Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போலீஸ்—எதிர்காலம் என்ன?

போலீஸ்—எதிர்காலம் என்ன?

போலீஸ்​—எதிர்காலம் என்ன?

போலீஸ் இல்லையென்றால் ஒருவேளை ஒழுங்கின்மையே நிலவும். ஆனால், போலீஸ் இருந்துமே இந்த உலகம் பாதுகாப்பானதா? அநேக கிராமப்புறங்களைப் போல இன்றுள்ள அநேக நகரங்களிலும் பாதுகாப்பின்மை என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. மாஃபியா கும்பல்களிடமிருந்தும் நாள்பட்ட குற்றவாளிகளிடமிருந்தும் போலீஸ் நம்மை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? போலீஸார், நம் தெருக்களை பாதுகாப்புமிக்கதாக ஆக்குவார்கள் என எதிர்பார்க்கலாமா? குற்றச்செயல்களை ஒடுக்கும் போரில் அவர்கள் வெற்றி பெறுவார்களா?

“போலீஸாரால் குற்றங்களை தடுக்க முடியாது” என எதிர்கால போலீஸ் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் டேவிட் பேலீ கருத்து தெரிவிக்கிறார். “போலீஸார் உண்மையில் காயத்தின் மீது போடப்படும் வெறும் பிளாஸ்திரி மட்டுமே. . . . குற்றங்களை தடுக்கவே அவர்கள் இருக்கிறபோதிலும் அவற்றிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்க போலீஸ்மீது நாம் சார்ந்திருக்க முடியாது” என்கிறார். போலீஸின் மூன்று முக்கிய வேலைகளான தெருக்களில் ரோந்து போதல், நெருக்கடி சமயங்களில் உதவுதல், குற்றச்செயல்களை விசாரணை செய்தல் போன்றவை குற்றச்செயல்களை தடுப்பதில்லை என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதற்கு காரணம் என்ன?

ஏராளமான போலீஸாரை உபயோகித்து குற்றச்செயல்களை தடுக்க முயலுவது கற்பனை செய்ய முடியாதளவுக்கு செலவு பிடிக்கும் வேலை. அப்படியே ரோந்து பணி அதிகரிக்கப்பட்டாலும், குற்றவாளிகள் அதைக் கண்டுகொள்வதாகவோ அதைப் பார்த்து பயப்படுவதாகவோ தெரியவில்லை. போலீஸார் உடனடி நடவடிக்கை எடுப்பதும் குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க முடிவதில்லை. குற்றம் நடந்த மறுநிமிடமே அந்த இடத்திற்கு விரைந்தால்தான் அவர்களால் குற்றவாளியை கையும் களவுமாக பிடிக்க முடியும் என்று போலீஸார் அறிக்கை செய்திருக்கின்றனர். போலீஸ், அந்தளவுக்கு வேகமாக செயல்படுவது முடியாத காரியம் என குற்றவாளிகள் அறிந்திருப்பதுபோல் தோன்றுகிறது. குற்ற புலன்விசாரணையும் உதவியளிப்பதில்லை. துப்பறியும் வல்லுனர்கள், வலைவீசி வெற்றிகரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்தாலும் அது குற்றச்செயல்களை தடுப்பதாக தெரியவில்லை. ஐக்கிய மாகாணங்களில், மற்ற எந்த தேசத்தையும்விட அதிக குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கு குற்றச்செயல்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. ஜப்பானிலோ வெகு சிலரே சிறையில் இருந்தாலும் குற்றச்செயல்களின் விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. சுற்றுவட்டார காவல் போன்ற திட்டங்கள்கூட, முக்கியமாக பெரும் குற்றச்செயல்கள் நிகழும் பகுதிகளில் நிலையான நன்மையளிக்கவில்லை. போதைப்பொருள் கடத்தல் அல்லது வழிப்பறிக் கொள்ளை போன்ற குறிப்பிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பது கொஞ்ச காலம் வரை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை தொடர்ந்து கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.

“போலீஸால் குற்றங்களை தடுக்க முடியாமல்போவது சிந்திக்கும் மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடாது. போலீஸின் கட்டுப்பாட்டிற்கும் நீதித்துறையின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட சமுதாய நிலைமைகளே சமுதாயத்தில் நிலவும் குற்றச்செயல்களின் அளவை நிர்ணயிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது” என எதிர்கால போலீஸ் என்ற புத்தகம் கூறுகிறது.

