எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
மூட்டு அழற்சி “மூட்டு அழற்சியால் அவதிப்படுவோருக்கு நம்பிக்கை” (ஜனவரி 8, 2002) என்ற தொடர்கட்டுரைகள் என்னை மிகவும் நெகிழ வைத்தன. எனக்கு 21 வயது, சுமார் 15 வருடமாக மோசமான மூட்டு அழற்சி நோயாலும் அதன் பாதிப்புகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர்கட்டுரைகள் உண்மையிலேயே எனக்கு உற்சாகத்தை அளித்தன, தொடர்ந்து சகித்திருக்க வேண்டும் என்ற என் உறுதிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
ஏ. எஃப்., பிரான்ஸ் (g02 7/22)
நான் முழுநேர ஊழியம் செய்பவள், அப்பணியைப் பொக்கிஷமாய் போற்றுபவள்; ஆனால் அதை செய்வது நாளுக்கு நாள் சிரமமாகி வருகிறது. எனக்கு மூட்டுத் தேய்வு (osteoarthritis) எனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினம் தினம் வலியில் துடிக்கிறேன், சில சமயங்களில் ரொம்பவே நொந்துபோகையில் மனச்சோர்வடைகிறேன். ஏற்ற சமயத்தில் வந்த இத்தகைய கட்டுரைக்கும், புதிய உலகைப் பற்றிய யெகோவாவின் வாக்குறுதியை ஏற்றுக்கொள்வதிலேயே உண்மையான ஆறுதலை நாம் பெற முடியும் என்ற நினைப்பூட்டுதலுக்கும் நன்றி.
ஹெச்.எம்.ஏ., ஐக்கிய மாகாணங்கள் (g02 7/22)
முடக்கு வாத மூட்டழற்சி (rheumatoid arthritis) நோயால் நான் கஷ்டப்படுகிறேன், இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்பட்ட பின்பு இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். இந்த நோயால் அவதிப்படுபவர் படும் பாட்டை இந்தக் கட்டுரைகள் அப்படியே விவரித்திருந்தன. அதைப் பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொண்டதும், அதனால் பெருமளவு பாதிக்கப்படாதிருக்க என்ன செய்யலாம் என தெரிந்துகொண்டதும் உதவியாக இருந்தன.
ஜி.எஃப்.எஃப்., போர்த்துகல் (g02 7/22)
எனக்கு 21 வயது. எனக்கு 10 வயதே இருக்கையில் இளம் பருவ மூட்டு வாத நோய் (juvenile rheumatoid) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பத்திரிகைகளில் பலருடைய அனுபவங்களை வாசித்திருக்கிறேன். ஆனால் என்னைப் போலவே கஷ்டப்படும் என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் அனுபவங்களுக்கு அவை எதுவுமே ஈடாகாது. அக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த காட்யாவைப் போல முழுநேர ஊழியத்தை என்னால் தொடர முடியவில்லை. யெகோவாவின் சேவையில் நிறைய செய்ய முடியவில்லையே என்ற மனச்சோர்வின் உணர்ச்சிகளையும் இயலாமை உணர்வுகளையும் உறுத்தலையும் மற்றவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை வாசித்து அறிவது மிகவும் உதவியாக இருந்தது.
ஹெச். எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 7/22)
மோசமான முடக்கு வாத மூட்டழற்சி நோய் எனக்கு இருப்பது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு என் 24-வது வயதில் தெரிய வந்தது. என் முழுநேர ஊழியத்தை நிறுத்த வேண்டி வந்தது. எனக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. கடும் வேதனையாலும் சோர்வாலும் முன்பு நான் செய்து வந்த காரியங்களில் பாதியளவே இப்போது செய்கிறேன். மற்றவர்களும் அதே போன்று சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வேதனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் இந்தக் கட்டுரை எனக்கு ஆறுதலை அளித்திருக்கிறது. எதை நான் செய்ய முடியும் என்பதன் பேரில் தந்திருந்த நடைமுறை தகவல்களையும் அனுபவித்தேன். ‘முடவன் மானைப்போல் குதிக்கும்’ நாளுக்காக காத்திருக்கிறேன்.—ஏசாயா 35:6.
டி. யூ., ஜப்பான் (g02 7/22)
ஒரு வருடத்துக்கு முன்பு என் மூட்டுகள் சிலவற்றில் கடும் வேதனையை உணர ஆரம்பித்தேன். நான் நடுத்தர வயதில் இருப்பதால் அது மூட்டு அழற்சியாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. என்னிடம் நானே சமநிலையோடும் நியாயமாகவும் இருப்பதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள உங்களுடைய கட்டுரை எனக்கு உதவியது.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g02 7/22)
எனக்கு 19 வயது. மணிக்கட்டுகளில், கணுக்கால்களில், முழங்கால் மூட்டுகளில் எனக்கு மூட்டு அழற்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக, “உங்கள் வரையறைகளை மனதில் கொள்ளுதல்” என்ற உபதலைப்பிலுள்ள தகவலை வாசித்து மகிழ்ந்தேன். முழுநேர ஊழியம் செய்யும் எண்ணத்தில் ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஈக்வடாருக்கு வந்தேன். ஆனால் பலவீனத்தாலும், சோர்வாலும், வேதனையாலும் கொஞ்ச நேரம் மட்டுமே ஊழியத்தில் செலவிட முடிகிறது. மருத்துவ சிகிச்சை பெற தாயகம் திரும்ப தீர்மானித்திருக்கிறேன், சுகம் பெற்றும் மீண்டும் இங்கு திரும்பி வருவேன் என நம்புகிறேன்.
ஜே. எஸ்., ஈக்வடார் (g02 7/22)
ஃபங் ஷ்வே “ஃபங் ஷ்வே—கிறிஸ்தவர்களுக்கு உரியதா?” (ஜனவரி 8, 2002) என்ற கட்டுரைக்கு நன்றி. நான் இன்டீரியர் டிசைனராக பணிபுரிகிறேன்; சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் வடிவமைப்பில் ஃபங் ஷ்வேயை பின்பற்றும்படி என்னிடம் கேட்டார். அந்தப் பழக்கவழக்கத்தைப் பற்றி அவ்வளவாக தெரியாததால் எனக்கு கவலையாக போய்விட்டது. சரியான நேரத்தில் இக்கட்டுரை கையில் கிடைத்தது! இந்த வடிவமைப்பு தத்துவ சாஸ்திரத்தில் தலையிடாதிருக்க வேண்டுமென இப்போது நான் தீர்மானித்திருக்கிறேன்.
சி. வி., ஐக்கிய மாகாணங்கள் (g02 7/22)