Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்று அரசியல் புரட்சியாளன் இன்று நடுநிலை கிறிஸ்தவன்

அன்று அரசியல் புரட்சியாளன் இன்று நடுநிலை கிறிஸ்தவன்

அன்று அரசியல் புரட்சியாளன் இன்று நடுநிலை கிறிஸ்தவன்

லாடிஸ்லாஃப் ஷ்மேகால் சொன்னபடி

தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட பிறகு, என் சிறை அறைக்கு மறுபடியும் அழைத்துச் சென்றார்கள். உடனே, இரண்டு மாடிக்கு மேல் இருந்த என் நண்பர் ஒருவரிடம் மார்ஸ் குறியீட்டால் சுவரில் தட்டித் தட்டி செய்தியை சொல்ல ஆரம்பித்தேன். எனக்கு கிடைத்த தண்டனைக் காலம் எவ்வளவு என தெரிந்துகொள்ள அவர் ஆவலுடன் இருந்தார்.

“பதினான்கு வருடங்கள்” என்று தட்டினேன்.

அவரால் நம்ப முடியவில்லை. “பதினான்கு மாதங்களா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

“இல்லை, பதினான்கு வருடங்கள்” என்றேன்.

அந்த வருடம் 1953. இடம், லிப்ரெட்ஸ், செக்கோஸ்லோவாகியா (தற்போதைய செக் குடியரசு). அப்போது எனக்கு 19 வயது; அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஒரு புரட்சியாளன். புரட்சியாளர்களாகிய நாங்கள், அப்போது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக துண்டுப்பிரதிகளை விநியோகித்து எங்கள் கருத்துக்களை பரப்பினோம். எங்கள் நடவடிக்கை ராஜ துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டது; எனக்கு கிடைத்த நீண்ட கால தண்டனைத் தீர்ப்புக்கு காரணம் அதுதான்.

எனக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட ஒரு வருடத்தை சிறையில் செலவழித்திருந்தேன். அப்போது, கைதிகள் அறைக்கு இருவராக சிறையிலிடப்பட்டார்கள்; அவ்வப்போது கண்ணைக்கட்டி விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எங்கள் அறையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள அனுமதி இல்லாதிருந்தது; ஆகவே நாங்கள் கிசுகிசுத்துக்கொண்டோம், அல்லது மார்ஸ் குறியீட்டால் தகவலை பரிமாறிக்கொண்டோம்.

சிறையில் இருந்தவர்களில் அநேகர் யெகோவாவின் சாட்சிகள் என்று எனக்கு விரைவில் தெரிய வந்தது. எங்கள் சிறையில் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை கைதிகளை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றுவது வழக்கம். பைபிளில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதால் கடைசியில் என்னை ஒரு சாட்சியுடன் போட்டபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதற்குப் பின்னர், சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தேன்.

எங்களிடம் பைபிளோ பைபிள் சார்ந்த பிரசுரங்களோ இல்லாவிட்டாலும் எங்கள் சம்பாஷணைகளை பைபிள் படிப்புகள் என்றே சொல்லலாம். உண்மையில், என் வாழ்க்கையில் பைபிளை நான் பார்த்ததுகூட இல்லை. ஆனால் நாங்கள் பேசுவோம்​—⁠அந்த சாட்சி தன் ஞாபகத்திலிருந்து பைபிள் விஷயங்களை விவரிப்பார்​—⁠அவர் சொன்னதை நான் குறிப்பெடுத்துக் கொள்வேன். இவை யாவும் நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கிசுகிசுத்தபோது நடந்தவை.

