Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகிப்பில்லாத ஒரு யுகத்தில் சகித்த ஒரு ராஜ்யம்

சகிப்பில்லாத ஒரு யுகத்தில் சகித்த ஒரு ராஜ்யம்

சகிப்பில்லாத ஒரு யுகத்தில் சகித்த ஒரு ராஜ்யம்

“எவராயினும் சரி, எந்தக் கட்டாயமுமின்றி தனக்குப் பிடித்த மதத்தை தழுவிக்கொள்ளலாம்; தன் மதத்தை பிரசங்கிப்பவர்களை ஆதரிக்கும் சுதந்திரமும் அவருக்கு உண்டு.”

அந்த வார்த்தைகள் எப்போது எழுதப்பட்டன என்று துணிந்து ஊகிக்க சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவை ஏதோ இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தின் அல்லது உரிமைகள் மசோதாவின் பாகம் என்று அநேகர் ஊகிப்பர்.

என்றாலும், 400 ஆண்டுகளுக்கும் முன்பே இவ்வாறு அறிவிக்கப்பட்டதை அறிய வருகையில் நீங்கள் ஆச்சரியப்படலாம்; அதுவும், சகிப்புத் தன்மை துளியும் இல்லாத கடலின் மத்தியில் சகிப்புத்தன்மை மிக்க ஒரு தீவைப் போல இருந்த ஒரு தேசத்தில் அவ்வாறு அறிவிக்கப்பட்டது. அந்த தேசம் எது? முதலில், இந்தப் பதிவின் பின்னணியை சற்று கவனியுங்கள்.

சகஜமான சகிப்பின்மை

இடைக்காலம் முழுவதும் மத சகிப்பின்மை எங்கும் காணப்பட்டது; 16-வது நூற்றாண்டில் அது தீவிரமடைந்தது. இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கோரமான, இரத்த வெள்ளம் கரைபுரண்ட போர்கள் நிகழ மதமே காரணமானது. 1520-⁠க்கும் ஏறத்தாழ 1565-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கத்திய கிறிஸ்தவமண்டலத்தில் சுமார் 3,000 பேர் மத பேதவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்டனர். மதிப்பீடுகளைப் பற்றியோ, கருத்துக்களைப் பற்றியோ​—குறிப்பாக மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்—​எப்படிப்பட்ட கேள்வியை எழுப்பினாலும் சரி, பெரும்பாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் அளவுக்கு சகிப்பின்மை கொடி கட்டிப் பறந்தது.

வெகு காலமாக சூடான விவாதத்திற்குள்ளாகி வந்த கத்தோலிக்க சர்ச் போதனைகளில் ஒன்று திரித்துவம்; இந்த கோட்பாட்டின்படி, மூன்று ஆட்களால் ஆனவரே கடவுள். சொல்லப்போனால், இது “இடைக்காலத்தில் கத்தோலிக்க இறையியலர்களின் மத்தியில், போப்புகளுக்கு மத்தியிலும்கூட பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது” என சரித்திராசிரியர் யர்ல் மார்ஸ் வில்பர் விளக்குகிறார். என்றாலும், இப்படிப்பட்ட விவாதம் அரிதாகவே பொது ஜனங்களை எட்டியது; ஏனெனில் அவர்கள் ஆதாரம் எதுவும் இன்றி, கண்ணை மூடிக்கொண்டு அப்படிப்பட்ட கொள்கைகளை “தெய்வீக ரகசியங்களாக” ஏற்றுக்கொள்ளும்படி எதிர்பார்க்கப்பட்டனர்.

