Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செவியுணர்வை பாதுகாத்திடுங்கள்!

செவியுணர்வை பாதுகாத்திடுங்கள்!

செவியுணர்வை பாதுகாத்திடுங்கள்!

“சரியாக காது கேட்காததால் இந்த உலகில் உள்ளவர்களில் 12 கோடிக்கும் அதிகமானோர் கஷ்டப்படுகின்றனர்.”​—உலக சுகாதார நிறுவனம்.

செவியுணர்வு என்பது போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பரிசாகும். என்றாலும், வயதாகையில் நமது கேட்கும் திறமை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. நவீன சமுதாயத்தில் பல்வகை சப்தங்களும் இரைச்சல்களும் உண்டாவதால் நமது செவித்திறன் இன்னும் வேகமாக குறைவதுபோல் தோன்றுகிறது. “ஓர் அமெரிக்கருக்கு காது கேளாமல் போவதில் சுமார் 75 சதவிகிதம், வயதாவதனால் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் அவருடைய காதைப் பயன்படுத்திய விதத்தாலும் நிகழ்கிறது” என்று அ.ஐ.மா., மிஸ்ஸௌரி, செ. லூயிஸிலுள்ள காது கேளாதோருக்கான மத்திய நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.

அளவுக்கதிக சப்தமான ஒலிகளை கொஞ்ச நேரத்திற்கு கேட்பதுகூட உள் காதின் மென்மையான உறுப்புகளுக்கு கேடு விளைவிக்கலாம். என்றாலும் காது கேளாமல் போவதற்கு, “இரைச்சல் நிறைந்த வேலைகள், இரைச்சல் நிறைந்த ஹாபிகள், இரைச்சல் நிறைந்த பொழுதுபோக்குகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பாதிப்பே” பெரும்பாலும் காரணம் என்று காது ஸ்பெஷலிஸ்டான டாக்டர் மார்கரெட் சீஸ்மன் கூறினார். உங்கள் செவியுணர்வை பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்? இதற்கான பதிலை கண்டுபிடிக்க உங்கள் காது செயல்படும் விதத்தை கொஞ்சம் அறிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

நாம் கேட்கும் சப்தங்கள்

நம் வாழ்க்கை சூழலின் இரைச்சல் அதிகரித்துக் கொண்டே போவதாக தோன்றுகிறது. சாலைகளில் கார்கள், பஸ்கள், டிரக்குகள் போன்றவை முதல், வேலை செய்யும் இடங்களில் மின்சார கருவிகள் உண்டாக்கும் பேரிரைச்சல் வரை தினந்தோறும் பல்வேறு வகையான சப்தங்கள் அநேகரை தாக்குகின்றன.

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் சாதனங்களின் சப்தத்தை கூட்டுவதன் மூலம் நாமே அந்த பிரச்சினையை அதிகரிக்கிறோம். ஹெட்ஃபோன் பொருத்தப்பட்ட போர்டபிள் சிடி அல்லது கேசட் பிளேயரில் இன்னிசையை ரசிப்பது இன்று பிரபலம். மிகவும் அதிகமான சப்தத்தோடு ஹெட்ஃபோன்களை உபயோகிக்கும் ஏராளமான இளைஞர்கள் காது கேளாமல் தவிப்பதாக கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் செய்யப்பட்ட சுற்றாய்வுகள் காட்டுவதாக கனடாவின் இசைக்கலைஞர் கிளினிக்குகளை ஸ்தாபித்தவர்களுள் ஒருவரான மார்ஷல் சீஸன் கூறுகிறார்.

ஆனால் சப்தம் எப்போது இரைச்சலாக மாறுகிறது? சப்தமானது, காலம், அலைவெண், வீச்சு ஆகியவற்றை பொருத்து மூன்று விதமாக வகையறுக்கப்படுகிறது. காலம் என்பது எவ்வளவு நேரத்திற்கு சப்தத்தை கேட்கிறோம் என்பதை குறிக்கிறது. சப்தத்தின் அலைவெண் அல்லது சுருதி என்பது வினாடிக்கு இத்தனை சுழற்சிகள் அல்லது ஹெர்ட்ஸ் என விவரிக்கப்படுகிறது. இயல்பாக, எந்தத் தொந்தரவும் இல்லாமல் கேட்க முடிந்த அலைவெண்ணின் பரப்பெல்லை வினாடிக்கு 20 முதல் 20,000 சுழற்சிகளாகும்.

