Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பறவைகளுக்கு “மிட்டாய்”

‘பிரேஸில் நாட்டில் காணப்படும் ஒரு தாவரம், மகரந்தச் சேர்க்கையை துரிதப்படுத்துவதற்கு இதுவரை அறியப்படாத ஒரு புதிய உத்தியைக் கையாளுகிறது’ என ஜெர்மானிய பத்திரிகை கேயோ அறிக்கை செய்கிறது. கம்பிரேட்டம் லான்ஸியோலேட்டம் என்ற தாவரம், தன் விருந்தாளிகளுக்கு தேனமுத பானத்தை கொடுப்பதற்கு பதில், ‘மிட்டாய்களை’ அள்ளி தருகிறது. இரவுநேரத்தில், இந்தப் புதர்ச்செடியின் பூக்கள் இனிப்பான ஜெல்லியை உற்பத்தி செய்கின்றன; அவை சுமார் 6 மில்லிமீட்டர் விட்டமுள்ள வில்லைகளாக கெட்டியாகின்றன. குளுக்கோஸும் ஃபிரக்டோஸும் இந்த ஜெல்லிக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன; இதை சுவைக்கையில், கடையில் கிடைக்கும் ஒருவித ஜெல்லியாகிய “ஜெல்லி பேபீஸ் போல” இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். “சூரியன் உதிக்கையில் இந்தப் பூக்கள் இதழ் விரிக்கின்றன; பளபளப்பாக, கண்ணாடி போல் காட்சியளிக்கும் இந்த ஜெல்லி மிட்டாய்கள் பார்ப்பதற்கு ஒரு ட்ரேயில் அழகாக வைக்கப்பட்டிருப்பதைப் போன்று உள்ளன” என்பதாக அந்த அறிக்கை விளக்குகிறது. இந்த மலர்கள் தரும் அமிர்தம், குறைந்தபட்சம் “எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 28 பறவையினங்களை” சுண்டி இழுக்கிறது. உணவு தேடி செடிக்குச் செடி பறக்கும் இந்தப் பறவைகளின் உடலெங்கும் மகரந்தத்தூள்கள் ஒட்டிக்கொள்ள, இத்தாவரத்தின் மகரந்தச் சேர்க்கை துரிதமாய் நடைபெறுகிறது. (g02 7/8)

பறவைகள் V-வடிவில் பறப்பதேன்

வாத்துக்கள் (geese), நாரைகள் (pelicans) போன்ற பறவைகள் “நீண்ட தூர இடப்பெயர்ச்சி செய்கையில் இழுவையைக் குறைக்கவும் சக்தியை சேமிக்கவுமே V-வடிவில் பறப்பதாக” ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என நேச்சர் பத்திரிகையில் வந்த அறிக்கையை விமர்சிக்கையில் லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாள் கூறுகிறது. பிரான்ஸில், வீல்யே ஆங் ப்வா நகரிலுள்ள தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்; V-வடிவில் பறக்கும் எட்டு நாரைகளின் இதயத்துடிப்பை பதிவு செய்தனர், பின்னர் இந்த எண்ணிக்கையை அவை “இறக்கை அடிப்பது, பறக்கும் விதம் ஆகியவற்றுடன்” ஒப்பிட்டனர். V-வடிவில் பறக்கையில், இந்தப் பறவைகளின் இதயத்துடிப்பு வீதம் குறைந்திருந்தது எனவும், வேகத்தில் மாற்றம் இல்லையென்றாலும் தனியாக பறக்கும்போது இறக்கைகளை அடிப்பதைவிட குறைவான தடவையே அடித்ததாகவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். “V-வடிவில் பறக்கும் பறவைகளில் ஒரு பறவை இறக்கைகளை கீழ்நோக்கி அடிக்கையில் ஏற்படும் காற்றின் உதவியால் அடுத்த பறவையின் இறக்கைகள் மேலே எழுகின்றன; இவ்வாறு அடுத்தடுத்த பறவைகள் ஒன்றுக்கொன்று பறக்க உதவுகின்றன” என நேச்சர் பத்திரிகை கூறுகிறது. இந்த உத்தியால் பெரிய வெள்ளை நாரைகள், தனியே பறக்கும்போது செலவிடும் சக்தியில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகத்தை சேமிக்கின்றன. (g02 7/8)

