பைபிளை அச்சடிக்க ஓர் அடைக்கலம்
பைபிளை அச்சடிக்க ஓர் அடைக்கலம்
பெல்ஜியத்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, அச்சிடப்பட்ட முழு பைபிளின் ஆரம்பப் பிரதிகள் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப்பில் முதன்முதல் தயாரிக்கப்பட்டன. பைபிள் அச்சடிப்பாளர்களை அந்நகரிடம் வசீகரித்தது எது? பைபிளை அச்சடிக்கும் பணியில் அவர்கள் என்னென்ன ஆபத்துகளை துச்சமாக கருதினர்? இவற்றைத் தெரிந்துகொள்ள, 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
ஆன்ட்வெர்ப், வட கடலில் இருந்து 89 கிலோமீட்டர் தொலைவில், ஸ்கெல்ட் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள நகரம். ஆன்ட்வெர்ப்பின் பொற்காலம் என அழைக்கப்படும் 16-வது நூற்றாண்டில், என்றுமில்லாத அளவுக்கு அந்நகரில் செல்வம் கொழித்தது. உண்மையில், அந்நகரம் மளமளவென்று தன் எல்லையை விஸ்தரித்து, ஐரோப்பாவின் மிகப் பெரிய துறைமுக பட்டணமாக விளங்கியது; மேற்கு ஐரோப்பாவில் 1,00,000-ற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் சில நகரங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்தது.
ஆன்ட்வெர்ப்பின் வளர்ச்சி ஐரோப்பா முழுவதிலும் இருந்த வணிகர்களை அதனிடம் வசீகரித்தது. சொல்லப்போனால், இந்த வளர்ச்சியும், செல்வச் செழிப்புமே அதிக சகிப்புத்தன்மையை அந்நகரின் அதிகாரிகளுக்கு கொடுத்தன; இதனால் ஆன்ட்வெர்ப் புதுப்புது கருத்துக்கள் தலைதூக்கி தழைக்கும் இடமானது. இப்படி சகிப்புத்தன்மை நிலவிய சூழலால், இப்புதிய கருத்துக்களை அச்சில் வடித்து பாரெங்கும் பரப்ப வளமான இடமாக அச்சிடுவோர் அந்நகரத்தைக் கண்டனர். விரைவிலேயே, 16-வது நூற்றாண்டில் ஆன்ட்வெர்ப்பில் 271 அச்சிடுவோரும், பிரசுரிப்போரும், புத்தக விற்பனையாளர்களும் தோன்றினர். அப்போதிருந்த மாஜிஸ்ட்ரேட்டுகள், தங்கள் நகரம், “அனைத்து கலைகளுக்கும், அறிவியல் துறைகளுக்கும், நாடுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் அடைக்கலம் தருகிற, வளமான இடம்” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டனர்.
புத்தகங்களையும் துறவிகளையும் எரித்தல்
அச்சடித்து விநியோகிக்கப்பட்ட புதிய கருத்துக்களில் மார்ட்டின் லூத்தரின் (1483-1546) கருத்துக்களும் இடம்பெற்றன. அவர் சீர்திருத்த இயக்கத்தின் தலைவர்; இந்த மத இயக்கமே புராட்டஸ்டன்டு பிரிவின் பிறப்புக்கு அடிகோலியது. சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஆறே மாதங்களுக்குப் பிறகு லூத்தரின் புத்தகங்கள் ஆன்ட்வெர்ப்பிலிருந்த புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வந்தன. எதிர்பார்த்தபடியே கத்தோலிக்க சர்ச் இதை துளியும் விரும்பவில்லை. ஜூலை 1521-ல் ஆன்ட்வெர்ப்பில் மத விரோதிகளின் புத்தகங்கள் என முத்திரை குத்தப்பட்ட 400 புத்தகங்களை பொது இடத்தில் எரிக்கும்படி கத்தோலிக்க சர்ச் தூண்டியது. இரண்டு வருடம் கழித்து, லூத்தரின் கருத்துக்களை ஆதரித்த அகஸ்டினியன் துறவிகள் இருவர் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டனர்.
ஆன்ட்வெர்ப் நகரிலிருந்த தைரியமிக்க அச்சடிப்போர் சிலர், இந்த உருட்டல் மிரட்டலுக்கு மசியவில்லை. அவர்களின் தைரியமே பாமரர்களின் கையில் பைபிள் தவழ முக்கிய வழிசெய்தது. அவ்வாறு அச்சிட்ட தைரியசாலிகளில் சிலர் யார்?
