Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதானத்தைத் தேடி அஸிஸியில் மதங்கள்

சமாதானத்தைத் தேடி அஸிஸியில் மதங்கள்

சமாதானத்தைத் தேடி அஸிஸியில் மதங்கள்

“வன்முறை இனியும் வேண்டாம்! போர் இனியும் வேண்டாம்! பயங்கரவாதம் இனியும் வேண்டாம்! கடவுளுடைய பெயரில், சகல மதங்களும் இப்பூமியில் நீதியையும் சமாதானத்தையும், மன்னிப்பையும் ஜீவனையும், அன்பையும் நிலைநாட்டுவதாக!”​—இரண்டாம் போப் ஜான் பால்.

இத்தாலியிலுள்ள அஸிஸியில், உலக மதங்களின் பிரதிநிதிகள் ஜனவரி 24, 2002-⁠ல் ஒன்றுகூடினர்; சமாதானத்திற்காக​—பயங்கரவாதத்தாலும் சகிப்பின்மையாலும் அநீதியாலும் அச்சுறுத்தப்படும் சமாதானத்திற்காக—​ஜெபிப்பதற்கே அவர்கள் ஒன்றுகூடினர். நியூ யார்க் நகரத்திலுள்ள இரட்டை கோபுரங்கள் தரைமட்டமாகி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து இந்தக் கூட்டத்தை போப் அறிவித்தார். மதத் தலைவர்கள் பலர் வத்திகனின் அழைப்பை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டனர்.

இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில்​—ஒன்று 1986-⁠ல், மற்றொன்று 1993-⁠ல்​—இத்தாலியின் இதே நகரில் ஜெப தினத்தை அனுசரிக்க போப் அழைப்பு விடுத்திருந்தார். a 2002-⁠ல் நடைபெற்ற கூட்டத்தை கவனிப்பதற்கு ஆயிரத்திற்கும் அதிகமான இதழாசிரியர்கள் உலகெங்கிலுமிருந்து வந்திருந்தனர். சமாதானத்திற்காக ஜெபிப்பதற்கு அநேக மதங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக வந்திருந்தனர்; கிறிஸ்தவ மண்டலம் (கத்தோலிக், லூத்தரன், ஆங்கிலிக்கன், ஆர்த்தடாக்ஸ், மெத்தடிஸ்ட், பேப்டிஸ்ட், பென்டிகாஸ்டல், மெனோனைட்ஸ், குவாக்கர்ஸ், பிற பிரிவுகள்), இஸ்லாம், இந்து, கன்பூசிய மதம், சீக்கிய மதம், ஜைன மதம், டென்ரிகியோ மதம், புத்த மதம், யூத மதம், ஆப்பிரிக்க பாரம்பரிய மதங்கள், ஷின்டோ, ஸொராஷ்ட்ரிய மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். இன்னும் பிற மதங்களின் பிரதிநிதிகளும், உவர்ல்டு கவுன்ஸில் ஆஃப் சர்ச்சுகளின் பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.

சமாதானத்தின் சார்பாக அறிக்கைகள்

அந்நாள் காலை 8:40 மணிக்கு, சிறிய வத்திகன் ரயில் நிலையத்திலிருந்து “சமாதான ரயில்” கிளம்பியது. நன்கு சொகுசாக அமைக்கப்பட்ட ஏழு பெட்டிகள் கொண்ட அந்த ரயிலை பாதுகாக்க இரண்டு ஹெலிகாப்டர்கள் உடன் சென்றன. இரண்டு மணிநேர பயணம் போப்பையும் பிற மதத் தலைவர்களையும் அஸிஸியில் கொண்டுவந்து சேர்த்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது​—சுமார் ஆயிரம் போலீஸார் விழிப்புடன் இருந்தனர்.

