உதட்டசைவுகளை படிக்கும் விதம்
உதட்டசைவுகளை படிக்கும் விதம்
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்
சந்தேகத்திற்குரிய இரண்டு பயங்கரவாதிகள் ஒரு பூங்காவில் பேசிக்கொண்டிருந்தது வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை எவராலும் கேட்க முடியவில்லை, இருந்தாலும் போலீஸார் அவர்களை கைது செய்தனர்; பிற்பாடு அவர்கள் நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டார்கள். அவர்கள் உரையாடல் படமாக்கப்பட்டிருந்ததால் உதட்டசைவுகளை படிப்பவர் அவர்கள் பேசியதை கண்டுபிடித்துவிட்டார், பிரிட்டனில் திறமைமிக்க சாட்சியாக அவர் பாராட்டப்பட்டு, பிரிட்டிஷ் போலீஸின் “சக்திவாய்ந்த இரகசிய ஆயுதம்” என விவரிக்கப்பட்டார்.
உதட்டசைவை படிப்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு, மைக்கையும் கிறிஸ்டீனாவையும் சந்திக்கச் சென்றேன். கிறிஸ்டீனாவுக்கு மூன்று வயதிலிருந்து காது கேட்காமல் போய்விட்டது. பிற்பாடு, காதுகேளாதோர் பள்ளியில் சேர்ந்து படித்தார், அங்கே உதட்டசைவை படிப்பது எப்படி என்பது அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. மைக் என்பவர் சுயமாகவே உதட்டசைவை படிக்க கற்றுக்கொண்டவர், கிறிஸ்டீனாவை திருமணம் செய்த பிறகு இவர் வளர்த்துக்கொண்ட திறமை இது.
உதட்டசைவை படிப்பது எந்தளவுக்கு கஷ்டம்? “உதடுகள், நாக்கு, கீழ் தாடை ஆகியவற்றின் அமைப்பையும் அசைவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும்” என கூறுகிறார் மைக். கிறிஸ்டீனா மேலும் கூறுகிறார்: “உங்களிடம் பேசுகிறவரை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும், உதட்டசைவை படிக்கும் திறமை வளர வளர, முக பாவனைகளையும் சரீர மொழியையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.”
பேசுகிறவர் கத்துவது அல்லது மிகைப்படுத்தி உதடுகளை அசைப்பது மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்பதை நான் கற்றுக்கொண்டேன். இது குழப்புவதாகவும் பயன் தராததாகவும் இருக்கலாம். உதட்டசைவை படிப்பதில் திறமை பெற்றுவிட்டால், குறிப்பிட்ட வட்டாரத்திற்குரிய மொழியின் அசை அழுத்தங்களையும் வாசிப்பவரால் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் இதெல்லாம் ரொம்ப சுலபமல்ல! உதட்டசைவை படிக்க கற்றுக்கொடுப்பதில் தேர்ச்சிபெற்று விளங்கும் ‘ஹியரிங் கன்ஸர்ன்’ என்ற ஓர் அமைப்பு வெளிப்படையாக இவ்வாறு சொல்கிறது: “உதட்டசைவை படிப்பதற்கு தேவை பழக்கம், பழக்கம், அதிக பழக்கம்.”
ஒரு பஸ்ஸிலோ அல்லது ரெயிலிலோ போகும்போது தன்னை அறியாமலேயே ஓர் உரையாடலை “செவிகொடுத்துக் கேட்பதைக்” கண்டு திகைப்புற்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என கிறிஸ்டீனா ஒப்புக்கொள்கிறார். அப்பொழுது அவர் உடனடியாக பார்வையை வேறுபக்கத்திற்கு திருப்பிவிடுவார். ஆனால் அவருடைய திறமை ஒரு பாதுகாப்பாகவும் இருக்கிறது. கிறிஸ்டீனா டெலிவிஷனில் கால்பந்தாட்ட நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை, ஏனென்றால் விளையாட்டு வீரர்கள் சிலர் பேசிக்கொள்வதை அவரால் பார்த்து புரிந்துகொள்ள முடிவதால் அதிக வெறுப்படைந்திருக்கிறார்.
பிரிட்டிஷ் போலீஸாருடைய “இரகசிய ஆயுத”த்தின் திறமையை வெகு சிலரே அடைவர். ஆனால் சாதாரண உதட்டசைவை படிப்பதுகூட செவி பாதிக்கப்பட்ட பிறகு வளர்த்துக்கொள்ள வேண்டிய மதிப்புமிக்க கலையாக இருக்கலாம். (g02 10/8)
[பக்கம் 31-ன் படம்]
கிறிஸ்டீனா
[பக்கம் 31-ன் படம்]
மைக்