Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போரை கடவுள் அங்கீகரிக்கிறாரா?

போரை கடவுள் அங்கீகரிக்கிறாரா?

பைபிளின் கருத்து

போரை கடவுள் அங்கீகரிக்கிறாரா?

இராணுவத் தலைவர்களும் ஆட்சியாளர்களும், மத குருக்களும்கூட எவ்வளவு அடிக்கடி கடவுளுடைய பெயரில் போர் அறிவிப்பு செய்திருக்கின்றனர் அல்லது போரை ஆதரித்திருக்கின்றனர்! கிறிஸ்தவமண்டலத்திற்காக ‘புனித நகரமாகிய’ எருசலேமை மீண்டும் கைப்பற்றுவதற்கு 1095-⁠ல் இரண்டாம் போப் அர்பன் ஆதரவோடு முதல் சிலுவைப் போர் துவங்கியது. ஆனால், தங்களுடைய இலக்கை எட்டுவதற்கு முன்பாகவே சிலுவைப் போர்வீரர்களில் ஒரு தொகுதியினரை துருக்கியர்கள் தொலைத்துக் கட்டினர். திரித்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்த சிலுவைப் போர்வீரர்களைப் போலவே இவர்களுக்கும் அல்லா மீது பலமான பற்று இருந்தது.

ஆகஸ்ட் 1914-⁠ன் போது ஓர் இளம் ஜெர்மானியன் தான் தங்கியிருந்த முதல் உலகப் போர் முகாமிலிருந்து இவ்வாறு எழுதினார்: “மனித சரித்திரத்தில் நீதியும் கடவுளுடைய வழிநடத்துதலும் இருந்தால்​—⁠இருப்பதாக நான் முழுமையாக நம்புகிறேன்​—⁠வெற்றி எங்களுடையதே.” அதே மாதத்தில், ஜெர்மனிக்கு எதிராக ரஷ்ய படைகளை ஆரம்பித்து வைத்த இரண்டாம் சார் நிக்கலஸ் கூறியதாவது: “எனது வலிமையான படைகளுக்கும் பிரசித்தி பெற்ற நேச நாடுகளுக்கும் என் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கள். கடவுள் நம்மோடிருக்கிறார்!”

இவ்வாறு ஊக்கமளிக்கப்பட்ட, கோடிக்கணக்கான போர்வீரர்கள் கடவுள் தங்கள் பக்கம் இருக்கிறார் என்ற முழு நம்பிக்கையில் போர்க் களத்திற்கு சென்றிருக்கிறார்கள். விடுதலை பெறுவதற்கு செலுத்தும் விலையாக கடவுள் இப்படிப்பட்ட போரை அனுமதிக்கிறார் என அநேகர் நினைக்கிறார்கள்; அதற்கு ஆதாரமாக எபிரெய வேதாகமத்தில் (பொதுவாக பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகிறது) குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். கடவுளுடைய வார்த்தைக்கு அவர்கள் அளிக்கும் விளக்கம் சரியானதா?

பூர்வ இஸ்ரவேலில் யுத்தங்கள்

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து சீர்கெட்ட கானானியர்களை விரட்டியடிப்பதற்கு யுத்தம் செய்ய வேண்டுமென யெகோவா தேவன் இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார். (லேவியராகமம் 18:1, 24-28; உபாகமம் 20:16-18) நோவாவின் நாளில் பொல்லாங்கு செய்தவர்களை வெள்ளத்தாலும் சோதோம் கொமோராவில் இருந்தவர்களை அக்கினியாலும் கடவுள் தண்டித்தது போலவே இஸ்ரவேல் தேசத்தாரை தம்முடைய நியாயத்தீர்ப்பின் பட்டயமாக பயன்படுத்தினார்.​—ஆதியாகமம் 6:12, 17; 19:13, 24, 25.

பைபிள் சொல்கிறபடி, எந்த காரணமுமின்றி வம்புச் சண்டைக்கு வந்த எதிரிகளை பொதுவாக துரத்துவதற்குத்தான் இஸ்ரவேலர் கடவுளுடைய வழிநடத்துதலுடன் மற்ற யுத்தங்களிலும் போரிட்டனர். அவர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்பட்டிருந்தபோது யுத்தங்களில் வெற்றி பெற்றனர். (யாத்திராகமம் 34:24; 2 சாமுவேல் 5:17-25) ஆனால் கடவுளுடைய ஆலோசனைக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு இஸ்ரவேலர் துணிந்தபோதெல்லாம் நாசமே விளைவடைந்தது. யெரொபெயாம் ராஜாவின் விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள். நேரடியாக கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசன எச்சரிப்பை அவர் அசட்டை செய்து, யூதாவுக்கு விரோதமாக தன் பெரும் படையை அனுப்பினார். அந்தக் கலகம் ஒருவழியாக முடிவுக்கு வந்த போது யெரொபெயாமின் படைவீரர்களில் 5,00,000 பேர் மாண்டுபோயிருந்தனர். (2 நாளாகமம் 13:12-18) உண்மையுள்ள ராஜாவான யோசியாவும் ஒருசமயம் தனக்குரியதல்லாத யுத்தத்தில் ஈடுபட்டார். அவசரப்பட்டு எடுத்த முடிவு அவருக்கே முடிவை கொண்டு வந்தது.​—2 நாளாகமம் 35:20-24.