இருந்தாலும், 16-வது நூற்றாண்டில் சிலர் பாரம்பரியம் என்னும் சங்கிலியை அறுத்துக்கொண்டு, அப்படிப்பட்ட ரகசியங்களை வேதாகமத்தின் வெளிச்சத்தில் பார்க்க முயன்றனர். அவர்களின் கொள்கை, ஸோலே ஸ்கிரிப்ச்சூரா (வேதாகமம் மட்டுமே) என்பது. திரித்துவ கோட்பாட்டை மறுத்தவர்கள்​—அவர்களில் சிலர் பின்னர் திரித்துவ ஆதரவாளரிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும் வகையில் ஒருத்துவ கோட்பாட்டாளர்கள் என அழைக்கப்பட்டனர்—​கத்தோலிக்கர்களாலும் புராட்டஸ்டன்ட்டினராலும் அடிக்கடி துன்புறுத்துதலுக்கு ஆளாயினர். அவர்கள் அச்சிட்ட புத்தகங்கள் பரவலாக வாசிக்கப்பட்டன; தங்கள் சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயர்களில் அவற்றை அச்சிட்டனர்; துன்புறுத்துதலைத் தவிர்க்க தலைமறைவாயினர். திரித்துவத்தை எதிர்த்தவர்களும் மத சகிப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். ஸ்பானிய இறையியலர் மீகெல் ஸெர்வேட்டோவைப் போன்ற சிலர், தங்கள் நம்பிக்கைக்காக உயிரையே துறந்தனர். a

சகிப்பால் விளைந்த ஒற்றுமை

மதப் போர்களில் ஈடுபடாமல் அல்லது முரண் கோட்பாட்டாளர்களை துன்புறுத்தாமல் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டது ஒரு நாடு. அந்நாடு டிரான்ஸில்வேனியா. அது சுயேச்சையான அரசாக அப்போது இயங்கி வந்தது; இப்போது கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ருமேனியாவின் பாகமாக உள்ளது. விதவையான டிரான்ஸில்வேனிய ராணி ஈஸாபெல்லா, “எல்லா மதப்பிரிவுகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று, மதப் போராட்டத்துக்கு விலகி இருக்க முயன்றார்” என ஹங்கேரிய சரித்திராசிரியர் காட்டாலீன் பேட்டர் விளக்குகிறார். 1544-⁠க்கும் 1574-⁠க்கும் இடையில், டிரான்ஸில்வேனிய நாடாளுமன்றம், அல்லது அரசவை, மத சுதந்திரத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் 22 சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தது.

உதாரணமாக, டார்டா அரசவைக்குப் பின்பு 1557-⁠ல், அரசி தன் மகனுடன் சேர்ந்து பின்வரும் இந்தச் சட்டத்தை இயற்றினார்: “ஒவ்வொருவரும் பழைய அல்லது புதிய ஆசாரங்களைப் பின்பற்றும் மதத்தை கடைப்பிடிக்க[லாம்], எவ்வளவு காலத்திற்காயினும் மத விஷயத்தில் அவர்கள் சொந்த கருத்துக்கு இசைய இஷ்டமானதை செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம்; ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் யாரும் எவருக்கும் தீங்கு செய்யக்கூடாது.” “மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்து முதன்முதல் சட்டம் இயற்றிய நாடு இதுவே” என இச்சட்டம் அழைக்கப்பட்டிருக்கிறது. 1559-⁠ல் நேரடி ஆட்சி செலுத்தியவரும், ஈஸாபெல்லாவின் மகனுமான இரண்டாம் ஜான் ஷிகிஸ்மன்ட் காலத்தில் மத சகிப்புத்தன்மை டிரான்ஸில்வேனியாவில் உச்சக்கட்டத்தை எட்டியது.

பொது விவாதம்

டிரான்ஸில்வேனியாவில், திரித்துவ கோட்பாட்டிற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு முக்கிய நபர், ஜோர்ஜோ பியான்ட்ராட்டா என்று அழைக்கப்பட்ட இத்தாலிய மருத்துவர். திரித்துவ கோட்பாட்டில் அவருக்கு இருந்துவந்த சந்தேகங்கள், அவர் இத்தாலியிலும் ஸ்விட்சர்லாந்திலும் காலத்தை செலவிட்டபோது அதிகரித்தன எனலாம்; அவ்விடங்களில் திரித்துவ கோட்பாட்டுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பின அநேக அகதிகள் அடைக்கலம் புகுந்திருந்தனர். போலந்துக்கு மாறிச் சென்றதும், போலிஷ் பிரதரன் என்று பின்னர் அழைக்கப்பட்ட மைனர் சர்ச்சின் வளர்ச்சியை ஆதரிக்க பியான்ட்ராட்டா பெருமுயற்சி செய்தார். b 1563-⁠ல், அவர் ஷிகிஸ்மன்ட்டின் மருத்துவராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டு, டிரான்ஸில்வேனியாவுக்கு மாறிச் சென்றார்.

