Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வன்முறையின் நூற்றாண்டு

வன்முறையின் நூற்றாண்டு

வன்முறையின் நூற்றாண்டு

தேசங்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தால் சமாதானத்தை பாதுகாக்க முடியும் என்று ஆல்ஃபிரெட் நோபல் நம்பினார். அப்போது, எதிர்க்கும் எவரையும் குரூரமாக கொன்றுபோட தேசங்களால் உடனே ஒன்றுபட முடியுமல்லவா? “இந்தச் சக்தியே யுத்தத்தை சாத்தியமற்றதாக்கும்” என்று அவர் எழுதினார். யுத்தத்தினால் தனக்கே கேடுண்டாகும் என்பதை உணர்ந்தால் புத்தியுள்ள எந்தத் தேசமும் யுத்தத்தை ஆரம்பிக்காது என்பதுதான் நோபலின் கருத்து. ஆனால் கடந்த நூற்றாண்டில் நடந்தது என்ன?

நோபல் இறந்து 20 வருடங்களுக்குள்ளாக முதல் உலக யுத்தம் ஆரம்பமானது. இந்த யுத்தத்தில், இயந்திர துப்பாக்கிகள், விஷ வாயு, நெருப்பைக் கக்கும் கருவிகள், டாங்கிகள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பல புதிய நாசகரமான ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன. ஏறக்குறைய ஒரு கோடி படைவீரர்கள் மரித்தனர், இரண்டு மடங்கிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். முதல் உலக யுத்தத்தின் கொடூரம் காரணமாக சமாதானத்தை ஏற்படுத்துவதில் அக்கறை அதிகரித்தது. இதன் விளைவாக சர்வதேச சங்கம் உருவானது. இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஐ.மா. ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு 1919-⁠ம் ஆண்டில் சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் 1939-⁠ல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தபோது, யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை சுக்குநூறானது. இது அநேக விதங்களில் முதல் உலக யுத்தத்தைவிட படுபயங்கரமாக இருந்தது. இந்த யுத்தத்தின்போது, குருமெல் என்ற இடத்திலிருந்த நோபலின் தொழிற்சாலையை அடால்ஃப் ஹிட்லர் பெரிதுபடுத்தினார்; 9,000-⁠த்திற்கும் அதிகமான வேலையாட்கள் கொண்ட அதுவே ஜெர்மனியின் மிகப் பெரிய வெடி மருந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக இருந்தது. யுத்தத்தின் முடிவிலோ, நேச நாடுகளின் விமானங்கள் பொழிந்த ஆயிரத்திற்கும் அதிகமான வெடிகுண்டுகளால் நோபலின் தொழிற்சாலை முற்றிலும் தரைமட்டமானது. இந்த வெடிகுண்டுகள் நோபலின் கண்டுபிடிப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் வேடிக்கை.

நோபலின் மரணத்திற்கு பின் வந்த நூற்றாண்டில் இரண்டு உலக யுத்தங்கள் மட்டுமல்ல எண்ணற்ற சிறுசிறு சண்டைகளும் நடந்தேறின. அந்தச் சமயத்தில் ஆயுதங்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்தது, அவற்றுள் சில அதிக குரூரமாயின. நோபலின் மரணத்திற்கு பின்வந்த வருடங்களில் பிரபலமாயிருந்த ராணுவ கருவிகளில் சிலவற்றை கவனியுங்கள்.

சிறு ஆயுதங்கள். கைத் துப்பாக்கிகள், சுழல் துப்பாக்கிகள், கை வெடி குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள், எளிதில் தூக்கிச் செல்ல முடிந்த மற்ற கருவிகள் போன்றவை இதில் அடங்கும். இவை மலிவானவை, இவற்றைப் பராமரிப்பது எளிது, உபயோகிப்பதோ அதைவிட சுலபம்.