பிரான்ஸில் பைபிள் வாசிப்பு

பிரெஞ்சு நாட்டினரை வைத்து நடத்தப்பட்ட சுற்றாய்வில் 42 சதவீதத்தினரிடம் பைபிள் இருந்தபோதிலும், சுமார் 2 சதவீதத்தினர் மட்டுமே கிட்டத்தட்ட தினமும் அதை வாசிப்பதாக லா க்ரவா என்ற கத்தோலிக்க செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. “பைபிளை வாசித்ததே இல்லை” என்பதாக எழுபத்திரண்டு சதவீதத்தினர் கூறுகின்றனர். சுற்றாய்வு செய்யப்பட்டவர்களில் 54 சதவீதத்தினர், பைபிள் “இக்காலத்துக்கு ஒத்துவராத, காலாவதியான புத்தகம்” என கருதினர். “பிரெஞ்சு மக்கள் பைபிளை முதலில் கலாச்சார கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்”; “யூத மதமும் கிறிஸ்தவ மதமும் தோன்றிய” விதத்தைத் தெரிந்துகொள்ளவே பைபிளை ஆய்கின்றனர் என அந்த அறிக்கை விவரிக்கிறது. “ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2,50,000 பைபிள்களும் 30,000 புதிய ஏற்பாடுகளும் பிரான்ஸில் விற்பனையாகின்றன” என லா க்ரவா குறிப்பிடுகிறது. (g02 7/8)

எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணி

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் என்றாலே, (8,850 மீட்டர்) அழகு குலையாத கம்பீரமான மலையின் காட்சியே பொதுவாக மனதுக்கு வரும். ஆனால், குப்பைக்கூளம் நிரம்பி வழியும் மாபெரும் “குப்பைத் தொட்டியாக” எவரெஸ்ட் சிகரம் மாறிவிட்டதாக புது டெல்லியில் வெளியாகும் டௌன் டு எர்த் பத்திரிகையில் வந்த ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளாக எவரெஸ்ட்டின் மீதேறுகிற நூற்றுக்கணக்கானவர்கள், “காலியான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பழைய ஏணிகள் அல்லது கம்பங்கள், பிளாஸ்டிக் கம்புகள்” உட்பட பல பொருட்களை டன் கணக்கில் எறிந்துவிட்டு வந்திருக்கின்றனர். குப்பைக்கூளம் எக்கச்சக்கமாக காணப்படும் கேம்ப், “சௌத் கோல் கேம்ப் ஆகும்; இங்கிருந்துதான் பெரும்பாலானோர் சிகரத்தின் உச்சிக்கு இறுதிப்பயணம் மேற்கொள்வர்” என்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. “சேகரிக்கும் குப்பைக்கூளங்களுக்காக [ஷெர்பாக்களுக்கு] ஒரு கிலோவுக்கு [2.2 பவுண்டுக்கு] 13.50 ஐ.மா. டாலர் வீதம் சம்பளம் கொடுக்க திட்டமிட்டு வருகிறோம்” என்பதாக நேப்பாள மலையேறும் கழக அதிகாரியான பூமி லால் லாமா கூறினார். இந்த ஷெர்பாக்கள் எவரெஸ்ட் மீது ஏறும் “மக்களுக்கு பொதுவாக வழிகாட்டிகளாக செயல்படுகிறார்கள்; அவர்களுக்காக பொருட்களை சுமந்து செல்கிறார்கள்” என அந்த அறிக்கை கூறுகிறது. (g02 7/8)

வினையில் முடிந்த “மந்திர சக்தி”

“கானாவைச் சேர்ந்த ஒருவரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரே சுட்டுக் கொன்றார்; உடலை குண்டு துளைக்க முடியாததாக மாற்றுவதற்கான மந்திர சக்தி பலிக்கிறதா என தன்னை வைத்தே பரிசோதித்துப் பார்க்க நினைத்ததால் வந்த வினை இது” என ராய்ட்டர்ஸ் நியூஸ் சர்வீஸ் அறிக்கை செய்கிறது. வடகிழக்கு கானாவிலுள்ள கிராமத்தார் பலர் பில்லிசூனிய வைத்தியர் ஒருவரை அணுகி, குண்டுகள் துளைக்காதவாறு தங்கள் உடலை மாற்றுவதற்கு ஏதாவது செய்யும்படி கேட்டனர். அவர்களில் ஒருவரான அந்த பலியானவர், “இரண்டு வாரங்களுக்கு தினந்தோறும் மூலிகைக் கலவையை தன் உடலில் பூசிக்கொண்ட பிறகு, அந்த மந்திர சக்தி பலிக்கிறதா என பரிசோதிப்பதற்கு தன்னை சுடும்படி அனுமதித்தார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் ஒரே குண்டில் அந்த இடத்திலேயே அவர் பலியானார். அதன்பிறகு, மந்திர சக்தி பலிக்காததைக் கண்ட அந்தக் கிராமத்தார் கோபத்தில் வெகுண்டெழுந்து, அந்த சூனிய வைத்தியரை பிடித்து செமத்தையாக அடித்தனர். தங்களுக்குப் போட்டியாக இருக்கும் பிற பழங்குடிகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக கானாவின் வடகோடியில் வசிக்கும் மக்கள் பொதுவாக பில்லிசூனிய வைத்தியர்களை நாடுகின்றனர். (g02 7/8)