பூச்சி உலகில் கழிவுகளை நீக்குவதில் கில்லாடிகள்
பூச்சி உலகில் கழிவுகளை நீக்குவதில் கில்லாடிகள்
நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முன்புதான் கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களை நீக்கும் முறைகளை மனிதர் முன்னேற்றுவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னரே கழிவுகளை நீக்குவதில் கில்லாடி ஒருவர் இருந்தார், அவரே வெப்பமண்டல அமெரிக்காவில் வசிக்கும் சிறு எறும்பு.
இலைகளை கடிக்கும் எறும்புகள் பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட ஒரு சமுதாயமாக பெரிய நிலத்தடி புற்றில் வாழ்கின்றன. இவற்றில் தொழிலாளிகள் வர்க்கத்தைச் சேர்ந்த பல்வேறு அங்கத்தினர்களுக்கு பலவித வேலைகள் இருக்கின்றன. சில எறும்புகள் இலைகளின் சிறு சிறு துண்டுகளை சேகரிக்கின்றன, மற்றொரு கூட்டம் அவற்றை சவைத்து கூழாக்குகின்றன. இந்தக் கூழைப் பயன்படுத்தி, சாப்பிடக்கூடிய பூஞ்சையை புற்றில் உள்ள அறைகளில் தோட்டக்கார எறும்புகள் வளர்க்கின்றன. என்றாலும் தீங்குண்டாக்கும் பூஞ்சைகள், செத்த அல்லது சாகும் தறுவாயிலிருக்கிற எறும்புகள், அழுகல்கள் போன்ற தொற்று உண்டாக்கும் எவற்றையும் அவை களைந்துவிடுகின்றன. ஆனால் அந்த எறும்புகள் தங்களுடைய குப்பைக்கூளத்தை எப்படி நீக்குகின்றன?
ஷெஃபீல்டு யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இதற்குரிய விடையை கண்டுபிடித்திருக்கிறார்கள் என தி இன்டிப்பெண்டன்ட் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. தோட்டக்கார எறும்புகள் வேலை பார்க்கும் அறைகளுக்கு அருகில் பெரிய அறைகள் இருக்கின்றன, அங்கேதான் கழிவு சேமித்து வைக்கப்படுகிறது. இந்தக் குப்பைக்கூளத்தில் வேலை செய்யும் எறும்புகள் தங்களுடைய ஆயுளை அங்கேயே கழிக்கின்றன. அவை கழிவுப்பொருள் மக்குவதற்கு உதவுகின்றன, இது முறையே, நோய் உண்டுபண்ணும் பாக்டீரியாவை அழிக்கிறது. தோட்டக்கார எறும்புகள் ஒருகாலும் குப்பைக்கூள அறைகளுக்குள் நுழைவதில்லை. அவை கழிவுப்பொருளை ஒரு சுரங்கத்திற்குள் கொண்டு செல்கின்றன, குப்பைக்கூள வேலையாட்கள் அதை அங்கிருந்து எடுத்துக்கொள்கின்றன. கழிவுப்பொருளை நீக்கும் இத்திறம்பட்ட முறை தூய்மைக்கேடு சம்பந்தமான எந்தவித ஆபத்தையும் தடுத்து, குடியிருப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
யெகோவா தேவன் பூச்சிகளுக்கு இயல்புணர்ச்சி ஞானத்தைத் தந்ததோடு, 3,500 வருடங்களுக்கு முன்பே சுகாதாரம் சம்பந்தமாக நடைமுறையான சில வழிகாட்டிகளை இஸ்ரவேலருக்கும் கொடுத்தார். இந்தச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டபோது உணவு, தண்ணீர் போன்றவை அசுத்தமாகாமல் காக்கப்பட்டன, தொற்றுண்டாக்கும் வியாதிகள் பரவாமல் தடுக்கப்பட்டன, கழிவுப்பொருட்கள் பாதுகாப்பான முறையில் நீக்கப்பட்டன. இப்படிப்பட்ட நியமங்களைப் பின்பற்றினால் எவ்வளவு வேதனையையும் மரணத்தையும் தடுக்கலாம்!—லேவியராகமம் 11:32-38; எண்ணாகமம் 19:11, 12; உபாகமம் 23:9-14. (g02 5/22)