எனக்கு மொபைல் போன் தேவைதானா?
இளைஞர் கேட்கின்றனர் . . .
எனக்கு மொபைல் போன் தேவைதானா?
“கையில மொபைல் போன் மட்டும் இல்லேன்னா ஏதோ பாதுகாப்பே இல்லாததுபோல் தோணும், எரிச்சல் எரிச்சலாக வரும்.”—அக்கிகோ. a
அநேக நாடுகளில் மொபைல் போன்களுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. அவற்றால் பல சௌகரியங்கள் உண்டு. உங்கள் நண்பர்களும் பெற்றோரும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உங்களுடன் தொடர்புகொள்ளலாம்; அதேபோல் நீங்களும் அவர்களுடன் பேசலாம். சில மாடல் மொபைல் போன்களில், சுருக்கமாக டைப் அடித்து செய்திகளை பரிமாறிக் கொள்ள முடியும். “மற்றவர்களோடு தொடர்புகொள்ள துடிக்கும் இளசுகள் கையாளும் லேட்டஸ்ட் மாடல் இதுதான்” என்கிறது லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள். இன்னும் சில மொபைல் போன்களில் இன்டர்நெட் வசதியும் உண்டு; இதனால் வெப் சைட்டுகளும் ஈ-மெயிலும் உங்கள் வசம்.
உங்களிடம் ஏற்கெனவே ஒரு மொபைல் போன் இருக்கலாம், அல்லது அதை வாங்குவதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், எதிலுமே சாதகமான பக்கமும் உண்டு பாதகமான பக்கமும் உண்டு என்பதை நீங்கள் நினைவில் வைப்பது நல்லது. மொபைல் போனினால் நன்மைகள் சில இருந்தாலும் அதன் மறுபக்கத்தையும் நீங்கள்
கட்டாயம் அறிய வேண்டும்; ஏனென்றால் அதை வாங்க நீங்கள் தீர்மானித்துவிட்டாலும் அதனால் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என முழுமையாக அறிந்திருந்தால் அதை ஞானமாக பயன்படுத்த உதவியாக இருக்கும்.‘செலவை கணக்குப் பாருங்கள்’
ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுவதற்கு முன்பு அதற்குரிய ‘செலவை கணக்குப் பார்க்க வேண்டும்’ என்ற முத்தான நியமத்தை இயேசு குறிப்பிட்டார். (லூக்கா 14:30) மொபைல் போன்களுக்கு இந்த நியமம் பொருந்துமா? நிச்சயமாக பொருந்தும். மிக மலிவான விலையில் அல்லது இலவசமாகக்கூட ஒரு மொபைல் போன் உங்களுக்குக் கிடைக்கலாம் என்பது உண்மை. இருந்தாலும் “பில் திடீரென்று எகிறிவிடலாம்” என்பது 17 வயது ஹென்னா அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. மேலும், லேட்டஸ்ட் புரோகிராம்களை பெற வேண்டும், விலையுயர்ந்த மாடல்களை வாங்க வேண்டும் என்ற துடிப்பு எப்போதும் இருக்கலாம். “எனக்கு பார்ட்-டைம் வேலை இருக்கிறது, அதனால் வருஷா வருஷம் மார்க்கெட்டில் புதிதாக இறங்கும் மாடலை வாங்குவதற்கு பணத்தை ஒதுக்கிவிடுகிறேன்” என்கிறார் ஹிரோஷி. அநேக இளைஞர்கள் இதைத்தான் செய்கிறார்கள். b
பில்லை உங்கள் பெற்றோர் கட்டினாலும், எத்தனை செலவாகிறது என்பதில் கவனமாக இருப்பது முக்கியம். ஜப்பானிலுள்ள கிறிஸ்தவ பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளைகளுடைய மொபைல் போன் பில்லை கட்டுவதற்காகவே சில தாய்மார்கள் கூடுதலாக பார்ட்-டைம் வேலைக்கு செல்கிறார்கள்; அதுவும் அந்த பிள்ளைகளுக்கு மொபைல் போன் தேவையே இல்லை.” இப்படிப்பட்ட ஒரு சுமையை உங்கள் பெற்றோரின் தலையில் சுமத்த நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள் அல்லவா?
