தண்ணீர் எங்கே போகிறது?
தண்ணீர் எங்கே போகிறது?
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஒரே பதற்றம்! பாத்ரூம் நீர் வெளியேறும் சாக்கடையிலிருந்து சாம்பல் நிற நீர் பொங்கி வருவதைப் பார்த்ததுமே எனக்குள் பதற்றம் ஏற்பட்டது. என் அப்பார்ட்மெண்டே நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாறிவிடுமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக பிளம்பரை அழைத்தேன். அவர் வருகையை எதிர்பார்த்து கவலையோடு காத்திருக்கையில் என் நா வறண்டு போனது; தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக என் கால்களை நனைக்க ஆரம்பிக்க, ‘இந்த தண்ணீரெல்லாம் எங்கிருந்து வந்தது?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
சாக்கடையிலிருந்த அடைப்பை நீக்க பிளம்பர் பொறுமையாக வேலை செய்தவாறே இவ்வாறு விளக்கினார்: “சராசரி நகரவாசி ஒருவர் தினமும் 200 முதல் 400 லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறார். ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் வருடத்தில் சுமார் 1,00,000 லிட்டர் தண்ணீரை சாக்கடையில் சேர்க்கிறார்கள்.” “நான் எங்கே அவ்வளவு தண்ணீரை உபயோகிக்கிறேன்? அவ்வளவையும் குடிக்கிறேனா என்ன?” என்று கேட்டேன். “குடிப்பதில்லை என்றாலும் தினமும் குளிக்கிறீர்கள், டாய்லெட் போகிறீர்கள், வாஷிங் மெஷினை அல்லது டிஷ்வாஷரை உபயோகிக்கிறீர்கள். நவீன வாழ்க்கை பாணி காரணமாக இந்த பல்வேறு வழிகளில் நம் தாத்தா பாட்டியைவிட இரண்டு மடங்கு அதிகமான தண்ணீரை நாம் உபயோகிக்கிறோம்” என அவர் பதிலளித்தார். அப்போதுதான், ‘அந்த தண்ணீரெல்லாம் எங்கே போகிறது?’ என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.
தினமும் சாக்கடையில் போய் சேரும் தண்ணீர், நாம் வாழும் நாட்டை அல்லது நகரத்தைப் பொறுத்து பல விதங்களில் சுத்திகரிக்கப்படுவதை கண்டறிந்தேன். சில நாடுகளில் இது வாழ்வா, சாவா பிரச்சினையாகவும் உள்ளது. (பக்கம் 27-ல் உள்ள பெட்டிகளைக் காண்க.) எங்கள் ஊரிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு என்னோடு விஜயம் செய்து அந்தத் தண்ணீர் எங்கே போகிறது என்பதை நீங்களே அறிந்துகொள்ளுங்கள். அதோடு, நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, சாக்கடைக்குள் அல்லது டாய்லெட்டிற்குள் எதையும் போடுவதற்கு முன்பு கவனமாக யோசிப்பது ஏன் நல்லது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயணம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்று பார்ப்பதற்கு அது என்ன அவ்வளவு பிரமாதமான இடமா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மைதான், அது அவ்வளவு பிரமாதம் ஒன்றுமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும், நம் நகரம் அதன் கழிவுநீரிலேயே மூழ்கிவிடாதிருக்க அப்படிப்பட்ட நிலையம் தேவை என்பதால் நம்மில் அநேகர் அதையே நம்பியிருக்கிறோம்; இந்த நிலையங்கள் சரியாக இயங்க உதவுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும்கூட. புகழ் பெற்ற சிட்னி துறைமுகத்திற்கு நேர் எதிரே தெற்கில் அமைந்திருக்கும் மலபாரில் உள்ள முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி இப்போது நாம் செல்கிறோம். என் பாத்ரூமிலிருந்து வெளிவரும் கழிவுநீர் அந்த நிலையத்தை எவ்வாறு சென்றடைகிறது?