இந்த ஆயுதங்கள் கைவசம் இருப்பதும் அவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் யுத்தத்தை தடைசெய்திருக்கிறதா? இல்லவே இல்லை! சிறு ஆயுதங்களே, “பனிப் போருக்கு பின்னான காலப்பகுதியில் நிகழ்ந்த பெரும்பாலான யுத்தங்களில் முக்கிய ஆயுதங்களாக” பயன்பட்டுள்ளன என்று அணு விஞ்ஞானிகளின் அறிக்கை என்ற ஆங்கில இதழில் மைக்கேல் கிளேர் எழுதுகிறார். உண்மையில், சமீபத்திய யுத்தங்களில் இறந்த அல்லது காயமடைந்த நபர்களில் சுமார் 90 சதவிகிதத்தினர் பாதிப்படைய சிறு ஆயுதங்களே காரணம். இவற்றினால் 1990-களில் மட்டுமே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் மரித்தனர். அநேக சமயங்களில், இராணுவ பயிற்சியோ பாரம்பரிய யுத்த விதிமுறைகளை மீறுவதைப் பற்றிய குற்ற உணர்வோ இல்லாத இளைஞரே சிறு ஆயுதங்களை உபயோகிக்கின்றனர்.

கண்ணி வெடிகள். 20-⁠ம் நூற்றாண்டு முடியும் சமயத்தில் கண்ணி வெடிகளால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 பேர் ஊனமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்! அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களே, படைவீரர்கள் அல்ல. பொதுவாக, கண்ணி வெடிகள் கொல்லுவதற்காக அல்ல, மாறாக ஊனப்படுத்தவும் அவற்றால் கொடூரமாக பாதிக்கப்பட்டோர் மத்தியில் பயத்தையும் பீதியையும் பரப்பவுமே உபயோகிக்கப்படுகின்றன.

சமீப வருடங்களில், கண்ணி வெடிகளை அகற்ற அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், ஒரு கண்ணி வெடி அகற்றப்பட்டால் இன்னும் 20 கண்ணி வெடிகள் புதைக்கப்படுகின்றன என்றும் பூமி முழுவதிலும் ஆறு கோடி கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். படைவீரனின் காலடிக்கும் வெளியில் விளையாடும் சிறு பிள்ளையின் காலடிக்கும் கண்ணி வெடிகளால் வித்தியாசம் காண முடியாது என்பதை அறிந்திருந்தும் இந்தப் பயங்கரமான கருவிகளை தயாரித்து உபயோகிப்பதை மனிதன் நிறுத்தவில்லை.

அணு ஆயுதங்கள். அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது முதல், படைவீரர்கள் மத்தியில் சிறிய சண்டைகூட நிகழாமல் முழு நகரத்தையே சில நொடிகளில் தரைமட்டமாக்குவது சாத்தியமானது. உதாரணமாக, 1945-⁠ல் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் போடப்பட்டபோது ஏற்பட்ட கோரமான அழிவை யோசித்துப் பாருங்கள். தாங்க முடியாத அந்த ஒளியின் காரணமாக சிலர் குருடானார்கள். மற்றவர்களை கதிர்வீச்சு நச்சுப்படுத்தியது. நெருப்பினாலும் வெப்பத்தினாலும் அநேகர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நகரங்களிலும் மரித்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,00,000 என கணிக்கப்படுகிறது!

வழக்கமான முறையில் அந்த யுத்தம் தொடர்ந்திருந்தால் இன்னுமநேக மரணங்கள் ஏற்பட்டிருக்கும், அந்நகரங்கள் மீது குண்டு போட்டதால்தான் அவை தவிர்க்கப்பட்டன என்று சிலர் வாதிடலாம். இருந்தாலும், ஏராளமான உயிர்கள் இழக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சிலர் உலகமுழுவதிலும் இந்தக் கோரமான ஆயுதத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்படி அரசியல்வாதிகளை தூண்ட ஆரம்பித்தனர். உண்மையில், மனிதன் தன்னையே அழித்துக்கொள்ளும் திறமையை வளர்த்திருப்பதாக அநேகர் பயப்பட ஆரம்பித்தனர்.

