Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நெருப்பின் இரு முகங்கள்

நெருப்பின் இரு முகங்கள்

நெருப்பின் இரு முகங்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நெருப்பு நண்பனும் ஆகலாம், பகைவனும் ஆகலாம். அது நிலத்தைப் புதுப்பிக்கலாம் அல்லது அதை அழிக்கவும் செய்யலாம். சீறிப் பரவும் தீ ஜூவாலை, உருத்தெரியாமல் அழிக்கும் சக்தியாக ரூபமெடுக்கலாம். அப்போது அதைக் கட்டுப்படுத்துவது கைமீறிய காரியமாகிவிடும்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, 1997-⁠ல் இந்தோனீஷியாவில் கோரமுகம் காட்டிய நெருப்பு, நாலா புறமும் பரவி பெரும் பகுதியை நாசப்படுத்தியது. அந்த வருடத்தில் நிகழ்ந்த காட்டுத்தீ விபத்துக்கள் அந்நாட்டை உருக்குலைத்தன; நிலத்திற்கும் மக்கள் நலத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தின. அப்போது எழுந்த நச்சுப் புகை அண்டை நாடுகளுக்கும்​—மொத்தத்தில் எட்டு நாடுகளுக்கு—​பரவியது; இதனால் 7.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டது. ஆஸ்துமா, நுரையீரலில் காற்றேற்றம், இதயத் தமனி நோய்கள், கண் மற்றும் தோல் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

சிங்கப்பூரில் தூய்மைக்கேடு அபாயகரமான அளவை எட்டியது. இந்நகரம் புகைமண்டலத்தால் சூழப்பட்டது. “நாங்கள் அனைவரும் வீட்டில் சிறை வைக்கப்பட்டதைப் போல் இருக்கிறோம்” என்று புலம்பினார் ஒரு சிங்கப்பூர்வாசி; ஏர்கண்டிஷன் பொருத்தப்பட்ட தன் வீட்டைவிட்டு வெளியே செல்ல அவர் அஞ்சினார். சில நாட்களில் மிக மோசமான புகைமண்டல மூட்டத்தால் சூரியனைக்கூட மக்கள் காண முடியவில்லை.

அதற்கு அடுத்த வருடம், 1998-⁠ல், கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்தவர்களில் 8,000 பேர், அகோரமாய் சீறிவந்த தீயிலிருந்து தப்ப தங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயினர். அந்த ஆண்டில் கனடா முழுவதிலும் ஏற்பட்ட சுமார் ஆயிரம் தீ விபத்துக்களில் ஒன்றுதான் அது; அவற்றுள் 115 விபத்துக்கள் ஏதோ ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்கா நெருப்பாக பதிவாயின. கனடாவில் வடக்கு ஆல்பர்ட்டாவில் கோரமுகம் காட்டிய தீயால் 90,000 ஏக்கர் பரப்பளவான காடு நாசமானது. அந்நாட்டவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “பார்ப்பதற்கு, அது ஒரு அணுகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது போல் தோன்றியது. அக்கம்பக்கம் எங்கும் ஒரு இராட்சத கார்மேகம் மூடியிருந்தது.”

நெருப்பு​—பகைவனாக

நெருப்பு பலம் படைத்த இயற்கை சக்திகளில் ஒன்று. குபுகுபுவென்று பரவும் காட்டுத்தீ, நில அமைப்பை உருக்குலைக்கலாம், தாவர இனங்களுக்கு இடையே உள்ள சமநிலையைக் கெடுக்கலாம், வனவிலங்கு சமுதாயத்தை சீரழிக்கலாம், உயிருக்கும் உடைமைக்கும் உலை வைக்கலாம்.