அச்சிட இறங்கியதால் தியாக மரணம்
அட்ரீயன் வான் பெர்கன் அச்சடிப்பவரும் புத்தக வியாபாரியும் ஆவார். லூத்தரின் புத்தகங்களை விற்றதற்காக 1522-ல் அவர் தொழுமரத்தில் (stocks) பிணைக்கப்பட்டார். அதன் பின்பு விரைவிலேயே சிறையில் தள்ளப்பட்டார். அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டபோதோ தாமதிக்காமல் உடனடியாக தன் வேலையில் இறங்கினார். மீண்டும் அச்சிடும் பணியில் இப்போது லூத்தரின் “புதிய ஏற்பாடு” பைபிளின் ஒரு பகுதியை டச்சு மொழியில் அச்சிட்டார். லூத்தரின் “புதிய ஏற்பாடு” பைபிள் ஜெர்மன் மொழியில் முதன்முதலில் அச்சிடப்பட்டு ஒரே ஒரு வருடத்திற்குப் பின் 1523-ல் அது பிரசுரிக்கப்பட்டது.
என்றாலும் 1542-ல் நெதர்லாந்திலுள்ள டெல்ஃப்ட் நகரிலிருந்த வான் பெர்கனின் இல்லத்தில், தடை செய்யப்பட்ட புத்தகங்கள் ஏராளம் கண்டுபிடிக்கப்பட்டன; எனவே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். முதலில், ஒரு நீதிபதி அவருக்கு எளிய தண்டனை வழங்கினார்; “தடை செய்யப்பட்ட சில புத்தகங்களை அவரது கழுத்தில் கட்டி தொங்க விட்டு” தூக்குமேடையில் இரண்டு மணிநேரம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்ப்பளித்தார். ஆனால் அதன் பின்பு, வான் பெர்கனுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது; அச்சுத் தொழிலில் ஈடுபட்ட அந்த தைரியசாலியின் தலையை வாள் பதம் பார்த்தது.
ஓரக்குறிப்பு உயிரைக் குடித்தது
அந்தக் காலத்தில், டச்சு மொழியில் பைபிளை ஏராளமாக அச்சிட்டவர் யாக்கோப் வான் லீஸ்ஃபெல்ட் ஆவார். அவர் மொத்தத்தில் 18 பைபிள் பதிப்புகளை டச்சு மொழியில் பிரசுரித்திருந்தார். அவர் 1526-ல் முழு பைபிளையும் டச்சு மொழியில் அச்சிட்டார். முதன் முதலாக முழு பைபிளும் பிரெஞ்சு மொழியில் பிரசுரிக்கப்பட்டதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பும் ஆங்கில மொழியில் பிரசுரிக்கப்பட்டதற்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பும் அந்த பைபிள் வெளியிடப்பட்டது! வான் லீஸ்ஃபெல்ட் வெளியிட்ட பைபிளின் பெரும்பகுதி, லூத்தர் மொழிபெயர்க்க ஆரம்பித்து பாதியில் நின்றுபோன ஜெர்மன் பைபிளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
1542-ல் வான் லீஸ்ஃபெல்ட் அச்சிட்ட கடைசி டச்சுப் பதிப்பில் படங்களின் அச்சுகளும் புதிய ஓரக்குறிப்புகளும் காணப்பட்டன. உதாரணமாக, மத்தேயு 4:3-க்கு அருகே காணப்பட்ட ஒரு பட அச்சில், ஜெப மாலையை கையில் பிடித்தபடி, வெள்ளாட்டின் காலோடும், தாடியோடும் உள்ள ஒரு துறவியாக பிசாசு சித்தரிக்கப்பட்டிருந்தான். என்றாலும் முக்கியமாக ஓரக்குறிப்புகளே கத்தோலிக்க சர்ச்சின் கோபத்தைப் பெரிதும் கிளறின. ஒரு குறிப்பு—“இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே இரட்சிப்பு வருகிறது” என்ற வாசகம்—வான் லீஸ்ஃபெல்ட் மரண தண்டனை பெற காரணமானது. சர்ச்சின் ஒப்புதலோடுதான் தன் பைபிள் அச்சிடப்பட்டது என்பதாக வான் லீஸ்ஃபெல்ட் விவாதித்த போதிலும் 1545-ல் ஆன்ட்வெர்ப்பில் அவரது தலை துண்டிக்கப்பட்டது.
