Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகிலேயே மிக நீளமான குகை பாதை

உலகிலேயே மிக நீளமான குகை பாதை

உலகிலேயே மிக நீளமான குகை பாதை

நார்வேயிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மலைகளையும், இரு மலைகளுக்கு இடையேயுள்ள குறுகலான கடல்களையும் பார்க்க வேண்டுமா? வாருங்கள் மேற்கு நார்வேக்கு! காணும் காட்சியில் உங்கள் உள்ளத்தைப் பறிகொடுப்பீர்கள்! அத்துடன் வளைந்து நெளிந்து செல்லும் குறுகலான சாலைகளும், பல குகை பாதைகளும் மனிதனின் அறிவுத் திறமைக்கு அத்தாட்சி அளிக்கின்றன. சமீபத்தில் ஒரு புதிய குகை பாதை கட்டி முடிக்கப்பட்டது; அது எந்தக் குகை பாதையையும் மிஞ்சி நிற்கும் எஞ்சினியரிங் சாதனை! அது லேர்டால் குகை பாதை; உலகிலேயே மிக நீளமான குகை பாதை​—உறுதியான பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 24.5 கிலோமீட்டர் தூர குகை நெடுஞ்சாலை! வாகனமொன்றில் இந்த குகை பாதையின் வாயிலில் நுழைவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்; சில நிமிட தூரத்தைக் கடந்த பின், உங்கள் தலைக்கு மேல் 1,000 மீட்டருக்கும் அதிக உயரத்திற்கு மலை இருக்கிறது!

இப்படிப்பட்ட நீளமான குகை பாதை ஏன் தேவைப்பட்டது? நார்வேயின் இரண்டு பெரிய நகரங்களான ஆஸ்லோவையும் (தலைநகர், கிழக்கில் அமைந்துள்ளது), பெர்கனையும் (மேற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது) இணைக்கும் சாலையில் இது முக்கிய பகுதியாகும். இவ்விரண்டு நகரங்களுக்கும் இடையே அமைந்துள்ள மற்ற மலைப் பாதைகள் குளிர்காலப் பனியாலும் காற்றாலும் பயணத்தை கடினமாக்குகின்றன. ஆகவே ஒரு புதிய மார்க்கத்தை, மோசமான வானிலையிலும் சிரமமின்றி பயணிக்க முடிந்த ஒரு மார்க்கத்தை அமைப்பது மிகவும் அவசியமாக இருந்தது. இந்தப் புதிய நெடுஞ்சாலையில் ஆர்லாண்டு, லேர்டால் என்ற சிறிய மாவட்டங்களுக்கு இடையே ஒரு குகை பாதையை அமைக்கவும் 1992-⁠ல் நார்வே நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது. ஐந்தாண்டு கால கட்டுமான பணிக்குப் பிறகு, இந்தக் குகை பாதை நவம்பர் 2000-⁠ல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த எஞ்சினியரிங் சாதனை படைக்கப்பட்டது எவ்வாறு? இந்த குகை பாதை எந்தளவுக்கு பாதுகாப்பானது? இதன் வழியே வாகனத்தை ஓட்டிச் செல்வது எப்படி இருக்கும்? நாம் கண்டறிவோம்.