கட்டுக்கடங்காத நெருப்பு, நில அரிப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம். பொதுவாக கொளுத்தும் கோடைக்குப் பின்பு கனத்த மழை பெய்யும்போது நிலத்தின் மேல் மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் மிக மென்மையானவை சில தாக்குப்பிடிக்க முடியாமல் மடிகின்றன; மற்றவை சமாளித்துக் கொள்கின்றன. ஆனால் வருத்தகரமாக, மழைக்குத் தப்பி செழித்தோங்கும் தாவரங்கள் தேவையற்ற களைகளே; இவை அந்நிலத்தையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, அந்தப் பகுதிக்குரிய இயற்கை தாவரங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

குறிப்பிட்ட இயற்கை தாவரங்களை உண்டு வாழும் விலங்குகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கே சொந்தமான பாலூட்டிகளான கோலாக்கள், வாலில் அடர்ந்த ரோமமுள்ள போஸம்கள் ஆகியவை எண்ணிக்கையில் குறைந்துவரும் விலங்கினங்களாகும்; பெரும்பாலான இவற்றின் வாழிடங்களை நெருப்பு பாழாக்குகையில் இவை எளிதில் மறைந்துவிடலாம். கடந்த 200 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய கண்டம் அதன் மழைக்காடுகளில் 75 சதவீதத்தையும், காட்டுநிலங்களில் 66 சதவீதத்தையும் இழந்திருக்கிறது; 19 பாலூட்டி இனங்களையும், அக்கண்டத்திற்கே உரிய 68 தாவர வகைகளையும் பறிகொடுத்திருக்கிறது; இவற்றில் பெரும்பாலானவை உலகில் வேறெங்கும் காணப்படாதவை.

நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பெருமளவு காடுகளை ஆக்கிரமித்திருப்பதால், மக்கள் காட்டுத்தீயின் நாசகரமான விளைவுகளை சந்திக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 1997-⁠ல், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளிலும் புளூ மௌண்டன்ஸைச் சுற்றியுள்ள பல சிறு சிறு பட்டணங்களிலும் நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் திடுதிப்பென தீ பிடித்ததால் 6,00,000-⁠க்கும் அதிக ஏக்கர் நிலம் பாழானது. இவற்றில் சுமார் பாதியளவான சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த முடியாதவாறு தீ எரிந்தது. தன் 30 ஆண்டு கால அனுபவத்தில் இவையே படுமோசமானவை என தீயணைப்பு ஆணையர் கூறினார். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலி செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாயினர்; சிலரது வீடுகள் தீக்கிரையாயின. இரண்டு பேரின் உயிர்களையும் அந்நெருப்பு காவுகொண்டது. டிசம்பர் 2001-⁠ன் பிற்பகுதியிலிருந்து, விஷமிகளின் கைவரிசையால் பரவியதாக கருதப்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள், 19 லட்சம் ஏக்கர் பரப்பளவான காடுகளை நாசமாக்கின.

நெருப்பு அச்சுறுத்துகையில்

கட்டுக்கடங்கா நெருப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இயற்கையோடு சம்பந்தப்பட்ட ஒரு காரணம், எல் நினோவால் ஏற்படும் வானிலை மாற்றமாகும்; இது உலகம் முழுவதிலும் சூடான மற்றும் உலர்ந்த வானிலை அவ்வப்போது உருவாக காரணமாகும் ஒரு நிகழ்வு ஆகும். பருவம் தவறி உலர்ந்து போய், எல் நினோவின் பிடியில் அகப்படும் எந்த நிலத்திலும் எளிதில் நெருப்பு பிடிக்க வாய்ப்புண்டு.

