Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

அடிக்கப்படும் பெண்கள் “அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு” (டிசம்பர் 8, 2001) என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகளுக்கு என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. வீட்டில் வன்முறைக்கு பலியானவள் நான்; எனக்கு நேர்ந்தவற்றை ஒருவழியாக அதிகாரிகளிடம் புகார் செய்ய முடிந்தபோதிலும், என் துயரத்தை, வேதனையை, ஆறுதல் தேடியும் கிடைக்காமல் தவித்த தவிப்பை எவராலும் புரிந்துகொள்ள முடியாது என்றே நினைத்து வந்தேன். இந்தக் கட்டுரைகளோ என் உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன.

என். எல்., இத்தாலி (g02 6/22)

கவரைப் பிரித்து பத்திரிகையின் அட்டையைப் பார்த்தவுடனே, என் கண்கள் குளமாயின. பிரித்த கையோடு அப்பத்திரிகையை மடித்து வைத்துவிட்டேன்; ஏனென்றால் என் கடந்தகால வாழ்க்கையின் ஒரு பகுதியை பற்றியே அது பேசியது; அது எனக்கு சம்பவிக்காததுபோல் காட்டிக்கொள்ள விரும்பினேன். அப்பத்திரிகையை திரும்பவும் கையிலெடுக்க தைரியம் கேட்டு ஜெபித்தேன். நான் அவ்வாறு செய்தது எவ்வளவு நல்லதாகிவிட்டது! நான் மட்டுமே அப்படியெல்லாம் கஷ்டப்படவில்லை என்று புரிந்துகொள்ள இந்தத் தொடர் கட்டுரைகள் எனக்கு உதவின. “துணைவியை அடிப்பது கடவுள் பார்வையில் பொல்லாத பாவமாகும்” என்ற வார்த்தைகள் என் கண்களில் பட்டவுடன், அது காயத்துக்கு மருந்து போட்டது போல இருந்தது. நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் இப்படிப்பட்ட ஆறுதலளிக்கும் கட்டுரைகளுக்கு நன்றி.

டி.ஜி.எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/22)

அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்களைப் போலவே நானும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். என் கணவரின் குடிப்பழக்கமும், அவர் வளர்ந்த சூழ்நிலையுமே இதற்குக் காரணம் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். அவை ஓரளவு காரணமானாலும் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டபோது ஆறுதல் அடைந்தேன். என் கணவர் பைபிளை வாசித்து எப்படியாவது யெகோவாவின் அன்பை அறிந்துகொள்ள வேண்டுமென்றே நெஞ்சார விரும்புகிறேன்.

எஸ். ஐ., ஜப்பான் (g02 6/22)

நான் அடிக்கப்படும் மனைவியாக இருப்பதால், இந்த தொடர் கட்டுரைகள் என்மீது விசேஷ தாக்கத்தை ஏற்படுத்தின. நான் ரோக்ஸானாவாக இருப்பதைப் போலவே உணர்ந்தேன். அடிக்கப்படும் மனைவி உணரும் விதம் மற்றவர்களுக்கும் தெரிவதை அறிந்தபோது அது மிகவும் தெம்பளித்தது. என் கணவரின் மனப்பான்மைக்காக என் மீது பழிசுமத்த முடியாது என்பதை இந்தக் கட்டுரைகளிலிருந்து கற்றுக்கொண்டேன். என் கணவரின் பார்வைக்கு நான் சல்லிக்காசு பெறாதவளாக, ஒன்றுக்கும் உதவாதவளாக தோன்றினாலும், கடவுளுக்கு நான் அருமையானவள் என்பதை புரிந்துகொள்ளவும் அவை எனக்கு உதவின. இப்படிப்பட்ட பயனுள்ள கட்டுரையை பிரசுரிப்பதற்காக நன்றி. இது செல்வத்தைவிட மிகச் சிறந்தது!

பி. எல்., பிலிப்பீன்ஸ் (g02 6/22)

வெளியில் சொல்ல முடியாமல் நான் பட்ட எல்லா வேதனைகளையும் அனுபவித்த விரக்தியையும் எழுத்தில் வடித்துவிட்டீர்கள். இந்த பிரச்சினையால் ஏற்படும் மன, உணர்ச்சி சம்பந்தப்பட்ட அழுத்தத்தை யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதைக் காண இத்தொடர் கட்டுரைகள் எனக்கு உதவின. தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை தயவுசெய்து பிரசுரியுங்கள்; ஏனெனில் இந்தப் பிரச்சினையைப் பற்றி மற்றவர்களும் அறிய வேண்டும், அவர்களும் இக்கஷ்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரைகளிலிருந்து நான் பெற்ற ஆறுதலையே பலரும் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

கே. ஈ., ஆஸ்திரேலியா (g02 6/22)

என் அப்பா எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்; அதனாலேயோ என்னவோ, நானும் என் கணவரிடம் அடிக்கடி கோபப்படுவேன். சில சமயங்களில்​—⁠இல்லை, அநேக சந்தர்ப்பங்களில்​—⁠நான் அவரை அடித்தும் இருக்கிறேன். என் கணவர் என்னைவிட பலசாலியாக இருப்பதால் நான் அடித்தால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன். ஆனால், துணையை அடிப்பது கடவுள் பார்வையில் பொல்லாத பாவமாகும் என்பதை வாசித்தவுடன் திடுக்கிட்டேன். என் கணவர் யெகோவாவின் தாழ்மையான ஊழியர். அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள நெஞ்சார விரும்புகிறேன். என்னை இவ்வாறு திருத்தியதற்காக யெகோவாவுக்கு நன்றி.

டி. ஈ., ஜப்பான் (g02 6/22)

இந்தப் பத்திரிகை என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் கதையை வாசிப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சமீபத்தில் என் கணவர் பைபிளைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்கள் சிலவற்றுக்கும் வந்திருக்கிறார்; இப்போது பைபிளை படித்து வருகிறார். பக்கம் 11-⁠ல் கொடுக்கப்பட்டபடி, லார்டஸ் சொன்னதையே நானும் சொல்கிறேன்: “சிலசமயம் இது கனவோன்னு நினைக்க தோணுது!”

ஈ. ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g02 6/22)