Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

‘செல்வம் பற்றிய கனவுகள்’

சூதாட்டத்தில் கணிசமானளவு பணத்தை ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே என்றாலும் அதன் வாயிலாக வறுமையின் பிடியிலிருந்து தப்பலாம் என்று நினைக்கும்படி செய்யும் எண்ணற்ற விளம்பரங்கள் ஏராளமான ஏழைகளை ஏமாற்றுகின்றன என டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா அறிக்கை செய்கிறது. “செல்வம், ஆடம்பரம், பிரச்சினையற்ற வாழ்க்கை ஆகியவை உடனடியாக கிடைக்குமென்ற கனவுகளை லாட்டரி விளம்பரங்கள் தூண்டிவிடுகின்றன” ஆனால் “ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பது குறிப்பிடப்படுவதே கிடையாது” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. “ஒருவர் என்னதான் சாக்குப்போக்கு சொன்னாலும் சூதாடுவது பகல் கொள்ளையே; ஒழுக்க சுத்தமான சமுதாயத்தில் அதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்” என்று அது கூறி முடிக்கிறது. (g02 10/22)

கும்மிருட்டு குலைநடுக்கம்

“பெற்றோரைவிட இன்று பிள்ளைகள் இருட்டைக் கண்டு அதிகமாக பயப்படுகிறார்கள்; அவர்கள் செயற்கை வெளிச்சத்தை அதிகமதிகமாய் காண்பதால் கும்மிருட்டை காண்பதேயில்லை” என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாளில் வந்த ஓர் அறிக்கை கூறியது. பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் ஏறக்குறைய மூன்றில் இருவர் நைட்-லாம்ப் போட்டுக்கொண்டு உறங்க வேண்டும் என்று அடம்பிடிப்பதாக உளவியல் நிபுணரும் நூலாசிரியருமான ஆரிக் சிக்மன் கண்டுபிடித்தார். இரவில் தூங்கும்போதும்கூட இருட்டாக இல்லாததால் இளைஞரின் கற்பனைத் திறன் தடைபடுவதாக அவர் கூறுகிறார். “பிள்ளைகளின் கற்பனைத் திறன் வளர அனுமதிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. “இருட்டில் அவர்களாகவே விளையாடுவது அதிக ஆர்வத்தைத் தூண்டும், ஏனெனில் அவர்கள் உருவாக்கும் உருவங்கள் அனைத்தும் விசேஷித்தவையாய் இருக்கும்.” இன்றோ, “டிவி, சினிமா, கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்றவை பிள்ளைகளின் மனதில் பதிக்கும் உருவங்கள்” அவர்களை பயமுறுத்துகின்றன. “புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து, டிவி பார்ப்பதை குறையுங்கள் என்று சொல்வது பாட்டி காலத்து அறிவுரை போல தோன்றலாம், ஆனால் இதை திரும்பத் திரும்ப கூற வேண்டும்” என்று டாக்டர் சிக்மன் கூறுகிறார். (g02 10/22)

மனிதன் என்றாலே அலர்ஜி

“அநேக மிருகங்களுக்கு மனிதன் என்றாலே அலர்ஜி” என ஜெர்மானிய செய்தித்தாளான லைப்ட்ஸீகர் ஃபால்க்ஸ்ட்ஸைடுங் கூறுகிறது. “20 வளர்ப்பு பிராணிகளில் ஒன்றிற்கு மனிதர் அருகில் இருந்தாலே தோலில் அரிப்புகள் அல்லது தொடர் தும்மல் போன்ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படுகின்றன” என ஜெர்மன் அலர்ஜி அண்டு ஆஸ்துமா அசோஸியேஷன் (DAAB) சமீபத்தில் அறிவித்ததாக அந்த செய்தித்தாள் கூறியது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காய்ந்து உதிரும் மனிதனின் தோலும், அவற்றை உண்ணும் சிறிய பூச்சிகளின் கழிவுமே இதற்கு காரணங்களாக கருதப்படுகின்றன. ஒருவரின் வளர்ப்பு பிராணி, உண்ணி இல்லாதபோதே எப்போதும் சொறிந்துகொண்டோ, உடலை நக்கிக்கொண்டோ, முடியை பிடுங்கிக்கொண்டோ இருந்தால் அதற்கு அலர்ஜி இருப்பதை அதன் சொந்தக்காரர் கண்டுகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அந்தப் பிராணியை வேறு இடத்தில் வைக்கும்போது அல்லது அதன் சொந்தக்காரர் இல்லாதபோது இந்த அறிகுறிகள் குறைந்தால் அது மேலுமான அத்தாட்சியளிக்கும். மிருகங்களுக்கு அலர்ஜி ஏற்பட உணவும் மகரந்தமும்கூட காரணமாயிருப்பதாக கூறப்பட்டது. உதாரணமாக, சமீப காலங்களில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக DAAB கூறியது. (g02 8/22)