பெரும்பாலும் மனிதன் யோசிக்காமல் செயல்படுவதே தீயின் சீற்றத்திற்குக் காரணமாகிறது. வேண்டுமென்றே நிலத்திற்கு நெருப்பு வைப்பது அநேக நாடுகளில் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத் வேல்ஸில் அரசுக்குச் சொந்தமான காடுகளில் நெருப்பு பிடித்த சம்பவங்களில் பாதிக்கு மேற்பட்டவை விஷமிகளால் அல்லது விபத்துக்களால் நிகழ்ந்ததாக கணிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பொறுப்பில்லாமல் துர்ப்பிரயோகிப்பதும் பெருந்தீ விபத்துக்களுக்கான மற்றொரு காரணமாகும். காடுகளை அழிப்பதாலும் மரங்களை வெட்டி வீழ்த்துவதாலும் காட்டுப் பகுதிகள் எளிதில் தீ பிடிக்கும் நிலைக்கு உள்ளாகின்றன. மரம் வெட்டும்போது உதிரும் மரத்தூள் குவிந்துவிடுகையில், தீ பிடிக்க தோதான எரிபொருளின் அளவு அதிகரிக்கிறது. மரங்களை வெட்டி வீழ்த்துவதால் இலைகளின் மூட்டம் இழக்கப்படுகிறது; இதனால் எரிபொருட்களான செடி செத்தைகளை சூரிய ஒளி நேரடியாக ஊடுருவி அவற்றை சருகாக மாற்றிவிடுகிறது. எளிதில் ஆவியாகும் இயல்புள்ள இந்த எரிபொருள் கலவையில் ஒரு துளி நெருப்பு பொறி விழுந்தால் போதும், வெகு சுலபமாக கட்டுக்கடங்கா நெருப்பாக மாறிவிடும்.

பொருளாதார காரணங்களாலும் பெருந்தீ விபத்துக்கள் அதிகளவு ஏற்படலாம். இந்தோனீஷியாவில் பல நூற்றாண்டுகளாக காட்டு மரங்களை வெட்டி எரித்து விளைநிலமாக்கும் முறை வேளாண் துறையினரால் பின்பற்றப்பட்டிருக்கிறது; இது இயற்கையின் சமநிலையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. விவசாயிகள் நெருப்பை கவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் எரிக்கும்போது, இயற்கையான நெருப்பால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அதே பாதிப்பே பெரும்பாலும் ஏற்படுகிறது. என்றாலும் சமீப காலங்களில், அளவுக்கு அதிகமாக மரங்களை வெட்டி எரித்து விளைநிலமாக்கும் பணி தொடருவதால் அது பெருந்தொழிலாகவே மாறியுள்ளது. உலகமெங்கும் பாம் ஆயில் போன்ற பொருட்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது; எனவே காடுகள் அழிக்கப்பட்டு அங்கு அதிவேகமாய் வளரும், கொள்ளை லாபம் தரும் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. நிலத்தை திருத்தி விளைநிலமாக்குவதற்கு மிக எளிதான, மலிவான முறை, மரம் செடி கொடிகளை எரிப்பதுதான். இவ்வாறு, போதியளவு காடுகளை கைவசம் வைத்திருப்பதால் கிடைக்கும் நீண்ட கால பலனை துளியும் சிந்திக்காமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் எரித்து தீக்கிரையாக்குகின்றனர்.

நெருப்பு​—நண்பனாக

நாசத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் நெருப்பு அநேக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் நன்மையும் செய்கிறது. சொல்லப்போனால், இயற்கையின் சமநிலையைக் காப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கலாம். இது எவ்வாறு சாத்தியமாகிறது?

நெருப்பு, மனிதனின் பழமையான நண்பர்களில் ஒன்றாகும். அது அவனுக்கு கதகதப்பை அளித்திருக்கிறது; வெளிச்சம் தந்திருக்கிறது; உணவை சமைக்க உதவியிருக்கிறது. ஆஸ்திரேலிய பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக நெருப்பை அன்றாட காரியங்களில் பயன்படுத்தியுள்ளனர். யான்யூவா என்ற பழங்குடியினருக்கு நெருப்பு அதிமுக்கியமானதாய் இருப்பதால், அதன் வகைகளையும் விளைவுகளையும் விளக்குவதற்கு ஒரு டஜனுக்கும் அதிகமான பெயர்களை சூட்டியிருக்கின்றனர். உதாரணமாக, புதர்த்தீ அல்லது காட்டுத்தீக்கு கம்பாம்பாரா என்று பெயரிட்டுள்ளனர். வேட்டையாடுவதற்கு தோதாக எரிக்கப்பட்ட நாட்டுப்புறப் பகுதியை அடையாளம் காட்ட வார்மான் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மேல் நோக்கி எழும்பும் புகையால் உருவாகும் புகைப் படலத்திற்கு ரூமாரீ என்று பெயர்.