“நேரத்தை வீணாக்குகிறது”
ஆரம்பத்தில் போனை அவசியமான போது மட்டும் பயன்படுத்தும் அநேகர் பிற்பாடோ தாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிக நேரத்தை போன் பேசுவதில் செலவழிக்கிறார்கள். இதனால் முக்கியமான காரியங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருகாலத்தில், குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும்போது நிறைய நேரம் செலவழித்ததாக மீக்கா என்ற பெண் சொல்கிறாள். ஆனால் “இப்போதோ, சாப்பிட்டு முடித்த கையோடு அவரவர் [மொபைல் போன்களை] எடுத்துக்கொண்டு அவரவர் ரூம்களுக்கு போய்விடுகிறோம்” என்கிறாள் அவள்.
“16 முதல் 20 வயதுள்ள இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், எழுத்தில் தொடர்புகொள்ள மொபைல் போனில் செய்திகளை அனுப்பும் முறையையே பெரிதும் வரவேற்கின்றனர்” என லண்டனின் த கார்டியன் சொல்கிறது. போனில் பேசுவதைவிட இவ்வாறு எழுத்தில் “பேசுவதால்” பணம் குறைவாகவே செலவானாலும் செய்திகளை டைப் அடிப்பதற்கு நேரம் அதிகமாகவே செலவாகிறது. மீயேக்கோ இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “யாராவது ‘குட் நைட்’ என செய்தி அனுப்புவார்கள். நானும் பதிலுக்கு ‘குட் நைட்’ என்று அனுப்புவேன். பிறகு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு உரையாடல் தொடரும். எல்லாம் வெறும் வெட்டிப் பேச்சுதான்.”
மொபைல் போனின் சொந்தக்காரர்கள் அநேகர் ஒரு மாதத்திற்கு எத்தனை மணிநேரம் அதில் பேசுகிறார்கள் என சற்று நிதானித்து மொத்தமாக கூட்டிப் பார்த்தால் அவர்களே திடுக்கிட்டுப் போவார்கள். “அநேகரின் விஷயத்தில், மொபைல் போன் நேரத்தை விழுங்குகிறதே தவிர அதை மிச்சப்படுத்துவதில்லை” என ஒப்புக்கொள்கிறாள் 19 வயது நிரம்பிய டேஜா. உங்கள் சூழ்நிலைக்கு அது உண்மையிலேயே தேவைப்பட்டாலும் அதைப் பயன்படுத்தும்போது நேரத்தை கவனத்தில் வைப்பது முக்கியம்.
“கிறிஸ்தவ அசெம்பிளிகளில் அநேக இளைஞர்கள் ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் மெசேஜ் அனுப்புகிறார்கள். அது ரொம்பவே சகஜம்!” என இளம் கிறிஸ்தவ பெண் மார்யா சொல்கிறாள். கிறிஸ்தவ ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது இளைஞர்கள் அதை உபயோகிப்பது தெரிய வந்திருக்கிறது. ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்காக நேரத்தை வாங்க வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுரை வழங்குகிறது. (எபேசியர் 5:16, NW) அப்படிப்பட்ட பொன்னான நேரத்தை போன் பேசுவதில் வீணடிப்பது எவ்வளவு வருந்தத்தக்கது!
ரகசிய பேச்சு
மற்றொரு ஆபத்தைப் பற்றி மரியே என்ற பெண் சொல்கிறாள்: “போன் கால்கள் வீட்டிற்கு வராமல் நேரடியாக உரியவருக்கு வருவதால், பிள்ளைகள் யாரிடம் பேசுகிறார்கள் என்றே பெற்றோருக்கு தெரியாதிருக்கும் ஆபத்து இருக்கிறது; அவர்கள் போன் பேசுகிறார்களா இல்லையா என்றுகூட அவர்களுக்கு தெரியாதிருக்கலாம்.” இதனால் எதிர்பாலாருடன் ரகசியமாக பழக மொபைல் போன்கள் சில இளவட்டங்களுக்கு கைகொடுத்திருக்கின்றன. சிலர் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள்; பொதுவாக மற்றவர்களோடு தொடர்புகொள்ளும்போது கடைப்பிடிக்கும் வரம்புகளை மீறியிருக்கிறார்கள். எப்படி?