பசியில்லா உளநோயின் ஆரம்ப அறிகுறிகள்

“பிள்ளைகள் சாப்பிடும் விதத்தை வைத்தே பசியில்லா உளநோயின் (anorexia) அல்லது பெரும்பசி நோயின் ஆரம்ப அறிகுறிகளை பெற்றோர் கண்டுபிடித்துவிடலாம்” என்று லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. சாப்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் மோசமடைவதற்கு முன்பு அவற்றை கண்டுபிடிக்க பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதற்காக ஈட்டிங் டிஸ்ஸாடர் அசோஸியேஷன் (EDA) ஒரு வழிகாட்டியை பிரசுரித்திருக்கிறது. பித்துப்பிடித்ததுபோல உணவை சிறுசிறு துண்டுகளாக பிய்ப்பது அல்லது ஒவ்வொரு முறையும் உணவை வாயில் வைப்பதற்கு ஐந்து நிமிடம் எடுப்பது போன்றவை சில ஆரம்ப அறிகுறிகளாகும். சாப்பிடுவதில் பிரச்சினை உள்ளவர்கள் சில ஏமாற்று வேலைகளை கையாளலாம்; சாப்பிடாத உணவை மறைத்து வைப்பதற்காக தொளதொளவென்ற உடையை அணியலாம். ஆரோக்கியமாகவும் சராசரி எடையுடனும் தோற்றமளிக்கும் தங்கள் புகைப்படங்களை அப்புறப்படுத்தும்படியும் அவர்கள் கேட்கலாம். இந்த அறிகுறிகளை அசட்டை செய்யாதபடியும் தாங்கள் கண்டவற்றைப் பற்றி வெளிப்படையாக பேசும்படியும் EDA வழிகாட்டி பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது. (g02 10/8)

தர்மாமீட்டர் நஞ்சு

“ஒரு தர்மாமீட்டரிலிருக்கும் மெர்க்குரி 11 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு குளத்தை மாசுபடுத்தலாம்; உடைந்துபோன தர்மாமீட்டர்களால் ஒவ்வொரு வருடமும் சுமார் 17 டன் மெர்க்குரி ஐ.மா. கழிவுநீரோடு கலக்கிறது” என்று நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை கூறுகிறது. அந்த மெர்க்குரியை உட்கொள்ளும் மீன்களை சாப்பிடும் மனிதர்களும் அந்த உலோகத்தை உட்கொள்கின்றனர்; இது நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். பாஸ்டன் உட்பட பல்வேறு நகரங்களில் மெர்க்குரி தர்மாமீட்டர்கள் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ளன. அங்குள்ள சில கடைகளில், மெர்க்குரி தர்மாமீட்டர்களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் தர்மாமீட்டர்களையும் அதிக ஆபத்தற்ற மற்ற கருவிகளையும் கொடுக்கிறார்கள். (g02 10/8)

மிதமான உடற்பயிற்சி தேவை

“(ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது நீந்துவது) போன்ற பயிற்சிகளை 30 நிமிடம் அல்லது ஒரு மணிநேரம் என்று வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது” என்று பிரெஞ்சு செய்திப் பத்திரிகையான லெக்ஸ்பிரெஸ் கூறுகிறது. ஆனால், மோசமான உடல்நல கோளாறுகளை தவிர்க்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி மிதமாக இருக்க வேண்டும். அளவுக்கதிகமான உடற்பயிற்சியால் மூட்டுகள் பலவீனமடையலாம், குருத்தெலும்புகள் சேதமடையலாம், இடுப்பெலும்பு நகர்ந்துவிடலாம், தொடர்ந்த அழுத்தத்தினால் எலும்புமுறிவு ஏற்படலாம், உயர் இரத்த அழுத்தம், செரிமான கோளாறுகள், எலும்பு மெலிதல், மாரடைப்பு போன்றவைகூட ஏற்படலாம். “உடலை மிக அதிகமாக வருத்துவதன் காரணமாக பிரான்சில் ஒவ்வொரு வருடமும் திடகாத்திரமாக இருக்கும் 1,500 விளையாட்டு வீரர்கள் திடீரென இறந்துபோகிறார்கள்” என்று லெக்ஸ்பிரெஸ் அறிக்கை செய்கிறது. பாரிஸிலுள்ள பிட்யே சால்பெட்ரெயர் மருத்துவமனையை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மருத்துவ ஸ்பெஷலிஸ்டான டாக்டர் ஸ்டேஃபான் கஸ்க்வா, வாரயிறுதிகளில் மட்டுமே விளையாட்டில் ஈடுபட்டு கடைசியில் ஆஸ்பத்திரியில் சேர வேண்டிய நிலைக்குள்ளாகும் அநேகருக்கு பின்வரும் அறிவுரையை கொடுக்கிறார்: தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், ஆனால் உங்கள் இருதயத்தின் உச்ச அளவு ஆற்றல் என்னவோ அதில் சுமார் 75 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். (g02 10/8)

