வாகன விபத்துக்கள்—நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
வாகன விபத்துக்கள்—நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
“டிரைவிங்கைப் பொறுத்தவரை எனக்கு நல்ல ரெக்கார்டு இருக்கிறது, எனவே வாகன விபத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை.” “இளம் டிரைவர்களுக்கும் முரட்டுத்தனமான டிரைவர்களுக்கும்தான் விபத்துக்கள் நேரிடும்.” தங்களுக்கு வாகன விபத்து ஒருபோதும் நேரிடாது என அநேகர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? வாகன விபத்துக்களைப் பொறுத்தவரை அவை உங்களைப் பாதிக்கவே பாதிக்காதா?
நீங்கள் வளரும் நாடு ஒன்றில் வசித்துவந்தால் உங்கள் வாழ்நாள் காலத்தில் ஒருமுறையாவது போக்குவரத்து விபத்தால் பாதிக்கப்படுவீர்கள் என புள்ளிவிவரம் காட்டுகிறது. அநேகருக்கு அத்தகைய விபத்துக்கள் சாவை முத்தமிட வைத்திருக்கின்றன. உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் இப்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போக்குவரத்து விபத்தில் சாகிறார்கள். கடந்த வருடம் விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒருவேளை அப்படிப்பட்ட நிலை தங்களுக்கு ஒருபோதும் வராது என நினைத்திருக்கலாம். நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க என்ன செய்யலாம்? தவிர்ப்பதே திறவுகோல். தூங்கி வழிவதாலும் முதுமையின் பாதிப்புகளாலும் ஏற்படும் விபத்துக்களை நீங்கள் எப்படி தவிர்க்கலாம் என்பதைக் கவனியுங்கள்.
தூங்கி வழியும் டிரைவர்
தூங்கி வழியும் டிரைவர் குடித்துவிட்டு ஓட்டும் டிரைவரைப் போலவே ஆபத்தானவராக இருக்கலாம் என நிபுணர்கள் சிலர் சொல்கிறார்கள். தூக்கக் கலக்கத்தில் ஓட்டுவதாலேயே விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. நார்வேயில் ஒரு வருடத்தில் மட்டும், 12 மோட்டார் வாகன ஓட்டுநரில் ஒருவர் வாகனம் ஓட்டுகையில் தூங்கி விழுந்ததாக அறிக்கை செய்யப்பட்டதைப் பற்றி சமீபத்தில் ஃப்ளீட் மெய்ன்டனன்ஸ் அண்ட் சேஃப்டி ரிப்போர்ட் குறிப்பிட்டது. வாகனங்களின் மோதல்களால் ஏற்படும் மொத்த விபத்துக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஓட்டுநரின் களைப்பே காரணம் என தென் ஆப்பிரிக்கா, ஜோஹன்ஸ்பர்க்கின் செய்தித்தாள் த ஸ்டார் சொல்கிறது. எங்குமுள்ள ஓட்டுநர்களை களைப்பு பாதிப்பதாக பிற நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. தூங்கி வழியும் டிரைவர்கள் ஏன் இத்தனை அநேகம்?
ஓய்வு ஒழிச்சல் இல்லாத இன்றைய வாழ்க்கை சூழலே இப்பிரச்சினைக்குக் காரணமான அம்சங்களில் ஒன்று. அமெரிக்கர்கள் “முந்தைய நூற்றாண்டின் ஆரம்பத்தில் தூங்கியதைவிட ஒவ்வொரு இரவும் ஒன்றரை மணிநேரம் குறைவாகவே தூங்குகின்றனர்; இப்பிரச்சினை இன்னும் மோசமடையலாம்” என நியூஸ்வீக் பத்திரிகை சமீபத்தில் அறிக்கை செய்தது. ஏன்? “தூக்கம் என்பதை அது இல்லாமலேயே சமாளிக்க முடிந்த ஏதோ ஒரு பொருளைப் போல மக்கள் கருதுகிறார்கள். இராப்பகல் தூக்கமின்றி கடினமாக உழைப்பவரே முன்னேற்றப் பாதையில் பயணிப்பவராக கருதப்படுகிறார்” என டெர்ரீ யங் என்ற தூக்க நிபுணர் சொன்னதாக அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது.
