Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எண்களை வழிகாட்டியாக ஏற்க வேண்டுமா?

எண்களை வழிகாட்டியாக ஏற்க வேண்டுமா?

எண்களை வழிகாட்டியாக ஏற்க வேண்டுமா?

அறிவியலின் கண்ணோட்டத்திலும் பகுத்தறிவின் அடிப்படையிலும் பரிசோதிக்கையில் எண்சோதிடம் தேர்ச்சி பெறுகிறதா? நம் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள எண்கள்தான் வழியா? எண்சோதிட முடிவுகளுக்கும் கணிப்புகளுக்கும் ஏற்றவாறு உங்கள் எதிர்காலத்தை திட்டமிட வேண்டுமா?

பல்வேறு கலாச்சாரத்தினர் வெவ்வேறு காலண்டர்களை பயன்படுத்துகிறார்கள் என்ற ஆட்சேபணைக்கு எண்சோதிடர்களால் பதிலளிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, சீன காலண்டர் பயன்படுத்தப்படும் இடத்தில் ஒருவர் வசிப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஆரம்ப கட்டுரையில் குறிப்பிடப்பட்ட செப்டம்பர் 11, 2001 தேதியை எடுத்துக்கொள்ளுங்கள். சீன காலண்டரின்படி அது 78-வது சுழற்சியின் 18-ம் ஆண்டின் 7-ஆம் மாதம், 24-ம் தேதி. ஜூலியன் காலண்டர்படி அதே தேதி ஆகஸ்ட் 29, 2001 ஆகும். இஸ்லாமிய காலண்டரின்படி அது 22 ஜுமாடா II 1422. எபிரெய காலண்டரின்படியோ அது 23 எலூல் 5761. இப்படி பல ரூபங்கள் பெற்ற ஒரு தேதியிலுள்ள எண்களுக்கு என்ன அர்த்தம்தான் கற்பிக்க முடியும்? இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்: பெயர்களிலுள்ள எழுத்துக்கள் மொழிக்கு மொழி வித்தியாசப்படுகின்றன. உதாரணத்திற்கு ஜான் என்ற ஆங்கில பெயரிலுள்ள எழுத்துக்களின் எண் மதிப்பு 2, ஆனால் ஸ்பானிய மொழியில் அதே பெயரின்​—ஜ்வான்​—எண் மதிப்பு 1.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அநேக காரியங்களை கணித சூத்திரங்களால் விளக்க முடியும் என்பது உண்மைதான். இந்த சூத்திரங்களை சோதித்துப் பார்த்து மெய்ப்பிக்க முடியும். ஆனால் உங்கள் பெயர், உங்களது பிறந்த தேதியோடும் சில எண்களோடும் சம்பந்தப்பட்டிருக்கும்படி முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் இவ்வாறுதான் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புவது சரிதானா என்பதே கேள்வி.

முடிவு தெளிவாக இருக்கிறது: காலண்டர், மொழி போன்ற பெருமளவு வேறுபடும் காரணிகளின் அடிப்படையில் எண்சோதிடம் கணிக்கப்படுவதால் அதை உண்மையென நம்புவது பகுத்தறிவுக்கு ஏற்றதே இல்லை.

“சமயமும் எதிர்பாராத சம்பவமும்”

சிலர் தங்கள் வாழ்க்கையில் இனி நடக்கவிருப்பவற்றை முன்னரே தெரிந்துகொள்ள விரும்புவதால் எண்சோதிடத்தை ஆர்வமாக நாடுகின்றனர். இருந்தாலும் மனித வாழ்வில் சம்பவிக்கவிருக்கும் ஒவ்வொன்றையும் முன்கூட்டியே கணிக்க முடியாது என பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. “ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை.” “ஏனெனில் சமயமும் எதிர்பாராத சம்பவமும் அனைவருக்குமே நேரிடுகிறது” (NW) என பைபிள் சொல்கிறது. (சபை உரையாளர் [பிரசங்கி] 9:11, பொது மொழிபெயர்ப்பு) ஆம், பல சம்பவங்கள் எதிர்பாராமல் நிகழ்கின்றன. இப்படி திடீரென சம்பவங்கள் நிகழுவதால் பிறந்த தேதியையோ பெயரின் எண் மதிப்பையோ வைத்து கணிப்பது முடியாத காரியம்.