போலீஸ் இல்லையென்றால் என்ன நடக்கும்?

கண்காணிக்க போலீஸ் இல்லையென்றால் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்வீர்கள்? போலீஸ் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விதிமுறைகளை மீறுவீர்களா? அலுவலக வேலையாட்களின் குற்றச்செயல்கள் தரும் நிலையற்ற நன்மைகளைப் பெறுவதற்காக, மரியாதைக்குரியவர்களாக கருதப்படும் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்கள் தங்கள் நற்பெயரையும் எதிர்காலத்தையும் பணயம் வைக்க தயாராயிருப்பதைக் காண்பது ஆச்சரியமளிக்கிறது. ‘மோட்டார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை சுரண்டும் ஏமாற்று வேலையில் 112 பேர் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்; அவர்களுள் வக்கீல்கள், மருத்துவர்கள், வர்மக்கலை நிபுணர்கள், உடற்பயிற்சி மருத்துவர், அக்குபங்சர் நிபுணர், காவல்துறை நிர்வாக உதவியாளர் ஆகியோர் அடங்குவர்’ என்று த நியூ யார்க் டைம்ஸ் சமீபத்தில் அறிக்கை செய்தது.

பரந்தளவில் பாதிப்பை ஏற்படுத்திய மற்றொரு சமீபத்திய மோசடி, கலையுலகின் செல்வாக்குமிக்க ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நியூ யார்க்கிலுள்ள சத்தபீஸின் மற்றும் லண்டனிலுள்ள கிறிஸ்டீஸின் முன்னோடிகளான முன்னாள் நிர்வாகிகள் விலையை நிர்ணயிப்பதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அவர்களாலும் அவர்களுடைய ஏலக்கடைகளாலும் இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாகவும் நஷ்ட ஈட்டுத்தொகையாகவும் செலுத்த வேண்டியுள்ளது! இவ்வாறு, பணத்திற்கான தீர்க்க முடியாத பேராசை சமுதாயத்திலுள்ள யாரையும் விட்டு வைக்கவில்லை.

தடைசெய்ய எதுவும் இல்லையென்றால் அநேகர் உடனடியாக குற்றச்செயலில் ஈடுபடுவார்கள் என்பதையே 1997-⁠ல் பிரேசிலிலுள்ள ரெஸிஃப்பில் போலீஸ்காரர்கள் வேலை நிறுத்தத்தின்போது நிகழ்ந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எப்படிப்பட்ட மத நம்பிக்கைகள் இருந்தாலும் அது அவர்களுடைய நடத்தைமீது செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் ஒழுக்கநெறிகளையும் தராதரங்களையும் எளிதில் தளர்த்தி அல்லது அவற்றை ஒதுக்கி விடுகின்றனர். சிறிய அல்லது பெரிய அளவில் குற்றம் செய்ய தூண்டப்படும் ஓர் உலகில் நாம் வாழ்வதால், பெரும்பாலான நாடுகளிலுள்ள போலீஸார் வெல்ல முடியாத போரில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியமான ஒன்றல்லவே.

மறுபட்சத்தில், அதிகாரத்தை மதிப்பதால் சிலர் சட்டங்களுக்கு கீழ்ப்படிகின்றனர். கடவுள் அனுமதிக்கும் அதிகாரங்கள் சமுதாயத்தில் ஓரளவிற்காவது ஒழுங்கை காத்துவருவதால் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும் என அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களிடம் கூறினார். அப்படிப்பட்ட அதிகாரங்களைப் பற்றி அவர் எழுதியதாவது: “தீமை செய்கிறவன் மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்.”​—ரோமர் 13:4, 5.

சமுதாய நிலைமைகளை மாற்றுதல்

சமுதாய நிலைமைகளை மேம்படுத்துவதில் போலீஸாரின் பணி ஓரளவு நன்மை பயக்கிறது. போதைப்பொருட்களும் வன்முறையும் தெருக்களிலிருந்து நீக்கப்பட்டால் சமுதாயத்தின் இமேஜ் மேம்படும், அதற்கு ஏற்றவாறு வாழ அந்தப் பகுதி மக்களும் பெரும்பாடுபடுவர். ஆனால், சமுதாயத்தை சீர்திருத்துவது எந்தவொரு போலீஸ் படையின் சக்திக்கும் அப்பாற்பட்டது.

