உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
‘உலகின் சின்னஞ்சிறுசு’
இரண்டே சென்டிமீட்டர் நீளமுள்ள “உலகின் சின்னஞ்சிறு பல்லி” டொமினிகன் குடியரசுக்கு சொந்தமான ஹாராகுவா தேசிய பூங்காவிலுள்ள குகைகள் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இதன் உடல் எடையுடன் ஒப்பிட, புறப்பரப்பளவு மிக அதிகமிருப்பதால், நீரிழப்பு ஏற்படும் மிகப் பெரிய ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது” என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “இது பல்லி இனங்களில்மட்டுமே சின்னஞ்சிறுசு அல்ல, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 23,000 இனங்களின் தொகுதியாகிய ஏம்னியாட்டிஸ்களிலேயே மிகச் சிறியது ஆகும்.” இந்தச் சின்னஞ்சிறு பல்லியின் சைஸுடன் போட்டிக்கு நிற்பது அருகிலுள்ள பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் வசிக்கும் பல்லி இனம் மட்டுமே. இதைக் குறித்து அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுவதாவது: “கரிபியன் தீவு சின்னஞ்சிறு சிட்டாகிய தேன்சிட்டுவைக் குறித்தும் மார்தட்டிக் கொள்கிறது; இதன் நீளம் ஐந்து சென்டிமீட்டர். அதோடுகூட படுஒல்லியான பாம்பைக் குறித்ததிலும் கரிபியன் தீவுக்குப் பெருமையே; இது லெஸ்ஸர் ஆன்டில்லியன் திரெட் ஸ்நேக் ஆகும்; பென்ஸிலில் இருக்கும் கார்பன் லெட்டை நீக்கிய பின், அந்த துவாரத்தின் வழியாக இந்தப் பாம்பால் வளைந்து நெளிந்து உள்ளே செல்ல முடியுமெனில், இது எந்தளவுக்கு ஒல்லியாக இருக்குமென நீங்களே புரிந்துகொள்ளுங்களேன்.” (g02 9/8)
குறிசொன்னவர்களுக்கு படுதோல்வி
“குறி சொல்பவர்கள், சோதிடர்கள், ஞானதிருஷ்டி காண்பவர்கள் என அனைவருக்குமே 2001-ஆம் ஆண்டு படுதோல்வியைத் தேடித்தந்த ஆண்டு” என்கிறது ஜெர்மன் செய்தித்தாளான சூட்டோய்ச் ட்ஸைடுங். ஜெர்மனியின் பாராசயன்சஸ் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், அந்த வருடத்தில் நடக்கும் என கணிக்கப்பட்டவற்றை பரிசீலித்த பின்பு இந்த முடிவுக்கு வந்தனர். இதற்கு ஒரு காரணம், சோதிடர்கள்/கணிப்பாளர்கள் யாருமே செப்டம்பர் 11-ல் நடந்த தாக்குதல்களையோ ஆப்கானிஸ்தானில் நடந்த போரையோ முன்னறியவில்லை. ஜெர்மனியில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவைப் பற்றியும் முன்னறிவிக்கவில்லை. இதற்கு முரணாக, எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்றே நம்பிக்கை தெரிவித்தனர். ஞானதிருஷ்டி காணும் பெண்மணி, 2001-ஆம் வருடத்தில் இவ்வுலகில் “சமாதான யுகம்” பிறக்கும் என தைரியமாக முன்னுரைத்தார். இவ்வாறு மனிதர்கள் முன்னுரைக்கும் காரியங்கள் அத்திப்பூத்தாற்போல் எப்போதாவதே பலித்தாலும், இவற்றுள் எவை திட்டவட்டமாக பலிக்கும் என யாராலும் முன்னுரைக்க முடியாதென சொல்லும் அந்த செய்தித்தாள் மேலும் இவ்வாறு கூறினது: “என்றாலும், தவறுவது மனித இயல்பே என்பதற்கு கணிசமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.” (g02 9/8)
மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் பேரழிவு
ஜனவரியில் குளிர்காலத்தில் புயல்மழை பெய்தது; அதன் பின் ஏற்பட்ட உறை வெப்பநிலையால் மெக்ஸிகோவில் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் இரண்டு காலனிகள் நாசமாயின. “சியர்ரா சிங்க்குவா காலனியைச் சேர்ந்த மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளில் 74 சதவீதமும், ரோஸார்யோ காலனியைச் சேர்ந்தவற்றில் 80 சதவீதமும் கொல்லப்பட்டிருந்ததை” ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டதாக த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை கூறுகிறது. “சிறு காலனிகள் சிலவற்றோடு . . . இவ்விரண்டு பெரும் காலனிகளைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகளே ஐக்கிய மாகாணங்களின் கிழக்குப் பகுதியிலும் கனடாவிலும் காணப்படும் மொத்த மோனார்க்குகளை உருவாக்குபவை.” 22 முதல் 27 கோடி வண்ணத்துப்பூச்சிகள் குளிர் தாங்காமல் விறைத்துப்போய், அவை தஞ்சம் புகுந்திருந்த மரங்களிலிருந்து செத்து விழுந்தன. சில இடங்களில் 30 சென்டிமீட்டருக்கும் அதிக உயரத்திற்கு அவற்றின் சடலங்கள் குவிந்து கிடந்தன. எனினும் இந்த இழப்பால் இந்த வண்ணத்துப்பூச்சியினம் அடியோடு அழிந்து விடப்போவதில்லை என்று கருதப்படுகிறது; இருந்தாலும், இந்த வண்ணத்துப்பூச்சிகள் பெருமளவு குறைந்துவிட்டதால், வருங்கால வானிலை மாற்றங்களாலும் நோயாலும் இவை எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆண்டுதோறும் வசந்த காலத்தில் மெக்ஸிகோவிலிருந்து வடக்கு நோக்கி மொத்தமாய் இடம் பெயர்ந்து செல்லும் கண்கொள்ளாக் காட்சிக்கு பெயர் பெற்றவை. இவை ஐக்கிய மாகாணங்களின் தென்பகுதியில் முட்டையிடுகின்றன; அம்முட்டைகள் பின்பு வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி சிறகடிக்கின்றன. கோடையில் கனடா வரை தொடரும் இடப்பெயர்ச்சியில் இவையும் சேர்ந்து பறக்கையில் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் படை பெரிதாகிறது. (g02 9/8)
‘துல்லியமாயினும் செய்யுள் வடிவு’
பைபிள், “மற்றவர்கள் நினைத்ததைப் போல் கற்பனைக் கதைகள் அடங்கிய புத்தகமல்ல, உண்மை சம்பவங்களே அதில் அதிகம் உள்ளன” என்கிறது இயற்கை சம்பந்தப்பட்ட பிரெஞ்சு பத்திரிகையான டெர் ஸோவாஸ். பைபிள் மதப் புத்தகமாக இருந்தாலும், அதில் “உயிரியல் சம்பந்தப்பட்ட துல்லியமான, திருத்தமான தகவல்கள்” உள்ளதாக இஸ்ரேலில் பணிபுரியும் இயற்கையியலாளர்கள் குறிப்பிட்டனர். இயற்கையியலாளருக்கு, “சங்கீதங்களிலும் நீதிமொழிகளிலும் இதுபோன்ற அரும்பெரும் தகவல்கள் அடங்கியிருப்பதை” குறிப்பிட்ட அந்தக் கட்டுரை, மேலும் தெரிவித்ததாவது: “யோபு புத்தகம் . . . மலையாடு கருவுறுதலைப் பற்றியும் காட்டுக்கழுதை மற்றும் நீர்யானையின் இயற்கை வாழிடம் பற்றியும் துல்லியமாக, அதே சமயத்தில் செய்யுள் வடிவில் வர்ணிக்கிறது.” (g02 9/8)