முன்னர் அங்கீகாரம் பின்னர் தடை
இதற்கிடையில், பிரான்ஸில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த, மனித இன நலக் கோட்பாட்டு ஆதரவாளரான ஜாக் லஃபீவ்ரா டேட்டாப்லா பைபிளை அதிவேகமாக லத்தீனிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தார்; அவர் மூல கிரேக்க வசனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தார். பாமரனும் பைபிளைப் பெற வேண்டுமென்பதே அவரது விருப்பம். அவர் எழுதினார்: “மனித பாரம்பரியங்களின் கலப்படமில்லாமல் தூய்மையாக கிறிஸ்துவை போதிக்கும் காலம் வருகிறது; அது இன்னும் வரவில்லை.” 1523-ல் பாரிஸில் “புதிய ஏற்பாடு” பைபிளை பிரெஞ்சு மொழியில் அவர் வெளியிட்டார். அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் பிரசித்தி பெற்ற சோர்பான் பல்கலைக்கழக இறையியலாளர்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. அவர்களுடைய எதிர்ப்பை சமாளிக்க டேட்டாப்லா பாரிஸிலிருந்து வடகிழக்கு பிரான்ஸிலிருந்த ஸ்ட்ராஸ்பர்க்குக்கு தப்பியோடினார்.
இந்த எதிர்ப்பால், பிரான்ஸிலிருந்த அச்சடிப்போர் பைபிளை பிரெஞ்சு மொழியில் அச்சடிக்க அதன் பிறகு துணியவில்லை. அப்படியானால், டேட்டாப்லா தன் பைபிளை எங்கே அச்சிட்டார்? ஆன்ட்வெர்ப்பில் அச்சிடுவது சரியானதாக பட்டது. மெர்ட்டன் ட கைஸர் என்பவரால் ஆன்ட்வெர்ப்பில் 1530-ம் வருடத்தில் அச்சிடப்பட்ட டேட்டாப்லாவின் பைபிள் பதிப்பே முதன்முதல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முழு பைபிளாகும். ட கைஸர் இந்த மொழிபெயர்ப்பை, பெல்ஜியத்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகிய லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் அனுமதியுடனும் புனித ரோம பேரரசர் ஐந்தாம் சார்லஸின் அனுமதியுடனும்கூட அச்சிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது! என்றாலும், 1546-ல் டேட்டாப்லாவின் மொழிபெயர்ப்பு கத்தோலிக்கருக்கு தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டது.
“புத்தகங்கள் பிஷப்புக்கு, . . . பணம் டின்டேலுக்கு”
இங்கிலாந்தில் அதே காலப்பகுதியில் மதகுரு பணியில் அமர்த்தப்பட்ட வில்லியம் டின்டேல் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டார். ஆனால் லண்டனின் பிஷப்பான கத்பர்ட் டன்ஸ்டல்லோ அவரை கடுமையாக சாடினார். இங்கிலாந்தில் பைபிள் மொழிபெயர்ப்புக்கு வரவேற்பு கிடைக்காததை டின்டேல் கண்டபோது, ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். கடைசியில் பிப்ரவரி 1526-ல், “புதிய ஏற்பாடு” பைபிளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடுவதில் அவர் வெற்றி கண்டார். அடுத்த மாதத்திற்குள் இந்த மொழிபெயர்ப்பின் முதல் பிரதிகள் இங்கிலாந்தில் கிடைத்தன.
ஆனால் பிஷப் டன்ஸ்டல்லோ, பொது மக்கள் பைபிள் படிப்பதை தடுப்பதில் தீவிரம் காட்டினார். எனவே தன் கண்ணில் பட்ட டின்டேலின் மொழிபெயர்ப்பை எல்லாம் ஒன்று விடாமல் தீக்கிரையாக்கினார். என்றபோதிலும், அவை புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே டின்டேலின் பைபிள்கள் அனைத்தையும், அவை ஐரோப்பா கண்டத்திலிருந்து இங்கிலாந்துக்கு வரும் முன்பே வாங்குவதற்கு பாக்கிங்டன் என்ற ஒரு வணிகரின் மூலம் அந்த பிஷப் ஏற்பாடு செய்தார். டின்டேலும் அதற்கு சம்மதித்து, அதிலிருந்து கிடைத்த பணத்தை தனது மொழிபெயர்ப்பை முன்னேற்றுவிக்கவும் மறுபதிப்பை அச்சிடவும் பயன்படுத்தினார். “ஆகவே இந்த வியாபார ஒப்பந்தம் வெற்றி கண்டது” என்கிறது அப்போதைய புத்தகம் ஒன்று.