சீனாவின் விண்வெளி திட்டம்

சீனாவின் விண்கலமான ஷன்ஜோ III, 2002, ஏப்ரல் 1-⁠ம் தேதி உள் மங்கோலியாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆளில்லாத இந்த விண்கலம் ஒரு வார பணியை முடித்து திரும்பியது என்று பிபிஸி நியூஸ் அறிக்கை செய்கிறது. அந்த விண்கலத்தில் ஒரு “செயற்கை மனிதன்” இருந்தான்; எதிர்காலத்தில் மனிதர்களை அனுப்பும் விண்கலத்தில் உபயோகிக்கவிருக்கும் உயிர் ஆதார முறைகளை சோதிப்பதற்காக ஆக்ஸிஜன் அளவுகளையும் தட்பவெப்பத்தையும் கண்டுணர சென்ஸார்கள் பொருத்தப்பட்ட பொம்மை அது. 2005-⁠ம் வருடத்திற்குள்ளாக விண்வெளிக்கு ஒரு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருப்பதாக சீன விண்வெளி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். “2010-⁠க்குள்ளாக நிலவிற்கு மனிதனை அனுப்புவதே சீன விண்வெளி நிறுவனத்தின் நீண்டகால குறிக்கோளாகும்” என அந்த அறிக்கை கூறுகிறது. (g02 10/22)

அழிந்துவரும் சிங்கங்கள்

“சீக்கிரத்தில், ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளில் சிங்க கூட்டங்கள் முற்றிலும் அழிந்துபோகலாம்” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. 500 முதல் 1,000 சிங்கங்கள் இருந்தால்தான், இணை சேரக்கூடிய சுமார் 100 ஜோடிகளை உருவாக்க முடியும். உட்கலப்பை தவிர்க்க இதுவே போதுமான எண்ணிக்கையாகும். மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சிங்க கூட்டங்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் குறைவு என்று உலக இயற்கை வளவாய்ப்பு பாதுகாப்பு யூனியன் கூறுகிறது. நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹான்ஸ் பௌ இவ்வாறு கூறுகிறார்: “நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அங்கிருக்கும் சிங்க கூட்டங்களில் எதுவுமே தொடர்ந்து உயிரோடிருக்கும் என்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது.” அதன் வாழிடத்தில் மனிதன் நுழைந்திருப்பதே எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாகும். வேட்டையாட சிங்கங்களுக்கு மிகப் பெரிய நிலப்பரப்பு தேவை​—⁠ஓர் ஆண் சிங்கத்திற்கு ஏறக்குறைய 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தேவை. “சிங்கம் ஒரு முக்கிய இனமாகும். இது ஓர் எச்சரிப்பு​—⁠இப்போது சிங்கங்கள் ஆபத்தில் இருப்பது இன்னும் 20, 30 வருடங்களில் மற்ற இனங்களும் ஆபத்திற்குள்ளாகலாம் என்பதை அர்த்தப்படுத்தலாம்” என்று பௌ எச்சரிக்கிறார். (g02 10/22)

ஆல்கஹாலுக்கு அடிமை

பிரிட்டனிலுள்ள 13 பேரில் ஒருவர் இப்போது ஆல்கஹாலுக்கு அடிமை என்று லண்டனின் த இன்டிபென்டன்ட் அறிக்கை செய்கிறது. இவ்வாறு, ஆல்கஹாலுக்கு அடிமையாவது “சட்டவிரோத அல்லது பிரிஸ்கிரிப்ஷன் மருந்துகளுக்கு அடிமையாவதைவிட இரண்டு மடங்கு அதிக சகஜமாகும்.” 1994 முதல் 1999 வரை, ஆல்கஹால் துர்ப்பிரயோகத்தினால் ஏற்பட்ட மரணங்கள் ஏறக்குறைய 43 சதவிகிதம் அதிகரித்தன; இருதய நோய், கல்லீரல் இறுகுநோய், ஆல்கஹாலில் நஞ்சு போன்றவற்றால் ஏற்பட்ட மரணங்களும் இதில் உட்படும். குடித்துவிட்டு ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை 1998-⁠ல் 10,100-ஆக இருந்தது, 2000-⁠ல் 11,780-ஆக அதிகரித்துவிட்டது; இவ்வாறு, சாலையில் ஏற்படும் மரணங்களில் 7-⁠ல் ஒன்றிற்கு காரணமாகவும் ஆனது. அளவுக்கு அதிகமாக குடிக்கும் தொழிலாளர்களால் 60 சதவிகித முதலாளிகளுக்கு பிரச்சினை; வன்முறையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் 40 சதவிகிதத்தினர் ஆல்கஹாலின் பிடியினால்தான் அவ்வாறு செய்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த சேவை அமைப்பான ஆல்கஹால் கன்ஸர்னின் இயக்குனரான எரிக் ஆப்பில்பீ இவ்வாறு கூறினார்: “பொது சேவைகள் மீது ஏற்படும் பாதிப்பை கணக்கில் சேர்க்காமல், மக்களின் ஆரோக்கியம், உறவுகள், பண செலவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாதிப்புகளின் அளவை மட்டுமே எடுத்துக்கொண்டால்கூட . . . உடனடியான, ஒன்றுபட்ட நடவடிக்கை தேவை என்பது புரிகிறது.” (g02 10/22)