“வினோத ஜோடி”
“ஒரு பெண் சிங்கமும் மறிமான் குட்டியும் எச்சமயத்தில் சந்தித்தாலும் அது அற்ப சமயத்திற்குத்தான் நீடிக்கும்; கடைசியில் மான்குட்டியின் உயிர் பறிபோகும் என்றே எதிர்பார்க்கலாம்” என குறிப்பிடுகிறது தி எக்கானமிஸ்ட் பத்திரிகை. ஆனாலும், இந்தக் கட்டுரை பிரசுரித்திருந்த புகைப்படத்தில் ஒரு பெண் சிங்கமும் ஒரு மான்குட்டியும் ஒன்றாக சமாதானத்துடன் படுத்திருந்ததைக் காண முடிந்தது. அந்தக் கட்டுரை மேலும் குறிப்பிட்டதாவது: “இந்த வினோத ஜோடி, கென்யாவிலுள்ள ஸாம்பூரூ வனவிலங்கு காப்பகத்தில் டிசம்பர் 21-ல் எதிர்பாராமல் தென்பட்டது; வனவிலங்கு புகைப்படக்காரர்கள் இருவர் இவற்றைப் பின்தொடர்ந்து சென்று படமெடுத்தனர். . . . ஆனால் ஜனவரி 6-ம் தேதி மற்றொரு சிங்கம் அந்த மான்குட்டியை கொன்றுவிட்டது.” இதை, “இளம் பருவ பந்தம்”—குட்டியை ஈன்ற சமயத்தில் ஒரு தாய் விலங்கு வேறொரு விலங்கின் குட்டியை தன் குட்டியாகவே பாவித்தல்—என்பதா? இந்த சம்பவத்தைப் பொறுத்த வரை அதற்கு வாய்ப்பில்லை என்றே அத்தாட்சிகள் காட்டுவதாக தி எக்கானமிஸ்ட் கூறுகிறது. “இதில் விந்தையான விஷயம், அந்த மான்குட்டியின் தாய் இன்னும் உயிரோடு இருந்தது, அதுவே குட்டிக்கு பாலூட்டியும் வந்தது; அந்தப் பெண் சிங்கமோ இளம் சிங்கம், குட்டி ஈன்றதற்கு எந்த அடையாளமும் காணப்படவில்லை.” மேலும், “பெண் சிங்கத்திற்குப் பின்னால் மான்குட்டி செல்லாமல் அந்த பெண் சிங்கம்தான் மான்குட்டிக்குப் பின்னால் எப்போதும் சென்றது (உதாரணமாக தன் தாயிடம் பால்குடிக்கப் போனபோதெல்லாம் சென்றது).” “‘அடித்துப் புசி’ என்று தானாகவே வந்து நின்ற விலங்கை அந்தப் பெண் சிங்கம் தத்து எடுத்தது ஏன் என்பதுதான் மர்மமாக இருக்கிறது” என அந்தக் கட்டுரை முடிக்கிறது. (g02 9/8)
வேற்று பாஷைகளால் சொக்கிப் போகும் கில்லர் திமிங்கலங்கள்
“சின்னஞ்சிறு கூட்டங்களாக கூடிவாழும் கில்லர் திமிங்கலங்கள் ஒரே கூட்டத்தில் வாழ்நாள் முழுவதையும் கழித்தாலும் எவ்வாறு உட்கலப்பை தவிர்க்கின்றன?” என்று கேட்கிறது கனடாவின் த வான்கூவர் சன் செய்தித்தாள். “வான்கூவர் அக்வேரியத்தின் மூத்த அறிவியலாளரான லான்ஸ் பேரிட்-லென்னர்ட், ஏழு வருடங்கள் மரபியல் ஆராய்ச்சி செய்தார்; பி.