தாங்கள் வாழும் பகுதியைப் பராமரிக்க இப்பழங்குடியினர் நெருப்பு மூட்டி விவசாயம் செய்யும் முறையைப் பின்பற்றுகின்றனர். குறைந்த சுடருடைய நெருப்பை வைத்து, காட்டுத் தீக்கு வழிவகுக்கும் முக்கிய எரிபொருட்களான செடி செத்தைகளை எரிக்கின்றனர். இவ்வாறு நெருப்பை கட்டுப்பாட்டுக்குள் பயன்படுத்துகையில் ஆஸ்திரேலிய பழங்குடியினர் தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக நிலத்தை நல்ல விதத்தில் உபயோகிக்க முடிந்திருக்கிறது; அத்துடன் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழிடங்களையும் திறம்பட பராமரிக்க முடிந்திருக்கிறது. ஆபத்தான காட்டுத்தீ விபத்துக்களில் மக்கள் சிக்கிவிடும் அபாயத்தையும் குறைத்திருக்கிறது.

கட்டுக்கடங்கிய நெருப்பின் மதிப்பு

200-⁠க்கும் அதிக வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய குடியேறிகள் ஆஸ்திரேலியாவில் காலடி பதித்தபோது, மனிதன், இயற்கை, நெருப்பு ஆகியவற்றுக்கு இடையே நிலவிய நுணுக்கமான சமநிலை பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்தது. ஐரோப்பிய கண்ணோட்டத்தில் காட்டுத்தீ என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. எனவே அடிக்கடி காட்டுத்தீ அசம்பாவிதம் நிகழவில்லை; ஆனால் எப்பொழுதாவது தீ பிடித்தபோதோ எக்கச்சக்கமான செடி செத்தைகளால் அது படுமோசமானதாகவும் கட்டுப்படுத்தப்பட முடியாததாகவும் மாறியது. என்றாலும் சமீப காலங்களில் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் பழக்கவழக்கங்களிலிருந்து பாடம் கற்ற அரசுகள், கட்டுப்பாட்டுக்குள் நெருப்பை எரிக்கும் உத்தியை கண்டுபிடித்துள்ளன. இந்த முறையில், பேரழிவை ஏற்படுத்தாதவாறு தீ கட்டுப்பாட்டுக்குள் எரிக்கப்படுகிறது. காட்டுத்தீ பிடிக்க வாய்ப்பில்லாத காலத்தில் சிறியளவில் நெருப்பு வைக்கப்படுகிறது. இந்நெருப்பு மெல்ல மெல்ல பரவுகிறது; இளஞ்சுடராக எரிகிறது; மரங்களை சேதப்படுத்தாமல் செடி செத்தைகளை மட்டுமே எரித்து சாம்பலாக்குகிறது. பொதுவாக, மாலை நேர பனித்துளிகள் இவற்றை அணைத்துவிடுகின்றன.

கட்டுக்கடங்கிய நெருப்பை பயன்படுத்தி காட்டுத்தீயை சமாளிப்பதன் குறிக்கோள், உயிரையும் உடைமையையும் பாதுகாப்பதோடு அந்தந்த நாட்டுக்கே உரிய தாவரம் மற்றும் விலங்கு வகைகளின் பல்வகைமையையும் பாதுகாப்பதாகும். கட்டுப்பட்ட எரித்தல், பயனற்ற களைகள் வேகமாய் வளர்ந்து மண்டிவிடாமல் தடுக்கிறது. அந்தந்த நாட்டுக்கே உரிய விலங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான பல்வகை வாழிடங்களை பேணிக் காப்பதற்கும் அது உதவுகிறது.