எழுதுவதற்காக எங்களுக்கு கிடைத்த சாதனம் டாய்லெட் பேப்பரும் ஒரு சீப்பும்தான். அந்தச் சீப்பை வைத்து டாய்லெட் பேப்பரில் குறிப்புகள் எடுத்துக்கொள்வேன். நாங்கள் கலந்தாலோசித்த அநேக வசனங்களை நான் மனப்பாடம் செய்தேன். எனக்கு படிப்பு நடத்திய சாட்சிகள் ராஜ்ய பாட்டுகளையும் கற்றுத்தந்தார்கள். ஒரு சாட்சி என்னிடம் இவ்வாறு சொன்னார்: “இப்போது நீங்கள் அரசியல் குற்றவாளியாக சிறையில் இருக்கிறீர்கள், எதிர்காலத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதற்காகவே நீங்கள் சிறையில் போடப்படலாம்.”

கடைசியில், கணக்குவழக்கு இல்லாத விசாரணைகளுக்குப் பிறகு, தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு யாச்சீமோஃப் என்ற நகருக்கு அருகிலிருந்த உழைப்பாளிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டேன். அப்போது, நான் ஒருநாள் யெகோவாவின் சாட்சியாவேன் என்ற உறுதி மனதில் ஏற்பட்டது.

பல்லாண்டு சிறைவாசம்

யுரேனியம் தோண்டி எடுக்கும் அந்த முகாமுக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக சாட்சிகள் இருக்கிறார்களா என்று தேட ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் அனைவரும் வேறெங்கோ அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று விரைவில் தெரிய வந்தது. என்றாலும் சமையற்காரராய் இருந்ததால் ஒரு சாட்சி மட்டும் அனுப்பப்படாதிருந்தார். மிகப் பழைய பைபிள் ஒன்றை அவர் எனக்கு இரவலாக தந்தார்; வெவ்வேறு இடங்களில் ஒளித்து ஒளித்து வைத்து படிக்கப்பட்டு வந்த பைபிள் அது. நான் ஏற்கெனவே மனப்பாடமாக அறிந்திருந்த வசனங்களை நேரடியாக பைபிளில் இருந்தே வாசிக்க முடிந்தது. அவற்றை வாசிக்கையில், ‘ஆமாம், சகோதரர்கள் சொல்லித்தந்த மாதிரியே இருக்கிறது’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, பர்ஷீபிராம் என்ற நகருக்கு அருகிலிருந்த பைட்டிஸ் எனப்பட்ட முகாமுக்கு மாற்றப்பட்டேன். மற்ற சாட்சிகளை அங்கு சந்தித்தேன். பைட்டிஸில், ரகசியமாக கொண்டுவரப்பட்ட பைபிள் பிரசுரங்கள் தவறாமல் எங்களுக்கு கிடைத்தன. எங்கள் கைக்கு அவை எப்படி கிடைக்கின்றன என்று எப்படியாவது கண்டுபிடித்துவிட முகாம் நிர்வாகம் முனைந்தபோதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறைக்கைதிகளாகிய நாங்கள் கிட்டத்தட்ட 14 பேர், மற்றவர்களுக்கு சாட்சிகொடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டோம். அதில் பாதிப்பேர் முழுக்காட்டப்பட்ட சாட்சிகள்; மீதிப்பேர் என்னைப் போன்றவர்கள்; அதாவது சிறையில் இருந்தபோது சாட்சிகள் சொன்னதைக் கேட்டு விசுவாசத்தை வளர்த்தவர்கள்.

கடவுளுக்கு எங்கள் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்த எங்களில் அநேகர் விரும்பினோம். ஆனால் தண்ணீர் இல்லாததால், இன்னும் சரியாக சொன்னால், போதுமான அளவுக்கு பெரிய தண்ணீர் தொட்டி இல்லாததால் முழுக்காட்டுதலுக்கு எளிதாக ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆகவே அந்நாட்களில் அநேகர் விடுதலை கிடைக்கும் வரை காத்திருந்து பிறகு முழுக்காட்டப்பட வேண்டியிருந்தது. என்றாலும் பைட்டிஸ் முகாமில், சுரங்கத்திலிருந்த கம்ப்ரெஸ்ஸர்களை குளிரச் செய்யும் பெரிய கோபுரங்கள் இருந்தன. 1955 வாக்கில், எங்களில் அநேகர் அந்த கோபுரங்கள் ஒன்றிலிருந்த தண்ணீர் சேகரிப்பு தொட்டியில் முழுக்காட்டுதல் பெற்றோம்.