டிரான்ஸில்வேனியாவில் திரித்துவத்துக்கு எதிராக குரல் எழுப்பிய மற்றொரு கல்விமான், ஃபிரான்ஸஸ் டேவிட். இவர் ரிஃபார்ம்ட் சர்ச்சின் கண்காணியும் அரசவை பிரசங்கியுமாவார். திரித்துவம் சம்பந்தப்பட்ட சிக்கலான போதனைகளைக் குறித்து அவர் எழுதியதாவது: “இவை இரட்சிப்புக்கு அத்தியாவசியம் என்றால், எந்தப் பாமர கிறிஸ்தவரும் இரட்சிக்கப்பட முடியாது; ஏனெனில் அவர் தன் வாழ்நாள் முழுவதிலும் இவற்றை புரிந்துகொள்ளவே முடியாது.” அத்துடன், டேவிட்டும் பியான்ட்ராட்டாவும் இணைந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்; அதில் ஸெர்வேட்டோ எழுதிய விஷயங்களில் சிலவும் அடங்கியிருந்தன; அவர்கள் இதை ஷிகிஸ்மன்ட்டுக்கு அர்ப்பணித்தனர்.

திரித்துவம் சம்பந்தப்பட்ட விவாதம் சூடுபிடித்தது; இவ்விஷயத்தின் பேரில் பொதுப்படையாக விவாதித்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. ஸோலே ஸ்கிரிப்ச்சூரா கொள்கைக்கு இசைவாக, இப்படிப்பட்ட விவாதங்கள் வேதப்பூர்வ அடிப்படையில் மட்டுமே இருக்கவும், தத்துவ அடிப்படையில் இல்லாதிருக்கவும் பியான்ட்ராட்டா கேட்டுக் கொண்டார். 1566-⁠ல் நடைபெற்று நிறைவு பெறாத ஒரு விவாதத்தைத் தொடர்ந்து, திரித்துவ கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் தங்கள் கருத்துக்களை பரப்புவதற்காக ஓர் அச்சு இயந்திரத்தை ஷிகிஸ்மன்ட் அவர்களுக்கு வழங்கினார்.

பியான்ட்ராட்டாவும் டேவிட்டும் தங்கள் வேலையில் மும்முரமாக இறங்கினர்; டெ ஃபால்ஸா யெட் வேரா யூன்யுயஸ் டெயீ பாட்ரிஸ், ஃபீல்யீ, யெட் ஸ்பீரிச்சுயஸ் ஸாங்க்டீ கோக்னிட்யோனீ (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஒருத்துவத்தைப் பற்றிய பொய் மற்றும் மெய் அறிவு) என்ற புத்தகத்தை வெளியிட்டனர். திரித்துவத்தை நம்ப மறுத்தவர்களைப் பற்றிய சரித்திர ஆய்வு ஒன்றும் இந்தப் புத்தகத்தில் இருந்தது. திரித்துவத்தைச் சித்தரிக்கும் சர்ச் ஓவியங்களை பரிகாசம் செய்யும் நோக்கத்துடன் வரையப்பட்ட படங்கள் ஓர் அதிகாரத்தில் காணப்பட்டன. இதைக் கண்ட எதிராளிகள் திடுக்கிட்டனர்; இதிலுள்ள படங்கள் அவமானப்படுத்துபவை என்று கூறி, புத்தகங்களின் எல்லா பிரதிகளையும் அழிக்க முயன்றனர். வாதத்துக்கிடமான அந்த பிரசுரத்தால் இதைப் பற்றிய பேச்சுக்களே எங்கும் பரவின. இதனால், ஷிகிஸ்மன்ட் இரண்டாவது விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