சராசரி மனிதனுக்கு ஒவ்வொரு இரவும் ஆறரை முதல் ஒன்பது மணிநேர தூக்கம் தேவை என சொல்லப்படுகிறது. அது கிடைக்காமல் போகையில், “தூக்கக் கடனை” மக்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். AAA போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் விநியோகித்த ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு வாரத்தில் சாதாரண வேலை நாட்களில் ஒவ்வொரு இரவும் தேவைப்படும் தூக்க அளவில் 30 அல்லது 40 நிமிடம் குறைவாக தூங்கினால்கூட வார இறுதியில் 3 முதல் 4 மணிநேர தூக்கக் கடனை சுமக்கலாம். அது பகல் நேர தூக்க மயக்கத்தின் அளவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க போதுமானதாக உள்ளது.”
சிலசமயங்களில் உங்களுக்கு இரவில் நன்கு தூங்க முடியாமல் போகலாம். உறக்கமின்மை கோளாறோ, நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் கவனித்துக் கொள்வதோ, அல்லது உங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணிகளோ உங்கள் தூக்கத்தைத் திருடிக் கொள்ளலாம். மறுநாள் வாகனம் ஓட்டுகையில் கண் சொக்குவதை நீங்களே உணரலாம். இப்படி நேரிடுகையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கஃபேன் குடிப்பது, சன்னலைத் திறந்து வைப்பது, சூயிங்கம் மெல்லுவது அல்லது காரமாக எதையாவது சாப்பிடுவது போன்ற பலரும் பின்பற்றும் “பரிகாரங்கள்” தூங்கிவிழாமல் இருப்பதில் உங்களுக்குக்
கைகொடுத்து உதவாது. இந்தப் “பரிகாரங்கள்” எதுவும் உண்மையில் பிரச்சினையை தீர்ப்பவையாக இல்லை. உங்களுக்கு தேவையானதெல்லாம் தூக்கம் மட்டுமே. அப்படியிருக்க ஏன் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்திருக்க முயற்சி செய்யக்கூடாது? த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு ஆலோசனை அளித்தது: “வேலை நாளில் புத்துணர்ச்சி பெற 30 நிமிடத்திற்கு மேல் குட்டித் தூக்கம் போடக்கூடாது; அதற்கு மேல் தூங்கினால் உடல் ஆழ்ந்த தூக்கத்தில் இறங்கிவிடும், பிறகு எழுந்திருப்பது கடினம்.” குட்டித் தூக்கத்தால் நீங்கள் போய் சேர வேண்டிய இடத்திற்கு சற்று தாமதமாக போக நேர்ந்தாலும் அது உங்கள் வாழ்நாளை நீடிக்க செய்யலாம்.உங்கள் வாழ்க்கை முறை, தூங்கி வழியும் டிரைவராக ஆகும் ஆபத்தான நிலைக்கு உங்களைக் கொண்டுபோய் விடலாம். மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் நேரத்தை செலவழிக்கிறீர்களா, அல்லது கொட்டக் கொட்ட விழித்திருந்து நடுராத்திரி வரை டிவி பார்க்கிறீர்களா? விடியற்காலை வரை நீடிக்கும் பார்ட்டிகளுக்கு செல்கிறீர்களா? அப்படிப்பட்ட பழக்கங்கள் உங்கள் தூக்கத்தைத் திருடுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். வெறும் ‘ஒரு கைப்பிடியளவு ஓய்வின்’ மதிப்பை ஞானமுள்ள ராஜா சாலொமோன் ஒருமுறை வலியுறுத்தினார்.—பிரசங்கி 4:6, NW.
அனுபவசாலி, ஆனாலும் முதிர்ந்தவர்
வயதான டிரைவர்கள் பெரும்பாலும் வாகனம் ஓட்டுவதில் பெரும் அனுபவசாலிகள். மேலும், சிலசமயங்களிலேயே அவர்கள் ரிஸ்க் எடுத்துக்கொள்கிறார்கள், தங்கள் வரையறைகளை அறிந்திருக்கிறார்கள். எனினும், இந்த வயதான டிரைவர்கள் வாகன மோதல்களுக்கு ஆளாகாதவர்கள் அல்ல. சொல்லப்போனால், வயதாக ஆக இத்தகைய விபத்துக்களில் அவர்கள் அதிகம் சிக்கிக்கொள்ளலாம். “ஜனத்தொகையில் 70 வயதைக் கடந்தவர்கள் 9 சதவீதம் உள்ளனர், ஆனால் அவர்களே 13 சதவீதம் போக்குவரத்து விபத்துக்களுக்கு பலியாகிறவர்கள்” என கார் & டிராவல் என்ற ஐ.மா. பத்திரிகை அறிக்கை செய்தது. வயதான டிரைவர்கள் உட்பட்ட மோதல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வருந்தத்தக்க விஷயம்.