“[இளைஞர்கள்] எழுத்தில் ‘பேசுகையில்’ எவராலும் கண்காணிக்க முடிவதில்லை” என்கிறது லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாள். உங்களுடன் “உரையாடும்” நபரை பார்க்க முடியாதது அல்லது கேட்க முடியாதது உங்கள்மீது பாதிப்பை ஏற்படுத்தும். “எழுத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்வது, ஒட்டுதலில்லாமல் உறவாட சிறந்த வழியென சிலர் நினைக்கிறார்கள். நேருக்கு நேர் சொல்ல துணியாத விஷயங்களை சிலர் எழுதி அனுப்பலாம்” என டிமா சொல்கிறார்.
கேகோ என்ற 17 வயது கிறிஸ்தவ பெண் மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்தபோது, அநேக நண்பர்களுக்கு தன் நம்பரைக் கொடுத்தாள். விரைவில், தன் சபையில் இருந்த ஒரு பையனோடு தினமும் உரையாட ஆரம்பித்தாள். “முதலில் சாதாரண விஷயங்களைப் பற்றி பேசினோம், அதன் பின்னரோ எங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். மொபைல் போன்களின் உதவியால் எங்களுக்கென ஒரு தனி உலகையே உருவாக்கிக் கொண்டோம்” என்கிறாள் கேகோ.
நல்ல வேளையாக, நிலைமை இன்னும் மோசமடைவதற்குள் பெற்றோரிடமிருந்தும் கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தும் அவள் உதவி பெற்றாள். இப்போது அவள் இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “பையன்களுக்கு மெயில் அனுப்புவதில் உள்ள ஆபத்துக்களை பற்றி மொபைல் போனை எனக்கு வாங்கிக் கொடுப்பதற்கு முன்பே என் பெற்றோர் படித்துப் படித்துச் c
சொல்லி இருந்தார்கள். ஆனாலும் தினமும் அந்த பையனுக்கு மெயில் அனுப்பினேன். போனை தவறாக பயன்படுத்திவிட்டேன்.”“நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்” என பைபிள் நமக்கு அறிவுரை வழங்குகிறது. (1 பேதுரு 3:16) கோயீச்சி என்ற இளைஞன் சொல்கிறபடி, மொபைல் போனைப் பயன்படுத்தும் விஷயத்திலும் இது பொருந்தும்; ஆகவே, போனில் நீங்கள் அனுப்பும் செய்திகளை அல்லது பேசும் பேச்சை வேறு எவராவது பார்த்தால் அல்லது கேட்டால்கூட ‘எதைக் குறித்தும் வெட்கப்பட தேவையில்லாதபடி’ இருக்க வேண்டும். நம் பரலோக தந்தையிடம் எதையுமே மறைக்க முடியாது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என பைபிள் விளக்குகிறது. (எபிரெயர் 4:13) ஆகவே ரகசிய உறவுகள் தேவைதானா?
வரம்புகள் வையுங்கள்
மொபைல் போனை வாங்க நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், அது உண்மையிலேயே தேவைதானா என தீர்மானிப்பதற்கு முதலில் உங்கள் சூழ்நிலையை ஏன் கவனமாக சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது? இதைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். “மொபைல் போன் அநேக இளைஞர்கள்மீது பெரும் பொறுப்பை சுமத்துகிறது” என யென்னா என்ற பெண் சொல்கிறாள்; வேறு சிலரும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.
மொபைல் போனை வாங்க நீங்கள் தீர்மானித்தாலும் அதைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது முக்கியம். எவ்வாறு? நியாயமான வரம்புகளை வையுங்கள். உதாரணத்திற்கு, எத்தனை புரோகிராம்களை பயன்படுத்துவது அல்லது எவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது என்ற விஷயத்தில் வரம்பு வையுங்கள். பெரும்பாலான கம்பெனிகள் நீங்கள் போனை பயன்படுத்திய விவரங்களை எல்லாம் முழுமையாக பில்லில் கொடுப்பதால் அவ்வப்போது உங்கள் பெற்றோருடன் அதை சீர்தூக்கிப் பார்க்கலாம். மொபைல் போனை அளவாக பயன்படுத்துவதற்கு, முதலில் கட்டணம் செலுத்திவிட்டு பயன்படுத்தும் மாடலை வைத்துக்கொள்வது சௌகரியமாக இருப்பதாக சிலர் கண்டிருக்கிறார்கள்.
