Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

ஆசிரியர்கள் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். “ஆசிரியர்கள்​—⁠அவர்களின்றி நம் கதி?” (மார்ச் 8, 2002) என்ற தொடர் கட்டுரைகளை படித்து மகிழ்ந்தேன். நான் பார்த்த வரையில் எரிச்சலூட்டுகிற ஒரு விஷயம், பிள்ளைகளுக்கு எது சரி எது தவறு என பிரித்துப் பார்க்கவே தெரிவதில்லை. அதோடு, பிள்ளைகள் தங்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதை மட்டும் தெரிந்துகொண்டு, தங்களது பொறுப்புகளையோ அறியாதிருக்கையில் ஆசிரியர்களுக்கு கஷ்டம். இருந்தாலும் ஆசிரியர் உத்தியோகம் திருப்தியளிக்கும் ஒரு வேலை, முக்கியமாக மாணவர்கள் அக்கறையோடு படித்து முன்னேறும்போது மனதுக்கு திருப்தி கிடைக்கிறது.

ஜே. கே., ஐக்கிய மாகாணங்கள் (g02 10/22)

இந்தக் கட்டுரைகளுக்கு நன்றி. ஆசிரியர்களுக்காக பெரும்பாலும் நாம் தியாகங்கள் செய்யாவிட்டாலும், நமக்காக அவர்கள் எவ்வளவு தியாகங்கள் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவை உதவின.

எஸ். எம்., இத்தாலி (g02 10/22)

எனக்கு எட்டு வயது. ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் கட்டுரைகள், ஆசிரியர்கள் மாணவர்களை நேசிக்கிறார்கள் என்பதை அறிய எனக்கு உதவின. சிறுபிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது கஷ்டமாக இருந்தாலும் அவ்வாறு கற்றுக்கொடுக்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நான் என்னுடைய டீச்சருக்கு ஒரு “தாங்க்யூ” கார்டு கொடுத்தேன். நானும் என்னுடைய நான்கு வயது தங்கையும் யெகோவாவைப் பற்றி ஜனங்களுக்கு எப்படி போதிக்கலாம் என கற்று வருகிறோம்; சில சமயங்களில் அது கஷ்டமாக இருந்தாலும், நாங்கள் மற்றவர்களை நேசிப்பதால் அப்படி செய்ய விரும்புகிறோம்.

டி. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 10/22)

நான் ஆசிரியர் வேலையை விட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு மாணவி நான் செய்த உதவிக்காக போற்றுதல் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தாள். அத்துடன் அவளாகவே செய்த ஒரு புக்மார்க்கையும் அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் பெற்றதும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.

ஏ. ஆர்., ஸ்லோவேனியா (g02 10/22)

நான் இந்தப் பத்திரிகையை என்னுடைய பிள்ளைகள் படிக்கும் ஸ்கூல் முதல்வரிடமும் இரண்டு ஆசிரியைகளிடமும் கொடுத்தேன். இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பிறகு அவர்களுடைய அபிப்பிராயத்தை கேட்க மறுபடியும் அவர்களை சந்தித்தேன். அப்போது, பெற்றோர்களுக்கு அளிப்பதற்காக ஸ்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் 20 பத்திரிகைகளை தரும்படி அவர்கள் கேட்டார்கள்.

எம். எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 10/22)

கடந்த வருடம் நான் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராக நான்கு மாதங்கள் பணிபுரிந்தேன். பெற்றோர்கள் பங்கில் கொஞ்சமும் போற்றுதல் இல்லாதது ஆசிரியர்களாக தங்களுடைய வேலையை கஷ்டமாக்குவதாக மற்ற ஆசிரியர்கள் சொன்னார்கள். அப்படியிருக்க இந்தத் தொடர் கட்டுரைகள் ஆசிரியர் பணிக்கு தங்களையே அர்ப்பணித்தவர்களுடைய வேலையை உயர்வாக பேசியதால் நான் உண்மையிலேயே அதிக மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய நான்கு மாத பணி முடிந்ததும் மாணவர்களிடமிருந்து நன்றி மடல்கள் வந்து குவிந்தன. அந்த ஒவ்வொரு மடலும் எனக்கு பொக்கிஷம்!

எஸ். இ., ஜப்பான் (g02 10/22)

பலூனில் பறத்தல் “காற்றோடு காற்றாக கலந்து” (ஏப்ரல் 8, 2002) என்ற உங்கள் கட்டுரைக்கு மிகவும் நன்றி. பலூனில் பறக்க வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை, ஆனாலும் நிறைவேறாத ஆசை. அந்தக் குறையை உங்கள் கட்டுரை தீர்த்து வைத்தது; ஏனெனில் நான் பலூனில் உண்மையாகவே பறந்தது போல உணர்ந்தேன்! அந்தக் கூடை மேலே உயர்ந்து அப்படியும் இப்படியுமாக ஆடியசைவதை என்னால் அப்படியே ‘உணர’ முடிந்தது. உயரேயிருந்து பார்த்தால் இந்த உலகம் மிகச் சிறியதாகவே தோன்ற வேண்டும், ஆனாலும் இந்த உலகமும் அதிலுள்ள மனிதகுலமும் யெகோவாவுக்கு முக்கியமானவை.

எஸ். ஏ., ஜெர்மனி (g02 10/22)

குற்றவுணர்வு “பைபிளின் கருத்து: குற்றவுணர்வு​—⁠எப்போதுமே தவறானதா?” (ஏப்ரல் 8, 2002) என்ற இந்தக் கட்டுரை உண்மையில் எனக்கு ஏற்றதாக இருந்தது. ஏனென்றால் முழுநேர ஊழியத்தில் ஈடுபடும்போது என் பார்ட்னரிடம் அதிகம் எதிர்பார்த்ததால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கடினமாக இருந்தது. நாம் நினைக்கும் விதமாக மற்றவர்கள் காரியங்களை செய்யாதபோது அவர்களை குற்றவுணர்வடையச் செய்ய எப்போதுமே முயலுவது அன்பற்றதும், பலனற்றதுமான செயல் ஆகும். என் எதிர்பார்ப்புகளை சரிப்படுத்த முடிந்திருப்பதில் நான் சந்தோஷப்படுகிறேன். காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் காண்பதற்கு தயவுசெய்து எங்களுக்கு தொடர்ந்து போதியுங்கள்.

கே. கே., ஜப்பான் (g02 10/22)