கட்டுவதில் சிக்கல்கள்

லேர்டால்லையும் ஆர்லாண்ட்டையும் இந்த குகை பாதை இணைக்கிறது; ஆனால் இப்பாதையை அமைத்த பணியாளர்கள் மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வேலையை ஆரம்பித்தனர். இரண்டு முனைகளிலிருந்து இரண்டு குழுக்கள் வேலையை தொடங்கின; அதே சமயத்தில் மூன்றாவது குழு ஒன்று, லேர்டால் முனையிலிருந்து 6.5 கிலோமீட்டர் தூரத்தில் மெயின் குகை பாதையை சந்திக்குமாறு காற்றோட்ட குகை பாதையின் வேலையை தொடங்கியது; அப்பாதையின் நீளம் 2 கிலோமீட்டர். மலையின் உட்புறத்தில் ஒன்றையொன்று சந்திக்கும் நம்பிக்கையில் இந்த மூன்று குழுக்களும் எவ்வாறு ஒத்திசைந்து மலையைக் குடைவதில் செயல்பட முடிந்தது? ஒவ்வொரு குழுவும் பணியைத் தொடங்குவதற்கான சரியான இடத்தைக் கண்டுபிடிக்க, சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்பட்டது; குடைய வேண்டிய திசையைக் காட்ட லேசர் கதிர்கள் வழிகாட்டியாய் செயல்பட்டன. இயந்திரம் துளையிட்டு முன்னேறியபோது வெடிமருந்து வைப்பதற்காக போடப்படும் துளைகள் துல்லியமான இடங்களில் இருக்கும் வகையில் அதை இந்த லேசர் கதிர்கள் கட்டுப்படுத்தின.

ஒவ்வொரு வெடிப்புக்கும் சுமார் 100 துளைகள் போட வேண்டியிருந்தன; ஒவ்வொன்றும் 5.2 மீட்டர் ஆழமானவை. இத்துளைகளில் சுமார் 500 கிலோகிராம் வெடிமருந்து திணிக்கப்பட்டது; இதனால் சுமார் 500 கன மீட்டர் பாறைத் துண்டுகள் வெடித்துச் சிதறின. இவ்வாறு சிதறிய துண்டுகள் டிரக்குகளில் அப்புறப்படுத்தப்பட்டன. மறுபடியும் துளையிடும் வேலையை துவங்குவதற்கு முன்பு, குகையின் சுவர்களையும் கூரையையும் வலுப்படுத்த வேண்டியிருந்தது. இதற்கென நீண்ட ஸ்டீல் போல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டன; கூரையின் மேற்பரப்புகள் ஷாட்கிரீட் முறையில், அதாவது ஃபைபரால் வலுவூட்டப்பட்ட காங்க்ரீட்டால் ஸ்பிரே செய்யப்பட்டன. ஒவ்வொரு குழுவும் வாரத்திற்கு சுமார் 60, 70 மீட்டர் தூரம் முன்னேறிச் சென்றது. செப்டம்பர் 1999-⁠ல், மெயின் குகை பாதையை தடுத்த கடைசி பாறை தகர்க்கப்பட்டு, குழுக்கள் இரண்டும் ஒன்றையொன்று சந்தித்தன; குடைந்து சென்றதில் இரண்டு குழுக்களுக்கும் இடையில் இருந்த வித்தியாசம் சுமார் 50 சென்டிமீட்டர்தான்! பதினான்கு மாதங்களுக்குப் பின்னர் திட்டமிட்டபடியே குகை பாதைக்கு திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில், இதற்கு ஆகியிருந்த செலவு 576 கோடி ரூபாயாகும்.

காற்றோட்ட வசதி எப்படி?

சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும்படி செய்வதே குகை பாதை எஞ்சினியர்களுக்கு எப்பொழுதும் இருந்து வரும் சவாலாகும். லேர்டால் குகை பாதையில் கிட்டத்தட்ட 20 நிமிடம் பயணிக்க வேண்டியிருப்பதால், சுவாசிப்பதற்குப் போதுமான சுத்தமுள்ள காற்று மிகவும் முக்கியம். இதற்கு என்ன செய்தார்கள்?

