Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிமைத்தனம் ஒரு நீண்ட கால போராட்டம்

அடிமைத்தனம் ஒரு நீண்ட கால போராட்டம்

அடிமைத்தனம் ஒரு நீண்ட கால போராட்டம்

“அடிமை என்றாலே இதுதான்: துஷ்பிரயோகம் செய்யப்படுவது, அதை சகிப்பது, வன்முறையால் அநியாயத்திற்கு அடிபணிய வைக்கப்படுவது.”​—யூரிபடீஸ், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு நாடக ஆசிரியர்.

அடிமைத்தனத்திற்கு மிக நீண்ட சரித்திரம் உண்டு, அது கசப்பான சரித்திரம்கூட. எகிப்து, மெசொப்பொத்தேமியா ஆகிய பழங்கால நாகரிகங்கள் தொட்டே வலிமைமிக்க தேசங்கள் வலிமையற்ற அண்டை தேசத்தாரை தங்களுக்கு அடிமைகளாக்கியிருக்கின்றன. இப்படித்தான் மனித அநீதி சம்பந்தப்பட்ட சோகக் கதைகளில் ஒன்று சரித்திரத்தில் இடம்பெற ஆரம்பித்தது.

பொ.ச.மு. இரண்டாயிரமாவது ஆண்டுகளில், எகிப்து ஒரு தேசத்தையே அடிமையாக்கியது; அத்தேசத்தில் லட்சக்கணக்கான மக்கள் இருந்திருக்கலாம். (யாத்திராகமம் 1:13, 14; 12:37) மத்தியத்தரைக் கடல் பிரதேசத்தை கிரீஸ் ஆட்சி செய்தபோது, அநேக கிரேக்க குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒரு அடிமையையாவது வைத்திருந்தன; இன்று சில நாடுகளிலுள்ள ஒவ்வொரு சாதாரண குடும்பமும் ஒரு காரை வைத்திருப்பது எப்படி சகஜமோ அப்படித்தான் அது இருந்தது. கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி கூறினார்: எஜமான்கள், அடிமைகள் என மனிதகுலம் இரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன; எஜமான்கள் ஆணையிடுவதற்கென்றே பிறந்திருக்கிறார்கள், அடிமைகளோ கீழ்ப்படிவதற்கென்றே பிறந்திருக்கிறார்கள்.

ரோமர்கள் கிரேக்கரைவிட அடிமைத்தனத்திற்கு அதிக இடமளித்தனர். அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில், ரோம பட்டணத்தினரில் ஒருவேளை பாதிப்பேர்​—⁠லட்சக்கணக்கானோர்​—⁠அடிமைகளே. ரோம பேரரசு நினைவுச் சின்னங்களை கட்டுவதற்கும் சுரங்கங்களில் வேலை பார்ப்பதற்கும் வயல்களை பண்படுத்துவதற்கும் ஜமீன்தார்களின் பெரிய பெரிய வீடுகளில் வேலை பார்ப்பதற்கும் ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சம் அடிமைகளை வாங்க வேண்டியிருந்ததாக தெரிகிறது. a போரில் கைப்பற்றியவர்களை பொதுவாக அடிமைகளாக அவர்கள் பயன்படுத்தினர், ஆகவே, மேலும் மேலும் அடிமைகளை பெற வேண்டும் என்ற பேராசையே ரோம பேரரசு தொடர்ந்து போரிடுவதற்கு பலமான தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.

ரோம பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு அடிமைத்தனம் ஓரளவுக்கு குறைந்தாலும் அப்பழக்கம் தொடர்ந்தது. இடைக்கால இங்கிலாந்தைச் சேர்ந்த மொத்த வேலையாட்களில் 10 சதவீதத்தினர் அடிமைகளே என டூம்ஸ்டே புத்தகம் (பொ.ச. 1086) குறிப்பிடுகிறது. போரில் வென்றும் இன்னுமநேக அடிமைகளை சம்பாதித்தார்கள்.

இருந்தாலும், கிறிஸ்துவின் காலத்திலிருந்தே அடிமை வியாபாரத்தால் மற்ற எந்த கண்டத்தையும்விட அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்கக் கண்டமே. இயேசுவின் காலத்திற்கு முன்பும் எகிப்தியர்கள் எத்தியோப்பிய அடிமைகளை வாங்கியும் விற்றும் வந்தனர். சுமார் 1,250 வருட காலப்பகுதியில் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அடிமைகள் தேவைப்பட்டதால் அந்த இடங்களுக்கு குத்துமதிப்பாக 1.8 கோடி ஆப்பிரிக்கர்கள் கொண்டு செல்லப்பட்டனர். 16-⁠ம் நூற்றாண்டில் அமெரிக்காக்களின் குடியேற்றம் ஆரம்பித்ததோடு அடிமைகளின் புதிய சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது; அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செய்யப்பட்ட அடிமை வியாபாரம் விரைவில் உலகின் அதிக லாபம் தரும் வியாபாரமாயிற்று. 1650-⁠க்கும் 1850-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் 1.2 கோடிக்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர் என சரித்திராசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். b அநேகர் அடிமை சந்தைகளில் விற்கப்பட்டார்கள்.

அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்கள்

நூற்றாண்டுகளாகவே தேசங்களும் தனிமனிதர்களும் தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க போராடியுள்ளன(ர்). கிறிஸ்துவுக்கு முன் முதல் நூற்றாண்டில் ஸ்பார்டகஸ் என்பவர் 70,000 ரோம அடிமைகள் கொண்ட ஒரு சேனையை தலைமை வகித்து விடுதலைக்காக விருதா போரில் இறங்கினார். சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஹெய்டிய அடிமைகள் நடத்திய புரட்சி அதிக வெற்றி தருவதாய் இருந்தது. அதன் விளைவாக 1804-⁠ல் சுயேச்சையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஐக்கிய மாகாணங்களில் அடிமைத்தனம் வெகு காலத்திற்கு நீடித்திருந்தது என சொல்லலாம். அங்கிருந்த அடிமைகள் தங்களையும் தங்களுடைய அன்பானவர்களையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க விடா முயற்சியோடு போராடினார்கள். மேலும் சுதந்திரமாக வாழும் மற்ற ஜனங்களும், அடிமை ஒழிப்பை ஆதரிப்பதன் மூலமும் தப்பி ஓடும் அடிமைகளுக்கு உதவியளிப்பதன் மூலமும் அடிமைத்தனத்திற்கு எதிராக உண்மையோடு போரிட்டார்கள். இருந்தாலும் 19-⁠ம் நூற்றாண்டின் கடைசியில்தான் இறுதியாக இப்பழக்கம் அந்த நாடெங்கிலும் தடைசெய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலை?

அவை விருதா போராட்டங்களா?

“யாருமே அடிமைப்படுத்தப்பட மாட்டார்கள்: எல்லா விதமான அடிமைத்தனமும் அடிமை வியாபாரமும் அடியோடு ஒழிக்கப்படும்” என மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி குறிப்பிடுகிறது. 1948-⁠ல் அதிக ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட அந்தக் குறிக்கோள் உண்மையில் உயர்ந்த நோக்குடையது. அந்த இலக்கை அடைய உண்மை மனமுள்ள பலரும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். என்றாலும், வெற்றி கிட்டுவது எளிதல்ல.

முந்தின கட்டுரை காண்பித்தபடி, கோடிக்கணக்கானோர் இன்றும் மோசமான நிலையில் எந்த வருமானமுமின்றி உழைத்து வருகிறார்கள்; அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக அவர்களில் அநேகர் வாங்கப்பட்டார்கள் அல்லது விற்கப்பட்டார்கள். அடிமைத்தனத்தை ஒழிக்க நல்நோக்குடைய முயற்சிகள் ஒருபுறம் எடுக்கப்பட்டாலும், அதைத் தடை செய்வதற்கு சர்வதேச ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டாலும், மெய்யான விடுதலை என்பது அனைவருக்கும் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. உலகளாவிய பொருளாதாரம் இந்த இரகசிய அடிமை வியாபாரத்தை அதிக லாபம் தரும் தொழிலாக ஆக்கியுள்ளது. எனவே அடிமைத்தனம் அதன் கோரப்பிடியை மனிதகுலத்தின் சில பாகங்கள் மீது இன்னும் இறுக்கிக்கொண்டே போவதாக தெரிகிறது. அப்படியானால் நிலைமை கைமீறி போய்விட்டதா? நாம் பார்க்கலாம். (g02 6/22)

[அடிக்குறிப்புகள்]

a ரோம செல்வந்தர்கள் சிலரிடம் 20,000 அடிமைகள் வரை இருந்திருக்கலாம் என ஒரு பழங்கால ஏடு சொல்கிறது.

b பழிபாவங்களுக்கு அஞ்சாத பிரசங்கியார்கள் சிலர், இப்படிப்பட்ட கொடூரமான மனித வியாபாரத்திற்கு கடவுள் ஆதரவு அளிப்பதாக வாதாடினர். அதன் விளைவாக, பைபிள் இத்தகைய கொடூரத்தை நியாயமென சொல்கிறது என்ற தவறான எண்ணம் இன்றும் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் பைபிள் அவ்வாறு சொல்வதில்லை. தயவுசெய்து அக்டோபர் 8, 2001 விழித்தெழு! இதழில் “அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 45-ன் படங்கள்]

ஆப்பிரிக்காவிலிருந்து கப்பல்களில் (மேலே) கொண்டு செல்லப்பட்ட அடிமைகள் ஒரு காலத்தில் அமெரிக்க அடிமை சந்தைகளில் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டார்கள்

[படங்களுக்கான நன்றி]

Godo-Foto

Archivo General de las Indias