ஊட்டச்சத்துமிகு உணவுகள் கைக்கு எட்டும் தூரத்தில்
ஊட்டச்சத்துமிகு உணவுகள் கைக்கு எட்டும் தூரத்தில்
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
மெக்ஸிகோவிலுள்ள வஹாகா என்ற மாநிலத்தில் ஒரு சிறிய நாட்டுப்புறத்தில் ஆன்ஹெலீகாவும் அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வறுமையில் வாடினார்கள்; மக்காச்சோள ரொட்டிகள், பீன்ஸ்கள், மிளகாய் ‘சாஸ்’கள், அரிசி கஞ்சி, ஸ்வீட் பிரெட், டீ ஆகியவையே அவர்களுடைய உணவு. “நாங்கள் உயரமாக வளரவில்லை” என சொல்கிறார் ஆன்ஹெலீகா. “நாங்கள் குட்டையாகவும் எலும்பும் தோலுமாகவும் இருந்தோம். வயிற்றுக் கோளாறுகள், ஒட்டுண்ணி நோய்கள், ஜலதோஷம் என அடிக்கடி எங்களுக்கு வியாதி வந்துவிடும்.”
ஏதாவது வேலை கிடைக்கும், அதில் வரும் வருமானத்தை வைத்து பொருளாதார கஷ்டத்தை போக்கலாம்
என்ற நம்பிக்கையில் ஆன்ஹெலீகாவும் அவளுடைய குடும்பத்தாரும் மெக்ஸிகோ நகரத்திற்கு குடிமாறிச் செல்ல தீர்மானித்தார்கள். இப்பொழுது தாங்கள் சாப்பிடும் உணவு எவ்வளவோ தேவலை என அவள் நினைக்கிறாள். ஏனென்றால் பால், முட்டை, இறைச்சி, பாலேடு, சில காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட பல்வகை உணவுகள் ஆகியவற்றை இப்பொழுது உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்பொழுது அவர்களுடைய உணவு அதிக ஊட்டச்சத்துமிக்கதாய் ஆகிவிட்டதா?தவறான ஊட்டச்சத்து—எந்தளவுக்கு பரவியுள்ளது?
உலகம் முழுவதிலும் சுமார் 80 கோடி மக்கள் போதிய ஊட்டச்சத்தின்மையால் மரிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஏற்படும் சுமார் 50 சதவீத இறப்புகளில் அனைத்திற்கும் போதிய ஊட்டச்சத்தின்மையே காரணம் என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 1998 உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. அப்படியே உயிர் பிழைத்தாலும் பெரும்பாலும் அவர்களுடைய உடல்நிலை மோசமாகவே இருக்கிறது.
மறுபட்சத்தில், 80 கோடி மக்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் மரிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என சிலர் கூறுகிறார்கள். சரிவிகிதமற்ற உணவால் உடல் பருமன், பெருந்தமனி தடிப்பு (atherosclerosis), இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, கரணை நோய் (cirrhosis), பல்வகை புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம். இந்த விஷயத்தை WHO இவ்வாறு தொகுத்துரைக்கிறது: “தவறான ஊட்டச்சத்து என்பதில் ஊட்டச்சத்துக் குறைவும், குறிப்பிட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறைகளும் ஊட்டச்சத்து மிகுதியும் உட்பட பல பாதிப்புகள் அடங்கியுள்ளன; அது உயிரை பறிக்கிறது, ஊனமாக்குகிறது, செயல்படும் வேகத்தை குறைக்கிறது, முடமாக்குகிறது, குருடாக்குகிறது, உலகெங்கிலும் பெருமளவில் மனிதனுடைய வளர்ச்சியை பாதிக்கிறது.”
ஒரே நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவும் உடல் பருமனும் உண்டாகலாம். ஒரே வீட்டில் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடும், வயதுவந்தவர்களுக்கு உடல் பருமனால் தீரா பிரச்சினைகளும் ஏற்படலாம். சில சமயத்தில், ஒரே நபரே குழந்தைப் பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் வயதுவந்த பருவத்தில் உடல் பருமனாலும் அவதியுறலாம். இது நாட்டுப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு குடிபெயர்ந்து செல்கிறவர்களுக்கு நேரிடலாம்.