ஒரு பழங்கால சதுக்கத்தில் பிரமாண்டமான பந்தல் போட்டு அங்கு இந்த மதத் தலைவர்கள் கூடிவந்தனர். உள்ளே V-வடிவத்தில் அமைக்கப்பட்ட பெரிய சிகப்பு நிற மேடையில் மதத் தலைவர்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர், போப்பின் இருக்கை அதன் மத்தியில் போடப்பட்டிருந்தது. மேடையின் ஒரு பக்கத்தில் ஒலிவ மரம்​—சமாதானத்தின் சின்னம்—​வைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்புறத்தில், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000-⁠க்கும் அதிகமான விருந்தினர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்திருந்தனர். முதல் வரிசையை இத்தாலியில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கும் அதிகாரிகள் ஆக்கிரமித்திருந்தனர். சொற்பொழிவுகளுக்கு இடையிடையே பாடகர்கள் சமாதானத்தைப் போற்றி பாமாலைகள் பாடி மனதைக் கவர்ந்தனர். நகரத்தின் மற்ற இடங்களில், ஆயிரக்கணக்கானோர், முக்கியமாக இளைஞர், போருக்கு எதிராக பல்வேறு மொழிகளில் சுலோகன்கள் எழுதப்பட்ட கொடிகளைப் பிடித்திருந்தனர், சமாதானத்தைப் பற்றிய பாடல்களையும் பாடினர். அநேகர் ஒலிவமர கிளைகளைத் தாங்கியிருந்தனர்.

போப் தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பிறகு, பல்வேறு மதக் குழுக்களைச் சேர்ந்த அங்கத்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். அதற்குப் பிறகு, ஏசாயா 2:4-⁠ன் அடிப்படையில்​—‘தேசத்திற்கு விரோதமாக தேசம் பட்டயத்தை எடுக்காத’ ஒரு காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில்—​லத்தீன் பாமாலையை பாடியபின் பல்வகை மத அங்கிகள் தரித்திருந்த ஒரு டஜன் பிரதிநிதிகள் சமாதானத்தின் சார்பாக முறைப்படி அறிக்கைகளை வாசித்தனர். பின்வருபவை அவற்றில் சில.

“சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் மனிதகுலம் சமாதான முயற்சிகளை காண வேண்டும், நம்பிக்கையான வார்த்தைகளை கேட்கவும் வேண்டும்.”​—கார்டினல் ஃபிரான்ஸ்வாய் சேவியே நவியேன் வான் டூவான்.

தேவன் “போருக்கும் யுத்தத்திற்கும் தேவன் அல்ல, ஆனால் சமாதானத்திற்கே தேவன்.​—திருச்சபை முதல்வராகிய முதலாம் பார்தோலோமஸ்.

“மத வேற்றுமைகள், வேறுபட்டவர்களை புறக்கணிக்கவோ பகைக்கவோகூட [மக்களை] வழிநடத்தக் கூடாது.”​—டாக்டர் சேட்ரி நியோமி, சீர்திருத்த சர்ச்சுகளின் உலக நேச சபை.

“மக்கள் மத்தியில் மெய் சமாதானத்திற்கு நீதியும் சகோதர அன்பும் இன்றியமையா இரண்டு தூண்களாக விளங்குகின்றன.”​—ஆமாடூ கஸட்டோ, ஆப்பிரிக்க பாரம்பரிய மதங்களின் பிரதிநிதி.

“சமாதானமே பரிசுத்தம், போர் ஒருகாலும் பரிசுத்தமானதல்ல!”​—ஆன்ரேயா ரிக்கார்டோ, கத்தோலிக்க சர்ச்.

சகிப்பின்மையையும் போரையும் தூண்டுவிப்பதில் மதங்கள் முக்கிய பொறுப்பு வகிப்பதை பிரதிநிதிகளில் சிலர் ஒத்துக்கொண்டனர். “மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்ட பகைமை [இந்த உலகை] உலுக்கியெடுத்துவிட்டது” என லூத்தரன் உவர்ல்டு ஃபெடரேஷன் பிரதிநிதி குறிப்பிட்டார். யூத மத பிரதிநிதி இவ்வாறு கூறினார்: “படுபயங்கரமான மற்றும் இரத்தப் பெருக்கெடுத்த எண்ணற்ற போர்களுக்கு மதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன.” இந்துமத பிரதிநிதி ஒருவர் இவ்வாறு அறிவித்தார்: “மதத்தை கட்டிக்காப்பவர்கள் என உரிமை பாராட்டுபவர்கள் மக்களை ஒடுக்குவதற்கும் பிரிவினையை உண்டாக்குவதற்கும் மதத்தைப் பயன்படுத்தியிருப்பதை சரித்திரம் திரும்பத் திரும்ப காட்டியிருக்கிறது.”

பயங்கரவாதத்தையும் போரையும் முறைப்படி கண்டனம் செய்தபிறகு, சமாதானத்திற்காக தங்கள் தங்கள் கடவுட்களிடம் வேண்டுவதற்கு பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்.