மேலும், போன் கால்களுக்கும் செய்திகளுக்கும் நீங்கள் எப்போது, எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதையும் கவனமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கென்று நியாயமான கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ளுங்கள். ஷின்ஜி இவ்வாறு குறிப்பிடுகிறான்: “நான் மெயில்களை தினமும் ஒருமுறைதான் திறந்து பார்ப்பேன், அதுவும் முக்கியமான மெயில்களுக்குத்தான் பொதுவாக பதில் அனுப்புவேன். இதனால், கண்ட விஷயங்களையெல்லாம் இப்போது என் பிரண்ட்ஸ் அனுப்புவதில்லை. ரொம்ப அவசரமான செய்தியாக இருந்தால் எனக்கு எப்படியும் போன் செய்யத்தானே போகிறார்கள்.” யாரிடம் தொடர்புகொள்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாக இருப்பது அதைவிட முக்கியம். மற்றவர்களுக்கு உங்கள் போன் நம்பரைக் கொடுப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். நல்ல கூட்டுறவு சம்பந்தமாக நீங்கள் எப்போதும் கடைப்பிடிக்கிற தராதரங்களையே இந்த விஷயத்திலும் பின்பற்றுங்கள்.—1 கொரிந்தியர் 15:33.
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு [“நியமிக்கப்பட்ட,” NW] காலமுண்டு; . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:1, 7) மொபைல் போன்கள் “மவுனமாயிருக்க”வும் காலம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. நம் கிறிஸ்தவ கூட்டங்களும் ஊழியமும் போன் பேசுவதற்காக அல்ல, ஆனால் கடவுளை வணங்குவதற்காக ‘நியமிக்கப்பட்ட காலம்.’ மொபைல் போனை பயன்படுத்த வேண்டாமென ரெஸ்டாரென்ட் மானேஜர்களும் தியேட்டர் மானேஜர்களும் தங்கள் வாடிக்கையாளர்களை பெரும்பாலும் கேட்டுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வேண்டுகோளை நாம் மரியாதையுடன் ஏற்று நடக்கிறோம். அப்படியென்றால் இந்த சர்வலோகத்தின் பேரரசருக்கு அந்தளவு மரியாதையையாவது காட்ட வேண்டாமா?
முக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவசரமான போன் எதுவும் வராது என தெரிந்திருக்கையில், அநேகர் போனை ஆஃப் செய்துவிடுகிறார்கள் அல்லது சத்தம் கேட்காதபடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் மொபைல் போனை தூரத்தில் எங்கேயாவது வைத்துவிடுகிறார்கள். பெரும்பாலான மெயில்களுக்கு பிற்பாடு பதிலளித்தால் போதாதா என்ன?
ஒரு மொபைல் போனை பயன்படுத்த நீங்கள் தீர்மானித்துவிட்டால், அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உறுதியாயிருங்கள், அது உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் விழிப்புடனிருந்து முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் தர வேண்டியது நிச்சயமாகவே அவசியம். “உங்கள் நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” என பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (பிலிப்பியர் 4:5, NW) மொபைல் போனை வைத்துக்கொள்ள நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதை பயன்படுத்தும் விதத்தில் நியாயத்தன்மையைக் காட்டியே தீர்வது என்று உறுதிகொண்டிருங்கள். (g02 10/22)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b பள்ளிப் படிப்பிற்கு பிறகு வேலை பார்ப்பது சம்பந்தமாக, செப்டம்பர் 22, 1997, விழித்தெழு!-வில் “இளைஞர் கேட்கின்றனர்—பணம் சம்பாதிப்பதில் என்ன தவறு?” என்ற கட்டுரையைக் காண்க.
c எதிர்பாலார் ஒருவரோடு போனில் எப்போதும் பேசுவது அல்லது செய்திகளை பரிமாறிக்கொள்வது ஒருவித டேட்டிங் ஆகும். ஆகஸ்ட் 22, 1992, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர்—ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில் என்ன தவறு?” என்ற கட்டுரையை தயவுசெய்து காண்க.
[பக்கம் 20-ன் படங்கள்]
சில இளவட்டங்கள் மொபைல் போனில் ரகசியமாக பழகுகிறார்கள்