Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பனிச் சிறுத்தை இந்த வினோத விலங்கை சந்தித்தல்

பனிச் சிறுத்தை இந்த வினோத விலங்கை சந்தித்தல்

பனிச் சிறுத்தை இந்த வினோத விலங்கை சந்தித்தல்

பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பனிச் சிறுத்தையைப் போன்ற வினோத விலங்குகள் மிக மிக குறைவே. இயற்கை வாழிடங்களில் இஷ்டம்போல் உலவும் இந்தச் சிறுத்தைகளில் ஒன்றை இருவிழி கொண்டு பார்த்தோரும் சொற்பமானோரே. இவ்விலங்குகளைப் பற்றி தெரிந்ததும் கொஞ்சநஞ்சமே.

பின்லாந்திலுள்ள ஹெல்சிங்கி மிருகக்காட்சி சாலையின் அழகுக்கு அழகு சேர்ப்பது இந்தப் பனிச் சிறுத்தையே. இந்தப் பூனை இனத்தின்​—பெரிய பூனைகளிலேயே மிகவும் அழகானது என பலராலும் கருதப்படும் இந்தப் பூனை இனத்தின்—​விசித்திர பழக்க வழக்கங்களே இதை விந்தைமிகு விலங்கினமாக்குகின்றன.

உலகின் உச்சியில் பூனை

பூடான் முதல் ரஷ்யா வரை குறைந்தபட்சம் ஒரு டஜன் நாடுகளிலாவது இப்பனிச் சிறுத்தையைப் பார்க்க முடிந்தாலும், இது பொதுவாக இமயமலைத் தொடருடனே இணைத்துப் பேசப்படுகிறது. உலகிலேயே மிக உயரமான இம்மலைத் தொடர் கொள்ளை அழகுடையது. ஆனால் மனித சஞ்சாரத்திற்கு உகந்த இடம் அன்று. மத்திய ஆசியாவிலுள்ள இம்மலைத் தொடரை உலகிலுள்ள கடுங்குளிரான கரடுமுரடான பகுதிகளில் ஒன்று எனலாம்.

இருந்தாலும், இந்தப் பனிச் சிறுத்தை 3,000 முதல் 4,500 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் சொகுசாக சுற்றிவருகிறது. அதன் அடர்த்தியான உரோம உடை குளிரிலிருந்து அதை பாதுகாக்கிறது; அதேசமயத்தில் அதன் பெரிய மூக்குத்துவாரமோ மலைப்பகுதியிலுள்ள அடர்த்தி குறைந்த காற்றிலிருந்து தேவையான அளவு ஆக்ஸிஜனை பெற உதவுகிறது. உரோமம் நிறைந்த அகன்ற பாதங்கள், உறைபனியில் லாவகமாக பாய்ந்து செல்ல உதவுகின்றன. ஆனால் கரடுமுரடான மலைப்பகுதியில்? பிரச்சினையே இல்லை, ஏனெனில் உரோமம் நிறைந்த நீண்ட வாலை ஒரு சுக்கான் போல் பயன்படுத்தி, இந்தப் பனிச் சிறுத்தையால் செங்குத்தான ஒரு பாறையிலிருந்து மற்றொன்றிற்கு சுமார் 15 மீட்டர் தூரம் குதித்துத் தாண்ட முடியும். இவ்வாறு, குதிப்பதில் சாம்பல் நிற கங்காருவையும் விஞ்சிவிடுகின்றன.

பொதுவாக, பனிச் சிறுத்தையின் எடை 27 முதல் 45 கிலோகிராம்; உயரம் சுமார் 60 சென்டிமீட்டர்; மூக்கிலிருந்து வால் வரை அதன் நீளம் இரண்டு மீட்டர். ஆனால் பனிச் சிறுத்தையை தனித்தன்மை வாய்ந்ததாக்குவது அதன் பண்பே. “அது மிகவும் சாந்தமானது” என்று சொல்கிறார் ஹெல்சிங்கி மிருகக்காட்சி சாலையின் பொறுப்பாளர் லேவ் ப்ளாம்க்விஸ்ட். “பனிச் சிறுத்தை, மனிதரிடம் எளிதில் ஒட்டிக்கொள்கிறது; காலையிலோ மிருகக்காட்சி சாலையில் தன்னை பராமரிப்பவருக்கு வணக்கம் சொல்ல வந்துவிடுகிறது.” இத்தகைய சாந்த குணத்தை குட்டிகளிலும் காணலாம் என தொடர்ந்து கூறுகிறார் ப்ளாம்க்விஸ்ட். “மிருகக்காட்சி சாலையிலுள்ள பணியாளர்கள் அவற்றை எடை போட்டுப் பார்க்கும் போதும் அவற்றிற்கு தடுப்பூசி போடும் போதும் அவை திமிறுவதில்லை” என அவர் கூறுகிறார். ஆனால், இதே பருவத்திலுள்ள வேறு ஏதேனும் வகை சிறுத்தையாக இருந்தால்? “சமாளிப்பது பெரும்பாடு” என கூறுகிறார் ப்ளாம்க்விஸ்ட். “அவை கடுமையாக எதிர்த்து தாக்குவதால் காப்புடையும், கையுறைகளும் தேவை” என்கிறார்.

காண்பது அரிதுஏன்?