இன்னொரு உதாரணத்தை கவனியுங்கள்: தாராள மனப்பான்மையை பைபிள் இவ்வாறு ஊக்குவிக்கிறது: ‘உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.’ (பிரசங்கி 11:1, 2) வரவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி மக்கள் முன்கூட்டியே அறிவதில்லை, அறிந்துகொள்ளவும் முடியாது; இதற்கு ஒருசில விதிவிலக்குகளே இருக்கலாம். ஆகவே எண்சோதிடர்களைப் பற்றி கணிதப் பேராசிரியர் அன்டர்வுட் டட்லி இவ்வாறு எழுதுகிறார்: “தற்செயலாக சம்பவங்கள் நிகழ்கின்றன என அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வியப்பூட்டும் காரியங்கள் எந்த நியதியும் இல்லாமல் நடந்தேறலாம்.”

எண்சோதிடர்களின் சில கணிப்புகள் உண்மையாவது நிஜம்தான். இதற்குக் காரணம் என்ன? சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கணிப்பது தற்செயலாக உண்மையாகலாம். மேலும், எண்சோதிடர்களின் பாஷை சிலசமயம் துளிகூட தெளிவாக இல்லாததால் அதற்கு பல அர்த்தங்களைக் கற்பிக்க முடிகிறது. ஆனால் இவற்றைவிட முக்கியமான ஒரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும்.

ஒருவித குறிசொல்லுதலா?

எண்சோதிடத்தை பைபிள் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெர்சியாவில் வாழ்ந்த யூதர்களை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய ஆமான் என்பவரைப் பற்றி அது இவ்வாறு சொல்கிறது: ‘யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் “பூர்” என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.’​—எஸ்தர் 3:7, பொ.மொ.

பூர்வ காலங்களில் ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதில் சீட்டுப் போட்டுப் பார்க்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. a (நீதிமொழிகள் 18:18) ஆனால் குறிகேட்பதற்காக ஆமான் சீட்டுப் போட்டான்; குறிகேட்பதை பைபிள் கண்டனம் செய்கிறது. “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும் . . . இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என உபாகமம் 18:10-12 சொல்கிறது.

குறிசொல்லுதலையும் மாய சக்தியையும் பைபிள் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்துகிறது. பொல்லாத ஆவிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பொறுத்தவரை இது உண்மையோ இல்லையோ, ஒன்று மட்டும் நிச்சயம்: ஆவியுலகத் தொடர்பை கடவுள் கண்டனம் செய்கிறார், அது பொல்லாத ஆவிகள் நம்மை கட்டுப்படுத்தும்படி செய்யும்.​—1 சாமுவேல் 15:23; எபேசியர் 6:⁠12.

எண்சோதிடத்திற்கு அறிவியல் ஆதாரமே இல்லை, அது பகுத்தறிவோடு பொருந்திப் போவதும் இல்லை. அதைவிட முக்கியமாக, எண்சோதிடம் ஒருவித குறிசொல்லுதலாக இருப்பதால் அது பைபிள் போதனைகளோடு ஒத்துப்போவதில்லை. இதனால் உங்கள் வாழ்க்கையை அமைக்கவோ எதிர்காலத்தைத் திட்டமிடவோ எண்சோதிடத்தை நாடுவதில் பயனில்லை. (g02 9/8)

[அடிக்குறிப்பு]

a சீட்டுக்கள் போடுவதற்கு சிறு கூழாங்கற்கள் அல்லது மரத் துண்டுகள் போன்ற சிறிய பொருட்கள் அங்கியின் மடிப்புகளிலோ ஜாடியிலோ போட்டு குலுக்கப்பட்டன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சீட்டில் யாருடைய பெயர் இருந்ததோ அவரே தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

[பக்கம் 6-ன் பெட்டி]

பல தினுசு காலண்டர்கள் இருப்பது எண்சோதிடத்திற்கு பெரும் முட்டுக்கட்டை

க்ரிகோரியன் காலண்டர் செப்டம்பர் 11, 2001

சீன காலண்டர் 78-வது சுழற்சியின் 18-ம் ஆண்டின் 7-ஆம் மாதம், 24-ம் தேதி

ஜூலியன் காலண்டர் ஆகஸ்ட் 29, 2001

இஸ்லாமிய காலண்டர் 22 ஜுமாடா II 1422

எபிரெய காலண்டர் 23 எலூல் 5761

[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]

ஜாதகங்களை நம்பலாமா?

