புரியா புதிரான எவ்ரிபோஸ் ஓதங்கள்
புரியா புதிரான எவ்ரிபோஸ் ஓதங்கள்
கிரீஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
கிரீஸின் கிழக்குப் பகுதியில், கால்கீஸ் நகருக்கு அருகே ஒரு குறுகிய ஜலசந்தி, ஈவீயா தீவை முக்கிய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கிறது. இதுவே எவ்ரிபோஸ் கால்வாய். இது எட்டு கிலோமீட்டர் நீளமும், 1.6 கிலோமீட்டர் முதல் வெறும் 40 மீட்டர் வரை வெவ்வேறு அளவுகளில் அகலமும் உடையது. ஆழமற்ற பகுதியில் ஆறு மீட்டர் மட்டுமே அதன் ஆழம். எவ்ரிபோஸ் என்ற பெயரின் அர்த்தம், “துரித நீரோட்டம்” என்பது. இது, இந்தக் கால்வாய் சில சமயங்களில் மனம் போல் தாறுமாறாக பாய்வதை பொருத்தமாகவே விவரிக்கிறது; அச்சமயங்களில் அது மணிக்கு கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் வேகத்தில் பாய்கிறது. ஆனால் சில நாட்களில் வினோதமாக இந்த நீரோட்டம் முன்னும் பின்னும் மெதுவாய் பாய்வதாக தோன்றுகிறது, அல்லது ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து விடுகிறது! கால்கீஸுக்கு வரும் அநேகர் இந்தக் கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள ஒரு சிறிய பாலத்தில் நின்று இந்த அபூர்வ ஓதக் காட்சியைக் கண்டு ரசிக்கின்றனர்.
சூரியனும் சந்திரனும் பூமியிலுள்ள கடல் நீரை ஈர்ப்பதால் ஓதங்கள் ஏற்படுகின்றன. இதனால், சூரியனுடனும் சந்திரனுடனும் ஒப்பிட பூமியின் நிலையைப் பொருத்து ஓதங்கள் மாறுபடுகின்றன. அமாவாசை நாளில் பூமிக்கு நேர்க்கோட்டிலேயே சூரியனும் சந்திரனும் இருக்கின்றன. பௌர்ணமி அன்று அவை பூமிக்கு எதிரெதிரே இருக்கின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமியை ஈர்ப்பதால் மிக அதிகளவான ஏற்றங்கள் ஏற்படுகின்றன.
எவ்ரிபோஸ் கால்வாயில் பொதுவாக சுமார் ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் இரண்டு முறை ஏற்றங்களும் இரண்டு முறை வற்றங்களும் ஏற்படும். 6 மணி 13 நிமிட நேரத்திற்கு நீரோட்டம் ஒரு திசையில் பாயும்; பிறகு ஓடாமல் சற்று நின்றுவிட்டு, அதன்பின் எதிர்த் திசையில் ஓட ஆரம்பிக்கும். இதே ரீதியில் சந்திர மாதத்தில் 23 அல்லது 24 நாட்கள் ஓடும். என்றாலும் அந்த மாதத்தில் கடைசி நான்கு அல்லது ஐந்து நாட்கள் வினோத சம்பவங்கள் நிகழ்கின்றன. சில நாட்களுக்கு நீரோட்டம் திசை மாறாமல் ஓடலாம். மற்ற நாட்களிலோ, கிட்டத்தட்ட 14 தடவைகூட திசை மாறி ஓடலாம்!
புரியா புதிரை புரிய வைக்க முயற்சிகள்
எவ்ரிபோஸில் நிகழும் இச்சம்பவம் காண்போருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரியா புதிராகவே இருந்திருக்கிறது. பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிஸ்டாட்டில், இந்த ஓதங்களைப் பற்றிய புதிரை விடுவிக்க முடியாமல் மனமுடைந்தவராக இந்தக் கால்வாயில் குதித்து மூழ்கிவிட்டார் என்பது பிரசித்தி பெற்ற பாரம்பரியக் கதை. ஆனால் உண்மையில்
அவர் மூழ்கவில்லை; மாறாக, அதற்கான விளக்கத்தைத் தரவே முற்பட்டார். மிட்டீயோரோலோஜீகா என்ற தன் புத்தகத்தில் அவர் எழுதினதாவது: “சுற்றிலும் நிலப்பகுதி இருப்பதால், கடல் நீர் இந்தக் கால்வாய் வழியாக பாய்வதைப் போன்று தெரிகிறது. நிலம் முன்னும் பின்னுமாய் அசைவதால், நீர் சிறு கடலில் இருந்து பெருங்கடலுக்குள் பாய்கிறது.” கடல் அலைகளாலும் அந்தப் பகுதியில் பரவலாக ஏற்பட்ட நில நடுக்கங்களாலும் நிலமே முன்னும் பின்னுமாய் அசைவதாக அரிஸ்டாட்டில் தப்புக்கணக்கு போட்டுவிட்டார். சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, “[கால்வாயின்] இருபுறமும் உள்ள கடல் மட்டம் வெவ்வேறு அளவில் இருந்ததை” கிரேக்க வானியல் நிபுணரான இரட்டாஸ்தனிஸ் கண்டறிந்தார். இந்த ஜலசந்தியின் இரு கரைகளும் உயரத்தில் வேறுபட்டதாலேயே இந்த நீரோட்டங்கள் ஏற்பட்டன என்று அவர் கருதினார்.இன்றும்கூட, எவ்ரிபோஸில் ஓதங்கள் இவ்வாறு ஒழுங்கில்லாமல் மனம் போல் ஏற்படுவதற்கான காரணத்தை முழுமையாய் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்தக் கால்வாயின் இரு முனைகளிலுள்ள நீர் மட்டத்தில் வேறுபாடு இருப்பதே வழக்கமான நீரோட்டத்திற்குக் காரணம் என்பது தெளிவாகிறது. இதனால் உயர்ந்த மட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்திற்கு நீர் குபுகுபுவென வேகமாக பாய்கிறது. நீர் மட்ட வேறுபாடு 40 சென்டிமீட்டர் வரை இருக்கும்; கால்கீஸிலுள்ள பாலத்திலிருந்து பார்த்தாலே இது நன்றாக தெரியும்.