ஒருத்துவத்திற்கு வெற்றி

இந்த விவாதம், மார்ச் 3, 1568 அன்று காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தது. லத்தீன் மொழியில் நடைபெற்ற இது, பத்து நாட்களுக்கு நீடித்தது. திரித்துவ ஆதரவாளர்கள் சார்பாக பீட்டர் மேல்யுஸ் தலைமை தாங்கினார்; இவர் டிரான்ஸில்வேனிய ரிஃபார்ம்ட் சர்ச்சின் தலைவராவார். இவரும், திரித்துவத்தை ஆதரித்து வாதாடினவர்களும், விசுவாச பிரமாணங்களையும் சர்ச் ஃபாதர்கள் எழுதிய புத்தகங்களையும் ஆர்த்தடாக்ஸ் இறையியலையும் பைபிளையும் பயன்படுத்தினர். மறுபட்சத்தில், டேவிட் பைபிளை மட்டுமே ஆதாரமாக பயன்படுத்தினார். பிதாவே கடவுள் என்றும், குமாரனோ பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பவர் என்றும், பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய சக்தி என்றும் டேவிட் சுட்டிக்காண்பித்தார். மத விஷயங்களில் தீரா ஆர்வம் கொண்ட ஷிகிஸ்மன்ட், இந்த விவாதமே உண்மையை வெளிக் கொண்டுவர ஏற்றதோர் வழியென நம்பி இதில் பங்கேற்றார். இவ்வாறு அவரும் கலந்துகொண்டதால், விவாதம் கொஞ்சம் உணர்ச்சிப்பூர்வமாக சூடுபிடித்த போதிலும் தங்கு தடையின்றி தாராளமாகவும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும் நடந்தது.

திரித்துவ கோட்பாட்டை ஆதரிக்காதவர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அந்த விவாதம் கருதப்பட்டது. டேவிட்டுக்கு, அவர் சொந்த ஊரான கோலோஸ்வார் (தற்போது ருமேனியாவிலுள்ள க்ளுஜ்-நாப்போக்கா) என்ற நகரில் அமோக வரவேற்பு கிடைத்தது. அங்கு சென்றதும், சாலையோரத்திலிருந்த ஒரு பெரிய கற்பாறைமீது நின்றுகொண்டு, தன் நம்பிக்கையை உறுதியாக எடுத்துக்கூறி, அனைவரும் தன் போதனைகளை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு படிப்படியாக நியாயங்காட்டி அறிவுறுத்தினார் என்பதாக பாரம்பரியம் கூறுகிறது.

மதமாற்றமும் மரணமும்

முந்தைய விவாதங்கள், கல்விமான்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த லத்தீன் மொழியில் நடைபெற்றன. என்றாலும் தன் நம்பிக்கையை சாதாரண ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல டேவிட் விரும்பினார். ஆகவே ஷிகிஸ்மன்ட்டின் அனுமதியுடன், அக்டோபர் 20, 1569-⁠ல் நாஜ்வாராட் நகரில் (தற்போது ருமேனியாவிலுள்ள ஆரடியா) மற்றொரு விவாதம் ஹங்கேரிய மொழியில் நடைபெற்றது. மீண்டும், ஷிகிஸ்மன்ட் இரு தரப்பினருக்கும் இடையில் நடுவராக பணியாற்றினார்.

முந்தின இரவில், தன் உண்மை இயல்பை ஆண்டவர் தனக்கு வெளிப்படுத்தியிருந்ததாக திரித்துவ ஆதரவாளரான பீட்டர் மேல்யுஸ் அறிவித்தார். அதற்கு அரசர் மறுமொழியாக: “பாஸ்டர் பீட்டர், கடவுளுடைய குமாரன் தான் யாரென்று கடந்த இரவில் உங்களுக்கு கற்பித்தாரென்றால், அதற்கு முன்பு என்ன பிரசங்கித்து வந்தீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்? நிச்சயமாக இதுவரை ஜனங்களை தவறாகவே வழிநடத்தியிருக்கிறீர்கள்!” என்றார். மேல்யுஸ் டேவிட்டை சொல்லம்புகளால் தாக்கியபோது, திரித்துவ ஆதரவாளரான அவரை ஷிகிஸ்மன்ட் கடிந்துகொண்டு, “விசுவாசம் என்பது கடவுள் தரும் பரிசு” என்றும், “மனசாட்சியை எவரும் கட்டாயப்படுத்த முடியாது” என்றும் அவருக்கு நினைவூட்டினார். அந்த விவாதத்தை நிறைவு செய்யும் சொற்பொழிவில், அரசர் கூறினதாவது: “நம் ஆட்சியில் மனசாட்சிக்கான சுதந்திரம் இருக்க வேண்டுமென கோருகிறோம்.”

