உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
வேலை பெற பொய்
“ஒரு வேலைக்காக விண்ணப்பிக்கையில் நான்கு பேரில் ஒருவர் பொய் சொல்லுகிறார்” என்பதாக லண்டனின் ஃபைனான்ஷியல் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. 12 மாத காலப்பகுதியில், கன்ட்ரோல் ரிஸ்க்ஸ் க்ரூப் என்ற பாதுகாப்பு நிறுவனமொன்று, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கு விண்ணப்பித்திருந்த 10,435 பேரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தபோது, “எல்லா பதவி நிலைக்கான விண்ணப்பங்களிலும் போலி தகவல் அளிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்பதாக அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “சுமார் 34 சதவீத விண்ணப்பங்களில், வேலை அனுபவத்தின் பேரில் முரண்பாடுகள் இருந்தன; 32 சதவீதத்தினர் தங்கள் கல்வி தகுதிகளை மிகைப்படுத்தி குறிப்பிட்டிருந்தனர் அல்லது போலி தகவல் அளித்திருந்தனர். மொத்தத்தில் 19 சதவீதத்தினர் தங்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையை அல்லது நொடித்து போன நிலையை மறைக்க முயன்றிருந்தனர்; 11 சதவீதத்தினர் தங்களைப் பற்றிய முழு விவரங்களை கொடுக்கவே இல்லை.” வெளி நாட்டில் வாழ்ந்திருந்தவர்கள் தங்கள் தில்லுமுல்லு கண்டுபிடிக்கப்படாது என்ற நினைப்பில் நிதி விவரங்களை தவறாக காண்பிக்க அதிக சாத்தியமிருந்தது; ஆண்களே “பெண்களைவிட அதிகமாக போலி தகவல்களை அளிக்க பெரும்பாலும் முயன்றார்கள்.” பணிக்கு ஆள் எடுத்து வேலையில் அமர்த்தும் கூட்டமைப்பைச் சேர்ந்த டிம் நிக்கல்ஸன் இந்த ஆய்வு அறிக்கைகளை உறுதி செய்பவராய், “வேலைக்கு ஆள் எடுப்பவர்கள், விண்ணப்பத்தில் உள்ள தகவலை உண்மை என அப்படியே நம்பினால், அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்யவில்லை என்றே அர்த்தம்” என கூறினார். (g02 7/22)
எண்ணெய் மோகமுள்ள யானைகள்
வடகிழக்கு இந்தியாவில் திக்பாயிலுள்ள யானைகளுக்கு எண்ணெய்யிடம் ஒரு மோகம். “எண்ணெய் களங்களில் யானைகள் சர்வசாதாரணமாக வலம்வருகின்றன; எண்ணெய் கிணறுகளை சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கும் குழாய் அமைப்புகளிலுள்ள முக்கிய வால்வுகளை அடிக்கடி திறந்துவிடுகின்றன” என்கிறார் ஆயில் இண்டியா லிமிட்டெட்டின் மூத்த எஞ்சினியர் ராமன் சக்கரவர்த்தி. “ஒரு வால்வை, அதுவும் கச்சா எண்ணெய்யை பாராஃபின் மெழுகு ஆகாமல் தடுக்கும் நீராவியை கட்டுப்படுத்தும் வால்வை திறக்கையில் ஏற்படும் சத்தத்தை அந்த யானைகள் ரசிப்பதாக தெரிகிறது.” எண்ணெய் பீறிட்டு வெளிவருகையில் ஏற்படும் “உஷ் என்ற ஒலியை” மட்டுமல்லாமல் “கச்சா எண்ணெய்யுடன் சேர்ந்து வெளியேறும் தண்ணீரையும் சகதியையும்” விரும்புவதாலும் எண்ணெய் கிணறுகளிடம் அந்த யானைகள் ஈர்க்கப்படுவதாக தோன்றுகிறது. “அங்குள்ள தண்ணீர் உப்புநீர்; யானைகளுக்கு அது ரொம்பவே பிடிக்கும்” என்பதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. இதிலொரு சுவையான செய்தி என்னவென்றால், அவ்விடத்தில் எண்ணெய் இருப்பதை கண்டுபிடிப்பதற்கே தற்செயலாக ஒரு யானைதான் காரணம். அந்த பகுதியில் முதல் ரயில் இருப்புப் பாதை அமைப்பதற்கு தண்டவாளங்களை சுமந்து சென்ற பிறகு அந்த யானை தன் கூடாரத்திற்கு திரும்பியது; அப்போது பிரிட்டிஷ் அதிகாரிகள் அதன் கால்களில் படிந்திருந்த எண்ணெய் பசையுள்ள பொருளை கவனித்து அது வந்த தடத்திலேயே சென்று எண்ணெய் கசிவுறும் குழியை கண்டுபிடித்தனர். இதுவே ஆசியாவின் முதல் எண்ணெய் கிணறு 1889-ல் பிறக்க காரணமானது. (g02 7/22)
