Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அ(ம்மா)ப்பாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை?

அ(ம்மா)ப்பாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை?

இளைஞர் கேட்கின்றனர் . . .

அ(ம்மா)ப்பாவுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை?

“அம்மாவை அப்பா டைவர்ஸ் செய்ததற்கு முன்னால நாங்கள் அடிக்கடி பீச்சுக்குப் போவோம், ஓட்டலுக்குப் போவோம், பல இடங்களுக்கு காரில் சுற்றுவோம். அதுக்கப்புறம் எல்லாமே முடிஞ்சுபோச்சு. அப்பா அடியோட மாறிட்டார். அவர் என்னையும் சேர்த்து டைவர்ஸ் செய்திட்ட மாதிரிதான் நினைக்கத் தோணுது.”​கேரன். a

இதுபோன்ற உள்ளக் குமுறலே எண்ணற்ற இளைஞர்களை ஆட்டிப் படைக்கிறது. கேரனைப் போலவே, அப்பா(அம்மா)வுக்கு தங்கள்மீது இப்பொழுதெல்லாம் பாசமில்லை, அல்லது எப்போதுமே பாசம் இருந்ததில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே சிலசமயங்களில் ஏற்படும் மனஸ்தாபங்களால் அந்த நேரத்துக்கு ஏற்படும் வெறுப்பை நாங்கள் இங்கு குறிப்பிடவில்லை; கண்டிக்கப்படுவதால் பெற்றோர் மீது சிலசமயங்களில் ஏற்படும் கசப்புணர்ச்சியையும் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான கவனிப்பையும் சிட்சையையும் அளிக்காமல் அவர்களை உண்மையிலேயே புறக்கணிக்கும் குற்றத்தை செய்கின்றனர். வேறு சில பெற்றோரோ, தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்து, முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றனர்; ஒருவேளை கன்னாபின்னாவென வாய்க்கு வந்தபடி வசைபாடுகின்றனர் அல்லது செம்மையாக அடித்து உதைக்கின்றனர்.

பெற்றெடுத்த தாய் தந்தையாலேயே புறக்கணிக்கப்படும் வேதனை வேறெந்த வேதனையையும்விட கொடியது. “ஒருத்தரும் என்னை சட்டை செய்வதே இல்லை, நான் இருக்கிறதினால் யாருக்கு என்ன பிரயோஜனம் என நினைக்க தோன்றியது” என்கிறாள் கேரன். உங்களுக்கு அப்படிப்பட்ட சங்கடமான நிலை ஏற்பட்டிருக்குமேயானால், உங்கள் உள்ளக் குமுறலை தணிக்க சில ஆலோசனைகளை கவனியுங்கள். உங்கள் அ(ம்மா)ப்பா உங்களை கைவிட்டாலும், வாழ்க்கையில் நீங்கள் வெற்றி நடை போட முடியும் என்பதில் உறுதியாக இருங்கள்!

உங்கள் அ(ம்மா)ப்பாவை புரிந்துகொள்ளுதல்

முதலில், உங்கள் அ(ம்மா)ப்பா உங்களிடம் பாச மழை பொழியும்படி நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே. சூரியோதயம் இயற்கையானது, நம்பத்தக்கது; பிள்ளைகள்மீது பெற்றோர் காட்டும் பாசமும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பாசத்தைக் காட்டும்படியே கடவுளும் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார். (கொலோசெயர் 3:21; தீத்து 2:4) அப்படியிருக்கையில் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏன் புறக்கணிக்கின்றனர், கைவிடுகின்றனர், அல்லது மோசமாக நடத்துகின்றனர்?