மக்கள் சட்டத்தை முற்றும் முழுக்க மதிப்பதால் இனி போலீஸ்காரர்களே தேவைப்படாத ஒரு சமுதாயத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அக்கம்பக்கத்தார் ஒருவருக்கொருவர் அவ்வளவு அக்கறை காண்பித்து, கைகொடுக்க எப்போதும் தயாராக இருப்பதால் உதவிக்காக ஒருவருமே போலீஸாரை அழைக்கும் அவசியமில்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இது கேட்பதற்கு கற்பனை கதைபோல தொனிக்கலாம். ஆனால், வேறொரு சந்தர்ப்பத்தில் இயேசு கூறிய பின்வரும் வார்த்தைகள் இங்கு நிச்சயமாக பொருந்துகின்றன. “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்” என்று அவர் கூறினார்.​—மத்தேயு 19:26.

எதிர்காலத்தில் மனிதவர்க்கம் முழுவதும், யெகோவா தேவன் ஏற்படுத்தும் ஓர் அரசாங்கத்தின் குடிமக்களாக வாழும் காலப்பகுதியை பைபிள் விவரிக்கிறது. “பரலோகத்தின் தேவன் . . . ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்”கும். (தானியேல் 2:44) இந்தப் புதிய அரசாங்கம், நேர்மையானவர்கள் அனைவரையும் கடவுளுடைய அன்பின் வழியில் பயிற்றுவிப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு காரணமான சமுதாய நிலைமைகளை மாற்றிவிடும். “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) யெகோவாவின் ராஜாவான இயேசு கிறிஸ்துவால் எல்லா குற்றச்செயல்களையும் தடுத்து நிறுத்த முடியும். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச் செய்”வார்.​—ஏசாயா 11:3, 4.

குற்றவாளிகளோ, குற்றச்செயல்களோ அங்கே இருக்காது. போலீஸ்காரர்களுக்கும் அவசியம் இருக்காது. ஒவ்வொருவரும் “தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவா”ர்கள். (மீகா 4:4) பைபிளில் விவரிக்கப்பட்ட “புதிய பூமி”யில் வாழ நீங்கள் விரும்பினால், கடவுள் தமது வார்த்தையில் வாக்குறுதி அளித்திருப்பவற்றை ஆராய்வதற்கான சமயம் இதுவே.​—2 பேதுரு 3:13. (g02 7/8)

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

மக்கள் சட்டத்தை முற்றும் முழுக்க மதிப்பதால் இனி போலீஸ்காரர்களே தேவைப்படாத ஒரு சமுதாயத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

குற்றவாளிகளோ, குற்றச்செயல்களோ அங்கே இருக்காது

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீஸ்

2001, செப்டம்பர் 11-⁠ல் நியூ யார்க்கிலும் வாஷிங்டன் டி.சி.-யிலும் நடந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறபடி விமான கடத்தல்காரர்களும், பிணைக்கைதிகளை பிடிப்பவர்களும், பயங்கரவாதிகளும், பொதுமக்களை பாதுகாப்பதில் போலீஸிற்கு பெரும் தலைவலியாக இருக்கின்றனர். உலகிலுள்ள பல பகுதிகளிலிருக்கும் விசேஷ படைகளுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானத்திற்குள் புகுந்து அதை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திடீரென்று கட்டடங்களுக்குள் நுழையும் கலைகளையும்​—கட்டடத்தின் கூரையிலிருந்து கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குதல், ஜன்னல்கள் வழியாக குதித்தல், கண்குஷன் எறிகுண்டுகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் எறிதல் போன்றவற்றையும்—​அவர்கள் கற்றிருக்கிறார்கள். இவ்வாறு பயிற்சி பெற்ற அதிகாரிகள், பயங்கரவாதிகள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கி, பிணைக்கைதிகளுக்கு அதிக ஆபத்தேதுமின்றி விடுவிப்பதில் அநேக சமயங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

[படத்திற்கான நன்றி]

James R. Tourtellotte/U.S. Customs Service

[பக்கம் 12-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் இனியும் இவை தேவையில்லை