Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் கேட்கும் ஜெபங்கள்

கடவுள் கேட்கும் ஜெபங்கள்

பைபிளின் கருத்து

கடவுள் கேட்கும் ஜெபங்கள்

“கேட்டுக்கொண்டே இருங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”​லூக்கா 11:9, 10, NW.

மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் இயேசு கிறிஸ்து கூறினவை; அநேக கிறிஸ்தவர்கள் இவ்வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். தங்கள் பிரச்சினைகளையும் கவலைகளையும் ஜெபத்தில் கடவுளிடம் கொட்டிவிடுவதன் மூலம் இந்த நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றனர்; தங்கள்மீது அவருக்கு அன்பும் அக்கறையும் இருப்பதில் அவர்களுக்கு துளியும் சந்தேகமில்லை. என்றாலும் தங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க காத்திருக்கையில், சிலர் நிலைகுலைந்துவிடுகின்றனர். உங்கள் ஜெபத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காததுபோல் உங்களுக்குத் தோன்றுகிறதா? உங்கள் ஜெபத்தை கடவுள் கேட்கிறாரா?

நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காததுபோல் தோன்றினாலும்கூட, அவற்றை கடவுள் கேட்கவில்லை என்று அர்த்தமாகாது. ஏனெனில், “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என பைபிள் உறுதியளிக்கிறதே. (1 பேதுரு 3:12) ஆகவே சத்தமாக செய்யப்பட்டாலும் சரி மனதுக்குள் செய்யப்பட்டாலும் சரி, நீதிமான்களின் ஜெபங்களை யெகோவா தேவன் கேட்கிறார். (எரேமியா 17:10) ஒவ்வொரு ஜெபமும் எப்படிப்பட்ட எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் செய்யப்படுகிறது என்பதையும் யெகோவா சோதித்து அறிகிறார்; இது ஜெபிப்பவருக்கேகூட முழுமையாக புரிந்திருக்காது அல்லது தெரிந்திருக்காது.​—ரோமர் 8:26, 27.

என்றாலும், ஜெபங்களைக் கடவுள் கேட்பதற்கு அவை சில தராதரங்களைப் பூர்த்தி செய்பவையாக இருக்க வேண்டும். முதலாவதாக, அவை இயேசுவிடமோ, ஏதோவொரு ‘புனிதரிடம்’ அல்லது ஒரு விக்கிரகத்திடம் அல்லாமல் கடவுளிடம் மட்டுமே ஏறெடுக்கப்பட வேண்டும். (யாத்திராகமம் 20:4, 5) அத்துடன், ஜெபங்கள் கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் பெயரில் செய்யப்பட வேண்டும். (யோவான் 14:6) இது, ஜெபங்களை முதலில் இயேசு கேட்டுவிட்டு, பின்பு அவற்றை யெகோவாவிடம் தெரிவிப்பதாக அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. அதற்கு பதிலாக, இயேசு கிறிஸ்துவின் பெயரில் யெகோவாவிடம் ஜெபிக்கையில் நம்மை கிறிஸ்துவின் சீஷர்கள் என அடையாளம் காட்டுகிறோம்; அவருடைய மீட்பினால் மட்டுமே நம்மால் கடவுளை அணுக முடியும் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்.​—எபிரெயர் 4:14-16.

விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபிரெயர் 11:6) அப்படிப்பட்ட விசுவாசம் தனக்கிருப்பது ஒருவருக்கு எப்படி தெரியும்? பைபிள் எழுத்தாளர் யாக்கோபு இதற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்: “நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன்.” (யாக்கோபு 2:18) அது உண்மையே; விசுவாசம் செயல்களில் வெளிப்படும், அச்செயல்களோ நாம் கடவுளை நேசிப்பதையும், அவரை மகிழ்விக்க முயலுவதையும் வெளிக்காட்டும்.

ஜெபத்தைப் பொறுத்தமட்டில், கடவுளுடைய வணக்கத்தாருக்கு விடாமுயற்சியும் அவசியம். இதை லூக்கா 11:9, 10-⁠ல் இயேசு தெளிவாக்கினார்; இதுவே ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. ஒரு விஷயத்துக்காக ஒருவர் ஒரேவொரு தடவை மட்டுமே ஜெபித்தாரென்றால், அவருக்கு அதில் அவ்வளவாக அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம்?

கடவுளின் வாக்குறுதிகள்

நாம் அடிக்கடி ஜெபித்தாலும் சரி, மிக உருக்கமாக ஜெபித்தாலும் சரி, “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களி”லேயே வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) தம்மைப் பின்பற்றுவோர் சந்தோஷமுள்ளவர்கள் என்று இயேசு சொன்னது உண்மைதான், ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சினைகளே வராது என்று அவர் சொல்லவில்லை. (மத்தேயு 5:3-11, NW) துக்கம், பசி, தாகம், துன்பம் என எதன் மத்தியிலும், அவருடைய சீஷர்களால் சந்தோஷமாய் இருக்க முடியும் என்றே அவர் சொன்னார்.