சப்தத்தின் வீச்சு அல்லது திறம், டெசிபெல்கள் (dB) என்ற அலகுகளில் அளக்கப்படுகிறது. சாதாரணமான உரையாடலின் ஒலி அளவு ஏறக்குறைய 60 டெசிபெல்கள் இருக்கும். 85 டெசிபெல்களுக்கு அதிகமான சப்தத்தை எவ்வளவு அதிக நேரம் கேட்கிறோமோ செவியுணர்வும் அந்தளவு பாதிக்கப்படும் என்று காது மருத்துவர்கள் கூறுகின்றனர். சப்தம் அதிகரிப்பதற்கேற்ப செவியுணர்வு பாதிக்கப்படும் வேகமும் அதிகரிக்கும். நியூஸ்வீக் பத்திரிகையில் வந்த ஓர் அறிக்கை இவ்வாறு கூறியது: “மின்சார துளையிடும் கருவியின் (100 dB) சப்தத்தை உங்கள் காது இரண்டு மணிநேரத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கும், ஆனால் கூச்சல்மிக்க வீடியோ கேம்ஸ் கடையில் (110 dB) 30 நிமிடங்கள்கூட தாக்குப்பிடிக்காது. ஒவ்வொரு 10 டெசிபெல் அதிகரிப்பும் காதைத் துளைக்கும் சப்தம் 10 மடங்கு அதிகரிப்பதைக் குறிக்கும்.” ஏறக்குறைய 120 டெசிபெல்கள் அளவுள்ள சப்தம் காது வலி உண்டாக்குவதை ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. வீட்டில் உபயோகிக்கும் சில ஸ்டீரியோ சாதனங்கள் 140 டெசிபெல்களுக்கும் அதிக சப்தத்தை உண்டாக்கலாம் என்பது ஆச்சரியமான விஷயம்!​—அருகிலுள்ள பெட்டியைக் காண்க.

அதிக சப்தம் உங்கள் செவியுணர்வை ஏன் பாதிக்கலாம் என்பதை புரிந்துகொள்ள உதவியாக, ஒலி அலைகள் உங்கள் காதை அடைந்ததும் என்ன நடக்கிறது என்பதை சிந்திப்போம்.

செவியுணர்வு செயல்படும் விதம்

வெளிக் காதின் சதைப் பற்றான பகுதியாகிய செவிமடல் ஒலி அலைகளை திரட்டி செவிக்குழலுக்குள் செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது; இந்த அலைகள் சீக்கிரத்திலேயே செவிப்பறையை சென்றடையும். இப்போது இந்த ஒலி அலைகள் செவிப்பறையை அதிர்வுற செய்கின்றன, செவிப்பறை நடுக் காதிலுள்ள மூன்று எலும்புகளை அதிர்வுற செய்கிறது. பிறகு இந்த அதிர்வுகள், எலும்பால் மூடப்பட்ட திரவம் நிறைந்த உறையான உள் காதிற்கு கடத்தப்படுகின்றன. இந்த அதிர்வுகள் காக்ளியாவிலுள்ள திரவம் வழியாக பயணம் செய்கின்றன; உள் காதின் நத்தைக் கூடு போன்ற காக்ளியா என்பதே செவியுணர்வு பகுதியாகும், இதில்தான் உரோம செல்கள் உள்ளன. காக்ளியாவிலுள்ள திரவம் உரோம செல்களின் மேல் பகுதியை தூண்டுவித்து நரம்பு துடிப்புகளை உண்டுபண்ணுகிறது. இந்த துடிப்புகள் மூளைக்கு கடத்தப்பட்ட பின் புரிந்துகொள்ளப்பட்டு, ஒலியாக உணரப்படுகிறது.