சில வருடங்களுக்குப் பிறகு, மார்ச் 1960-⁠ல், ஒரு போலீஸ் அதிகாரி என்னை அழைத்தனுப்பினார்; அவர் அரசியல் கைதிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தார். மற்ற கைதிகளின் நடவடிக்கைகளைப் பற்றி அவருக்கு துப்பு கொடுத்தால் என் சிறைத்தண்டனையின் காலப்பகுதியைக் குறைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார். அதை செய்ய மறுத்தபோது, கண்மண் தெரியாமல் என்னை திட்ட ஆரம்பித்து விட்டார். “சுதந்திர வாழ்க்கைக்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நீ நழுவ விட்டுவிட்டாய்” என்று கத்தினார். “நீ வீட்டிற்கே போக முடியாதபடி செய்துவிடுகிறேன் பார்! நீ இங்கேயே கிடந்து சாகப் போகிறாய்” என்றார். என்றாலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பொது மன்னிப்பு அடிப்படையில் எனக்கு விடுதலை வழங்கப்பட்டதால், மொத்தத்தில் எட்டு வருட சிறைவாசத்திற்குப் பின்பு வீடு திரும்பினேன்.

குறுகிய கால விடுதலை

செக்கோஸ்லோவாகியாவில் ஏப்ரல் 1949 முதல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆகவே கடவுளை சேவித்ததைப் பொறுத்தமட்டில், சிறையிலிருந்து விடுதலை கிடைத்த பிறகும், சிறையில் இருந்த நிலைமையைப் போலவேதான் இருந்தது. என் விடுதலைக்குப் பிறகு, மற்றொரு பிரச்சினையை எதிர்ப்பட்டேன். நாட்டிலிருந்த ஒவ்வொரு ஆணும் இரண்டு வருடங்களுக்கு ராணுவத்தில் அப்போது கட்டாயமாக பணியாற்ற வேண்டி இருந்தது.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்களுக்கு ராணுவ பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. உதாரணமாக, நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்த்தவர்களுக்கு அப்படிப்பட்ட விலக்கு அளிக்கப்பட்டது. நான் சுரங்கத்தில் வேலை பார்த்திருந்ததால், அப்படிப்பட்ட சுரங்கமொன்றில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு எனக்கு கனிவான வரவேற்பு கிடைத்தது. “ராணுவத்தைப் பற்றி கவலைப்படாதே” என்றும், “ராணுவ சேவையிலிருந்து உனக்கு விலக்களிப்பது எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்றும் என்னிடம் சொன்னார்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கட்டாய ராணுவ சேவைக்கான அழைப்பை பெற்றபோது, நிலக்கரி சுரங்க நிர்வாகப் பணியில் இருந்தவர்கள் என்னிடம் மறுபடியும் இப்படி உறுதியாக சொன்னார்கள்: “கவலைப்படாதே, அது ஏதோ தவறுதலாக நடந்திருக்கும். நாங்கள் ராணுவத்திற்கு எழுதுவோம், எல்லாம் சரியாகிவிடும்.” ஆனால் எதுவும் சரியாகவில்லை. கடைசியில் ஓர் அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி நடப்பது இதுதான் முதல் தடவை; ஆனால் நீ ராணுவத்தில் ரிப்போர்ட் செய்தே ஆக வேண்டும்” என்று சொல்லி என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போர் சம்பந்தமான காரியங்களுக்கு என் மனசாட்சி இடமளிக்காததால் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டேன், எனவே கைது செய்யப்பட்டு அருகிலிருந்த ராணுவ யூனிட்டிற்கு கொண்டு செல்லப்பட்டேன்.​—ஏசாயா 2:⁠4.