சமாதானத்திற்காக ஜெபங்கள்

கிறிஸ்தவமண்டல மதங்களின் பிரதிநிதிகள் செ. பிரான்சிஸ் சர்ச்சைச் சேர்ந்த பாஸிலிக்காவின்​—இங்குள்ள கல்லறையின் பெயரால் இந்தச் சர்ச் இப்பெயர் பெற்றுள்ளது—​கீழ்ப்பகுதியில் ஒன்றுகூடி ஜெபித்தனர். போப்பும் மற்ற மூன்று பிரதிநிதிகளும் “திரித்துவ கடவுளிடம் விண்ணப்பம் செய்து” இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். ஜெபங்களுக்கு இடையிடையே சமாதானத்திற்கான பாமாலைகளும் வேண்டுதல்களும் ஏறெடுக்கப்பட்டன; அதோடு இதே பொருளில் பைபிள் வாசிப்புகளும் இருந்தன. ஒரு ஜெபத்தில் “பிரிவினையற்ற மதத்தை” ஸ்தாபிப்பதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த ஆராதனையின் முடிவாக, இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் பரமண்டல ஜெபத்தை லத்தீனில் பாடினார்கள்; இது மத்தேயு 6-⁠ம் அதிகாரம் 9 முதல் 13 வசனங்களின் அடிப்படையிலானது.

அதேசமயத்தில், பிற மதப் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வேறு இடங்களில் ஜெபம் செய்துகொண்டிருந்தனர். மெக்காவை நோக்கியிருக்கும் ஓர் அறையில், கம்பளங்களின் மீது முழங்காற்படியிட்டு முஸ்லிம்கள் அல்லாவிடம் வேண்டினர். ஜைன, கன்பூசிய மதத்தாரின் பக்கத்தில் வேண்டிக்கொண்டிருந்த ஸொராஷ்ட்ரியர்கள் அக்கினி யாகத்தை ஆரம்பித்தனர். பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய மூதாதையரின் ஆவிகளிடம் மன்றாடினர். சமாதானத்திற்காக இந்துக்கள் தங்களுடைய தெய்வங்களிடம் வேண்டினர். அனைவரும் தங்கள் கடவுட்களிடம் தங்கள் மதச் சம்பிரதாயப்படி மன்றாடினர்.

சமாதானத்திற்காக பொது உறுதிமொழி

சடங்குகளின் முடிவாக அந்தப் பிரதிநிதிகள் பந்தலின் கீழ் மீண்டும் ஒன்றுகூடி வந்தனர். சமாதான நம்பிக்கைக்கு அடையாளமான தீபங்களை மடத்துத் துறவிகள் அந்தப் பிரதிநிதிகளுடைய கையில் பயபக்தியுடன் கொடுத்தனர். அந்தக் காட்சி கண்ணைக் கவர்ந்தது. பிற்பாடு பல்வேறு பிரதிநிதிகள், சமாதானத்திற்கு ஒரு பொது உறுதிமொழியை வாசித்து, ஒவ்வொருவரும் வித்தியாசமான உறுதிமொழியை எடுத்தனர்.

“சமாதானத்தைக் காப்பதற்கு அயலானை நேசிக்க வேண்டும்.”​—திருச்சபை முதல்வராகிய முதலாம் பார்தோலோமஸ்.

“மதம் என்ற உண்மையான கருத்தில் பார்த்தால் வன்முறையும் பயங்கரவாதமும் அதற்கு முரண்பாடானவை.”​—டாக்டர் கோன்ராட் ரைஸர், உவர்ல்டு கவுன்சில் ஆஃப் சர்ச்சுகள் பிரதிநிதி.

“மக்களுக்கு பரஸ்பர மரியாதையையும் மதிப்பையும் கற்றுக்கொடுப்போமென நாங்கள் உறுதி கூறுகிறோம்.”​—பை சாஹிப்ஜி மொஹின்டர் சின்ஹா சீக்கிய மத பிரதிநிதி.

“நீதியில்லாத சமாதானம் உண்மையான சமாதானம் அல்ல.”​—வசிலியோஸ் என்ற ஆர்த்தடாக்ஸ் பிஷப்.

கடைசியாக, இந்தக் கட்டுரையின் அறிமுகத்தில் காணப்படும் வார்த்தைகளை போப் வாசித்தார். சமாதானத்திற்கு அடையாளமாக பிரதிநிதிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவ, இந்தக் கலப்பு விசுவாசக் கூட்டம் நிறைவடைந்தது. கவனமாக தயாரிக்கப்பட்ட, சொல்வன்மைமிக்க வார்த்தைகள் பகட்டாரவாரத்தோடும் சம்பிரதாயத்தோடும் வழங்கப்பட்டன. ஆனால், கவர்ச்சிகரமான இந்நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட பிரதிபலிப்பு கிடைத்தது?