எந்த ஒலிகளுக்கு கவனம் செலுத்தலாம், எதை புறக்கணிக்கலாம் என்பதை நமது மூளை தீர்மானிக்க லிம்பிக் மண்டலமே உதவுகிறது. உதாரணமாக, விளையாடும் குழந்தையின் அனைத்து சப்தங்களையும் தாய் கவனித்து கேட்கமாட்டாள் என்றாலும் பயத்தின் அலறலைக் கேட்டால் உடனே சென்று பார்ப்பாள். இரண்டு காதுகளாலும் கேட்பது ஸ்டீரியோ முறையில் கேட்க உதவுவதால் அதிக பலனளிக்கிறது. ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அறிய இது உதவுகிறது. ஆனால் அது பேச்சொலியாக இருந்தால், ஒரு சமயத்தில் மூளையால் ஒரு செய்தியை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். “அதனால்தான் ஃபோனில் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவரால் அவருக்கு அருகிலுள்ளவர் கூறுவதை உடனே கேட்க முடியாமல் போகிறது” என்று புலனுணர்வு என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.

இரைச்சல் நம் செவியுணர்வை எவ்வாறு பாதிக்கிறது

அதிக இரைச்சல் நம் செவியுணர்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ள பின்வரும் ஒப்புமையை கவனியுங்கள். தொழிலிட பாதுகாப்பு (occupational safety) அறிக்கை ஒன்று, உள் காதிலுள்ள உரோம சவ்வுகளை வயலிலுள்ள கோதுமை பயிருக்கும் காதிற்குள் நுழையும் சப்தத்தை காற்றிற்கும் ஒப்பிடுகிறது. மிக மெல்லிய சப்தத்தைப் போல, பூங்காற்று வீசுகையில் கோதுமை பயிரின் மேல் பகுதி மட்டுமே அசையும், பயிர் சேதமடைவதில்லை. காற்றின் வேகம் அதிகரித்தாலோ கோதுமை பயிரின் தண்டு அதிக அழுத்தத்தை எதிர்ப்படும். திடீரென்று மிக வேகமாக காற்றடித்தாலோ மெதுவான காற்று நீண்ட நேரம் வீசினாலோ தண்டு படுமோசமாக சேதமடைந்து பயிரே மடிந்துவிடலாம்.

உள் காதிலுள்ள சிறிய, மிருதுவான உரோம செல்களையும் இரைச்சலையும் பொறுத்ததிலும் இதுவே உண்மை. திடீரென்று அதிகமான சப்தம் உள் காதிலுள்ள சவ்வுகளை கிழித்து, நிரந்தரமாக காது கேளாமல் போகுமளவிற்கு வடுவை ஏற்படுத்தலாம். அதோடு, ஆபத்தான ஒலி அளவுகளை நீண்ட நேரம் கேட்டால் மிருதுவான உரோம செல்கள் நிரந்தரமாக சேதமடையலாம். ஒருமுறை சேதமடைந்துவிட்டால் அவை மறுபடியும் உருவாகாது. அதன் விளைவாக ஏற்படுவதுதான் காதில் அல்லது தலையில் உண்டாகும் டின்னிடஸ் என்ற ரீங்கார ஓசை, மணியோசை அல்லது முழக்க ஓசை ஆகும்.

உங்கள் செவியுணர்வை பாதுகாத்து நீடிக்க செய்யுங்கள்

பரம்பரை காரணமாக அல்லது எதிர்பாராத விபத்தினால் காது கேளாமல் போக வாய்ப்பிருந்தாலும் நம் அருமையான உணர்வாகிய செவியுணர்வை பாதுகாத்து நீடிக்க செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம். செவியுணர்வை பாதிக்கக்கூடியவற்றை பற்றி முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது ஞானமானது. வருமுன் காப்பதே சிறந்தது என்று காது நிபுணர் ஒருவர் கூறினார்.