விதைகள் முளைப்பதற்கு சில தாவரங்கள் நெருப்பையே சார்ந்திருப்பதாக தெரிகிறது. சில விதைகளின் மேல் ஓடு மிகக் கெட்டியாக இருப்பதால் அவை உடைந்து ஈரம் உள்ளே செல்வதற்கு நெருப்பு தேவைப்படுகிறது. நெருப்பு கக்கும் புகையும்கூட விதை முளைக்க கைகொடுப்பதாக ஆய்வு காட்டுகிறது. புகையில் உள்ள சுமார் 70 ஆக்கக்கூறுகள் விதை முளைக்க உதவுபவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது; நைட்ரஜன் டையாக்ஸைடு அவற்றில் முக்கியமானதாகும்.

நெருப்பு எரிந்து ஓய்ந்தவுடன் நிலத்தின் மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும். செடி செத்தைகளில் இருக்கும் சத்துக்களை நெருப்பு வெளியாக்குகிறது, நிலத்தின் மீது பெருமளவு சூரிய கிரணங்கள் விழுவதற்கு இடமளிக்கிறது, புதிய தாவரங்கள் தழைக்க வழிசெய்யும் விதைப் படுகையை உருவாக்குகிறது. உதாரணமாக, வேட்டல் அல்லது வேல மரங்கள், நெருப்பு அணைந்ததும் மறுபடி துளிர்க்கின்றன; அந்தத் தோதான சூழ்நிலையில் பெரும்பாலும் செழித்து வளருகின்றன.

அநேக விலங்குகளும்கூட நெருப்பு அடங்கிய பின் நன்மையடைவதாக தெரிகிறது; குறிப்பாக தாவரங்கள் தளதளவென புதிதாக வளர்ந்திருக்கையில் விலங்குகளுக்கு அவை மென்மையான, சாறு மிகுந்த உணவாகின்றன. கங்காரு மற்றும் வல்லபி என்னும் சிறிய வகை கங்காருவின் சில இனங்கள், அடிக்கடி எரிக்கப்படும் காட்டில் வாழ விரும்புகின்றன; அவை நெருப்பை சார்ந்தே வாழ்வதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் அவை சார்ந்திருக்கும் தாவரங்கள், மடிந்துவிடாமல் மீண்டும் மீண்டும் தோன்றி தழைத்திருப்பதற்கு நெருப்பையே சார்ந்திருக்கின்றன.

கற்றது கையளவு

நெருப்பின் கோரமுகத்தையும் இன்முகத்தையும் மெல்ல மெல்ல நன்கு புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால் சுற்றுச்சூழலுக்கும் நெருப்புக்கும் இடையே நிலவும் தொடர்போ சிக்கலானது, எனவே இன்னும் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தாவரங்களையும், விலங்கினங்களையும் நெருப்பு எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஆராய வேண்டியுள்ளது. பரந்தளவில் நெருப்பு நம் சுற்றுச்சூழலுடன் கைகோர்த்து செயலாற்றும் விதத்தையும் அதை பாதிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்வதற்கு இன்னும் ஆழமான ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். பதில் தேவைப்படும் சில கேள்விகள் இதோ: கண்ணாடி அறை விளைவுக்கு நெருப்புகள் காரணமாகின்றனவா? நெருப்பு கக்கும் புகையால் வானிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நெருப்பு எரியும் விதம் யாது?

தற்சமயம், மாடல்கள் என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன; இவை நெருப்பு எரியும் விதத்தை முன்கணிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எரிபொருளையும், வெப்பநிலையையும், காற்றின் வேகத்தையும், இன்னும் பிற வானிலை சம்பந்தப்பட்ட தகவல்களையும் அலசி ஆராய்வதன் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால் தற்போதுள்ள இந்த மாடல்கள் எப்பொழுதும் திருத்தமாக இல்லாதிருப்பது வருத்தகரமான விஷயம்; தீ எதிர்பாராமல் குபீரென பற்றுவது அல்லது திடீரென்று மளமளவென பரவுவது போன்ற வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை இவற்றால் முன்கணிக்க முடிவதில்லை. 1997-⁠ல் சிட்னி நகரில் ஏற்பட்ட தீ விபத்துக்களில், அனுபவசாலிகளான தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்தனர்; எதிர்பாராமல் குபீரென்று தீ பரவியதே இதற்கு காரணம்; இதனால்தான் இப்படிப்பட்ட தீயை “மரண விரல்கள்” என்று பொருத்தமாக அழைக்கின்றனர்.