80 வயதான மர்டில் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களைக் கவனியுங்கள். a அவர் 60-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் ஓட்ட ஆரம்பித்தார், இதுவரை எந்த வாகன விபத்திலும் சிக்கவில்லை. ஆனால், மற்றவர்களைப் போலவே அவரும் முதுமையின் பாதிப்புகளை—விபத்து நேருவதை அதிக சாத்தியமாக்கும் பாதிப்புகளை—உணருகிறார். “வயசாக ஆக [வாகனம் ஓட்டுவது உட்பட] வாழ்க்கையில் எல்லாமே கஷ்டமானதாக ஆகிவிடுகிறது” என சமீபத்தில் விழித்தெழு!-விடம் கூறினார்.
வாகன விபத்தை சந்திக்கும் சாத்தியத்தை குறைக்க அவர் என்ன செய்திருக்கிறார்? “சில வருடங்களாக என் முதுமையை சமாளிக்க சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன்” என்கிறார் மர்டில். உதாரணமாக, வாகனம் ஓட்டுவதை அதிலும் முக்கியமாக இரவில் ஓட்டுவதை வெகுவாக குறைத்திருக்கிறார். இந்தச் சிறிய மாற்றம், ஓட்டுவதற்கு ஒரேயடியாக முழுக்குப் போடுவதற்குப் பதிலாக பாதுகாப்பான பதிவைக் காத்துக்கொள்ள அவருக்கு உதவுகிறது.
ஒப்புக்கொள்ள கடினமாக இருந்தாலும் முதுமை எல்லாரையும் பெரிதும் பாதிக்கிறது. (பிரசங்கி 12:1-7) பல்வேறு உடல்நல பிரச்சினைகள் தலைதூக்குகின்றன, நாம் ரொம்பவே மெதுவாக பிரதிபலிக்கிறோம், நம்முடைய கண் பார்வை மங்குகிறது; இவை அனைத்துமே பாதுகாப்பாக ஓட்டுவதை கடினமாக்கலாம். எனினும், முதுமை வாகனம் ஓட்டுவதற்கு ஒருவரை தகுதியற்றவராக ஆக்குவதில்லை. அவர் எவ்வளவு நன்கு ஓட்டுகிறார் என்பதுதான் முக்கியம். நம்முடைய சரீர திறன்களில் மாற்றங்கள் ஏற்படுவதை ஒப்புக்கொள்வதும் நம்முடைய அன்றாட காரியங்களில் தேவையான மாற்றங்கள் செய்வதும் நன்கு வாகனம் ஓட்டும்படி நம்மை முன்னேற்றுவிக்கலாம்.
நீங்கள் கவனியாதிருந்தாலும் உங்கள் பார்வை திறன் மாறிவருகிறது. உங்களுக்கு வயதாகையில் பக்க பார்வை (peripheral vision) குறைகிறது, விழித்திரைக்கு அதிக வெளிச்சம் தேவைப்படுகிறது. “வாலிபர் பார்ப்பது போல் தெளிவாக பார்க்க, 60 வயது டிரைவருக்கு மும்மடங்கு கூடுதலான வெளிச்சம் தேவைப்படுகிறது, வெளிச்சத்திலிருந்து இருளுக்கு வருகையில் அந்த மாற்றத்தை சமாளிக்க இரண்டு மடங்குக்கும் அதிக நேரம் அவருக்கு தேவைப்படும்” என வயதான, விவேகமுள்ள ஓட்டுநர் என்ற ஆங்கில சிற்றேடு குறிப்பிடுகிறது. நம் கண்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதைக் கடினமாக்கலாம்.