அந்த விவாதத்தைத் தொடர்ந்து, ஷிகிஸ்மன்ட்டும் அவருடைய அரசவையிலிருந்த பெரும்பாலோரும் ஒருத்துவ தரப்பினருக்கே ஆதரவு தெரிவித்தனர். 1571-⁠ல், அரசு சாசனம் ஒன்று இயற்றப்பட்டது; அதன்படி, ஒருத்துவ கோட்பாட்டை ஆதரிக்கும் யூனிட்டேரியன் சர்ச்சுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்கப்பட்டது. கத்தோலிக்கர், லூத்தரன்கள், கால்வினிஸ்ட்டுகள் ஆகியோருக்குச் சமமான அந்தஸ்தை ஒருத்துவ ஆதரவாளர்களுக்கும் வழங்கிய ஒரே அரசு, டிரான்ஸில்வேனியா ஆகும்; அதைப் போல திரித்துவ கோட்பாட்டுக்கு எதிரான ஒருத்துவ நம்பிக்கையை தழுவிய ஒரே அரசர் ஷிகிஸ்மன்ட் ஆவார். விசனகரமாக, அதற்கு சற்று பின்னர், அந்த 30 வயது அரசர், டேவிட்டுடனும் பியான்ட்ராட்டாவுடனும் வேட்டைக்குச் சென்றபோது காயமுற்றார்; சில மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து அரியணை ஏறியவர் ஸ்டெஃபான் பாடாரீ என்ற கத்தோலிக்கர்; இவர், அங்கீகாரம் பெற்றிருந்த மதங்களைப் பாதுகாக்கும் கட்டளையை உறுதிப்படுத்தினார்; ஆனால் புதிதாக புகுத்தப்படும் எந்த மாற்றத்தையும் சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். முதலில், தான் மக்களையே ஆளுவதாகவும் அவர்களின் மனசாட்சிகளை ஆளவில்லை எனவும் ஸ்டெஃபான் கூறினார். ஆனால் விரைவிலேயே மத நம்பிக்கைகளை பரப்புவதற்கு முக்கிய ஏதுவாக இருந்து வந்த புத்தகங்களை அச்சிடுவதற்கு தடை விதித்தார். டேவிட் தன் பதவியை இழந்தார்; ஒருத்துவ கோட்பாட்டு ஆதரவாளர்கள் பிறரும் அரசவையிலும் அரசியல் பதவியிலும் இருந்து நீக்கப்பட்டனர்.

கிறிஸ்துவை வணங்கக்கூடாது என்று டேவிட் போதிக்க ஆரம்பித்தபோது, பிரசங்க வேலையை நிறுத்தும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடையுத்தரவுக்கு மத்தியிலும், அவர் அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு முறை பிரசங்கித்தார். அவர் கைது செய்யப்பட்டு, மதத்தில் “புதுமையை புகுத்துதல்” என்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அரச சிறைக்கிடங்கில் 1579-⁠ல் அவர் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு, டேவிட் சிறை அறையின் சுவரில் இவ்வாறு எழுதினார்: “போப்புகளின் பலவந்தமோ வன்முறையோ . . . மரண அச்சுறுத்தலோ சத்தியத்தின் முன்னேற்றத்தை தடை செய்ய முடியாது. . . . என் மரணத்திற்குப் பிறகு பொய் தீர்க்கதரிசிகளின் போதனைகள் தரைமட்டமாகும் என்று நம்புகிறேன்.”

அரசரிடமிருந்து பாடம்

கல்வி, இசை, கலை ஆகியவற்றை அரசர் ஜான் ஷிகிஸ்மன்ட் முன்னேற்றுவித்தார். என்றாலும் அவருடைய வாழ்நாள் குறுகினதாய் இருந்தது, அவர் அடிக்கடி நோய்ப்பட்டார். அவருடைய ஆட்சியின்போது, உள்நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் எப்பொழுதும் அச்சுறுத்தல் இருந்து வந்தது. உள்நாட்டில் குறைந்த பட்சம் ஒன்பது தடவை அவருடைய உயிருக்கு குறி வைக்கப்பட்டது; அந்நிய நாடுகளோ அவருக்கு எதிராக கலகங்களைத் தூண்டிவிட்டன. எல்லாவற்றையும் சகித்துப்போன இந்த அரசர் அவருடைய மத கருத்துக்களின் அடிப்படையில் அடிக்கடி கடுமையாய் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். இந்த அரசர், “நிச்சயம் நரகத்துக்குத்தான் சென்றிருப்பார்” என ஒரு பகைவன் பின்னர் கூறினான்.

என்றாலும், சரித்திராசிரியரான வில்பர் காரியங்களை சரியாக நோக்குவதற்கு நமக்கு உதவுகிறார்: “சீர்திருத்த பிரிவுகளிலேயே மிக வன்மையாய் எதிர்க்கப்பட்ட பிரிவுக்கும்கூட ஜான் [ஷிகிஸ்மன்ட்] அரசர் முழு மத சுதந்திரம் அளித்து தன் கடைசி மசோதாவை இயற்றிய வருடத்தில், புராட்டஸ்டன்ட் இறையியலர்கள் ஸெர்வேட்டோவை உயிரோடு எரித்ததற்காக கால்வினை இன்னமும் புகழ்ந்து வந்தார்கள்; நெதர்லாந்தில் ஒடுக்குமுறை விசாரணையில் புராட்டஸ்டன்ட்டினர் கொன்று குவிக்கப்பட்டனர்; . . . தவறான மத கருத்துக்களை கடைப்பிடித்ததற்காக இங்கிலாந்தில் உயிரோடு ஆட்களை எரிக்கும் வழக்கத்தை ஒழித்துக்கட்ட இன்னும் 40 ஆண்டுகள் எடுத்தன.”

உண்மையில், “எந்த தராதரத்தை​—முக்கியமாக அவர் வாழ்ந்த காலத்து தராதரத்தை—​அடிப்படையாக வைத்து பார்க்கையிலும், ஜான் ஷிகிஸ்மன்ட் தலைசிறந்த ஓர் அரசர் என தெரிகிறது. . . . சகிப்புத்தன்மையை அவருடைய ஆட்சியின் முக்கிய அம்சமாக்கினார்” என ஒருவர் குறிப்பு தெரிவித்தார். அரசு கொழிக்க உதவுவது மத சமாதானமே என அவர் உணர்ந்ததால், மனசாட்சி சுதந்திரத்தையும் மத சுதந்திரத்தையும் பெரிதும் காத்துவந்த காவலர் ஆனார்.

தற்காலத்தில், மத சகிப்பின்மை இன்னமும் தன் கோர முகத்தைக் காட்டுகையில், நெடுநாளைக்கு முன்பு விளங்கிய அச்சிறிய ராஜ்யத்தில் நடந்தவற்றை சிந்தித்துப் பார்ப்பது நன்மை அளிக்கலாம். குறுகிய காலப்பகுதியில், சகிப்பில்லாத யுகத்தில் சகித்த ஒரு ராஜ்யமாக டிரான்ஸில்வேனியா விளங்கியது மறுக்க முடியாத உண்மையாகும். (g02 6/22)

[அடிக்குறிப்புகள்]

a ஆங்கில விழித்தெழு!, நவம்பர் 22, 1988, பக்கங்கள் 19-22-ஐக் காண்க.

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

“மனசாட்சியை எவரும் கட்டாயப்படுத்த முடியாது . . . நம் ஆட்சியில் மனசாட்சிக்கான சுதந்திரம் இருக்க வேண்டுமென கோருகிறோம்.”​—இரண்டாம் ஜான் ஷிகிஸ்மன்ட் அரசர்

[பக்கம் 1213-ன் படங்கள்]

ஜோர்ஜோ பியான்ட்ராட்டா

திரித்துவ ஆதரவாளர்களை திடுக்கிட வைத்த இரண்டு படங்கள் உட்பட பியான்ட்ராட்டாவும் டேவிட்டும் இணைந்து வெளியிட்ட புத்தகத்தின் பக்கங்கள்

டார்டா அரசவைக்கு முன்பு ஃபிரான்சஸ் டேவிட்

[படங்களுக்கான நன்றி]

திரித்துவத்தை சித்தரிக்கும் கோட்டு வரைபடங்கள் இரண்டு: © Cliché Bibliothèque nationale de France, Paris; மற்ற படங்கள் அனைத்தும்: Országos Széchényi Könyvtár

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 2 மற்றும் 14: Országos Széchényi Könyvtár