லேர்டால் நுழைவாயிலில் இருந்து 6.5 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும், 2 கிலோமீட்டர் நீளமுள்ள காற்றோட்ட குகை பாதை, பக்கத்திலிருக்கும் பள்ளத்தாக்கு வரை செல்கிறது; அது புகைப்போக்கியைப் போல், அதாவது, அசுத்தக் காற்றை வெளியேற்றும் வழியைப் போல் செயல்படுகிறது. சுத்தமான காற்று குகை பாதையின் இரண்டு நுழைவாயில்களிலிருந்தும் உள்ளிழுக்கப்பட்டு, மாசுபட்ட காற்று காற்றோட்ட குகை பாதையின் வழியாக வெளியேற்றப்படுகிறது. காற்று அதிகம் மாசடைகையில், அந்தக் காற்றை அதிகளவில் வெளியேற்றுவதற்கு காற்றோட்ட குகை பாதையில் பொருத்தப்பட்டுள்ள சக்திவாய்ந்த இரு காற்றாடிகளை​—இவ்விரண்டின் ஒட்டுமொத்த அதிகபட்ச திறன் மணிக்கு 17 லட்சம் கன மீட்டர்​—பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அமைப்பினால் போதியளவு சுத்தமான காற்று லேர்டால் நுழைவாயில் பக்கத்தில் கிடைக்கிறது; ஆனாலும் ஆர்லாண்ட் நுழைவாயில் பக்கம் இன்னும் ஏதாவது வசதி செய்யப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அது நீளமானது. ஆகவே காற்றோட்ட குகை பாதையை நோக்கி செல்லும் காற்றின் அளவை அதிகரிக்க மெயின் குகை பாதையின் கூரையில் 32 சிறிய, உந்தும் காற்றாடிகள் பொருத்தப்பட்டன. என்றாலும், ஆர்லாண்ட் பக்கத்திலிருந்து காற்றோட்ட குகை பாதையின் முகப்புக்கு அதிக தூரத்தைக் கடக்க வேண்டியிருப்பதால் அதற்குள் இந்தக் காற்று இன்னும் மாசுபடுகிறது. இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?

100 மீட்டர் நீளத்தில் மெயின் குகை பாதைக்கு இணையான மற்றொரு குகை பாதையை ஆர்லாண்ட் நுழைவாயிலில் இருந்து 9.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைத்து, அதில் காற்றை சுத்தப்படுத்தும் ஓர் எந்திரத்தை நிறுவுவதன் மூலம் தீர்வு கண்டனர். இதன் இரண்டு நுழைவாயில்களும் மெயின் குகை பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெயின் குகை பாதையிலுள்ள காற்று இந்த இணை குகை பாதைக்குள் திருப்பி விடப்படுகிறது; அங்கே அதிலுள்ள 90 சதவிகித தூசியும் நைட்ரஜன் டையாக்ஸைடும் வடிகட்டப்பட்டு அது சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த காற்றோட்ட அமைப்பினாலும் சுத்தப்படுத்தும் முறையாலும், லேர்டால் குகை பாதையில் அதிகபட்சமாக மணிக்கு 400 கார்கள் வரை திருப்திகரமாக பயணிக்கலாம். குகை பாதையில் வைக்கப்பட்டிருக்கும் சென்ஸார்கள் காற்றின் தரத்தை கண்காணித்து, காற்றோட்ட அமைப்பு செயல்படும் விதத்தை ஒழுங்குபடுத்துகின்றன. மாசுபடும் அளவு மிக அதிகமாகிவிட்டால் இந்தக் குகை பாதையில் போக்குவரத்து நிறுத்தப்படும்; ஆனால் இதுவரை இவ்வாறு நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

எந்தளவு பாதுகாப்பானது?

