Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

பேரழிவிலும் மனவுறுதி “பேரழிவிலும் மனவுறுதி​—இரட்டை கோபுரங்கள் தரைமட்டமான நாள்” (பிப்ரவரி 8, 2002) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. அந்தக் கட்டுரைகளைப் படித்து நெகிழ்ந்துபோனேன். சமயமும் எதிர்பாராத சம்பவமும் நம்மில் எவருக்கும் ஏற்படலாம் என்பதை அவை எனக்கு புரிய வைத்தன. அநேகர் உயிர் இழந்ததை நினைக்கையில் மனம் வேதனையில் துடிக்கிறது.

எஸ்.பி.ஆர்., டென்மார்க் (g02 8/22)

“டாட்டியானாவின் ஜெபம்” என்ற பகுதியை பிரசுரித்ததற்கு நன்றி. தொடர் கட்டுரைகளை வாசிக்கையில் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஆனால் இந்தப் பகுதியை வாசித்தபோதோ ஓவென்று கதறிவிட்டேன். அந்தத் தீவிரவாத தாக்குதல்களில் தாயையோ தந்தையையோ பறிகொடுத்த பிள்ளைகளின் ஆன்மீக வளர்ச்சிக்காக ஜெபிக்க விரும்புகிறேன்; ஏனெனில் புதிய உலகில் மீண்டும் அவர்கள் தங்கள் பெற்றோருடன் ஒன்றுசேர வேண்டும். இந்தப் பகுதி, ஒரு யெகோவாவின் சாட்சியாக, ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிருப்பதற்கான என் போற்றுதலையும் அதிகரித்திருக்கிறது.

டி.ஏ., ஜப்பான் (g02 8/22)

நான் ஜெர்மனியில் வசித்தாலும் செப்டம்பர் 11 அன்று நடந்த சம்பவங்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் உலுக்கிவிட்டன. அது நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்பும் என் ஒன்பது வயது மகள் உயர்ந்த கட்டடத்தின்மீது ஒரு விமானம் மோதுவதுபோல் படங்கள் வரைந்துகொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சோக சம்பவங்களே இனி நிகழாதிருக்கும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

ஈ.ஜி., ஜெர்மனி (g02 8/22)

நியூ யார்க்கில் நடந்ததைப் பார்த்தபோது நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்; அழிவில் தப்பியவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் பலம் தரும்படி அவரிடம் கேட்டேன். இந்தக் கட்டுரைகளை வாசித்தபோது, என் ஜெபங்களும் மற்ற அநேகருடைய ஜெபங்களும் கேட்கப்பட்டதை புரிந்துகொள்ள முடிந்தது. துயர சம்பவம் எச்சமயத்திலும் நிகழலாம் என்ற உண்மை, என் வாழ்க்கையை மீண்டும் பரிசீலித்துப் பார்க்க செய்தது.

எம்.வி., இத்தாலி (g02 8/22)

பலர் சொன்ன அனுபவங்களை நாங்கள் ஆர்வத்தோடு வாசித்தோம். தப்பிப்பிழைத்தவர்களின் கதையைப் படித்து கண்ணீர் வடித்தோம். வேதனைப்படும் அனைவருக்கும் உதவுமாறு யெகோவாவிடம் கேட்கிறோம்; அவர்கள் விழித்தெழு! மூலம் ஆறுதலைக் கண்டடைவதற்கு ஜெபிக்கிறோம். இளைஞர்களாக, நாங்கள் எப்படி வாழ்கிறோம், எதற்கு முதலிடம் தருகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க உங்கள் கேள்விகள் எங்களைத் தூண்டின. இந்தப் பத்திரிகையை தொடர்ந்து பிரசுரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

டி.எம்., மற்றும் ஏ.பி., ஸ்லோவினியா (g02 8/22)

எனக்கு 14 வயது. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இந்தக் கட்டுரைகளை வாசித்தபோது இந்த சம்பவம் ஏற்படுத்திய பீதியை புரிந்துகொண்டேன்; மற்றவர்களைக் காப்பாற்ற சிலர் எவ்வாறு தங்கள் உயிரையே கொடுத்தனர் என்பதை பார்த்தேன். தீயணைப்பு படையினர் அநேகர் இறந்துவிட்டதை செய்திகளில் கேட்டிருந்தேன், ஆனால் கட்டுரையைப் படித்த போதோ நிஜம் சுட்டது. “டாட்டியானாவின் ஜெபம்” என்ற பகுதியை வாசிக்கையில் அழுதேன். ஏழாவது வகுப்பில் படிக்கையில் என் அப்பா உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அப்பகுதி, ‘டாட்டியானாவைப் போலவே எனக்கும் புதிய உலகம் நிஜமாக இருக்கிறதா?’ என்று என்னை சிந்திக்க வைத்தது. பள்ளியிலுள்ள என் ஆசிரியர்களுக்கும் அநேக நண்பர்களுக்கும் இந்தப் பத்திரிகையை கொடுக்க விரும்புகிறேன். இந்த அருமையான பத்திரிகைகளை தயவுசெய்து தொடர்ந்து வெளியிடுங்கள்!

எச்.டி., ஜப்பான் (g02 8/22)

புதிய வடிவம் நான் 1978-⁠ல்தான் விழுத்தெழு! பத்திரிகையை முதன்முதலில் வாசிக்க தொடங்கினேன்; இப்போது அதைப் பார்க்கையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பிப்ரவரி 8, 2002 தேதியிட்ட பத்திரிகையின் பக்கங்கள் உண்மையிலேயே என் கவனத்தை ஈர்த்தன. கட்டுரைகளின் தலைப்புகள் பளிச்சென்று தெரிகின்றன, படங்களும் ஜோராக இருக்கின்றன. பக்கங்களின் வடிவமைப்புகூட வாசித்து மகிழ்வதற்கு ஏற்ற விதத்தில் இருக்கிறது. இந்தப் புதிய தோற்றம் நேர்மை மனம் படைத்த இன்னும் அநேகரை யெகோவாவிடம் சுண்டி இழுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

வி.பி.எல்., பிரேஸில் (g02 8/22)