Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கங்காரு பாணி தாய் பராமரிப்பு”—உயிரை அச்சுறுத்தும் பிரச்சினைக்குத் தீர்வா?

“கங்காரு பாணி தாய் பராமரிப்பு”—உயிரை அச்சுறுத்தும் பிரச்சினைக்குத் தீர்வா?

“கங்காரு பாணி தாய் பராமரிப்பு”​—உயிரை அச்சுறுத்தும் பிரச்சினைக்குத் தீர்வா?

போகோடா மருத்துவமனை, கொலம்பியா, 1979. குறைமாத குழந்தைகள் உயிர்ப்பிழைக்கும் வீதம் வெகுவாக குறைந்து வந்ததால் கொலம்பியாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் விநோதமான தீர்வைக் கண்டுபிடித்தார். அதுதான் “கங்காரு பாணி தாய் பராமரிப்பு.”

குறைமாத சிசுக்களை உயிரோடு காப்பாற்றுவது டாக்டர்களுக்கு சவாலான பணி. குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் போதுமான எடையைப் பெறும் வரை கதகதப்பான சூழலில் இன்குபேட்டரில் வைக்கப்படுகின்றன. எனினும் வளரும் நாடுகளில் பெரும்பாலும், இடநெரிசல்மிக்க மருத்துவமனை, மோசமான சுகாதார வசதி, டாக்டர்களுக்கும் மருத்துவ கருவிகளுக்கும் பற்றாக்குறை ஆகியவை ஆபத்தான தொற்றுகள் பரவுவதில் விளைவடைந்திருக்கின்றன.

இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக தோன்றும் ஒரு முறையை கொலம்பியாவை சேர்ந்த டாக்டர் கண்டுபிடித்தார். அது என்ன? குறைமாத குழந்தை பிறக்கையில் அதன் நிலைமை சீரடையும் வரை அது முறைப்படி பராமரிக்கப்படுகிறது. இதற்கிடையில் பிள்ளை பராமரிப்பில் தாய்க்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தை போதுமானளவு ஆரோக்கியத்தைப் பெற்றவுடன் அந்தத் தாய் உயிருள்ள இன்குபேட்டர் ஆகிறாள். எப்படி? அவளுடைய அரவணைப்பில் குழந்தை இருக்கும்படி மார்புகளுக்கு இடையில் அதை நேராக வைத்து சுற்றிக் கட்டிவிடுகிறார்கள். பாதுகாப்பான கங்காருவின் பை போன்ற அமைப்பில் குழந்தை கதகதப்பாக இருப்பதோடு அது எளிதாக தன் தாயின் பாலைக் குடித்துக்கொள்கிறது. எனவே இந்த முறை, கங்காரு பாணி தாய் பராமரிப்பு என பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.

செலவுபிடித்த எந்த உபகரணமும் இதற்குத் தேவையில்லை. பொருத்தமான சட்டையை அல்லது இடுப்புப் பட்டை உள்ள சாதாரணமான ஆடையை தாய் அணிகிறாள். குழந்தை போதுமான எடையைப் பெற்றவுடன் தாயும் சேயும் வீடு திரும்பலாம்; பரிசோதனைக்காக மருத்துவமனைக்குத் தவறாமல் அவர்கள் வந்து போனால் போதும்.

கங்காரு பாணி தாய் பராமரிப்பு பலனும் பாதுகாப்பும் மிக்கதென ஆரம்ப பரிசோதனை காட்டுகிறது. மேலும், இது தாய்க்கும் சேய்க்கும் இடையில் பிணைப்பை நெருக்கமாக்குவதாகவும் தோன்றுகிறது. இந்த முறையை அநேக நாடுகள் பின்பற்றத் தொடங்கியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மெக்ஸிகோவில் தாய்க்கு முழுமையாக ஓய்வு தேவைப்படுகையில், அவளுக்கு உதவும் வகையில் “கங்காரு பாணி தகப்பன்மார்,” “கங்காரு பாணி பாட்டிமார்,” “கங்காரு பாணி சகோதரிகள்” என உறவினர்களும் இந்த விதமான பராமரிப்புக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். “நாங்கள் இந்த முறையை 1992 முதல் பின்பற்றி வந்திருக்கிறோம், இது அதிக பலனளிப்பதாக கண்டிருக்கிறோம். தேவையானதெல்லாம், வெகு சில இன்குபேட்டர்களும் மருத்துவமனையின் சொற்ப நேர கவனிப்புமே” என கங்காரு பாணி தாய் பராமரிப்பு திட்டத்தை நிர்வகிக்கும் டாக்டர் க்வாடாலூப்பி சான்டோஸ் விழித்தெழு!-விடம் சொன்னார். (g02 6/8)