இந்த சம்பவங்கள் காட்டுவதென்ன? பூர்வ இஸ்ரவேலில் யுத்தத்தை தீர்மானிப்பது கடவுள் வசம் இருந்தது. (உபாகமம் 32:35, 43) குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவே அவர் தம்முடைய ஜனங்களை யுத்தம் செய்வதற்கு அனுமதித்தார். என்றாலும், அந்த நோக்கங்கள் வெகு காலத்திற்கு முன்பே நிறைவேறி விட்டன. அதோடு, இந்தக் “கடைசி நாட்களில்” அவரை சேவிப்போர் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடிப்பார்கள், “இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என யெகோவா முன்னறிவித்தார். (ஏசாயா 2:2-4) ஆகவே, பைபிள் காலங்களில் நடந்த யுத்தங்கள் நவீன நாளைய போர்களை சரியென நியாயப்படுத்துவதில்லை என்பதும் இவற்றில் எதுவும் கடவுளுடைய வழிநடத்துதலாலோ அவருடைய கட்டளையின் அடிப்படையிலோ நடக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

கிறிஸ்துவுடைய போதனையின் விளைவு

இயேசு பூமியில் இருந்தபோது, ‘நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்’ என கட்டளையிட்டார். இவ்வாறு, பகைமையை நீக்கி தன்னலமற்ற அன்பை காண்பிப்பது எப்படி என்பதை அவர் நிரூபித்து காட்டினார். (யோவான் 15:12) “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]” எனவும் அவர் கூறினார். (மத்தேயு 5:9) ஆகவே இது உண்மையில், சமாதானத்தை வளர்ப்பதையும், நல்லெண்ணத்தை முன்னேற்றுவிப்பதற்கு சுறுசுறுப்பாக உழைப்பதையும் உட்படுத்துகிறது.

இயேசுவை கைது செய்தபோது, அவரை பாதுகாப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு சாவுக்கேதுவான ஓர் ஆயுதத்தை பயன்படுத்த முயன்றார். ஆனால் தேவனுடைய குமாரனோ “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என அவரை கண்டித்தார். (மத்தேயு 26:52) இந்த வார்த்தைகளை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பின்பற்றினர்? பின்வரும் மேற்கோள்களை கவனியுங்கள்.

“கிடைத்த தகவல்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து பார்க்கையில், மார்கஸ் ஆரிலியஸின் [பொ.ச. 121-180] காலம் வரை எந்தவொரு கிறிஸ்தவனும் ஒரு போர்வீரன் ஆகவில்லை என்றும் எந்தவொரு போர்வீரனும் கிறிஸ்தவனாக மாறிய பின்பு ராணுவத்தில் தொடர்ந்து சேவை செய்யவில்லை என்றும் தெரிகிறது.”​—கிறிஸ்தவத்தின் எழுச்சி (ஆங்கிலம்).

“[ஆரம்ப கால] கிறிஸ்தவர்களின் நடக்கை ரோமர்களிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. . . . கிறிஸ்து சமாதானத்தை பிரசங்கித்திருந்ததால் அவர்கள் போர்வீரர்களாவதற்கு மறுத்தனர்.”​—காலங்களினூடே நமது உலகம் (ஆங்கிலம்).

கிறிஸ்துவின் சீஷர்கள் ரோம பேரரசனின் படையில் சேர மறுத்ததால் அவர்களில் அநேகரை ரோமர்கள் கொலை செய்தார்கள். கிறிஸ்தவர்கள் ஏன் அப்படிப்பட்டதோர் விரும்பப்படாத நிலைநிற்கையை காத்து வந்தார்கள்? ஏனெனில் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கும்படி இயேசு அவர்களுக்குக் கற்பித்தார்.

நவீன யுத்தம்

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒன்றுக்கொன்று எதிரான படைகளிலிருந்து ஒருவரையொருவர் கொலை செய்யும் பயங்கரமான சூழ்நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை கிறிஸ்தவ நியமங்களுக்கு எதிராக இருக்கும். பைபிளின் கடவுளுக்கு கீழ்ப்படிவோர், யாருக்குமே​—தங்கள் விரோதிகளுக்கும்கூட​—தீங்கு செய்ய மாட்டார்கள். aமத்தேயு 5:43-45.

மனிதருக்கிடையே நடைபெறும் நவீன கால மாம்சப்பிரகாரமான யுத்தத்தை கடவுள் அங்கீகரிப்பதில்லை என்பது தெளிவு. சமாதானம் பண்ணுகிறவர்களான உண்மை கிறிஸ்தவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தில் உலகம் முழுவதிலும் நிலைநாட்டப்படும் சமாதானத்தைப் பற்றி அறிவிக்கிறார்கள். (g02 5/8)

[அடிக்குறிப்பு]

a ‘அர்மகெதோனைப்’ பற்றி பைபிள் குறிப்பிடுகிறது; ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ எனவும் அது அழைக்கப்படுகிறது. இது மனித யுத்தத்தை அல்ல, பொல்லாதவர்களை மட்டுமே அழிக்கும் கடவுளுடைய யுத்தத்தைக் குறிக்கிறது. ஆகவே, நவீன நாளைய போர்களை ஆமோதிப்பதற்கோ அவற்றை கடவுள் அங்கீகரிக்கிறார் என கருதுவதற்கோ அர்மகெதோன் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது.​வெளிப்படுத்துதல் 16:14, 16; 21:8.

[பக்கம் 22-ன் படம்]

கத்தோலிக்க குருமார் பலருடன் ஸ்பெய்னைச் சேர்ந்த இராணுவத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ ஃபிரான்கோ

[படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo

[பக்கம் 23-ன் படம்]

ஜூன் 11, 1999-⁠ல் படைவீரர்கள் காஸவோவுக்கு செல்வதற்கு முன்பு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரிமார் ஆசீர்வதிக்கிறார்கள்

[படத்திற்கான நன்றி]

AP Photo/Giorgos Nissiotis