பெரும்பாலோர் தங்களுடைய உடல்நிலைக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்வதில்லை. தவறான உணவுப் பழக்கத்தின் பாதிப்பு உடனடியாக தெரியாமல் இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான உணவு பல்வேறு
வியாதிகளைத் தடுக்கலாம். சொல்லப்போனால், தகுந்த உணவுப் பழக்கங்களாலும் உடற்பயிற்சியாலும் 40 சதவீத புற்றுநோய்களைத் தடுக்க முடியும் என WHO கணக்கிடுகிறது. ஆனால் நீங்கள் எவ்வாறு உங்களுடைய உணவுப் பழக்கத்தை முன்னேற்றுவிக்கலாம்?உணவுப் பழக்கத்தை முன்னேற்றுவிப்பது எப்படி
உணவு மூன்று முக்கிய தொகுதிகளாய் பிரிக்கப்படுவதாக சிலர் கருதுகின்றனர். முதல் தொகுதியில் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, ஓட்ஸ், ரை, பார்லி, கம்பு போன்ற தானிய வகைகளும், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் அடங்குகின்றன. இந்த கார்போஹைட்ரேட்டுகள் உடனடி சக்தியை தருகின்றன. இரண்டாம் தொகுதியில் பீன்ஸ்கள், சோயா பீன்ஸ்கள், அவரை வகைகள், கடலை, நாட்டு பீன்ஸ் போன்ற பயிர் வகைகளும், விலங்குகளிலிருந்து பெறப்படும் சில உணவுகள், அதாவது இறைச்சி, மீன், முட்டை, பால், பால்பண்ணை பொருட்கள் ஆகியவையும் அடங்கும். இவற்றில் புரோட்டீன், இரும்பு, துத்தநாகம், இன்னும் பல்வேறு விட்டமின்களும் இருக்கின்றன. மூன்றாம் தொகுதியில், பழங்களும் காய்கறிகளும் அடங்கும். இவை இன்றியமையா வைட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் தருகின்றன. இந்த உணவு நார்ச்சத்தையும் சக்தியையும் தருகிறது, இவற்றில்தான் இயற்கையில் கிடைக்கும் வைட்டமின் சி இருக்கிறது.
மெக்ஸிகோவை சேர்ந்த சால்வாடோர் சூபிரான் தேசிய மருத்துவ அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்தின் (INCMNSZ) இயக்குநர் டாக்டர் எக்டோர் பூர்கெஸ் கூறுகிறபடி, ஆரோக்கியமான உணவில் இந்த மூன்று தொகுதிகளும் போதுமான அளவிலும் சரிவிகிதமாகவும் இருக்க வேண்டும். “ஒவ்வொரு வேளை சாப்பிடும்போதும் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தபட்சம் ஒரு உணவையாவது உட்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு தொகுதிக்குள்ளேயும் முடிந்தவரை வித்தியாசமான உணவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவை தயாரிக்கப்படுகிற முறையும் முடிந்தவரை விதவிதமாக இருக்க வேண்டும் என்றும்” அவர் ஆலோசனை கூறுகிறார்.
உதாரணமாக, மாரியாவை எடுத்துக்கொள்ளுங்கள். மெக்ஸிகோவில் ஹிடல்கோ என்ற மாநிலத்தைச் சேர்ந்த ஆடோபிக்ஸ்கோ என்ற ஒரு கிராமப்புற சமுதாயத்தில் இவளும் இவளுடைய குடும்பத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைகள், அவர்களுடைய அடிப்படை உணவில் ரொட்டிகள், பீன்ஸ்கள், பாஸ்டா, அரிசி, மிளகாய்கள் ஆகியவை உட்பட்டிருந்தன. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஆன்ஹெலீகாவின் குடும்பத்திற்கு மாறாக, இவர்களுடைய உணவில் சிறிய பூசணி வகைகளும் சயோட்டிகளும் காளான்களும், பர்ஸ்லேன், பிக்வீட் போன்ற கீரை வகைகளும் அடங்கியிருந்தன. இவற்றில் பல அந்த நாட்டுப்புற பகுதிகளில் கிடைத்தன. எப்பொழுதாவது சீஸனில் பழவகைகளையும் சாப்பிட முயன்றார்கள். அவர்களுடைய முயற்சியால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைத்தது.
விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகளை அடிப்படை உணவாக அல்ல, ஆனால் நீங்கள் தயாரிக்கும் ஒரு உணவுப் பதார்த்தத்துடன் கலந்து பயன்படுத்துவதை INCMNSZ-ன் செயல்முறை ஊட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கல்வி இலாகாவின் தலைவர் டாக்டர் அடால்ஃபோ சாவ்ஸ் பரிந்துரை செய்கிறார். உதாரணமாக, உருளைக்கிழங்கு, காய்கறிகள், அல்லது பீன்ஸ்களோடு சில முட்டைகளை சேர்த்து ஓர் உணவுப் பதார்த்தத்தை தயாரிக்கலாம். “இதைத்தான் ஊட்டச்சத்து [துறையில்] ‘எக்ஸ்டென்டிங்’ என குறிப்பிடுகிறார்கள்” என டாக்டர் சாவ்ஸ் கூறுகிறார். ஆனால் ஓர் எச்சரிக்கை: எப்பொழுதும் பழங்களையும் காய்கறிகளையும் நன்றாக கழுவுங்கள், முக்கியமாக அவற்றை பச்சையாக சாப்பிடும் சமயத்தில்.
உணவு ஒவ்வொருவருக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும், அதாவது வயது, பாலினம், வாழ்க்கை பாணி ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வயதுவந்தவர்கள் ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும் பழத்தையும் அதோடு/அல்லது காய்கறிகளையும் இரண்டு பங்குகள் சாப்பிடும்படியும் அதிகப்படியான தானியங்களையும் பருப்பு வகைகளையும் உட்கொள்ளும்படியும் சிலர் ஆலோசனை தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு தடவை சாப்பிடும்போதும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றில் மீன்கள், தோலுரித்த கோழி, கொழுப்புச் சத்து குறைவான அல்லது கொழுப்பற்ற இறைச்சியை சாப்பிடுவதே நல்லது என்றும் சிலர் பரிந்துரைக்கிறார்கள். கொழுப்புகளையும் சர்க்கரையையும் குறைவாக உட்கொள்ளும்படியும் ஆலோசனை கொடுக்கப்படுகிறது.
வளரும் நாடுகளில் அல்லது வறுமையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிப்பவர்களும்கூட சிலசமயங்களில் தங்களுடைய உணவுப் பழக்கத்தை முன்னேற்றுவிக்க முடியும். எப்படி? ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பல்வேறு வகையாக அவற்றை கலந்து சாப்பிடுவதன் மூலமும், அதாவது தானிய வகைகளையும் பருப்பு வகைகளையும் கலந்து சாப்பிடுவதன் மூலமும் முன்னேற்றுவிக்கலாம். உணவு பதார்த்தத்தின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க இறைச்சி அல்லது முட்டைகளை கொஞ்சமாக சேர்த்துக்கொள்வதன் மூலம் முன்னேற்றுவிக்கலாம். உங்களுடைய பகுதியில் வளரும் காய்கறிகளையும் சீஸனில் கிடைக்கும் பழங்களையும் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் முன்னேற்றுவிக்கலாம்.
மனிதர் ருசித்து மகிழ்வதற்காக “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி” நம்முடைய படைப்பாளர் செய்கிறார். (சங்கீதம் 104:14) பிரசங்கி 9:7-ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசி.” சமநிலையோடும் மிதமாகவும் பயன்படுத்துவதன் மூலம் நம் படைப்பாளர் தந்திருக்கும் ருசியான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளின் நன்மைகளை நாம் அனுபவித்து மகிழலாம் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. (g02 5/8)
[பக்கம் 26-ன் படம்]
முதல் தொகுதி: தானிய வகைகள், கிழங்கு வகைகள்
[பக்கம் 26-ன் படம்]
இரண்டாம் தொகுதி: பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால்பண்ணை பொருட்கள்
[பக்கம் 26-ன் படம்]
மூன்றாம் தொகுதி: பழங்கள், காய்கறிகள்