Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சூதாட்டம்—பாரெங்கும் பரவியிருக்கும் மோகம்

சூதாட்டம்—பாரெங்கும் பரவியிருக்கும் மோகம்

சூதாட்டம்​—பாரெங்கும் பரவியிருக்கும் மோகம்

லாட்டரியில் யோகம் அடிக்கும் என்ற கனவில் மிதந்தார் ஸ்காட்லாந்தில் வளர்ந்த ஜான். “வாரம் தவறாமல் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கினேன். அதற்கு கொஞ்சம்தான் செலவானது, ஆனால் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கலாம் என்ற நம்பிக்கையை அது எனக்கு தந்தது” என அவர் கூறுகிறார்.

காஸுஷிகி என்பவர் ஜப்பானில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குதிரை பந்தயத்தில் அலாதி பிரியம். “நண்பர்களோடு சேர்ந்து குதிரை பந்தயத்தில் பணம் கட்டி விளையாடுவது என்றாலே எனக்கு ரொம்ப ஜாலிதான்; சிலசமயங்களில் நிறைய பணத்தை ஜெயித்தேன்” என அவர் கூறுகிறார்.

“பிங்கோ எனக்கு பிடித்தமான விளையாட்டு” என கூறுகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லின்டா. “இந்தப் பழக்கத்தால் ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட 1,500 ரூபாய் பறிபோய்விடும். ஆனால் ஜெயிக்கும்போது வரும் ‘த்ரில்’ இருக்குதே, அதுதான் எனக்கு ரொம்ப பிடித்தது.”

ஜான், காஸுஷிகி, லின்டா ஆகியோர் சூதாட்டத்தை தீங்கு விளைவிக்காத ஒரு பொழுதுபோக்காக கருதினர். உலகெங்கும் கோடிக்கணக்கானோர் அவ்வாறே கருதுகின்றனர். அமெரிக்கர்களில் மூன்றில் இரண்டு பாகமானோர் சூதாடுவதில் தவறில்லை என நினைப்பதாக 1999-⁠ன் சுற்றாய்வு ஒன்று காட்டியது. 1998-⁠ல் அமெரிக்க சூதாடிகள் சட்டரீதியான சூதாட்டத்திற்கு சுமார் 2,40,000 கோடி ரூபாய் செலவழித்தனர்; அது, திரைப்படங்களுக்கும் பதிவு செய்யப்பட்ட இசைகளுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் உல்லாச பூங்காக்களுக்கும் வீடியோ கேம்ஸுகளுக்கும் அவர்கள் செலவிட்ட மொத்த தொகையைவிட அதிகமானது.

சமீப ஆய்வின்படி, ஆஸ்திரேலிய மக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு வருட காலத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் சூதாடியிருக்கிறார்கள், 40 சதவீதத்தினர் ஒவ்வொரு வாரமும் சூதாடியிருக்கிறார்கள். அந்த நாட்டிலுள்ள வயதுவந்தோர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 19,000 ரூபாய் சூதாட்டத்திற்கு செலவழிக்கிறார்கள்; இது ஐரோப்பியர்களோ அமெரிக்கர்களோ செலவிடுவதைவிட இரு மடங்கு அதிகம். ஆகவே சூதாட்ட வெறியர்களின் உலகப் பட்டியலில் முதலிடத்தைப் பெறுபவர்கள் ஆஸ்திரேலியர்களே.

அநேக ஜப்பானியர்கள் பின்பால் (pinball) விளையாட்டு போன்ற பாச்சிங்கோ-விற்கு அடிமையாகியிருக்கிறார்கள்; இந்த விளையாட்டிற்கு ஒரு வருடத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறார்கள். பிரேஸிலில் ஒவ்வொரு வருடமும் குறைந்தளவு 19,200 கோடி ரூபாய் சூதாட்டத்திற்காக செலவழிக்கப்படுகிறது; அதிலும் பெரும்பாலான பணம் லாட்டரி டிக்கெட்டுகளுக்கே செலவிடப்படுகிறது. லாட்டரி மோகம் கொள்பவர்கள் பிரேஸில் நாட்டவர் மட்டுமல்ல. பப்ளிக் கேமிங் இன்டர்நேஷனல் பத்திரிகை சமீபத்தில் கணக்கிட்டபடி “102 நாடுகளில் 306 வகை லாட்டரிகள் உள்ளன.” உண்மையில் சூதாட்டம் பாரெங்கும் பரவியுள்ள ஒரு மோகம்தான்; இது அதிக நன்மைகளை அள்ளித்தரும் ஒரு மோகம் என சிலர் சொல்கின்றனர்.

ஐக்கிய மாகாணங்களில் 1964 முதல் 1999 வரை, “மாநில அரசாங்கத்தின் நிதிக்கு சுமார் 6,00,000 கோடி ரூபாயை [லாட்டரி] ஈட்டித் தந்தது; இதில் பெரும்பகுதி 1993 முதற்கொண்டு கிடைத்தது” என பொது சூதாட்ட ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதியான ஷேரன் ஷார்ப் கூறுகிறார். இப்பணத்தில் பெரும்பாலானவை பொதுக் கல்வி திட்டங்களுக்கும், பொது பூங்காக்களுக்கும், பொது விளையாட்டு அரங்கங்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டது. சூதாட்ட துறை, பெரும் எண்ணிக்கையானோருக்கு வேலை வாய்ப்பும் தருகிறது; ஆஸ்திரேலியாவில் மட்டுமே, 7,000-⁠க்கும் மேலான பிசினஸ்களில் இது சுமார் 1,00,000 பேரை வேலைக்கு அமர்த்துகிறது.

ஆகவே, சூதாட்டம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, சட்டப்பூர்வ சூதாட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, அரசாங்கத்திற்கு வரி வடிவில் வருவாயை அளிக்கிறது, நலிவடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது என சூதாட்டத்தை ஆதரிப்பவர்கள் விவாதிக்கிறார்கள்.

எனவே, ‘சூதாடுவதில் என்ன தவறு இருக்கிறது?’ என அநேகர் கேட்கலாம். இதற்கு பின்வரும் கட்டுரைகளில் பதில் காணலாம்; அது சூதாட்டத்தைப் பற்றிய உங்கள் கருத்தை மாற்றலாம். (g02 7/22)

[பக்கம் 3-ன் படம்]

ஜான்

[பக்கம் 3-ன் படம்]

காஸுஷிகி

[பக்கம் 3-ன் படம்]

லின்டா