அணு ஆயுதங்கள் அதிகரித்திருப்பதால் சமாதானம் சாத்தியமாகியிருக்கிறதா? சாத்தியமாகியிருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். வல்லமைமிக்க இந்த ஆயுதங்கள் 50-⁠ற்கும் அதிக வருடங்களாக யுத்தத்தில் உபயோகிக்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். என்றாலும், ஏராளமானோரை அழிக்கும் ஆயுதங்கள் இருந்தால் யுத்தங்கள் தடைபடும் என்ற நோபலின் நம்பிக்கை பொய்யாகிவிட்டது, ஏனெனில் வழக்கமான ஆயுதங்களோடு யுத்தங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதுமட்டுமா, நினைத்தவுடன் உபயோகிக்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதாக கமிட்டி ஆன் நியூக்ளியர் பாலிஸி கூறுகிறது. பயங்கரவாதம் பெரும் கவலையை ஏற்படுத்தும் இந்தக் காலத்தில், அணு ஆயுத பொருட்கள் ‘தவறானவர்களின்’ கைகளில் சிக்கிவிடுமோ என்று அநேகர் பயப்படுகின்றனர். ‘சரியானவர்களின்’ கைகளில் இருந்தால்கூட, சிறு அசம்பாவிதம் நடந்தாலும் முழு உலகமுமே அணு ஆயுத பேரழிவில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. தெளிவாகவே, அழிவுக்குரிய ஆயுதங்கள் என்று வருகையில் நோபல் கனவுகண்ட சமாதானம் இதுவல்ல.

உயிரியல், இரசாயன ஆயுதங்கள். ஆந்தராக்ஸ் போன்ற கொல்லும் பாக்டீரியாவையோ பெரியம்மை போன்ற வைரஸையோ உபயோகிப்பதே உயிரியல் போராகும். வேகமாக தொற்றும் தன்மை இருப்பதால் பெரியம்மை மிகவும் ஆபத்தானது. விஷ வாயு போன்ற இரசாயன ஆயுதங்களின் ஆபத்தும் உள்ளது. இந்த நச்சுப்பொருட்கள் பல வடிவங்களில் உள்ளன; அவை பல பத்தாண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் அவற்றின் உபயோகத்தை தடுக்க முடியவில்லை.

இந்தக் குரூரமான ஆயுதங்களும் அவற்றின் அச்சுறுத்தலும், நோபல் முன்னறிவித்த வண்ணம் மக்கள் “பயத்தில் பின்வாங்கி தங்கள் படைகளை கலைத்துவிட” வைத்திருக்கிறதா? அதற்கு பதிலாக, அனுபவமற்றவர்கள்கூட அதை உபயோகித்து விடுவார்களோ என்ற பயத்தையே அவை அதிகரித்திருக்கின்றன. “நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் கொஞ்சம் வேதியியலை கற்றிருந்தாலே போதும் உங்களுடைய கராஜில்கூட இரசாயன ஆயுதங்களை எளிதில் தயாரித்துவிடலாம்” என ஐ.மா. ஆயுத கட்டுப்பாடு மற்றும் ஆயுத குறைப்பு நிறுவனத்தின் இயக்குனர் பத்து வருடங்களுக்கு முன்பே கூறினார்.

