விதத்தில் வாழவும் தங்கள் சமுதாயத்தில் முக்கிய அங்கங்களாக திகழவும் முடியும்.” (g02 5/22)

படைப்போம் பளிங்கு கல்

“சிலநாட்களுக்குள் பாக்டீரியாவிலிருந்து பளிங்கைப் படைக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்கிறது லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் செய்தித்தாள். மண்ணில் இயற்கையாகவே காணப்படும் சுண்ணாம்பை உருவாக்கும் நுண்ணிய பாக்டீரியாக்கள், ஆய்வுக்கூடத்தில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, நீரில் கரையத்தக்க மாவுப்பொருள் கலவையுள்ள திரவ ஊடகத்தில் வளர்க்கப்படுகின்றன. அந்த பாக்டீரியாக்களின் உணவாகிய கனிப்பொருள் தீர்ந்துபோகையில் அவை மடிந்து, தூய்மையான கால்சியம் கார்பனேட்டை அதாவது பளிங்கை நீர்மநிலையில் உண்டுபண்ணுகின்றன. இந்த நீர்மத்தை, காலத்தால் சிதையுண்ட அல்லது சீதோஷணநிலையால் சேதமடைந்த சிற்பங்களின்மீதும் மற்ற பளிங்கு பரப்பின்மீதும் பீச்சியடிக்கும்போது, மெல்லிய படலம் உருவாகிறது; அது அந்த மேற்பரப்பை ஊடுருவி சென்று இறுக்கமாக கல்லோடு ஒட்டிக்கொள்கிறது. உயர் ரக பளிங்கு இன்று அரிதாக கிடைப்பதால் மலிவான, பக்க பாதிப்புகளை ஏற்படுத்தாத பளிங்கு நீர்மத்தை துரிதமாக, பெருமளவில் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கிறது என இங்கிலாந்தின் மெர்ஸிசைட் தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களின் சிற்ப பாதுகாப்பு துறை தலைவர் ஜான் லார்ஸன் சொல்கிறார். (g02 5/22)

கடவுளின் பெயரில் கொள்ளை

“நான் 20 ஆண்டுகளாக முதலீட்டு பாதுகாவலராக இருந்து வந்திருக்கிறேன், வேறு எந்த விதத்திலும் அல்லாமல் கடவுளின் பெயரில் எக்கச்சக்கமான பணம் கொள்ளையடிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்” என்கிறார் நார்த் அமெரிக்கன் செக்யூரிட்டீஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் அசோஸியேஷனின் தலைவர் டெப்ரா பார்ட்னர். “உங்கள் மதத்தையோ விசுவாசத்தையோ சுட்டிக்காட்டி, யாரேனும் பணத்தை முதலீடு செய்ய உங்களை தூண்டுகிறார்கள் என்பதற்காக கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது.” கிறிஸ்டியன் செஞ்சுரி என்ற பத்திரிகையின்படி “முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பதற்காக ஆன்மீக அல்லது மத நம்பிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்திய நூற்றுக்கணக்கான நபர்களின்மீதும் கம்பெனிகள்மீதும் கடந்த 3 வருடங்களில் 27 மாகாணங்களிலுள்ள முதலீட்டு பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். . . . [ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக] நடந்து வந்த ஒரு பேர்போன சம்பவத்தில்” ஒரு புராட்டஸ்டன்ட் அமைப்பு “59 கோடி டாலருக்கும் அதிகமான பணத்தை நாடெங்குமுள்ள 13,000-⁠க்கும் அதிகமான முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்திருந்தது. மாகாண பாதுகாவலர்களால் அந்த அமைப்பு 1999-⁠ல் மூடப்பட்டது; அதன் மூன்று அதிகாரிகள் மோசடி குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்றிருந்தார்கள்.” இன்னும் மூன்று சம்பவங்களில் மொத்தம் “150 கோடி டாலர் பணம் நஷ்டமேற்பட்டது” என கிறிஸ்டியன் செஞ்சுரி அறிவிக்கிறது. (g02 5/22)