அவர்கள் வாழ்க்கையில் அடிபட்ட அனுபவங்கள் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ‘பிள்ளைகளை வளர்க்கும் முறையை என் பெற்றோர் எப்படி கற்றார்கள்?’ என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அநேக பெற்றோர், தாங்கள் பிள்ளைகளாய் இருந்தபோது தங்கள் பெற்றோர் தங்களை வளர்த்த விதத்தைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். “சுபாவ அன்பில்லாத”வர்கள் என்றுமிராதளவுக்கு பெருகியுள்ள இந்தக் கொடிய உலகில், பெற்றோரின் உதாரணத்தைப் பார்த்து கற்றுக்கொள்வது பெரும்பாலும் குறைபாடுகள் நிறைந்ததாய் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இதனால்தான் அவர்களும் சில சமயங்களில் தங்கள் பிள்ளைகளிடம் அவ்வாறே முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றனர்; சங்கிலித் தொடர் போல், தங்கள் பெற்றோர் தங்களை நடத்திய விதத்திலேயே தங்கள் பிள்ளைகளையும் அவர்கள் மோசமாக நடத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், எத்தனையோ காரணங்களால் பெற்றோர் பெரும் வருத்தத்தில் இருக்கலாம். சிலர் தங்களது கஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் மறக்க முயன்று, வேலையே கதியென அதில் மூழ்கி விடலாம், மதுபானத்திற்கு அடிமையாகலாம், அல்லது போதைப் பொருட்களின் பிடியிலே சிக்கி தவிக்கலாம். உதாரணமாக, வில்லியம், ஜோன் ஆகியோரின் அப்பா ஒரு குடிகாரர். “எங்க அப்பா எங்களைப் பாராட்டினதாகவே ஞாபகமில்லை” என்கிறாள் ஜோன். “அதைவிட, குடிக்க ஆரம்பித்தவுடன் வெறித்தனமாக அவர் நடந்துகொள்வதை சகிக்கவே முடியாது. சாயங்காலம் முழுவதும் அம்மாவிடம் கத்தி கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார். எனக்கு ஒரே பயமாக இருக்கும்” என்றும் அவள் கூறுகிறாள். பெற்றோர் வெளிப்படையாக திட்டித் தீர்க்காவிட்டாலும், அவர்களுடைய பழக்க வழக்கத்தால் பிள்ளைகளுக்குத் தேவையான பாசத்தைக் காட்டவும், கவனிப்பைக் கொடுக்கவும் அவர்களுக்குத் தெம்பு இருப்பதில்லை.

வில்லியமின் அப்பா எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார் என்றே சொல்ல முடியாது; அது ஏன் என்று தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக வில்லியம் சொல்கிறான். “என் அப்பா இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் ஜெர்மனியில் பெர்லின் நகரில் வளர்ந்தவர். அவர் சின்னப் பையனாக இருக்கையில், தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்தவர், ஏராளமான சாவை நேரில் கண்டவர். வயிற்றுப்பாட்டிற்காக தினம் தினம் உயிரை பணயம் வைத்து போராடியவர். அப்படிப்பட்ட அனுபவங்கள் அவரை பெரிதும் பாதித்துவிட்டதாக தோன்றுகிறது” என்று வில்லியம் விவரிக்கிறான். கடுமையாக ஒடுக்கப்படுகையில் மக்கள் நிதானம் இழக்க வாய்ப்புண்டு என்பதாக பைபிளும் ஒத்துக்கொள்கிறது.​—பிரசங்கி 7:⁠7, NW.

வாழ்க்கையில் பட்ட பாடுகளால்தான் அப்பா தங்களை மோசமாக நடத்துகிறார், ஆகவே அவர்மீது தப்பில்லை என்று வில்லியமும் ஜோனும் உணர்ந்தார்களா? “இல்லை” என்கிறான் வில்லியம். “அவருடைய குடிவெறிக்கும் மோசமான நடத்தைக்கும் அவர் வளர்ந்த சூழலை ஒரு சாக்காக சொல்லவே முடியாது. என்றாலும், அதை அறிந்திருப்பது அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறாரென நன்றாக புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது.”

உங்கள் பெற்றோர் அபூரணர் என்பதை ஏற்றுக்கொள்வதும், அவர்களுடைய பின்னணியை ஓரளவு தெரிந்துகொள்வதும், அவர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு பெரிதும் உதவும். “மனுஷனுடைய விவேகம் [“உட்பார்வை,” NW] அவன் கோபத்தை அடக்கும்” என்று நீதிமொழிகள் 19:11 கூறுகிறது.

உங்கள் உணர்வுகளை சமாளித்தல்

வீட்டுச் சூழ்நிலையால் எதிர்மறை உணர்வுகளும் உங்களை ஆட்டிப் படைக்கலாம். உதாரணமாக, தன் அப்பா அம்மா இருவருமே தன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததால், “தான் எதற்குமே லாயக்கில்லாதவள், தன்னைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது” என்ற முடிவுக்கு வந்தாள் பட்ரீஷ்யா. லனீஷாவுக்கு எட்டே வயதிருந்தபோது அவள் அப்பா வீட்டை விட்டுப் போனதால் ஆண்களை நம்புவதே அவளுக்கு கடினமாக இருந்தது. “போதைப் பொருட்களுக்கு அடிமையாகிப் போன” அம்மா தன்னைக் கவனிக்காததால் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை சமாளிக்க யாரைக் கண்டாலும் சரி, அவர்களின் பாசம் தனக்கு கிடைக்காதா என்று பெரும்பாலும் ஏங்கினாள் ஷேலா.