மற்ற எந்தக் காலப்பகுதியிலும் இருந்ததைவிட பெரும் அழிவை ஏற்படுத்திய யுத்தங்கள் 20-⁠ம் நூற்றாண்டில்தான் நிகழ்ந்தன என்பதில் சந்தேகமே இல்லை. இந்த 21-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், முக்கியமாக 2001, செப்டம்பர் 11 அன்று நியூ யார்க் மாநகரத்திலும் வாஷிங்டன், டி.சி.-யிலும் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு சமாதானத்திற்கான எதிர்பார்ப்பு அதிக சாத்தியமற்றதாகவே இருக்கிறது. நியூஸ்வீக் பத்திரிகையில் ஸ்டீவன் லீவி பின்வருமாறு எழுதுகிறார்: “நவீன தொழில்நுட்பம் நன்மைக்காக உபயோகிக்கப்படாமல் தீமைக்கு கைக்கொடுக்க உபயோகிக்கப்படுமோ என்று கேள்விகேட்க ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. அந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பதென்றும் யாருக்குமே தெரியாது. முன்னேற்றம் என தாங்கள் நினைப்பதை செய்துவிட்டு பிறகு அதைப் பற்றி ஆராய்வதே மனிதர்களின் பழக்கமாகிவிட்டது. நடக்கக்கூடாத பயங்கர நிகழ்ச்சி நடந்துவிடுமோ என்று நினைக்கவே மறுத்தாலும் அது நடப்பதற்குரிய சூழ்நிலைகளை நாமே வளர்த்துவிடுகிறோம்.”

கொடூரமான வெடி மருந்துகளையும் பயங்கரமான ஆயுதங்களையும் கண்டுபிடித்திருப்பதால் இந்த உலகத்தில் சமாதானத்திற்கான வாய்ப்பு அதிகரித்துவிடவில்லை என்பதே சரித்திரம் நமக்கு கற்பித்திருக்கும் பாடம். அப்படியென்றால், உலக சமாதானம் வெறும் கனவுதானா? (g02 5/8)

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

நைட்ரோகிளிசரினை கட்டுப்பாட்டில் வைத்தல்

கனமான, எண்ணெய் போன்ற, வெடிக்கும் தன்மையுள்ள திரவமாகிய நைட்ரோகிளிசரினை இத்தாலிய வேதியியலாளர் ஆஸ்கான்யோ சோப்ரேரோ 1846-⁠ல் கண்டுபிடித்தார். அந்தப் பொருள் மிகவும் ஆபத்தானதாக இருந்தது. வெடித்துச் சிதறிய கண்ணாடி துண்டுகள் சோப்ரேரோவின் முகத்தைப் பதம் பார்த்ததால் அந்தப் பொருளை உபயோகித்து வேலை செய்வதை அவர் நிறுத்திவிட்டார். என்றாலும், அந்த திரவம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை சோப்ரேரோவால் தீர்க்கவே முடியவில்லை: அதை தரையில் ஊற்றி சம்மட்டியால் அடித்தபோது அடிபட்ட எண்ணெய் மட்டுமே வெடித்தது, மற்ற பகுதியோ வெடிக்கவில்லை.

சிறிய அளவு வெடி மருந்தை உபயோகித்து மற்றொரு வெடி மருந்தின் பெருமளவை வெடிக்க வைக்கும் நடைமுறை டெட்டனேடரை நோபல் கண்டுபிடித்தபோது இந்தப் பிரச்சினையை தீர்த்தார். பிறகு, 1865-⁠ல், வெடிக்கும் உறை ஒன்றை நோபல் கண்டுபிடித்தார். அதாவது, மெர்குரி ஃபல்மினேட் நிறைந்த சிறிய உறையை நைட்ரோகிளிசரின் கொண்ட கலத்திற்குள் நுழைத்து ஒரு திரியை உபயோகித்து அதை பற்ற வைத்தார்.