ஹென்றிக்கு 72 வயது, 50 வருடத்திற்கும் அதிகமாக பாதுகாப்பான ஓட்டுனர் என்ற ரெக்கார்டை வைத்திருக்கிறார். வருடங்கள் உருண்டோடுகையில், இரவு நேர வாகன வெளிச்சம் கண்களை கூச செய்வதால் வாகனம் ஓட்டுவது கடினமாக இருப்பதை கவனிக்க ஆரம்பித்தார். கண் பரிசோதனைக்குப் பின்பு, இரவு நேர வாகன வெளிச்சத்தால் கண் கூசாமலிருக்க உதவும் புதிய கண்ணாடி தனக்குத் தேவை என்பதை அறிந்தார்.
“இப்போது இரவில் வாகனம் ஓட்டுவது கஷ்டமாக இல்லை” என்கிறார் ஹென்ரி. அவருக்கு இந்தச் சிறிய மாற்றம் வாகனம் ஓட்டுவதில் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணியது. மர்டில் போன்ற மற்றவர்களுக்கு இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுவதே நல்லதாக இருக்கலாம்.ஒருவர் பிரதிபலிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் முதுமை பாதிக்கிறது. இளைஞரைவிட வயதானவர்கள் விவேகிகள், அதிக கெட்டிக்காரர்கள். எனினும், வயதாக ஆக தகவலை புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் செயல்படுவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. போக்குவரத்தும் சாலை நிலைமைகளும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால் இது வாகனம் ஓட்டுவதை அதிக சவால்மிக்கதாக்குகிறது. சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மாற்றங்களை உடனடியாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
“மூத்த ஓட்டுநர்கள் மத்தியில் சாவுக்கேதுவான விபத்துக்களுக்கு பெரும்பாலும் முக்கிய காரணமாக இருப்பது, வயதான ஓட்டுநர் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை மீறி சென்றுவிடுவதுதான்” என கார் & டிராவல் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஏன்? அதே அறிக்கை தொடர்ந்து சொல்வதாவது: “பிரச்சினையானது, . . . அந்த சமயத்தில் வயதான ஓட்டுநர் ஒருவர் சாலை சந்திப்பை கடந்து செல்வதற்கு முன்பு, இடது புறமும் வலது புறமும் பார்வையை ஓடவிட்டு மாறிக்கொண்டிருக்கும் தகவலை மதிப்பிட்டு செயல்பட வேண்டிய சூழ்நிலைகளோடு சம்பந்தப்பட்டதாக தோன்றுகிறது.”
மெதுவாக செயல்படுவதை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்? சாலை சந்திப்புகள் நெருங்குகையில் கவனமாக இருங்கள். நீங்கள் கடந்து செல்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை போக்குவரத்துக்கு கவனம் செலுத்த பழகிக்கொள்ளுங்கள். திருப்பத்தில் முக்கியமாக எச்சரிக்கையாக இருங்கள். தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டிருக்கையில், முக்கியமாக வழியில் நீங்கள் தடங்களை (lanes) கடக்க வேண்டியிருந்தால், சாலை சந்திப்புகளில் வாகனத்தைத் திருப்புவது உயிரையே குடித்துவிடலாம்.
ஐக்கிய மாகாணங்களில், 75 வயதைக் கடந்த ஓட்டுநர்களின் உயிரைக் குடிக்கும் சாலை சந்திப்பு விபத்துக்களில் 40 சதவீதமானவை இடது புறம் திரும்புகையில் நிகழ்ந்தவை. AAA போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் அந்நாட்டிலுள்ள டிரைவர்களுக்கு பின்வரும் ஆலோசனையை வழங்கியது: “செல்ல வேண்டிய இடத்தை அடைய, ஒருமுறை இடது புறம் திருப்புவதை தவிர்ப்பதற்காக சிலசமயங்களில் மூன்று முறை வலது புறம் திரும்பி செல்ல பாதை இருக்கலாம்.” நீங்கள் வசிக்கும் இடத்தின் அமைப்புக்கு ஏற்ப அந்த நியமத்தை நீங்கள் பின்பற்ற முயலலாம். முன்னதாகவே கொஞ்சம் திட்டமிடுகையில் ஆபத்தான, சவால் நிறைந்த சாலை சந்திப்புகளை தவிர்க்கலாம்.