“ஒரு சமயம் எல்லாருடனும் சிரித்து சகஜமாக பழகுவீர்கள், மறு சமயம் ஒட்டாமல் ஒதுங்கியிருப்பீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களைப் பற்றி அதிகம் சொல்வது புத்திசாலித்தனமல்ல என நினைப்பீர்கள். நீங்கள் சுயமாக சிந்திப்பவர், வெளுத்ததெல்லாம் பால் என எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அத்தாட்சியைக் கேட்பவர். வாழ்க்கையில் பல்சுவையை அனுபவிக்க விரும்புபவர், வரையறைகளால் கட்டுப்படுத்தப்படுவதை வெறுப்பவர். உங்களுக்குள் ஏகப்பட்ட திறன் புதைந்து கிடைக்கிறது, நீங்கள் அதை முழுமையாக வெளிக்கொணரும் வாய்ப்பு அமையவில்லை. உங்கள் செயல்களையும் திறமைகளையும் நீங்களே குறைகூறுவீர்கள்.”

என்ன உங்களைப் பற்றியே சொல்வதுபோல் இருக்கிறதா? அப்படியென்றால் இதன் அர்த்தத்தை நீங்கள் மிகைப்படுத்தலாம். ஆனால் மேலேயுள்ள விவரிப்புகளில் பல பெரும்பாலோருக்கு பொருந்துமே! அவற்றை வாசிப்பவர்கள் தங்களுக்கு கச்சிதமாக பொருந்துபவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுகின்றனர். பேருந்துகள் ஏன் மூன்று மூன்றாக வருகின்றன​—அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் கணிதம் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “ஜாதகத்தில் ராசிகளை எடுத்துவிட்டால் எந்தப் பத்தி தங்கள் ராசிக்கு பொருந்துகிறது என ஆட்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை, ஆனால் ராசிகள் சேர்க்கப்பட்டிருந்தால் தங்கள் ராசிபலன்தான் தங்களுக்கு கச்சிதமாக பொருந்துவதாக நம்புகிறார்கள்.”

[பக்கம் 8-ன் பெட்டி]

பைபிளில் அடையாள எண்கள்

பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில எண்களுக்கு அடையாள அர்த்தமுண்டு; அந்த அர்த்தம் அந்தந்த வசனங்களின் சூழமைவோடு மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நான்கு என்ற எண், முழுமை அல்லது சர்வம் என்ற அர்த்தத்தைத் தருகிறது. ‘பூமியின் நான்கு திசைகள்,’ ‘ஆகாயத்தின் நாலு திசைகள்’ ஆகிய பதங்களால் இந்தக் கருத்து தெரிவிக்கப்படுகிறது. (ஏசாயா 11:12; தானியேல் 8:8) ஆறு என்ற எண் சிலசமயங்களில் அபூரணத்தை அர்த்தப்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் புத்தகம், சாத்தானின் பூமிக்குரிய அரசியல் அமைப்புக்கு ‘மனுஷனுடைய இலக்கத்தை’​666 என்ற எண்ணை⁠—⁠கொடுத்திருப்பது ஆர்வத்திற்குரிய விஷயம். (வெளிப்படுத்துதல் 13:18) இங்கே ஆறு என்ற எண் மும்முறை குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மிருகத்தன அமைப்பின் அபூரணத்தை பெரிதும் வலியுறுத்துகிறது. ஏழு என்ற எண் அடையாள அர்த்தத்தில் நிறைவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (லேவியராகமம் 4:6; எபிரெயர் 9:24-26) வேதவசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவையும் இன்னும் பல அடையாளப்பூர்வ எண்களும் அவற்றின் தீர்க்கதரிசன சூழமைவைப் பொருத்து அர்த்தம் புரிந்துகொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட சில எண்களுக்கு பைபிள் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்தாலும் சில வார்த்தைகளின் எழுத்துக்களை எண்களோடு சம்பந்தப்படுத்தி ரகசிய செய்திகளை கண்டுபிடிப்பதை அது ஆதரிப்பதில்லை.

[பக்கம் 8-ன் படம்]

இனப் படுகொலை செய்வதற்கு ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க ஆமான் குறிகேட்டான்