பனிச் சிறுத்தையுடன் ஒளிந்து விளையாடுவது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருக்கும்; ஏனெனில் பச்சோந்தி போல், இந்த வெள்ளை மற்றும் சாம்பல் நிற பூனை அந்த மலைப் பிரதேசத்தின் நிறத்துடன் இரண்டற கலந்துவிடுவதுபோல் தோன்றுகிறது. இயற்கை வாழிடங்களில் அவை அதிகம் கண்ணில் தென்படாததற்கு ஒரு காரணம், மாறுவேடம் தரிப்பதில் படுகில்லாடிகளாக இருப்பதே. ஏன், இந்த வினோத பூனையைப் பற்றி ஆய்வு செய்ய கரடுமுரடான இந்த மலைப் பிரதேசத்திற்கு துணிந்து சென்ற ஆய்வாளர்கள் சிலர் ஒருமுறையேனும் அதைக் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார்களே!

ஒன்றாவது கண்ணில் தட்டுப் படாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் அவை துறவி போல் ஒதுங்கி வாழ்வதே. அதோடு, அவற்றின் பிராந்தியமும் மிகப் பெரிது; ஏனென்றால், பொதுவாக அவற்றிற்கு இரையாகும் ஒரு காட்டு செம்மறியாடோ வெள்ளாடோ அந்த மலைப் பகுதிகளில் எப்போதும் அரிதாகவே காணப்படுகிறது. பனிச் சிறுத்தையின் உரோமமுள்ள தோலுக்காக பேராசை பிடித்த வேட்டைக்காரர்களால் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சொல்லப்போனால், தற்போது அழிந்துவரும் இனங்களில் பனிச் சிறுத்தையையும் வரிசைப்படுத்தும் அளவுக்கு அதன் எண்ணிக்கை குறைவதற்கு அவர்கள் காரணமாக இருந்திருப்பதே வேதனையிலும் வேதனையான விஷயம். a தனிப்பண்புடைய இந்த விலங்கை காப்பதில் மிருகக்காட்சி சாலைகள் பெரும் பங்காற்றுகின்றன.

ஹெல்சிங்கியில் பனிச் சிறுத்தை

பனிச் சிறுத்தையை இனப்பெருக்கம் செய்வதில் ஹெல்சிங்கி மிருகக்காட்சி சாலை வெற்றியடைந்துள்ளது. சொல்லப்போனால், 1976-⁠ல் பனிச் சிறுத்தையின் சர்வதேச மரபுவழி புத்தகத்தை பராமரிப்பதற்கான நியமிப்பு இந்த மிருகக்காட்சி சாலைக்குக் கொடுக்கப்பட்டது. மிருகக்காட்சி சாலைகளிலோ உயிரியல் பூங்காக்களிலோ உள்ள பனிச் சிறுத்தை இனத்தை காத்து பராமரிக்க இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருந்திருக்கிறது.

மிருகக்காட்சி சாலைகளில் வாழும் பல இனங்களுக்கு, முக்கியமாக அழிந்துவரும் இனங்களுக்கு இதுபோன்ற மரபுவழி புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. மிருகக்காட்சி சாலையில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த அனைத்து விலங்குகளைப் பற்றிய விவரங்களும் அதில் குறிக்கப்படுகின்றன. வேறு இடத்திற்கு மாற்றப்படுபவை, இறந்து விடுபவை, அதோடு புதிய குட்டிகளைப் பற்றிய விவரங்களையும் இப்புத்தகத்தை பராமரிப்பவரிடம் சொல்வது மிருகக்காட்சி சாலைகளின் பொறுப்பு. மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இணையை தேர்ந்தெடுக்க இப்புத்தகங்கள் உதவுகின்றன. “இவ்வாறு வாழும் மிருகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், இனச்சிதைவுக்கும் உட்பெருக்கத்திற்கும் அதிக வாய்ப்புண்டு” என விளக்குகிறார் ப்ளாம்க்விஸ்ட்.

ஹெல்சிங்கி மிருகக்காட்சி சாலையில் மட்டுமே நூறுக்கும் அதிகமான குட்டிகள் பிறந்திருக்கின்றன; அவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளிலுள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகைகளைக் கொண்டிருப்பதற்காக, மிருகக்காட்சி சாலைகள் அடிக்கடி தங்களுக்குள் பனிச் சிறுத்தைகளை மாற்றிக்கொள்கின்றன. மிருகக்காட்சி சாலைகளில் இப்போது பல்வேறுபட்ட பனிச் சிறுத்தைகள் இருப்பதால் இயற்கை வாழிடங்களில் இருப்பவற்றை இனிமேல் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

ஹெல்சிங்கி உள்ளிட்ட அநேக மிருகக்காட்சி சாலைகள், மரபணு ரீதியில் ஆரோக்கியமுள்ள மிருகங்களை பேணி பராமரிப்பதற்கு பாடுபடுவதால் வனவிலங்குகளை பாதுகாப்பதில் பங்களிக்கின்றன. அதோடு இத்தனிச்சிறப்பு வாய்ந்த மிருகங்களின் கொள்ளை அழகை காணவும் பார்வையாளர்களை அனுமதிக்கின்றன. உண்மையில், இந்தப் பனிச் சிறுத்தை நம் மனதில் அழியா இடம்பிடித்துவிடுகிறது; ‘சகலத்தையும் நேர்த்தியாகச் செய்திருக்கிற’ படைப்பாளருக்கு புகழையும் சேர்க்கிறது.​—பிரசங்கி 3:11. (g02 5/8)

[அடிக்குறிப்பு]

a எத்தனை பனிச் சிறுத்தைகள் இப்போது இருக்கின்றன என்பதை குறிப்பிடுவது கடினம். 3,500 முதல் 7,000 வரை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

பக்கம் 16: மத்தியில்: ©Aaron Ferster, Photo Researchers; பக்கம் 17: மேலே வலப்பக்கம்: © Korkeasaaren Eläintarha/Markku Bussman; கீழே: ©T. Kitchin/V. Hurst, Photo Researchers

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

Chuck Dresner/Saint Louis Zoo