Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பமகோவில் துணி அடித்தல்

பமகோவில் துணி அடித்தல்

பமகோவில் துணி அடித்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோ; இங்கு நாள் பூராவும் ஒரே தாளத்தில் மேளச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். என்றாலும் இது இசைக் கலைஞர்கள் எழுப்பும் சத்தம் அல்ல. மத்தளம் கொட்டுவது போன்ற அந்தச் சத்தம் துணி அடிப்பவர்களின் சிறு சிறு குடிசைகளிலிருந்து எழும்புகிறது. ஆனால் துணியை ஏன் அடிக்க வேண்டும்?

வினோதமான துணி நெசவில் கடைசி கட்டம்தான் இந்த துணி அடிக்கும் கட்டம். முதலில் ஒரு வெள்ளைத் துணியோ அல்லது ஏதாவது ஒரு ஆடையோ எடுத்துக்கொள்ளப்படுகிறது. பொதுவாக அது பல வர்ணங்களில் வெவ்வேறு விதங்களில் சாயமேற்றப்படுகிறது. பிறகு அந்தத் துணி, மரவள்ளிக் கிழங்கு மாவில் அல்லது பிசின் மர பிசினிலிருந்து பெறப்பட்ட ஒரு கெட்டியான கரைசலில் முக்கப்படுகிறது. பின்னர் அது வெயிலில் உலர்த்தப்படுகையில் பலகை போல் விறைப்பாகி விடுகிறது. இப்போது அது கடைசிக் கட்டத்திற்கு தயாராகிவிட்டது; அதுதான் துணி அடிக்கும் கட்டம்.

துணி அடிப்பவர்களின் முக்கிய வேலை, விறைப்பாக உள்ள துணியை சம்மட்டியால் அடியோ அடியென அடித்து அதிலுள்ள சுருக்கங்களை நீக்குவதாகும். அவர்களின் சிறு குடிசைகளுக்குள், பொதுவாக இரண்டு ஆண்கள் எதிரெதிரே உட்கார்ந்திருப்பர்; அவர்களுக்கு இடையில் ஷீ ட்ரீ எனப்படும் மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கட்டை உள்ளது. இவர்கள் அந்தத் துணியின்மீது லேசாக மெழுகு தடவி, கட்டையின்மேல் அதைப் பரப்பி இழுத்துப் பிடிக்கின்றனர். பின்னர் அதே மரத்தால் செய்யப்பட்ட பெரிய சம்மட்டியால் அத்துணியை டம்டம்-என்று அடிக்கின்றனர். ஒத்திசைவோடு திறமையாக மாறி மாறி அடிக்கையில், ஒருவர் விட்ட இடத்தை மற்றவர் அடிக்கிறார்.

ஏன் வெறுமனே இஸ்திரி போட்டு சுருக்கங்களை நீக்கக்கூடாது? இஸ்திரிப் பெட்டியின் சூடு அந்தத் துணியின் சாயத்தை சீக்கிரம் வெளுத்துப் போக செய்யலாம். மேலும், கட்டையால் அடிக்கையில் கிடைக்கும் பளிச்சென்ற நிறம் இஸ்திரிப் போடுகையில் கிடைக்காது. இது ஏனெனில், சம்மட்டியால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அந்தத் துணிக்கு பளபளப்பைச் சேர்க்கிறது; இது அந்நிறத்தைக் கூட்டுகிறது. வேண்டியளவு அடித்த பிறகு, அந்தத் துணியைப் பார்த்தால், ஏதோ அப்பொழுதுதான் பெயிண்ட் செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.

ஆகவே இந்நகரின் வீதிகளில் நீங்கள் நடந்துசெல்கையில் மேளச் சத்தம் போன்ற ஒன்றை தொடர்ந்து கேட்டால், உங்களைச் சுற்றியுள்ள குடிசைகளை நோட்டம் விடுங்கள். அது ஒருவேளை மேளச் சத்தமாகவே இருக்காது; அது பமகோவில் துணி அடிக்கும்போது பிறக்கும் சத்தமாக இருக்கலாம். (g02 9/22)