உடலில் துளையிடுவதன் அபாயங்கள்
நகைகளால் அலங்கரித்துக் கொள்ள உடலின் பல்வேறு பாகங்களை துளையிடும் பழக்கம் முக்கியமாக இளைஞர் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. “இதன் பாதிப்புகளை குறித்து அவர்கள் பெரும்பாலும் யோசிக்காமல் இருப்பதே வருத்தமான விஷயம்” என்கிறது போலிஷ் பத்திரிகை ஷ்வீயாட் கோபியீடி. “இளமையின் கலகத்தனமான போக்கின் காலம் கடந்து செல்கிறது, புருவம் நெடுக பதிந்துள்ள உலோக பொருட்களோ இனியும் நகைகளாக கருதப்படுவதில்லை.” அந்த உலோக அணிகலன்களை நீக்கிவிட்டாலும் அவற்றின் தழும்புகள் நிலைத்திருக்கும். மேலும், முகத்திலுள்ள தோலில் துளையிடுகையில் நரம்புகளும் இரத்த நாளங்களும் பாதிக்கப்படலாம்; இதனால் “உணர்ச்சி மரத்துப்போகலாம்,” அதோடு, “தொற்றுகளும் காயங்களும் ஏற்பட்டு, வெகு நாட்கள் ஆறாமல் இருக்கலாம்.” வாயிலுள்ள “ஈரப்பதமுள்ள கதகதப்பான சூழலில்” பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன; ஆகவே அங்கு துளைகளை இடுவது பெரும்பாலும் தொற்றுகளுக்கும் பல் சொத்தைக்கும்கூட வழிநடத்துகின்றன. கொழுப்பு செல்கள் நிறைந்து காணப்படும் தொப்புள், காதுகள் போன்ற பகுதிகளில் துளையிட்டால், கெட்டியான பருக்களின் வடிவில் கொழுப்பு கட்டிகள் உருவாகலாம். “உலோக நகைகளில் பெரும்பாலும் நிக்கல் கலவை உள்ளது. இதனால் நிக்கல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வீக்கம், அரிப்புடன் கூடிய தடிப்புகள் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படலாம்” என அந்த கட்டுரை எச்சரிக்கிறது. (g02 8/08)
ஆசியாவில் காற்று தூய்மைக்கேடு அபாயம்
“இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000-க்கும் அதிகமானோர் காற்று தூய்மைக்கேடால் இறக்கின்றனர்” என்பதாக சுற்றுச்சூழல் பத்திரிகை டௌன் டு எர்த் குறிப்பிடுகிறது. உலக வங்கி மற்றும் ஸ்டாக்ஹோம் வளர்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஆசியாவில் காற்று தூய்மைக்கேட்டின் அளவு, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் காணப்படும் மொத்த காற்று தூய்மைக்கேட்டின் அளவையும் பேரளவில் விஞ்சுகிறது; சியோல், பீஜிங், பாங்காக், ஜகார்த்தா, மணிலா ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோரின் சாவுக்கும் காரணமாக உள்ளது. உதாரணமாக, மணிலாவில், ஒவ்வொரு வருடமும் 4,000-க்கும் அதிகமானோர் சுவாச நோய்களால் இறக்கின்றனர்; 90,000-க்கும் அதிகமானோர் தீராத மார்புச்சளி நோயால் கடுமையாய் அவதியுறுகின்றனர். பீஜிங்கிலும் ஜகார்த்தாவிலும் இறப்பு வீதம் இன்னும் அதிகமாக உள்ளது. “தரக் குறைவான எரிபொருளை பயன்படுத்துதல், திறனற்ற முறைகளில் ஆற்றலை உற்பத்தி செய்தல், பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்துதல், போக்குவரத்து நெருக்கடி” ஆகியவற்றையே குற்றஞ்சாட்டுகிறது அந்த பத்திரிகை. (g02 8/22)