நாம் எதைக் கேட்கிறோம் என்பதைவிட எப்படி கேட்கிறோம் என்பதே அநேக சமயங்களில் முக்கியமாகும். உதாரணமாக, நீங்கள் ஸ்டீரியோ ஹெட்ஃபோன்களை உபயோகித்தால் உங்களைச் சுற்றிலுமுள்ள சப்தங்களை கேட்குமளவிற்கு சப்தத்தை குறைவாக வைப்பதே நல்லது. உங்கள் காரில் அல்லது வீட்டிலுள்ள ஸ்டீரியோவின் சப்தம், சாதாரண பேச்சின் சப்தத்தை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தால் அது உங்கள் செவியுணர்வை சேதப்படுத்தும் அளவிற்கு சப்தமானது என்பதற்கு அடையாளமாக இருக்கலாம். 90 டெசிபெல் அளவுகளை இரண்டு மூன்று மணிநேரத்திற்கு தொடர்ந்து கேட்டால் உங்கள் காதுகள் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரைச்சல் நிறைந்த சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் காது அடைப்பான்களை அல்லது காதுகளை பாதுகாக்கும் மற்ற கருவிகளை உபயோகிக்கும்படி பரிந்துரை செய்யப்படுகிறது.

பெரியவர்களைவிட சிறுபிள்ளைகளின் செவியுணர்வே அதிகமாக பாதிக்கப்படும் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது. இரைச்சல் ஏற்படுத்தும் விளையாட்டு சாமான்களால் உண்டாகும் ஆபத்தையும் நினைவில் வையுங்கள். கிலுகிலுப்பை பொம்மைகூட 110 டெசிபெல்கள் சப்தத்தை உண்டு பண்ணலாம்!

நம் காதுகள் மிருதுவான, சிறிய, அருமையான அமைப்புகள். அவற்றின் உதவியால் நம்மை சுற்றியுள்ள உலகின் வித்தியாசப்பட்ட, அருமையான ஒலிகளை கேட்க முடிகிறது. நிச்சயமாகவே, இந்த அருமையான பரிசாகிய செவியுணர்வு பாதுகாக்கப்பட தகுந்ததே. (g02 5/22)

[பக்கம் 20-ன் பெட்டி]

சில அன்றாட சப்தங்களின் குத்துமதிப்பான டெசிபெல் அளவுகள்

• மூச்சுவிடுதல்​—10 டெசிபெல்கள்

• கிசுகிசுத்தல்​—20 டெசிபெல்கள்

• உரையாடல்​—60 டெசிபெல்கள்

• அவசர நேர போக்குவரத்து​—80 டெசிபெல்கள்

• மிக்ஸி​—90 டெசிபெல்கள்

• கடந்து செல்லும் ரயில்​—100 டெசிபெல்கள்

• சங்கிலி ரம்பம்​—110 டெசிபெல்கள்

• கடந்து செல்லும் ஜெட் பிளேன்​—120 டெசிபெல்கள்

• சிறு துப்பாக்கி வெடிக்கும் சப்தம்​—140 டெசிபெல்கள்

[பக்கம் 21-ன் பெட்டி]

உங்கள் செவியுணர்வு மந்தமாகி வருவதற்கான அறிகுறிகள்

• ரேடியோவிலோ டிவியிலோ சப்தத்தை அதிகரிக்கிறீர்கள் ஆனால் அது மற்றவர்களுக்கு தாங்க முடியாத அளவாக இருந்தால்

• சொன்னதை திரும்ப சொல்லும்படி மற்றவர்களிடம் அடிக்கடி கேட்டால்

• உங்களோடு ஒருவர் பேசுகையில் அடிக்கடி புருவத்தை சுருக்கி, முன்னே சாய்ந்து, உங்கள் தலையை அவர் பக்கம் திருப்பி கேட்டால்

• பொதுக் கூட்டங்களில் அல்லது பின்னணியில் இரைச்சல் கேட்கும் இடங்களான சமூக கூட்டங்களில் அல்லது பிஸியான ஸ்டோர்களில் கேட்பது கடினமாக இருந்தால்

• சொல்லப்பட்டதை அறிந்துகொள்ள எப்போதும் மற்றவர்களையே கேட்டால்

[பக்கம் 20-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

செவிமடல்

நடுக் காதிலுள்ள மூன்று எலும்புகள்

செவிப்பறை

காக்ளியா

மூளைக்கு செல்லும் நரம்புகள்