‘சொல்லோடு செயல்களும் இருந்தால்’

செய்தித்தாள்களும் டெலிவிஷனும் போப்பின் முயற்சியை பாராட்டி வரவேற்றன. அவற்றில் சில, “அனைத்து கிறிஸ்தவமண்டலத்தின் பிரதிநிதி” என்றும்கூட போப்பை அழைத்தன. “சமாதானம் எனும் நாகரிகத்தை உருவாக்கும் பாதையில் மைல்கல்” என அஸிஸியில் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாளை லோசேர்வாரே ரோமானோ என்ற வத்திக்கன் செய்தித்தாள் வர்ணித்தது. “அஸிஸி சமாதானத்திற்கு வெளிச்சத்தை தருகிறது” என்பதே கோரீரே டெலும்பிரியா என்ற செய்தித்தாளின் தலைப்புச்செய்தி.

பார்வையாளர்கள் எல்லாருமே அந்தளவு குதூகலமாக இருக்கவில்லை. சிலர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர், ஏனென்றால் முன்பு 1986 மற்றும் 1993-⁠ல் சமாதானத்திற்காக ஜெப தினங்கள் அனுசரிக்கப்பட்ட பிறகும்கூட, மதத்தின் பெயரில் நடத்தப்படும் போர்கள் தொடர்ந்து மனிதகுலத்தை பீடித்துவருகின்றன. உகாந்தா, முன்னாள் யுகோஸ்லாவியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு, வட அயர்லாந்து போன்ற இடங்களில் இரத்த வெள்ளம் கரைபுரண்டோடும் அளவுக்கு மத பகைமை கொலைவெறியை தூண்டியிருக்கிறது.

இந்தக் கூட்டம் “வெறும் பகட்டுதான்” என்று விமர்சகர்கள் சிலர் அதை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என இத்தாலிய செய்தித்தாள் லா ரேப்பூப்ளிக்கா குறிப்பிட்டது. சமாதானத்தை முன்னேற்றுவிப்பதற்காக மத பக்தியுள்ளவர்கள் “சுவிசேஷத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க” வேண்டும், அதாவது “சத்துருக்களை சிநேகியுங்கள், மறுகன்னத்தையும் திருப்பிக்காட்டுங்கள்” என்ற வார்த்தைகளைக் கைக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய பார்லிமென்ட் அங்கத்தினர் ஒருவர் கூறினார். இதை “ஒருவரும் செய்வதில்லை” என்பதே அவருடைய கருத்து.

“இப்பொழுது என்ன நடக்குமென கவனித்தால்தான் தெரியும்; அதாவது வார்த்தைகளுக்கு இசைவாக செயல்களும் உண்மையான மாற்றமும் நடக்கிறதா என கவனிக்க வேண்டும்” என இத்தாலிய யூத சமுதாயங்களின் பிரெஸிடென்ட் கூறினார். இத்தாலிய புத்த மதத்தவர்களின் பிரதிநிதி இதைப் போலவே தெரிவித்தார்; “சமாதானத்திற்கான வேண்டுகோள்கள் வெறுமனே நல் நோக்கங்களாக மட்டுமே இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள” வேண்டும் என அவர் கூறினார். அஸிஸியில் நடைபெற்ற கூட்டம் அங்கே பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட கிறிஸ்தவமண்டல மதங்களுக்கு மற்றொரு விதத்தில் பயனளித்தது என லெஸ்பிரெஸ்ஸோ என்ற இத்தாலிய பத்திரிகைக்காக எழுதிய இதழாசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். “மத அதிருப்தி, ஒழுங்கின்மை, அவநம்பிக்கை ஆகியவற்றை எதிர்ப்பதற்கான கூட்டுமுயற்சி” என அதை அழைத்தார். அதோடு, ஐரோப்பாவின் “கிறிஸ்தவ சரித்திரத்தின்” மத்தியிலும் அதை பீடித்திருக்கும் “தீவிர மதசார்பற்ற நடவடிக்கைகளை” எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சி என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள், தங்களுடைய சர்ச் கோட்பாடுகள் பலவீனப்படுத்தப்படுமோ என பயப்படுகிற கத்தோலிக்க பாரம்பரியவாதிகளே. அஸிஸியில் நடந்த சம்பவம் மதங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை மங்க வைத்து விடுமோ என தொலைக்காட்சி பேட்டியில் பிரபல கத்தோலிக்க எழுத்தாளராகிய வீட்டோரியோ மெஸோரி கவலை தெரிவித்தார். சொல்லப்போனால், மதங்களை ஒன்றோடொன்று இணைக்கும் அபிப்பிராயத்தைக் கொடுக்காதிருக்க சர்ச் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தனர். இத்தகைய குற்றச்சாட்டுகளை தவறென நிரூபிப்பதற்கு போப்தாமே ஓர் அறிக்கை வெளியிட்டார். இருந்தாலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற விதம்தானே, பல்வேறு மதங்களெல்லாம் ஒரே பரம்பொருளிடம் அண்டிவருவதற்கு உதவும் பல்வேறு வழிகள் என்பதை தெரிவிப்பது போல அநேகருக்கு தோன்றியது.