“புத்தகங்கள் பிஷப்புக்கு, நன்றி பாக்கிங்டனுக்கு, பணம் டின்டேலுக்கு.” இவ்வாறு, லண்டனின் பிஷப், டின்டேலின் பைபிள் மொழிபெயர்ப்புக்கு அறியாமலேயே பண உதவி செய்தார்!ஆன்ட்வெர்ப்புடன் டின்டேலின் தொடர்பு
இந்த எல்லா பிரதிகளும் வாங்கப்பட்டு எரிக்கப்பட்ட பின்பும், டின்டேலின் “புதிய ஏற்பாடு” இங்கிலாந்துக்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. அது எப்படி? ஆன்ட்வெர்ப்பில் அச்சகம் நடத்தி வந்த ஹான்ஸ் மற்றும் கிறிஸ்டோஃபர் வான் ரூயிர்மண்ட் என்ற தைரியசாலிகளான சகோதரர்கள், டின்டேலின் “புதிய ஏற்பாடு” பைபிளின் பல பதிப்புகளை இரகசியமாக அச்சிட்டிருந்தனர். இந்த பைபிள்களில் எண்ணற்ற அச்சுப் பிழைகள் இருந்தாலும், இங்கிலாந்து மக்கள் அவற்றை மிகுந்த ஆவலுடன் மனமுவந்து வாங்கினர்.
என்றாலும், 1528-ல், டின்டேலின் “புதிய ஏற்பாடு” பைபிளை 1,500 பிரதிகள் அச்சிட்டதற்காகவும் அவற்றுள் 500 பிரதிகளை இங்கிலாந்திற்குள் கொண்டு வந்ததற்காகவும் ஹான்ஸ் லண்டனில் சிறையிலடைக்கப்பட்டார். ஆங்கிலேயரின் சிறையில் ஒருவேளை அவர் இறந்திருக்கலாம். 1531-ல், ஹான்ஸின் தம்பி கிறிஸ்டோஃபரும் “புதிய ஏற்பாடு” பைபிளை விற்றதற்காக இங்கிலாந்தில் சிறையிலடைக்கப்பட்டார். இவரும் சிறையிலேயே இறந்திருக்கலாம்.
“டின்டேலின் மாபெரும் இலக்கிய படைப்பு”—ஆன்ட்வெர்ப்பில் அச்சானது
1529 முதல் 1535 வரை டின்டேல் பெருமளவு நேரத்தை ஆன்ட்வெர்ப்பில் செலவிட்டார்; அங்கு நிலவிய சூழல் அவருடைய வேலைக்கு அனுகூலமாக அமைந்தது. அங்கு 1530-ல், டின்டேலின் ஐந்தாகம மொழிபெயர்ப்பை மெர்ட்டன் ட கைஸர் அச்சிட்டார்; அதில் யெகோவா என்ற பெயர் ஆங்கிலத்தில் முதன்முதல் காணப்பட்டது.
மே 1535-ல், டின்டேல் ஆன்ட்வெர்ப்பில் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் பலவீனமடைந்தபோது, அவருடைய மாணாக்கரில் ஒருவரான மில்ஸ் கவர்டேல், அவரது எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை மொழிபெயர்த்து முடித்தார். அக்டோபர் 6, 1536-ல், பெல்ஜியத்திலுள்ள வில்வார்ட் நகரில் டின்டேலை கழுமரத்தில் கட்டி, கழுத்தை நெறித்து கொன்று, உடலை எரித்தார்கள். இதுவே அவரது கடைசி வார்த்தைகள்: “ஆண்டவரே, இங்கிலாந்து அரசரின் கண்களைத் திறப்பீராக!”