சகல சௌபாக்கியமும் கிடைத்தால்தான் இயேசு குறிப்பிட்ட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதல்ல உண்மை. ஆனால் நாம் கடவுளுக்கு சேவை செய்கையில் கிடைக்கும் ஆத்ம திருப்தியே அந்த சந்தோஷம். எனவே, குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளிலும் நாம் ஓரளவு சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.​—2 கொரிந்தியர் 12:7-10.

சொந்தப் பிரச்சினைகளை சமாளித்தல்

அப்படியென்றால், பொருத்தமான மணத் துணையைக் கண்டுபிடிப்பது, குடும்பம், உடல்நலம், வேலை வாய்ப்பு போன்ற சொந்த விஷயங்களுக்காக கடவுளிடம் ஜெபிப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லையா? அப்படியல்ல, நம் வாழ்க்கைச் சூழலை அற்புதமாக மாற்றுவதாக கடவுள் வாக்குறுதி அளிக்காவிட்டாலும், அவற்றை சமாளிக்க ஞானத்தை தருவார். சோதனைகள் சம்பந்தமாக யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5) ஆகவே பரிசுத்த ஆவியின் மூலமாக யெகோவா நம்மை வழிநடத்துவார். இது, தீர்மானங்கள் செய்வதில் பைபிள் நியமங்களைப் புரிந்துகொண்டு செயல்பட நமக்கு உதவும்.

ஆனால் கடவுளுடைய ஆவி நமக்காக தீர்மானங்கள் செய்யாது. மாறாக நாம் தனிப்பட்ட முயற்சி எடுக்க வேண்டும். உதாரணமாக, நமக்கு ஒரு பிரச்சினை இருந்தால், அதன் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்துவிட்டோமா? அப்படி செய்வது கடவுளிடம் நமக்கு விசுவாசம் இருப்பதைக் காட்டும் ஒரு செயலாகும். (யாக்கோபு 2:18) நம் பிரச்சினையை தீர்ப்பதில் கடவுளுடைய வழிகாட்டுதலை தொடர்ந்து நாடுகிறவர்களாக விடாமுயற்சியோடு இருக்கிறோமா? (மத்தேயு 7:7, 8, NW) நம் சூழ்நிலைக்குப் பொருத்தமான பைபிள் நியமங்களை கவனமாக பரிசீலனை செய்து பார்த்திருக்கிறோமா? கடவுளுடைய வார்த்தை நம்மை ‘தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ ஆக்கும்.​—2 தீமோத்தேயு 3:16, 17.

மனித விஷயங்களில் கடவுள் தலையிட்டு, நம் பிரச்சினைகளையெல்லாம் நீக்கிவிட முடியும் என்பது உண்மையானாலும், நம் தெரிவை சுதந்திரமாக வெளிப்படுத்த நம்மை அவர் அனுமதித்திருக்கிறார். தெரிவு செய்யும் சுயாதீனத்தை மற்றவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும் விதத்தில் அநேகர் பயன்படுத்துவது வருத்தகரமான விஷயம். எனவே நம்மை விட்டு நீக்கும்படி நாம் ஜெபிக்கும் சில பிரச்சினைகள் கடவுளுடைய புதிய உலகம் வரும் வரை தொடரலாம். (அப்போஸ்தலர் 17:30, 31) நாம் குடியிருக்கும் பகுதியில் நடக்கும் குற்றச்செயலோ போரோ நம் பிரச்சினையாக இருக்கலாம்; அல்லது எதிராளிகள் தரும் கஷ்டங்களை சகிக்க வேண்டியதே பிரச்சினையாக இருக்கலாம். (1 பேதுரு 4:4) தேவபக்தியற்ற இவ்வுலகில் சில சூழ்நிலைகள் மாறாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இருந்தபோதிலும், கடவுள் தம் வணக்கத்தாரை நேசிக்கிறார், அவர்களுக்கு உதவ விரும்புகிறார். அவருடைய ராஜ்யம் பூமியில் ஈடிணையற்ற ஆட்சியை நடத்தும்போது, இன்றுள்ள பயங்கரமான பிரச்சினைகளை சுவடு தெரியாமல் முற்றிலும் அவர் நீக்கிவிடுவார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) அதுவரை வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க அவருடைய வழிநடத்துதலுக்காக தொடர்ந்து நாம் ஜெபித்து வர வேண்டும். அப்படி செய்கையில், பைபிளில் ஏசாயா 41:10-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தம் வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்; அங்கு அவர் சொல்வதாவது: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (g02 9/8)