விசாரணைக் குழுவிற்கு முன்

கிளாட்னோ நகரில் சிறை வைக்கப்பட்ட பிறகு ஜனவரி 1961-⁠ல், என்னை ஒரு ராணுவ வீரனாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு ராணுவ அதிகாரி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கான்ஃபரன்ஸ் அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; அங்கு மிகப் பெரிய வட்ட மேஜை போடப்பட்டிருந்தது; அதைச் சுற்றி, கைப்பிடி கொண்ட பெரிய லெதர் சேர்கள் இருந்தன. விரைவில் அதிகாரிகள் வர ஆரம்பித்தார்கள்; அந்த மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். பொறுப்பில் இருந்த ஒருவர், அவர்களை ஒவ்வொருவராக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு அவர் உட்கார்ந்துவிட்டு என்னிடம், “இப்போது உன் மதத்தைப் பற்றி எங்களிடம் சொல்” என்றார்.

மனதுக்குள் சுருக்கமான ஜெபம் செய்துவிட்டு, என்னை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்களிடம் பேச ஆரம்பித்தேன். அந்த உரையாடல் விரைவில் பரிணாமத்திடம் திரும்பியது; பரிணாமம் அறிவியல் ரீதியில் உண்மையானது என்று அடித்துக் கூறப்பட்டது. நான் முன்பு இருந்த உழைப்பாளிகள் முகாம் ஒன்றில், பரிணாமமும் புதிய உலகமும் என்ற ஆங்கில புத்தகத்தை வாசித்திருந்தேன். a அதனால் பரிணாமம் நிரூபிக்கப்படாத ஒரு கோட்பாடு என்பதற்கான அத்தாட்சியை என்னால் அளிக்க முடிந்தது; அதைக் கேட்ட அந்த ராணுவ அதிகாரிகளுக்கு ஒரே ஆச்சரியம்.

பிறகு, ஒரு மேஜர் அந்தக் கலந்துரையாடலில் சேர்ந்துகொண்டார்; அவர் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரென்று தெளிவாக தெரிந்தது. “கன்னி மரியாளைப் பற்றி என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார். “புனித பூசை பற்றி உன் கருத்து என்ன?” என்றும் கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். பிறகு, “உங்கள் கேள்விகள் மற்றவர்களுடைய கேள்விகளைப் போல் அல்லாமல் வித்தியாசமாய் இருக்கின்றன, ஆகவே நீங்கள் மத நம்பிக்கை உள்ளவர்போல் தெரிகிறது” என்றேன்.

“இல்லை, இல்லை, இல்லை! எனக்கு ஒன்றும் மதத்தில் நம்பிக்கையில்லை!” என்று உரக்க மறுத்தார். கம்யூனிஸ்ட் ஆட்சியில், கிறிஸ்தவர்களென சொல்லிக்கொள்பவர்களுக்கு மதிப்போ பொறுப்போ கொடுக்கப்படுவது மிகவும் அரிதாய் இருந்தது. ஆகவே அந்தக் கலந்துரையாடலில் அதற்குப் பின்பு அவர் வாயே திறக்கவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளைப் பற்றி விவரிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக மிகவும் நன்றியுள்ளவனாய் இருந்தேன்.

சாட்சி கொடுக்க மேலுமான வாய்ப்புகள்

சில நாட்களுக்குப் பிறகு, ப்ராக் நகரிலிருந்த ராணுவ கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்; அங்கு காவலில் வைக்கப்பட்டேன். என்னை காவல் காக்க வந்த ஆயுதம் தாங்கிய முதல் ராணுவ வீரர் ஒருவர் எனக்கு அளிக்கப்பட்டிருந்த விசேஷ பாதுகாப்பை பார்த்து ஆச்சரியப்பட்டார். “தனிப்பட்ட விதமாக ஒருவரை காவல் காப்பது எங்களுக்கு இதுவே முதல் தடவை” என்று என்னிடம் சொன்னார். எனவே நான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவருக்கு விளக்கிச் சொன்னேன். அது அவரது ஆர்வத்தை அந்தளவாய் தூண்டியதால் கீழே உட்கார்ந்து​—⁠துப்பாக்கியை தன் முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு⁠—⁠நான் சொன்னதைக் கவனமாக கேட்டார். இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு மற்றொரு வீரர் அவருக்குப் பதில் என்னைக் காவல் காக்க வந்தார்; அதைப் போலவே கேள்விகளும் பைபிள் உரையாடலும் தொடர்ந்தன.

அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், என்னைக் காவல் காக்க வந்தவர்களிடமும், அவர்கள் அனுமதித்தபோது கைதிகளிடமும் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காவலர்கள் சிறைச்சாலை அறைகளைக்கூட திறந்துவிட்டு பைபிள் கலந்தாலோசிப்புகளுக்கு கைதிகள் கூடிவர அனுமதித்தனர்! சிறிது காலத்திற்குப் பிறகு, மற்ற கைதிகளிடம் பேச எனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தைக் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டுவிட்டது; இந்த விஷயம் வெளியில் தெரிந்து, ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனால் விஷயம் கமுக்கமாகவே வைக்கப்பட்டது.

கடைசியில், தண்டனைத் தீர்ப்புக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, என் நம்பிக்கைகளைப் பற்றி கேட்டிருந்த அநேகர் எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினர். எனக்கு இரண்டு வருட தண்டனை வழங்கப்பட்டது; எனக்கு முதலில் விதிக்கப்பட்ட தண்டனை காலத்தில் மீதமிருந்த ஆறு ஆண்டுகளுடன் இவை சேர்க்கப்பட்டன; ஏனெனில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் அந்த ஆண்டுகளை நான் சிறையில் கழித்திருக்கவில்லை. எனவே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளை நான் இன்னும் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது.

கடவுளின் உதவியை உணர்ந்தேன்

செக்கோஸ்லோவாகியாவில் முகாம் விட்டு முகாமுக்கும், சிறை விட்டு சிறைக்கும் சென்றபோதெல்லாம், பெரும்பாலும் கடவுளின் உதவி எனக்கு கிடைத்ததை உணர்ந்தேன். வால்டீட்ஸெவில் இருந்த சிறைக்குச் சென்றதும், அந்த ஆணையர் நான் சிறை தண்டனை அனுபவிப்பதற்கான காரணத்தை கேட்டார். “ராணுவ சேவைக்கு மறுப்பு தெரிவித்ததால்” என்றேன்; “போரில் ஈடுபடுவது என் விசுவாசத்திற்கு முரணானது” என்றும் சொன்னேன்.

“எல்லாருக்கும் இதே மனப்பான்மை இருந்தால் மிகவும் நன்றாயிருக்கும்” என்று பரிவுடன் பதிலுரைத்தார். ஆனால் அதைப் பற்றி ஒரு கணம் யோசித்துவிட்டு, “இருந்தாலும் இன்று பெரும்பாலோர் இவ்வாறு சிந்திக்காததால் உன்னை நாங்கள் தண்டித்தே ஆக வேண்டும், அதுவும் கடுமையாக தண்டித்தாக வேண்டும்!” என்றார்.

கண்ணாடி அறுக்கும் துறையில் வேலை செய்ய என்னை அனுப்பினார்கள். அது தண்டனைக்குரிய ஒரு துறை. ஒரு யெகோவாவின் சாட்சியாக ராணுவத்தில் பணியாற்ற மறுத்ததற்காகவே எனக்கு தண்டனை வழங்கப்பட்ட போதிலும், நான் இன்னும் ஓர் அரசியல் கைதியாகவே கருதப்பட்டதால் கஷ்டமான வேலைகளே கொடுக்கப்பட்டன. அலங்கார விளக்குகள், ஆடம்பர கண்ணாடி சாமான்கள் போன்றவற்றை செய்வதற்கென கண்ணாடி அறுப்பது மிகவும் கஷ்டமான வேலை; ஏனெனில் அப்படிப்பட்ட பொருட்கள் பிசிர் இல்லாமல், குறைபாடின்றி செய்யப்பட வேண்டியவை. பொதுவாக, கைதிகள் செய்து முடித்த பொருட்களில் பாதியாகிலும் மறுபடியும் சரிசெய்யப்படுவதற்காக அவர்களிடமே அடுத்த நாள் திருப்பி அனுப்பப்படும். ஆகவே எதிர்பார்க்கப்படும் அளவிற்கு உற்பத்தியைக் காட்டுவது மிகவும் சிரமமாய் இருந்தது.