டின்டேல் விட்டுச் சென்ற சொத்து
டின்டேல் கொலை செய்யப்பட்ட சிறிது காலத்தில், இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி, சர்ச்சுகளில் வாசிக்கப்படுவதற்காக ஒரு பைபிள் மொழிபெயர்ப்புக்கு அனுமதி வழங்கினார். அது ஆன்ட்வெர்ப்பில் அச்சகம் நடத்தி வந்த மற்றொருவரான மாட்டீயாஸ் கிராமால் அச்சிடப்பட்டது. இந்த பைபிள் பொதுவாக மேத்யூஸ் பைபிள் (தாமஸ் மேத்யூ என்பவரின் நினைவாக அவ்வாறு அழைக்கப்பட்டது) என்று எல்லாராலும் அறியப்பட்டது; இதில் பெரும் பகுதி டின்டேலின் மொழிபெயர்ப்பாகும். a சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் எரித்த அதே பைபிள் மொழிபெயர்ப்பையே—அதுவும் டின்டேலின் உயிரைக் குடித்த அதே மொழிபெயர்ப்பையே—பிஷப்புகள் பயன்படுத்தியது எவ்வளவு வேடிக்கையான விஷயம்!
டின்டேல் மொழிபெயர்த்தவற்றில் பெரும்பாலானவை கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஆங்கில மொழியின்மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தியுள்ள கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளின் அநேக கூற்றுகள் டின்டேலின் எண்ணத்தில் உருவானவை, ஆன்ட்வெர்ப்பில் முதன்முதல் அச்சிடப்பட்டவை. பேராசிரியர் லாட்ரே சொல்கிறபடி, ஆங்கில மொழிமீது டின்டேல் செலுத்திய செல்வாக்கு, ஷேக்ஸ்பியரின் செல்வாக்கைவிட அதிகம்!
16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆன்ட்வெர்ப் மத சகிப்புத்தன்மையற்ற நகரமானது; பைபிள் அச்சிடுவதற்கு அடைக்கலம் என்ற நிலை மாறியது. இந்த மாற்றம், முக்கியமாக சீர்திருத்த இயக்கத்தை எதிர்த்த கத்தோலிக்க சர்ச்சின் துன்புறுத்துதலால் நேர்ந்தது. எனினும், ஆன்ட்வெர்ப்பில் ஆரம்ப காலத்தில் பைபிளை அச்சிட்டவர்கள் காட்டிய தைரியமும் செய்த தியாகங்களும் இன்று உலககெங்கும் உள்ள பைபிள் வாசகருக்கு கடவுளுடைய வார்த்தை கிடைப்பதற்கு பெரிதும் வழிசெய்திருக்கின்றன. (g02 9/8)
[அடிக்குறிப்பு]
a தாமஸ் மேத்யூ ஒருவேளை ஜான் ரோஜர்ஸின் மறுபெயராக இருந்திருக்கலாம். அவர் டின்டேலின் நண்பரும் அவருடன் சேர்ந்து பணியாற்றியவரும் ஆவார்.
[பக்கம் 13-ன் படங்கள்]
மேலே: கையால் அச்சு கோர்ப்பது; மார்ட்டின் லூத்தர் பைபிளை மொழிபெயர்க்கிறார்; ஆன்ட்வெர்ப்பின் பண்டைய நகர வரைபடம்
[பக்கம் 14-ன் படம்]
யாக்கோப் வான் லீஸ்ஃபெல்ட்டின் புத்தகக் கடை
[பக்கம் 15-ன் படங்கள்]
ஜாக் லஃபீவ்ரா டேட்டாப்லாவும், 1530-ம் வருடத்தில் ஆன்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்ட அவரது பைபிள் பதிப்பின் அட்டை பக்கமும்
[பக்கம் 15-ன் படம்]
லண்டனில் ஆங்கில பைபிள்கள் யாவர் முன்னிலையிலும் எரிக்கப்படுதல்
[பக்கம் 16-ன் படம்]
வில்லியம் டின்டேல், அவரது பைபிளிலிருந்து ஒரு பக்கம், மில்ஸ் கவர்டேல்
[பக்கம் 14-ன் படங்களுக்கான நன்றி]
பக்கம் 13: அச்சு கோர்ப்பவர்: Printer’s Ornaments/by Carol Belanger Grafton/Dover Publications, Inc.; லூத்தர்: From the book Bildersaal deutscher Geschichte; வரைபடம்: By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen; பக்கம் 15: படம்: From the book Histoire de la Bible en France; பைபிள் பக்கம்: © Cliché Bibliothèque nationale de France, Paris; பைபிள்களை எரித்தல்: From the book The Parallel Bible, The Holy Bible, 1885; பக்கம் 16: டின்டேல்: From the book The Evolution of the English Bible; கவர்டேல்: From the book Our English Bible: Its Translations and Translators