குகை பாதையில் பயணிக்க சிலருக்கு பயம். இந்தப் பயத்துடன், ஐரோப்பிய குகை பாதைகள் பலவற்றில் சமீபத்தில் நடந்த சாலை விபத்துக்களும், தீ விபத்துக்களும் சேர்ந்து, லேர்டால் குகை பாதையில் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வைத்துள்ளன. இதற்காக குகையில் என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

லேர்டாலில் ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ளது; இது குகை பாதையிலுள்ள ஒவ்வொரு பாதுகாப்பு அமைப்புகளையும் தொடர்ந்து கண்காணிக்கிறது; பாதுகாப்பு அமைப்பில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் பட்சத்தில், குகை பாதை மூடப்படும். குகை பாதையை விரைவில் மூடி, அதில் பயணிக்கும் ஆட்களை வேகவேகமாய் வெளியேற்றுவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்திலும் அவசர தொலைபேசிகளும், ஒவ்வொரு 125 மீட்டர் தூரத்திலும் இரண்டு தீயணைப்பு சிலிண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் எவ்விடத்திலிருந்தாவது தீயணைப்பு சிலிண்டர் எடுக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தை இந்தக் கட்டுப்பாட்டு மையம் தானாகவே குறித்துக் கொள்கிறது. அவ்வாறு ஒரு சிலிண்டர் எடுக்கப்பட்டால், குகை பாதைக்குள் நுழைய வேண்டாமென ஓட்டுநர்களை எச்சரிக்கும் சிவப்பு விளக்குகள் எரியும்; குகை பாதையின் உள்ளே பயணிக்கும் வாகனங்கள் ஆபத்துக்குத் தப்பி பாதுகாப்பான திசையில் வெளியேறும்படி சமிக்கைகளும் எச்சரிக்கை விளக்குகளும் ஓட்டுநர்களை அறிவுறுத்தும். ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை எளிதில் திருப்ப முடியும்; ஏனெனில் கார்களைத் திருப்புவதற்கு வசதியான அமைப்புகள் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன; அதே போன்று பெரிய வாகனங்களைத் திருப்புவதற்கு வசதியான அமைப்புகள் 15 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரேடியோ ஆன்டெனா அமைப்பும் இந்த குகை பாதையில் உள்ளது; இதனால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களிலுள்ள ரேடியோவிலேயே எச்சரிக்கை அறிவிப்புகளை கேட்க முடியும். குகை பாதைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் கண்காணிப்பதற்கு எண்ணிக்கை மற்றும் புகைப்பட அமைப்புகள் உள்ளன. இந்த குகை பாதையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன் ஒப்பிடுகையில், சாலை அதிகாரிகள் இதை மிகவும் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

இதில் என்ன வேறுபாடு?

இந்த குகை பாதையில் வாகனத்தை ஓட்டிச் செல்வது எப்படி இருக்கும்? ஓட்டுநர்கள் பாதுகாப்பாக உணருவதற்கும் அதே சமயத்தில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கும் ஏற்றவாறு, இந்த குகை பாதையில் பயணிப்பதை ஓர் இன்ப அனுபவமாக்குவதே எஞ்சினியர்களின் முக்கிய நோக்கமாய் இருந்தது. இதை பூர்த்தி செய்வதற்கு, ஓர் ஆய்வு மையத்திலுள்ள போக்குவரத்து உளவியல் நிபுணர்களும், தொழில்முறை லைட் டிசைனர்களும், ஒரு டிரைவிங் சிமுலேட்டரும் உட்பட இன்னும் பிறரின் உதவியால் குகை பாதையின் உட்புறம் வடிவமைக்கப்பட்டது.