கண்ணாடி அறுக்கும் வேலைக்குச் சென்ற முதல் நாள், அந்தத் துறையின் மேற்பார்வையாளர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் வந்ததும், அவர் நினைத்ததுபோல் போதியளவு வேலை செய்யாமல் இருந்த கைதிகளைப் பார்த்து கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்தார். கைதிகளைக் கடந்து என்னிடம் வந்தார். “உனக்கு என்ன, நீ ஏன் வேலை செய்யவில்லை?” என்றார்.

நான் புதிதாக வேலைக்கு வந்த கைதி என்று விளக்கினேன். தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, ஏன் என்னை கைது செய்தார்கள் என்ற வழக்கமான கேள்விகளையே கேட்டார். என் சூழ்நிலையைப் பற்றி அவருக்கு விளக்கின பிறகு, “அப்படியானால், நீ ஒரு யெகோவாவின் சாட்சியா?” என்றார்.

“ஆமாம்” என்றேன்.

அவருடைய மனப்பான்மையே மாறிவிட்டது. “கவலைப்படாதே; இங்கு யெகோவாவின் சாட்சிகள் அநேகம் பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்; ஏனென்றால் அவர்கள் கண்ணியமானவர்கள், கடின உழைப்பாளிகள். உன்னால் செய்ய முடிந்த அளவு வேலை மட்டுமே கொடுக்கப்படும்படி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

அந்த மேற்பார்வையாளர் இந்தளவு மாறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. நான் யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்; அத்துடன் அச்சிறையில் சாட்சிகளுக்கு நற்பெயரை விட்டுச் சென்றிருந்த, நான் அறிந்திராத மற்ற சாட்சிகளுக்கும் நன்றியுள்ளவனாக இருந்தேன். உண்மையில், நான் சிறையில் கழித்த காலம் முழுவதிலும் யெகோவாவின் அன்பான உதவிக்கரம் என்னுடன் இருந்ததை உணர்ந்தேன்.

அதிக கடினமான சூழ்நிலையில் இருக்கையிலும், கடைசியில் என் கிறிஸ்தவ சகோதரர்களை பார்ப்பேன் என்று எப்பொழுதும் உறுதியாய் இருந்தேன். அப்போது, அவர்களின் புன்னகை முகங்களைப் பார்ப்பேன், அவர்கள் தரும் ஊக்கத்தைப் பெறுவேன். அவர்களின்றி, என் சிறைவாசத்தைக் கழித்திருப்பது மிகவும் சிரமமாய் இருந்திருக்கும்.

அநேக கைதிகள், தாங்கள் சிறையில் அனுபவித்த கொடுமைகளுக்கெல்லாம் எப்படி பழிவாங்கலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததாக தோன்றியது. நானோ அப்படி ஒருபோதும் நினைக்கவில்லை. கடவுளுடைய நீதியான நியமங்களுக்கு கீழ்ப்படிந்த காரணத்துக்காகவே கஷ்டம் அனுபவித்தேன் என்று எனக்குத் தெரிந்தது. ஆகவே சிறையில் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் சமமாக எண்ணற்ற பல அருமையான நாட்களை பரதீஸிய புதிய பூமியில் யெகோவாவால் எனக்குத் தர முடியும் என்று எனக்குத் தெரிந்தது.​—சங்கீதம் 37:29; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இன்றைய ஆசிக்கு நன்றி

மே 1968-⁠ல், 15-⁠க்கும் மேற்பட்ட ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு, கடைசியில் விடுவிக்கப்பட்டேன். முதலில், ஆட்களோடு சகஜமாக என்னால் பேச முடியவில்லை; சிறையில் பல்லாண்டுகளாக தங்களைச் சுற்றி கைதிகளையும் காவலர்களையுமே பார்த்துப் பார்த்து பழகிவிடுபவர்கள் இந்நிலைக்கு ஆளாவது இயல்புதான். ஆனால் என் கிறிஸ்தவ சகோதரர்களோ தடையுத்தரவின் மத்தியிலும் அப்போது செய்யப்பட்டு வந்த பிரசங்க ஊழியத்தில் சீக்கிரத்தில் ஈடுபட எனக்கு உதவினார்கள்.

விடுதலையாகி சில வாரங்களுக்குள், ஈவாவைச் சந்தித்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு குடும்பத்தின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் அவளும் அவள் அண்ணனும் பைபிள் சத்தியத்திற்காக தைரியமாக நிலைநிற்கை எடுத்திருந்தனர். உடனே பிரசங்க ஊழியத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஈடுபட ஆரம்பித்தோம். பைபிள் சார்ந்த புத்தகங்களை அச்சிடுவதிலும் சேர்ந்து உழைத்தோம். மறைவாக நடத்தப்பட்டு வந்த அச்சகங்களில் இவ்வேலை செய்யப்பட்டது. பின்பு நவம்பர் 1969-⁠ல் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

1970-⁠ல் எங்கள் முதல் குழந்தை யானா பிறந்தாள். பிறகு வாரக் கடைசியில் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளிலுள்ள சகோதரர்களுக்கு ஆன்மீக ரீதியில் ஊக்கமளிப்பதற்கு பயண கண்காணியாக சேவை செய்ய தொடங்கினேன். 1975-⁠ல் இந்த ஊழியத்தை செய்துவந்தபோது கைது செய்யப்பட்டு மறுபடியும் சிறைக்குச் சென்றேன். ஆனால் இந்த முறை சில மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்தேன். பிறகு 1977-⁠ல் எங்கள் மகன் ஷ்டியீபான் பிறந்தான்.

கடைசியில், செப்டம்பர் 1, 1993-⁠ல் செக் குடியரசு யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கியது. அதற்கு அடுத்த வருடத்தில் எங்கள் மகள் யானா, கிறிஸ்தவ மூப்பரான டாலிபோர் டிராஸானை மணந்தாள். பிறகு உதவி ஊழியராக சேவை செய்து வந்த எங்கள் மகன் ஷ்டியீபான் 1999-⁠ல் பிளாங்காவை மணந்தான். அவள் முழுநேர ஊழியம் செய்துவருகிறாள். நாங்கள் அனைவரும் ப்ராக்கிலுள்ள சபைகளில் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள் அனைவருமே புதிய உலகம் வரும் நாளுக்காக ஆவலோடு ஏங்கிக் கொண்டிருக்கிறோம்; குறிப்பாக நான், சிறையின் சுவர்களே எங்கும் இல்லாத நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். (g02 6/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் 1950-⁠ல் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 20-ன் படங்கள்]

பைபிள் வசனங்களை குறித்துக்கொள்ள சீப்பை உபயோகித்தேன்

[பக்கம் 21-ன் படம்]

நான் சிறைப்படுத்தப்பட்டதும், பின்னர் முழுக்காட்டுதல் பெற்றதும் இந்த பைட்டிஸ் முகாமில்தான்

[பக்கம் 23-ன் படம்]

எங்கள் திருமண நாள் அன்று

[பக்கம் 23-ன் படம்]

நானும் ஈவாவும், இடப்புறத்தில் ஷ்டியீபானும் பிளாங்காவும்; வலப்புறத்தில் யானாவும் டாலிபோரும்