சி. [பிரிட்டிஷ் கொலம்பியா]-விலும் அலாஸ்காவிலும் உள்ள 340 கில்லர் திமிங்கலங்களின் டிஎன்ஏ மாதிரிகளையும் வைத்து ஆய்வு செய்தார். அவற்றின் அடிப்படையில், பெண் திமிங்கலங்கள் மற்ற சிறு கூட்டங்களிலுள்ள ஆண் திமிங்கலங்களுடனேயே இனக்கலப்பில் ஈடுபடுவதாகவும்” தங்கள் பெருங்கூட்டத்தை அல்லது சமுதாயத்தைச் சேராத பிறவற்றுடன் ‘கலப்புத் திருமணம்’ செய்வதில்லை எனவும் கண்டறிந்துள்ளார். “முறைகேடாக இணைசேருவதற்கும் அத்தாட்சி இல்லை” என பேரிட் லென்னர்ட் கூறுகிறார். “சொல்லப்போனால் இணைசேருவது அனைத்தும் வெகு வித்தியாசப்பட்ட பாஷைகளைப் பேசும் தொகுதியினருடனேயே நடைபெறுகிறது.” “கில்லர் திமிங்கலங்கள் மிக மிக தூரத்து உறவினருடன் இணைசேர முயலுகின்றன; ஒருவேளை மற்ற திமிங்கலங்களின் பேச்சுக்கள் அல்லது பாஷைகளைக் கவனித்த பிறகு தன் பாஷைகளிலிருந்து வெகுவாய் வித்தியாசப்பட்ட ஒன்றைக் கண்டுபிடித்து அதனுடன் இணைசேரலாம்” என்று அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது. (g02 9/22)
அதிவேக ரோலர் கோஸ்டர்
“உலகிலேயே அதிவேக ரோலர் கோஸ்டர் ஃபியூஜீக்யூ ஹைலாண்ட் விளையாட்டுப் பூங்காவில் திறக்கப்பட்டது” என ஜப்பானின் ஐஎச்டி ஆஸாஹி ஷிம்பூன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “அசைவின்றி நிற்கும் நிலையிலிருந்து மணிக்கு 172 கிலோமீட்டர் (மணிக்கு 106 மைல்) வேகத்தை இரண்டே விநாடிகளில் அடையும் இந்த சாதனம் தொடை நடுங்கிகளுக்கு சரிப்பட்டு வராது. இது ஒரு ராக்கெட்டிலிருந்து ஏவிவிட்டதைப் போல இருக்கிறது. போர் விமானிகள் பொதுவாக உணரும் புவி ஈர்ப்பு விசையையே இதில் பவனி வருபவர்களும் உணருகிறார்கள்.” இந்த ரோலர் கோஸ்டரை உருவாக்கிய கம்பெனியின் புராஜக்ட் டைரக்டரான ஹீத் ராபர்ட்ஸன் கூறினதாவது: “தரையிலிருந்து மேலே எழும் விமானத்திற்கு 2.5 Gs [புவி ஈர்ப்பு விசையைவிட 2.5 மடங்கு அதிகம்] விசை இருக்கலாம். இதிலோ 3.6 Gs இருக்கும்.” இந்த ரோலர் கோஸ்டரின் சக்கரங்கள் “சிறிய விமானங்களின் சக்கரங்களைப்” போன்றவை; இதற்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்கென மூன்று ஏர் கம்ப்ரெஸ்ஸர்கள் 50,000 ஹார்ஸ் பவரை உருவாக்குகின்றன; இது “ஒரு சிறிய ராக்கெட்டுக்குச் சமம்.” (g02 9/22)
இந்தியாவில் புகையிலையால் இதய நோய்
“இதயத் தமனி நோய் அதிகரித்து வருவதாக [இந்தியாவிலுள்ள] மூத்த இதய நோய் வல்லுநர்கள் கூறுகின்றனர்” என்பதாக மும்பை நியூஸ்லைன் செய்தித்தாள் தெரிவிக்கிறது. “இந்தியர்களுக்கு இதய நோய் ஒரு பரம்பரை வியாதி என்பதாக ஜாஸ்லாக் ஹாஸ்பிட்டலில் இதயவியல் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநரான டாக்டர் அஷ்வின் மேத்தா கூறுகிறார்.” பெருமளவு இளைஞர்கள் “அதிகம் புகைப்பதால் இதய நோய்க்கு ஆளாவது” முக்கியமாக கவலைக்குரியது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உலகில் இதய நோயாளிகள் அதிகம் உள்ள நாடு என்ற பெயரை இந்தியா பெற நேரிடும் என பாம்பே ஹாஸ்பிட்டலில் இதயவியல் மருத்துவரான டாக்டர் பி. எல். திவாரி கருத்து தெரிவிக்கிறார். அண்டை நாடான வங்காள தேசத்தில் 35 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆண்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் “வருவாய் குறைய குறைய புகைப்பது