மதமும் சமாதானமும்

என்றாலும் சமாதானத்தை நிலைநாட்ட மதங்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்வியே சிலருக்கு அபத்தமாக தொனிக்கலாம், ஏனென்றால் மதங்கள் போர்களைத் தடுப்பதற்கு பதிலாக அவற்றை பெரும்பாலும் தூண்டிவிடுவதாகவே தெரிகிறது. அரசியல் அதிகாரங்கள் போரை முன்னேற்றுவிக்க மதங்களைப் பயன்படுத்திய விதத்தை சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். என்றாலும், மதங்கள் ஏன் அதற்கு இடம்கொடுத்தன என்பதே கேள்வி.

கிறிஸ்தவமண்டல மதங்களுக்காவது, போரோடு சம்பந்தப்பட்ட இரத்தப்பழியை தவிர்க்க உதவும் புனித கட்டளை இருக்கிறது. தம்மை பின்பற்றுபவர்கள் ‘உலகத்தாராயிருக்க மாட்டார்கள்’ என இயேசு குறிப்பிட்டார். (யோவான் 15:19; 17:16) அந்த வார்த்தைகளுக்கு இணங்க கிறிஸ்தவமண்டல பிரிவுகள் நடந்திருந்தால், அரசியல் அதிகாரங்களோடு கூட்டு சேர்ந்து படைகளையும் போர்களையும் ஆதரித்திருக்காது, ஆசீர்வதித்திருக்காது.

உண்மையில், அஸிஸியில் பேசப்பட்ட நல்வார்த்தைகளுக்கு இசைய வாழ, மதத்தலைவர்கள் அரசியல் அதிகாரங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். மேலும் தங்கள் மதத்தினருக்கு சமாதான வழிகளை கற்பிக்க வேண்டும். இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ள​—அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளதாக சொல்லிக்கொள்ளும்​—ஏராளமானோர்தான் இந்த உலகில் நடக்கும் வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள் என சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சமீபத்திய செய்தித்தாளின் தலையங்கம் இவ்வாறு குறிப்பிட்டது: “செப். 11-⁠ம் நாளின் சம்பவம் நடந்து சில நாட்களில், வாஷிங்டன், டி.ஸி.-⁠லிருந்த ஒரு சுவரில் யாரோ ஒருவர் சிந்தனையைத் தூண்டும் இந்த வார்த்தைகளை கிறுக்கிவிட்டு சென்றார்: ‘அன்புள்ள கடவுளே, உம்மை நம்பும் மக்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்’”

அஸிஸியில் பகட்டாரவாரத்தோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி சிக்கலான சில கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. ஆனால் அநேக மதத்தினருக்கு, எல்லாவற்றையும்விட முக்கியமான​—அல்லது அதிக கவலைக்குரிய⁠—⁠கேள்வி இதுவாகத்தான் இருக்கும்: சமாதானத்திற்காக இந்த உலக மதங்கள் செய்திருக்கும் ஜெபங்களை கடவுள் ஏன் இதுவரை கேட்கவே இல்லை? (g02 10/22)

[அடிக்குறிப்பு]

a 1986-⁠ல் நடைபெற்ற ஜெப தினம் பற்றி கூடுதலாக அறிந்துகொள்வதற்கு, ஜூன் 8, 1987 ஆங்கில விழித்தெழு! இதழை காண்க.

[பக்கம் 7-ன் படம்]

சமாதான நம்பிக்கைக்கு அடையாளமான தீபங்களுடன் பிரதிநிதிகள்

[படத்திற்கான நன்றி]

AP Photo/Pier Paolo Cito

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

AP Photo/Pier Paolo Cito