கோபமும் பொறாமையும்கூட பிரச்சினைகளாய் இருப்பதுண்டு. மறுமணம் செய்துகொண்ட தன் அப்பா, தனக்கு சேர வேண்டிய அன்பையெல்லாம் அந்தப் புதிய குடும்பத்திடமே காட்டியதைக் கண்டபோது கேரனுக்கு “ஒரு கட்டத்தில் பொறாமை தாளவில்லை.” லேலானீ என்ற பெண்ணோ, தன் பெற்றோரை வெறுப்பதாகக்கூட சில சமயங்களில் உணர்ந்தாள். “எதற்கெடுத்தாலும் அவர்களோடு மல்லுக்கு நிற்பேன்” என்கிறாள் அவள்.

சூழ்நிலைகளை சிந்தித்தால், இப்படிப்பட்ட உணர்வுகள் தலைதூக்குவது புரிந்துகொள்ளத்தக்கதே. என்றாலும், அப்படிப்பட்ட எதிர்மறை உணர்வுகளை உங்களால் ஆக்கபூர்வமாக சமாளிக்க முடியுமா? பின்வரும் ஆலோசனைகளை கவனியுங்கள்.

யெகோவா தேவனிடம் நெருங்கி வாருங்கள். (யாக்கோபு 4:8) தனிப்பட்ட பைபிள் படிப்பு, கடவுளுடைய ஜனங்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்வது ஆகியவற்றின் உதவியால் நீங்கள் அவரிடம் நெருங்கி வரலாம். யெகோவா பிறரை நடத்தும் விதத்தை காண்கையில், அவர் உண்மைப் பற்றுறுதி உள்ளவர் என்பதை தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் அவரை நம்பலாம். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என்று யெகோவா இஸ்ரவேலரை கேட்டார். “அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” என்று அவர் வாக்குறுதி அளித்தார். (ஏசாயா 49:15) ஆகவே எப்போதும் கடவுளிடம் ஜெபியுங்கள். ஜெபத்தில், தப்புத்தவறு இல்லாத சரியான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணி கவலைப்படாதீர்கள். அவர் உங்களைப் புரிந்துகொள்கிறார். (ரோமர் 8:26) உங்களை யாருமே நேசிக்காததுபோல் தோன்றினாலும், யெகோவா நேசிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.​—சங்கீதம் 27:⁠10.

வயதில் மூத்த, நம்பகமான ஒருவரிடம் மனம் திறந்து பேசுங்கள். ஆவிக்குரிய விதத்தில் முதிர்ந்தவர்களின் நட்பை நாடுங்கள். உங்கள் உணர்வுகளையும் கவலைகளையும் அவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையில், ஆவிக்குரிய தாய், தகப்பன்மார் இருக்கிறார்கள். (மாற்கு 10:29, 30) ஆனால் உங்கள் உள்ளத்தில் இருப்பதை நீங்கள்தான் முதலில் மனந்திறந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் உங்கள் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது. உங்கள் மனபாரத்தை இறக்கி வைக்கையில் கிடைக்கும் நிம்மதியே உங்களுக்கு ஏற்பட்ட ரணத்திற்கு அருமருந்தாய் அமையலாம்.​—1 சாமுவேல் 1:12-18.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சுறுசுறுப்பாயிருங்கள். சுயபச்சாதாபம் என்னும் குழியில் விழுந்துவிடுவதை தவிர்ப்பதற்கு, உங்களுடைய சூழ்நிலையின் கசப்பான அம்சங்களையே நினைத்து நினைத்து உருகாதீர்கள். அதற்கு பதிலாக, உங்களிடம் உள்ள நல்ல அம்சங்களுக்காக நன்றியோடு இருக்க கற்றுக்கொள்ளுங்கள். ‘தனக்கானவைகளையல்லாமல், பிறருக்கானவைகளை நோக்குவதற்கு’ கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். (பிலிப்பியர் 2:4) ஆவிக்குரிய இலக்குகளை வையுங்கள், பின்பு நம்பிக்கையோடு அவற்றை அடைய கடினமாக உழையுங்கள். கிறிஸ்தவ ஊழியத்தில் பிறருக்கு உதவுவது, உங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தாமல் பிறர்மீதும் கவனம் செலுத்த மிகச் சிறந்த வழியாகும்.

