Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போலீஸ் ஏன் தேவை?

போலீஸ் ஏன் தேவை?

போலீஸ்—ஏன் தேவை?

போலீஸ் இல்லாத வாழ்க்கை எப்படியிருக்கும்? 1997-⁠ல், பிரேசிலிலுள்ள ரெஸிஃப் என்ற நகரில் 18,000 போலீஸார் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; போலீஸ் பாதுகாப்பு இல்லாத அந்த சமயத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான அந்த நகரவாசிகளுக்கு என்ன நேர்ந்தது?

த வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை செய்ததாவது: “இந்தக் கடற்கரையோர பெருநகரில் ஐந்து நாட்களும் பெரும் குழப்பமே நிலவியது, தினமும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்தது. எட்டு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு ஷாப்பிங் சென்டரிலும் வசதி படைத்தவர்கள் வசிக்கும் ஒரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய கும்பல்கள் அராஜகத்தில் ஈடுபட்டன. போக்குவரத்து விதிகளை யாருமே மதிக்கவில்லை. . . . குற்றச்செயல்கள் தலைவிரித்தாடிய அந்தக் காலப்பகுதியில் பிணவறை நிரம்பி வழிந்தது; மிகப் பெரிய அரசு மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியது, துப்பாக்கி குண்டுக்கும் கத்தி குத்துக்கும் பலியானவர்கள் நடைபாதை எங்கும் கிடந்தார்கள்.” நீதித்துறை செயலாளர் இவ்வாறு கூறியதாக அறிக்கை செய்யப்பட்டது: “இந்த விதமான அராஜகம் இதுவரை இங்கு நிகழ்ந்ததே இல்லை.”

நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, நாகரிகம் என்ற மேற்பூச்சிற்கு அடியில் அக்கிரமம் பதுங்கியிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு நமக்கு தேவை. சில போலீஸ் அதிகாரிகளின் கொடூரம், ஊழல், மெத்தனம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை நம்மில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சம்பவங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் போலீஸ் இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்? அநேக சமயங்களில் போலீஸார் மதிப்புமிக்க சேவை செய்வது உண்மையல்லவா? உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள சில போலீஸ் அதிகாரிகளை விழித்தெழு! பேட்டி கண்டு, அவர்கள் ஏன் இந்தப் பணியில் சேர்ந்தார்கள் என்று கேட்டது.

சமுதாய பணி, பொது சேவை

“மற்றவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி காண்கிறேன். இதில் பல விதமான வேலைகள் இருப்பதே என்னைக் கவர்ந்தது. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது போலீஸாரின் வேலையில் வெறும் 20 முதல் 30 சதவிகிதம்தான் என்பதே பலருக்கு தெரியாது. இது பெரும்பாலும் சமுதாய பணியும் பொது சேவையுமாகும். என் ஏரியாவில் ரோந்து செல்லும் ஒரு நாளில் திடீர் மரணம், போக்குவரத்து விபத்து, குற்றச்செயல், உதவி தேவைப்படும் குழம்பிப்போன முதியவர் என்று பல சூழ்நிலைகளிலுள்ள பலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கலாம். முக்கியமாக, காணாமற்போன குழந்தையை கண்டுபிடித்து திரும்ப ஒப்படைப்பது அல்லது குற்றச்செயலுக்கு ஆளானவருக்கு அந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள உதவுவது போன்றவை அதிக திருப்தி தருபவை” என்று பிரிட்டனைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஐவன் கூறினார்.

ஸ்டீவன் என்பவர் ஐக்கிய மாகாணங்களிலுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் கூறுவதாவது: “மக்கள் உண்மை மனதோடு உதவி கேட்டு உங்களிடம் வருகையில், ஒரு போலீஸ் அதிகாரியாக அவர்களுக்கு மிகச் சிறந்த உதவியளிக்க திறமையும் நேரமும் உங்கள் கைவசம் உள்ளன. இதுவே இப்பணியை ஏற்க என்னை தூண்டியது. மக்களுக்கு உதவவும் அவர்களுக்காக கஷ்டப்படவும் தயாராயிருக்க விரும்பினேன். குற்றச்செயல்களிலிருந்து மக்களை பாதுகாக்க ஓரளவிற்காவது உதவினேன் என்றே நினைக்கிறேன். ஐந்து வருடங்களில் 1,000-⁠த்திற்கும் அதிகமானோரை கைது செய்தேன். ஆனால், காணாமல்போன பிள்ளைகளை கண்டுபிடிப்பது, வழியை மறந்துபோன அல்ஸைமர் நோயாளிகளுக்கு உதவுவது, திருட்டுப்போன வாகனங்களை கண்டுபிடிப்பது என அனைத்துமே திருப்தியளித்தன. சந்தேக கேஸுகளை விரட்டி பிடிப்பதிலும் ‘த்ரில்’ இருந்தது.”

பொலிவியாவைச் சேர்ந்த அதிகாரியான ரோபெர்டோ இவ்வாறு கூறுகிறார்: “நெருக்கடி நிலையில் இருப்போருக்கு உதவ விரும்பினேன். போலீஸார், மக்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதால் இளைஞனாக இருந்த சமயத்திலிருந்தே போலீஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் அரசாங்க அலுவலகங்கள் நிறைந்த நகர மையத்தில் ரோந்து பணியில் நியமிக்கப்பட்டேன். அநேகமாக தினமும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க வேண்டியிருந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடாதபடி தடுப்பதே என் கடமை. அந்த ஆர்ப்பாட்டங்களின் தலைவர்களோடு சிநேகப்பான்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டால் அநேகர் காயப்பட காரணமாகும் கலவரங்களை தவிர்க்க முடியும் என்பதை கண்டேன். அது திருப்தியளித்தது.”

போலீஸார் பல விதமான சேவைகள் செய்கின்றனர். மரத்தில் மாட்டிக்கொண்ட பூனையை காப்பாற்றுவது முதல், தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை விடுவிப்பது, பாங்க் கொள்ளைக்காரர்களோடு மோதுவது வரை பல்வேறு சவால்களை அவர்கள் சமாளித்திருக்கிறார்கள். இருந்தாலும், நவீனகால போலீஸ் படைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே அவை நம்பிக்கைகளுக்கும் பயங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. ஏன் என்பதை அடுத்த கட்டுரை கலந்தாராயும். (g02 7/8)

[பக்கம் 23-ன் படங்கள்]

பக்கங்கள் 2-⁠ம், 3-⁠ம்: சீனாவிலுள்ள, சங்டூவில் போக்குவரத்து கட்டுப்பாடு; கிரீஸ் நாட்டு அதிரடி போலீஸ்; தென் ஆப்பிரிக்காவின் போலீஸ் அதிகாரிகள்

[படத்திற்கான நன்றி]

Linda Enger/Index Stock Photography

[பக்கம் 3-ன் படம்]

ஜூலை 2001-⁠ல், பிரேசிலிலுள்ள சால்வடாரில் போலீஸார் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது கொள்ளையடிக்கப்பட்ட கடை

[படத்திற்கான நன்றி]

Manu Dias/Agência A Tarde

[பக்கம் 4-ன் படம்]

ஸ்டீவன், அ.ஐ.மா.

[பக்கம் 4-ன் படம்]

ரோபெர்டோ, பொலிவியா