கவனம் செலுத்த வேண்டிய தீர்மானம்
உங்கள் ஓட்டும் திறமைகளை சீர்தூக்கிப் பார்க்க எது உதவலாம்? நீங்கள் வாகனம் ஓட்டுகையில் மதிப்புமிக்க ஒரு நண்பரையோ குடும்பத்தாரையோ உடன் அழைத்துச் சென்று உங்கள் திறமைகளை மதிப்பிடும்படி அவரிடம் கேட்கலாம். பின்னர், அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு கவனமாக செவிசாயுங்கள். பாதுகாப்பாக ஓட்டுவதற்கு பயிற்சி பெறவும் நீங்கள் தீர்மானிக்கலாம். பல டிரைவிங் அமைப்புகள் முதிர்ந்த ஓட்டுநர்களுக்காகவே விசேஷ பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. ஆபத்தான சூழ்நிலைகளை ஓரிரு முறை நீங்கள் சந்தித்திருந்தால் முன்பு போல் உங்கள் ஓட்டும் திறமைகள் சிறந்ததாக இல்லை என்பதை எச்சரிக்கும் அடையாளங்களாக அவை இருக்கலாம்.
நியாயமாக பார்த்தால், ஒரு கட்டத்தில் வாகனம் ஓட்டுவதற்கு “குட்பை” சொல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும். அப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பது வேதனையும் வருத்தமும் அளிக்கலாம். முன்னர் குறிப்பிடப்பட்ட மர்டில் சீக்கிரத்தில் ஒருநாள் வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டிய கட்டம் வரும் என்பதை அறிந்திருக்கிறார். அந்த நாள் நெருங்குவதால் ஏற்கெனவே அவர் அடிக்கடி மற்றவர்களுடன் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். வேறொருவர் ஓட்டும்படி விட்டுக்கொடுப்பதை அவர் எப்படி கருதுகிறார்? “ஓட்டுகையில் ஏற்படும் மன அழுத்தங்களை அனுபவிக்காமல் சுகமாக பயணிப்பது இதமாக இருக்கிறது” என்கிறார்.
இந்த விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்திய பிறகு, நீங்களும் அவ்வாறே உணரலாம். கடைகளுக்குச் செல்வது, சிறு சிறு வேலைகளை செய்ய செல்வது, முன்னேற்பாடு செய்திருந்த இடங்களுக்கும் கூட்டங்களுக்கும் செல்வது போன்றவற்றிற்கு நண்பருடன் செல்வது அதிக சந்தோஷத்தைத் தரும். ஒருவேளை உங்கள் காரிலேயே அந்த நண்பர் உங்களை அழைத்து செல்லலாம். அவ்வாறு பயணிப்பது தனியாக செல்வதைவிட பாதுகாப்பானதாகவும் அதிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கலாம். முடிந்தால் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவது நடைமுறையான மற்றொரு வழியாக இருக்கலாம். உங்கள் மதிப்பு உங்கள் ஓட்டும் திறமையை சார்ந்தில்லை என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் நற்குணங்களே உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும், ஏன் கடவுளுக்கும் முன் உங்களை உண்மையில் மதிப்புமிக்கவராக்குகின்றன.—நீதிமொழிகள் 12:2; ரோமர் 14:18.
நீங்கள் வயதானவரோ இளைஞரோ, அனுபவசாலியான டிரைவரோ கற்றுக்குட்டியோ வாகன விபத்துக்களால் நேரும் ஆபத்துகளை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஓட்டுவதில் உட்பட்டுள்ள முக்கிய பொறுப்பை உணர்ந்தவராக இருங்கள். மோதும் வாய்ப்புகளை குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் இனி பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணங்களில் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம். (g02 8/22)
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையிலுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 28-ன் படம்]
இரவில் நன்கு தூங்குவதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான “எரிபொருள்” இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
[பக்கம் 29-ன் படம்]
குட்டித்தூக்கத்தால் சற்று தாமதம் ஏற்படலாம், ஆனால் அது உயிர்களைக் காக்கலாம்
[பக்கம் 29-ன் படம்]
வயதான டிரைவர்கள் அதிக அனுபவசாலிகள், ஆனால் விசேஷ சவால்களை சந்திக்கிறார்கள்
[பக்கம் 30-ன் படம்]
நண்பருடன் பயணிப்பதில் பயன்கள் உண்டு