என்றாலும், நைட்ரோகிளிசரினை உபயோகித்து வேலை செய்வது ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. உதாரணமாக, 1864-⁠ல் ஸ்டாக்ஹோமிற்கு வெளியிலிருந்த நோபலின் பட்டறையில் நிகழ்ந்த வெடி விபத்தில் நோபலின் கடைசி சகோதரனான ஏமில் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். ஜெர்மனியிலுள்ள குருமெலில் அமைந்த நோபலின் தொழிற்சாலை இரு முறை வெடித்துச் சிதறியது. அதோடு, சிலர் அந்த திரவத்தை விளக்கு எண்ணெய், ஷூ பாலிஷ், அல்லது வண்டிச் சக்கரங்களுக்கு மசகு எண்ணெய் போல உபயோகித்து படுமோசமான விளைவுகளை சந்தித்தனர். மலைகளை தகர்க்க உபயோகிக்கையிலும் கூடுதலான எண்ணெய், வெடிப்புகளுக்குள் சென்று பின்னர் விபத்துக்களை ஏற்படுத்தலாம்.

1867-⁠ல் நோபல், கீஸல்குர் என்ற வெடிக்காத, நுண்துளைகள் கொண்ட ஒரு பொருளோடு நைட்ரோகிளிசரினை சேர்த்து அந்த எண்ணெய்யை திடப்பொருளாக மாற்றினார். “சக்தி” என அர்த்தப்படும் கிரேக்க வார்த்தையான டைனமிஸ் என்பதிலிருந்து டைனமைட் என்ற பெயரை நோபல் உருவாக்கினார். இதைவிட அதிக சக்திவாய்ந்த வெடி மருந்துகளை நோபல் பின்னர் உருவாக்கியபோதிலும் அவருடைய கண்டுபிடிப்புகளில் டைனமைட் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நோபல் கண்டுபிடித்த வெடி மருந்துகள் யுத்தம் சாராத மற்ற காரியங்களுக்கும் உபயோகமாக இருந்தது உண்மையே. உதாரணமாக, செ. காத்ஹார்ட் சுரங்கங்களை கட்டுவதிலும் (1872-82), நியூ யார்க்கின் ஈஸ்ட் ஆற்றிற்கு அடியிலுள்ள செங்குத்தான பாறைகளை தகர்ப்பதிலும் (1876, 1885), கிரீஸிலுள்ள கொரிந்திய கால்வாயை வெட்டுவதிலும் (1881-93) அவை முக்கிய பங்கு வகித்தன. இருந்தாலும், டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்திலிருந்தே அது அழிவையும் மரணத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக வெகு சீக்கிரத்தில் பெயரெடுத்தது.

[படம்]

டைனமைட் கலந்த வெடி மருந்தால் தகர்க்கப்பட்ட கொலம்பிய போலீஸ் நிலையம்

[படத்திற்கான நன்றி]

© Reuters NewMedia Inc./CORBIS

[பக்கம் 4-ன் படம்]

நோபல் இறந்து 20 வருடங்களுக்குள்ளாக முதல் உலக யுத்தத்தில் புதிய நாசகரமான ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டன

[படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo

[பக்கம் 6-ன் படங்கள்]

கம்போடியா, ஈராக், அஜர்பைஜான் ஆகிய இடங்களில் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டவர்கள்

[படங்களுக்கான நன்றி]

UN/DPI Photo 186410C by P.S. Sudhakaran ▼

UN/DPI Photo 158198C by J. Isaac

UN/DPI Photo by Armineh Johannes

[பக்கம் 6-ன் படம்]

நினைத்தவுடன் உபயோகிக்கும் விதத்தில் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதாக கமிட்டி ஆன் நியூக்ளியர் பாலிஸி கூறுகிறது

[படத்திற்கான நன்றி]

UNITED NATIONS/PHOTO BY SYGMA

[பக்கம் 7-ன் படங்கள்]

1995-⁠ல் டோக்கியோவிலுள்ள சுரங்க ரயில் பாதையில் சாரின் உபயோகிக்கப்பட்டபோது இரசாயன ஆயுதங்களின் பயங்கரம் எங்கும் அறியப்பட்டது

[படத்திற்கான நன்றி]

Asahi Shimbun/Sipa Press

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

UN/DPI Photo 158198C by J. Isaac