அதிகரித்துள்ளதாகவும்” த டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தித்தாள் கூறுகிறது. சராசரியாக, புகைபிடிக்கும் ஒவ்வொருவரும் “உடை, உறைவிடம், உடல்நலம், கல்வி ஆகிய அனைத்துக்கும் செலவிடுவதைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிக பணத்தை சிகரெட்டுக்கு செலவிடுகிறார்.” புகையிலைக்கான பணத்தை உணவுக்காக செலவிட்டால், இந்த ஏழை நாட்டில் ஊட்டச்சத்து குறைவால் தவிக்கும் சுமார் 105 லட்சம் மக்களுக்கு போதுமானளவு உணவு கிடைக்கும் என்று கணக்கிடப்படுகிறது. (g02 9/22)
வானளாவிய கட்டடங்களுக்கான மவுசு குறையவில்லை
“இரட்டை கோபுரங்கள் தரைமட்டமானது, கட்டடக் கலைஞர்களையும் பொறியியலாளர்களையும் உலுக்கினாலும் அவர்களுக்கு பயம் கலந்த புதுவித விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது” என ஐ.மா. நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “எச்சரிக்கை உணர்வு தற்காலிகமாக நிலவினாலும் விண்ணைத் தொடும் வானளாவிய கட்டடங்களுக்கான மவுசு குறையாது.” இதற்கு ஒரு காரணம், சில பகுதிகளில் நிலம் கிடைப்பது கஷ்டம்; அப்படியே கிடைத்தாலும் அதற்கு எக்கச்சக்கமான விலை. இன்னொரு காரணம், நகரங்கள் பெருமையடித்துக் கொள்ள விரும்புகின்றன. விண்ணை முட்டும் கட்டடங்கள் “அவ்விடத்தின் பேர் புகழுக்காகவும், இன்றைய போக்கிலேயே செல்வதற்காகவும், இதுபோன்ற பிற காரணங்களுக்காகவும் கட்டப்படுகின்றன” என்று கூறுகிறார் மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டடக் கலை மற்றும் திட்டப் பள்ளியின் தலைவரான வில்லியம் மிட்ஷெல். என்றாலும், தாங்கள் கட்டும் கட்டடங்களை இன்னும் பாதுகாப்பு மிக்கதாக ஆக்குவது குறித்து கட்டட நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். குண்டு துளைக்காத சுவர்களையும் ஜன்னல்களையும் உருவாக்குவதன் மூலம் கட்டடங்கள் தாக்குதலை எதிர்த்து நிற்கும் விதத்தில் அவற்றை உறுதியாக கட்டலாம்; ஆனால் இவ்வாறு கட்டுவதால் கட்டடத்தின் எடை அதிகரிக்கும்; அதுமட்டுமல்ல, இது இமாலய செலவு பிடித்த பணியாகும். சீனாவில், கட்டட விதிமுறைப்படி 15 மாடிகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் திறந்த வெளி “அடைக்கல தளம்” ஒன்று வெறுமையாக அமைக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளில் கட்டட விதிமுறைப்படி, கட்டடத்தின் கீழிருந்து மேல் வரை தனியாக ஒரு லிஃப்ட் தீயணைப்பு படையினருக்காகவே அமைக்கப்பட வேண்டும்; மேலும் புகை பரவாதபடி செய்ய காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்குமாறு மாடிப்படிகளை அமைக்க வேண்டும். ஏற்கெனவே, உலகின் மிக உயர கட்டடமாக விளங்குமென எதிர்பார்க்கப்படும் ஷாங்காய் உலக வர்த்தக மையத்தின் வடிவமைப்பாளர்கள் தங்கள் கட்டடத்திற்கு கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். (g02 9/22)