இதன் பலன்? இந்த குகை பாதை நேர்பாதையாகவே நெடுகிலும் இல்லை. சில இடங்களில் சற்று வளைந்தும் செல்கிறது. இது ஓட்டுநர்கள் உறங்கிவிடாமல் இருக்கச் செய்கிறது; ஆனாலும் அவர்கள் 1,000 மீட்டர் தூரம் வரை முன்னால் காண முடியும். எதிரில் வரும் போக்குவரத்தின் தூரத்தை கணக்கிடுவதையும் இந்த வளைவுகள் எளிதாக்குகின்றன. பெரிய குகை போன்ற மூன்று மவுண்டன் ஹால்கள் அமைக்கப்பட்டுள்ளன; இவை பயணம் சலிப்புத் தட்டாமல் இருக்க உதவும். இதனால் அதிக தூரமுள்ள ஒரே குகை பாதையில் பயணிக்கும் உணர்வின்றி, தூரம் குறைந்த நான்கு குகை பாதைகளின் வழியாக பயணிப்பதைப் போன்ற மாய தோற்றத்தைக் கொடுக்கும். இந்த ஹால்களில் விசேஷ லைட்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது; தரையில் மஞ்சள் அல்லது பச்சை விளக்குகள்; மேலே ஊதா விளக்குகள்; இவை பகல் வெளிச்சம் போலவும், சூரியன் உதிக்கும்போது வரும் வெளிச்சம் போலவும் மாய தோற்றத்தைக் கொடுக்கும். இந்த வண்ண விளக்குகளுடன், குகை பாதை நெடுகிலும் போதுமான விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால், இவை அநேக ஓட்டுநர்களை சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்கின்றன.

இப்போது, உலகிலேயே மிக நீளமான குகை பாதையின் வழியே செல்லும் வினோத அனுபவத்தை பயணிகள் அனுபவிக்க முடியும். நவீன எஞ்சினியரிங்கின் இந்த சாதனையால், நார்வேயின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நம்பகமான இணைப்பு ஏற்பட்டுள்ளது. மனிதன் தன் திறமையையும் புத்திக்கூர்மையையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துகையில் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு இது பலமான அத்தாட்சியாகும். (g02 7/8)

[பக்கம் 27-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

குகை பாதை

லேர்டால் ← → ஆர்லாண்ட்

[பக்கம் 27-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

லேர்டால் குகை பாதை

குகை நெடுஞ்சாலை

↑ லேர்டாலுக்கு

→ E16-⁠ல் இருந்து ஆஸ்லோவுக்கு

*இந்த இடங்களில் உந்தும் காற்றாடிகள் உள்ளன

காற்றோட்ட திசை

மவுண்டன் ஹால்

காற்றாடி நிலையம் → காற்றோட்ட குகை பாதை

*

மவுண்டன் ஹால்

*

காற்று சுத்திகரிப்பு எந்திரம்

*

மவுண்டன் ஹால்

*

*

காற்றோட்ட திசை

ஆர்லாண்ட்

↓ E16-⁠ல் இருந்து பெர்கனுக்கு

1 மைல்

1 கிலோமீட்டர்

[படத்திற்கான நன்றி]

Statens vegvesen, Sogn og Fjordane

[பக்கம் 26-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நார்வே

லேர்டால் குகை பாதை

பெர்கென் E16 ஆஸ்லோ

[பக்கம் 27-ன் படம்]

லேர்டால் நுழைவாயில்

[பக்கம் 27-ன் படம்]

காற்றை சுத்தமாக்கும் எந்திரத்தின் திட்ட வரைபடம்

[பக்கம் 27-ன் படம்]

சுவர்களையும் கூரையையும் பாதுகாக்கும் ஸ்டீல் போல்ட்டுகளைக் காட்டும் குகை பாதையின் குறுக்குவெட்டுத் தோற்றம்

[பக்கம் 28-ன் படம்]

சுமார் 100 அவசர தொலைபேசிகளும் கிட்டத்தட்ட 400 தீயணைப்பு சிலிண்டர்களும் குகையில் பொருத்தப்பட்டுள்ளன

[பக்கம் 28-ன் படக்குறிப்பு]

வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட மூன்று மவுண்டன் ஹால்கள் உள்ளன

[பக்கம் 26-ன் படங்களுக்கான நன்றி]

வானிலிருந்து காட்சி: Foto: Leiv Bergum; காற்றை சுத்தமாக்கும் எந்திரம்: ViaNova A/S; பக்கங்கள் 26-8-⁠ல் காணப்படும் மற்ற அனைத்து போட்டோக்களும்: Statens vegvesen, Sogn og Fjordane