குறிப்பாக பெருந்தீ விபத்துக்களை முன்கணிப்பது கஷ்டம்; ஏனெனில் அவை பிரத்தியேக வானிலையை உருவாக்க முடியும்; இதனால் பலத்த காற்றும் மேகங்களும் இடியுடன் கூடிய புயலும்கூட ஏற்படலாம். இக்காற்றுகள் திடீரென்று திசையையும் வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் இயல்புடையவை; எனவே இவற்றின் போக்கிலேயே செல்லும் நெருப்பும் கன்னாபின்னாவென பரவும். இந்த அம்சங்களையும், நிலத்தின் வகை, சரிவு, எரிபொருள் பரவியுள்ள விதம் போன்ற இன்னும் பிற தகவல்களையும் மனதில் வைத்து தற்போதைய மாடல்களை முன்னேற்றுவிக்கலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்நோக்குடன், கொலராடோவில் வளிமண்டல ஆய்வுக்கான தேசிய மையம் (NCAR) என்ற ஒரு அமைப்பு ஐக்கிய மாகாணங்களில் செயல்பட்டு வருகிறது. ஒரு சி-130 டிரான்ஸ்போர்ட் விமானத்தில் அதிநவீன கருவியுடன் ஏழு கம்ப்யூட்டர் வேலைத்தளங்களையும் NCAR பொருத்தியுள்ளது; இவை அனைத்தும் தீக்கடத்தாப் பொருட்களால் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் சுடர்விட்டு எரியும் நெருப்பின்மீது பறந்து சென்று, அதன் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள உணர் கருவிகளின் உதவியுடன் டேட்டாக்களை சேகரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் இந்த டேட்டாக்கள் புராசஸ் செய்யப்படும்படி கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தெர்மாகேம் எனப்படும் அகச்சிவப்பு கேமரா ஒன்று இந்த விமானத்தில் உள்ளது; இது ஒவ்வொரு பகுதியிலும் எரியும் நெருப்பின் வெப்ப அளவைக் காட்டும். இவ்வழிகளில் NCAR விஞ்ஞானிகள் நெருப்பு எரியும் விதத்தை கண்டறியும் தற்போதைய மாடல்களை முன்னேற்றுவிக்க ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு முன்னேற்றுவிக்கப்பட்ட மாடல்கள், இன்னும் பாதுகாப்பாக நெருப்பை கட்டுப்படுத்த நிபுணர்களுக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. தீப்பிடித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை துல்லியமாக முன்கணிக்கும் திறமை, சமுதாயத்தைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் சந்திக்கும் அபாயங்களையும் குறைக்கும்.

உண்மையில், நெருப்பு கட்டுக்கடங்காமல் பரவினால் நாசத்தையும் அழிவையும் விளைவிக்கும் பகைவனாகிவிடும்; ஆனால் அது பயன்மிக்க நண்பனும்கூட. பூமியை அழகுபடுத்தி பல்வகை தாவரங்களையும், விலங்கினங்களையும் சமநிலைப்படுத்த உதவுவதற்கு சிருஷ்டிகர் ஏற்படுத்தியுள்ள இயற்கையின் சுழற்சிகளில் அதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. (g02 9/22)

[பக்கம் 23-ன் படம்]

மான்டேனாவின் பிட்டர்ரூட் நதிப் பள்ளத்தாக்கில் திடீரென பரவிய நெருப்பைக் கண்டு விக்கித்துப்போன எல்க் மான் தலைதப்ப ஓடுதல்

[படத்திற்கான நன்றி]

John McColgan, BLM, Alaska Fire Service

[பக்கம் 24-ன் படம்]

ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டுக்குள் நெருப்பை எரித்தல்

[படத்திற்கான நன்றி]

Photo provided courtesy of Queensland Rural Fire Service