எப்போதும் உங்கள் பெற்றோருக்கு மரியாதை காட்டுங்கள். பைபிள் நியமங்களையும் தராதரங்களையும் நெருங்க பின்பற்ற வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். அதில், உங்கள் பெற்றோருக்கு மரியாதை காட்டுவதும் அடங்கும். (எபேசியர் 6:1, 2) அப்படிப்பட்ட மரியாதை, பழிவாங்கும், பதிலுக்குப் பதில் தீமை செய்யும் மனோபாவத்தை தடுக்கும். உங்கள் பெற்றோர் தவறாக நடந்துகொள்வதாக நினைத்து நீங்களும் தவறாக நடந்துகொள்வது ஒருபோதும் சரியாகாது என்பது நினைவிருக்கட்டும். எனவே, எல்லாவற்றையும் யெகோவா பார்த்துக்கொள்வார் என விட்டுவிடுங்கள். (ரோமர் 12:17-21) அவர் “நியாயத்தை விரும்புகிறவர்”; பிள்ளைகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர். (சங்கீதம் 37:28; யாத்திராகமம் 22:22-24) உங்கள் பெற்றோருக்குரிய மரியாதையைத் தொடர்ந்து காட்டுகையில், கடவுளுடைய ஆவியின் கனிகளையும்​—எல்லாவற்றுக்கும் மேலாக அன்பையும்​—வளர்த்துக் கொள்ள முயலுங்கள்.​—கலாத்தியர் 5:22, 23.

வெற்றி உங்கள் பக்கம்

பெற்றோர் பாசம் காட்டாதபோது மனம் வேதனையால் துடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பெற்றோரின் தோல்வி உங்கள் குணாதிசயத்தை பாதிக்க வேண்டியதில்லை. மேற்கூறப்பட்ட பைபிள் நியமங்களை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியையும் வெற்றியையும் நீங்கள் தெரிந்தெடுக்கலாம்.

முன்பு குறிப்பிடப்பட்ட வில்லியம், யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகத்தில் முழுநேர வாலண்டியராக இருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “வேதனையான இச்சூழ்நிலைகளை சமாளிப்பதில் நமக்கு உதவ ஏராளமான ஏற்பாடுகளை யெகோவா தேவன் செய்திருக்கிறார். அப்படி அன்பையும் அக்கறையையும் காட்டும் பரலோக தகப்பன் நமக்கிருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!” அவருடைய தங்கையான ஜோனும் முழுநேர பயனியர் ஊழியராக இருக்கிறார். நற்செய்தியை பிரசங்கிப்போருக்கான தேவை அதிகம் உள்ள இடத்தில் அவர் சேவை செய்கிறார். “பெரியவர்களாகையில், ‘தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற’ தெளிவான வித்தியாசத்தை நாங்கள் கண்டோம்” என்கிறார் அவர். (மல்கியா 3:18) “சத்தியத்திற்காக போராடி, அதை சொந்தமாக்கிக் கொள்ளும் உறுதியான தீர்மானத்தை எடுக்க எங்கள் அனுபவங்கள் உதவின.”

உங்களைப் பொருத்ததிலும் அதுவே உண்மையாய் இருக்கலாம். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்கிறது பைபிள். (சங்கீதம் 126:5) அந்த வசனம் எப்படி பொருந்துகிறது? கஷ்ட காலங்களில் சரியான நியமங்களைக் கடைப்பிடிக்க நீங்கள் பெரும் பாடுபட்டீர்கள் என்றால் கடவுளின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பீர்கள்; காலப்போக்கில் உங்கள் வேதனைக் கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராக மாறிவிடும்.

ஆகவே, யெகோவா தேவனிடம் நெருங்கி வருவதற்கு பெரும் முயற்சி எடுங்கள். (எபிரெயர் 6:10; 11:6) வருடக்கணக்கில் கவலையாலும், ஏமாற்றத்தாலும், குற்றவுணர்வாலும் நீங்கள் குமுறிக்கொண்டு இருந்திருந்தால்கூட, அவை மெல்ல மெல்ல மாறி, அந்த இடத்தை “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” நிரப்பிவிடும்.​—பிலிப்பியர் 4:6, 7. (g02 9/22)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 11-ன் பெட்டி]

இப்படியெல்லாம் உணருகிறீர்களா?

• நீங்கள் லாயக்கற்றவர் அல்லது உதவாக்கரை

• மற்றவர்களை நம்புவது பாதுகாப்பற்றது அல்லது முட்டாள்தனமானது

• மற்றவர்கள் உங்களுக்கு எப்போதும் நம்பிக்கையூட்ட வேண்டும்

• உங்கள் கோபம் அல்லது பொறாமை எல்லை மீறுகிறது

இப்படியெல்லாம் நீங்கள் உணர்ந்தால், நம்பகமான பெற்றோரிடமோ, மூப்பரிடமோ, ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்த நண்பரிடமோ முடிந்தளவு சீக்கிரம் மனம்விட்டு பேசுங்கள்.

[பக்கம் 12-ன் படங்கள்]

உங்கள் உணர்வுகளை சமாளிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள்