Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

ஆசிரியரிடமிருந்து: “வாழ்க்கை வாழ்வதற்கே” (நவம்பர் 8, 2001) இதழில் வெளிவந்த அட்டைப்பட தொடர் கட்டுரைகளுக்கு வாசகர்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்திருக்கின்றன. இது சந்தோஷத்தை அளிக்கிறது; ஏனெனில், இன்றைய பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவைப்படும் பைபிள் அடிப்படையிலான நடைமுறை தகவலை எல்லா விதமான தேசிய, இன, மத பின்னணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அளிக்க “விழித்தெழு!” முயற்சி செய்கிறது.

நான் விழித்தெழு! இதழை நெடுநாட்களாக வாசித்துவரும் வாசகருள் ஒருத்தி. ஆனால் “வாழ்க்கை வாழ்வதற்கே” தொடர் கட்டுரைகளைப் போல் வேறு எதுவும் என் நெஞ்சத்தை இந்தளவுக்குத் தொட்டதில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு மனக்கசப்பு என்னை ஆட்டிப்படைத்தது; நான் சாக விரும்பினேன். என் பலவீனங்களைக் கடவுள் புரிந்துகொள்கிறார் என்பதை இந்தக் கட்டுரைகள் மீண்டும் எனக்கு உறுதிப்படுத்தின.

எஸ். ஹெச்., ஜப்பான் (g02 6/8)

நியூ யார்க்கின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதால் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்து வந்தேன். சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றியும் சிந்தித்திருக்கிறேன்; ஆனால் எனக்குள் ஏதோ பிரச்சினை இருந்ததை நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. தேவைப்பட்ட உதவியைப் பெற்றுக்கொண்டு, கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றப் போகிறேன்.

எம். எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/8)

எனக்கு உடல்நல பிரச்சினை இருப்பதால் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசித்திருக்கிறேன். சிலசமயங்களில் மற்றவர்களுடைய பிரதிபலிப்பைக் காண்பதற்காக விளையாட்டு போல அதைப் பற்றி பேசியும் இருக்கிறேன். காதுகொடுத்துக் கேட்க கடவுள் எப்போதும் இருக்கிறார், அவர் அக்கறையுள்ளவர் என்பதை வாசித்தபோது என் கண்கள் குளமாயின. வாழ்க்கையைப் பற்றிய என் நோக்குநிலையை இந்தப் பத்திரிகை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது.

டி. ஈ. ஜே., கனடா (g02 6/8)

வருடக்கணக்கில் மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன், சமீப காலமாக தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தேன். அதற்காக வீட்டைவிட்டு புறப்பட இருக்கையில், யாரிடமாவது அதைக் குறித்து பேசும்படி விழித்தெழு! இதழில் அட்டைப்பட தொடரின் கடைசி கட்டுரை குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எனவே என் கணவரிடம் அதைப் பற்றி பேசினேன். அது என் திட்டத்தை கைவிட செய்தது. அந்தத் தொடர் கட்டுரைகள் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவின!

எம். பி., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/8)

இந்தப் பத்திரிகை வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அதன் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்த விதமாகவே, கப்பு நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு “விழுங்குவதா, வேண்டாமா?” என முடிவெடுக்க முடியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். வாழ்வதற்குத் தேவையான மன உறுதியை உங்கள் பத்திரிகை எனக்கு அளித்திருக்கிறது. சில வியாதிகள் மனதை ஒரேடியாக பாதித்து, வாழ்க்கையையே வெறுக்க செய்துவிடுகின்றன; உயிர் எனும் பரிசுக்குப் போற்றுதல் காட்டாதது போல் தோன்றும் நபர்களிடம்கூட கடவுள் அக்கறை காட்டுகிறார் என்பதைக் காண்பது நெகிழ வைக்கிறது.

ஈ. எஸ்., இத்தாலி (g02 6/8)

என் டாக்டருடன் இந்தக் கட்டுரைகளிலிருந்த தகவலை பகிர்ந்துகொண்டேன். அவை எந்தளவுக்கு எனக்கு உதவின என்பதை அவரிடம் சொன்னேன். கடவுளுடைய பார்வையில் மதிப்பு வாய்ந்தவளாக இருக்கிறேன் என மீண்டும் நம்பிக்கை அளிக்கப்பட்டதால்தான் வாழ வேண்டும் என்ற தூண்டுதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இது போன்ற நிறைய கட்டுரைகளை நீங்கள் வெளியிட வேண்டுமென்பதே எப்போதும் என பிரார்த்தனை!

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/8)

என்னை யாருமே புரிந்துகொள்ளவில்லை என நினைத்தேன், நான் இறந்துபோனால் எவ்வளவு எளிதாகிவிடும் என யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் இந்தக் கட்டுரைகளின் உதவியால் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயத்தை என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தது. இனி கனவிலும் சாக நினைக்க மாட்டேன்!

எம். எம்., ஜப்பான் (g02 6/8)

அடிக்கப்படும் பெண்கள் “அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு” (டிசம்பர் 8, 2001) என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. சிறுமியாக இருக்கையில் என் அப்பா நாள் தவறாமல் அம்மாவை அடிப்பதைப் பார்த்தேன். அதன் பின்னர் நானும் என் தங்கைகளும் அவருடைய தாக்குதலுக்கு பலியானோம். ஆண்வர்க்கத்தையே அடியோடு வெறுப்பவளாக நான் வளர்ந்தேன். காலப்போக்கில் யெகோவாவின் சாட்சிகளுடன் நாங்கள் பைபிள் படிக்க ஆரம்பித்தோம். தன் வழிகளை மாற்றிக்கொள்வது அப்பாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை; ஆனால் யெகோவாவின் அன்பான படைப்பை தவறாக நடத்தினால் அவரை சந்தோஷப்படுத்த முடியாது என்பதை அவரது உதவியோடு அப்பா உணர ஆரம்பித்தார். அவர் மெல்ல மெல்லத்தான் மாற்றம் செய்தார்; ஆனால் இப்போதோ என் அப்பா சாதுவான செம்மறியாடு. நெஞ்சார என்னால் அவரை நேசிக்க முடிகிறது.

ஜி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/8)