ஏன் இந்த வேறுபாடு?
நீர் மட்ட வேறுபாட்டை எவ்வாறு விளக்கலாம்? ஓதம் ஏற்படுகையில் மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியிலிருந்து பாயும் நீர், ஈவீயா தீவை வந்தடைந்ததும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. மேற்குக் கிளை இந்தக் கால்வாயின் தென் முனைக்குள் நேரடியாக பாய்கிறது. ஆனால் கிழக்குக் கிளையோ அத்தீவின் வட முனையை அடைவதற்குள் அந்தத் தீவு முழுவதையும் ஒரு சுற்று சுற்றி வர வேண்டியுள்ளது. இந்த நீண்ட சுற்றுப் பாதையால், நீரின் கிழக்குக் கிளை எவ்ரிபோஸை சுமார் ஒன்றேகால் மணிநேரம் தாமதமாக வந்தடைகிறது. இந்த சமயத்தில் கால்வாயின் ஒரு முனையில் நீர் மட்டம் அதிகமாக இருக்கும்; இதனால் நீரின் அழுத்தமும் கால்வாயின் மறு முனையைவிட மிக அதிகமாய் இருக்கும். இவ்வாறு அதிகரிக்கும் அழுத்தம், சாதாரணமாக எவ்ரிபோஸை அடையும் ஓத நீரின் விசையைக் கூட்டுகிறது.
ஆனால் ஒழுங்கற்ற நீரோட்டம் ஏன் ஏற்படுகிறது? சந்திரனில் வளர்பிறையும் தேய்பிறையும் ஏற்படுகையில், சூரியனின் ஈர்ப்பு விசை சந்திரனின் ஈர்ப்பு விசையுடன் இணைந்து செயல்படாமல் எதிராக செயல்படுகிறது. சந்திரன், கடல்நீரில் வற்றத்தை ஏற்படுத்தும் அதே சமயத்தில் சூரியனின் ஈர்ப்பு ஏற்றத்தை ஏற்படுத்த முயலுகிறது. இதனால் இப்படிப்பட்ட நாட்களில் இந்தக் கால்வாயின் வட மற்றும் தென் முனைகளிலுள்ள கடல் நீர் மட்டங்களில் பெரும் வித்தியாசம் இருக்காது. இவ்வாறு, நீரோட்டத்தின் வேகம் குறைகிறது. சில சமயங்களில், காற்று வீசும்போது, இந்த நீரோட்டம் முற்றிலும் சமநிலைப்படுத்தப்பட்டு நீர் பாய்ந்தோடாமல் அப்படியே ஸ்தம்பித்துவிடுகிறது.
இந்த நீரோட்டத்தின் ஆர்வத்தைத் தூண்டும், புரியா புதிரான இயல்பைப் பற்றி சொல்வதற்கு இதைவிட இன்னும் அதிக விஷயம் நிச்சயம் இருக்கிறது. எப்பொழுதாவது கிரீஸுக்கு வர வாய்ப்பு கிடைத்தால் ஈவீயாவுக்கு வாருங்கள்; எவ்ரிபோஸ் கால்வாயில் நிகழும் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் ஓதக் காட்சியை நேரில் பாருங்கள்! (g02 9/22)
[பக்கம் 18, 19-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மத்தியதரைக் கடல்
ஈஜியன் கடல்
ஈவீயா
கால்கீஸ்
எவ்ரிபோஸ் ஜலசந்தி
கிரீஸ்
ஆதன்ஸ்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 19-ன் படம்]
வானிலிருந்து காண்கையில் எவ்ரிபோஸ் ஜலசந்தி