டாய்லெட்டை ஃபிளஷ் பண்ணுகையில், தொட்டியில் எதையேனும் கழுவுகையில், அல்லது குளிக்கையில் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஓடுகிறது. இந்த நீரானது 50 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, தினமும் சுத்திகரிப்பு நிலையத்தைப் போய் சேரும் 48 கோடி லிட்டர் தண்ணீரோடு சங்கமமாகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் பார்வைக்கு அசிங்கமாகவோ நாற்றமெடுக்காமலோ இருப்பதற்கான காரணத்தை நிலையத்தின் சமூக தொடர்பு அலுவலரான ராஸ் விளக்கினார். “நிலையத்தின் பெரும்பகுதி நிலத்தடியில் அமைந்திருப்பதால் வாயுக்களை சேகரித்து காற்று சுத்திகரிப்பான்களிடம் (வரிசையாய் நிற்கும் பானை வடிவான மிகப் பெரிய புகைப்போக்கிகளிடம்) செலுத்துவது சுலபமாகிறது. இது துர்நாற்றத்தை நீக்கிவிடுகிறது. பிறகு, சுத்திகரிக்கப்பட்ட
காற்று வானில் விடப்படுகிறது. நிலையத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இருந்தபோதிலும், வருடத்திற்கு சுமார் பத்து பேர்தான் துர்நாற்றம் வீசுவதாக முறையிடுகிறார்கள்.” “துர்நாற்றம் வீச” காரணமாயிருக்கும் இடத்திற்குத்தான் ராஸ் நம்மை அடுத்ததாக அழைத்து செல்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.கழிவுநீரில் என்ன உள்ளது?
நிலையத்திற்குள் இறங்கி செல்கையில் நமது வழிகாட்டி இவ்வாறு விளக்குகிறார்: “கழிவுநீரில் 99.9 சதவிகிதம் தண்ணீரே; அதோடு மலம், இரசாயனங்கள், மற்ற சிறுசிறு பொருட்களும் இருக்கும். 55,000 ஹெக்டேர் [1,30,000 ஏக்கர்] பரப்பளவிலுள்ள அனைத்து வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் இருந்து வரும் கழிவுநீர் 20,000 கிலோமீட்டர் [12,000 மைல்] நீளமுள்ள பைப்புகள் வழியாக, கடல் மட்டத்திற்கு இரண்டு மீட்டர் [6 அடி] கீழே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. இங்கே வரிசையான தடுப்புகள் வழியாக நீர் பாய்கையில் கந்தல், கற்கள், பேப்பர், பிளாஸ்டிக் போன்றவை பிரித்தெடுக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, கிரிட் சேம்பர்களில் நீர் குமிழிகள் உதவியால் கரிம பொருட்கள் தண்ணீரில்
மிதக்க வைக்கப்படுகின்றன; கனமான கற்களோ அடியில் தங்கிவிடுகின்றன. இந்த தாதுக் கழிவுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு தாழ்வான நிலப்பரப்பை நிரப்புவதற்காக அனுப்பப்படுகின்றன. மீதமிருக்கும் கழிவுநீர், 15 மீட்டர் உயரத்திலுள்ள படிவு தொட்டிகளுக்குள் செலுத்தப்படுகிறது.”இந்தத் தொட்டிகள் ஏறக்குறைய ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுள்ளவை. இங்குதான், காற்று சுத்திகரிப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எவ்வளவாக முறையிடுவார்கள் என்பதையும் நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். நீரானது இத்தொட்டிகள் வழியே மெதுவாக செல்கையில் எண்ணெய்யும் மசகும் மேல் பரப்பில் மிதக்க, அவை நீக்கப்படுகின்றன. சகதி என அழைக்கப்படும் மென்மையான திடப்பொருட்கள் அடியில் தேங்கிவிடுகின்றன. மிகப் பெரிய இயந்திர பிளேடுகள் இவற்றை சுரண்டியெடுத்து, ஓரிடத்தில் சேர்க்கின்றன; அங்கிருந்து அவை மேலுமாய் சுத்திகரிக்கப்படுவதற்காக பம்ப் செய்யப்படுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கம் வழியாக கடல் நோக்கி பயணிக்கிறது. அங்கே நீரானது கடல் தரையை வந்தடைந்து, அலைகளுக்கு கீழே 60 முதல் 80 மீட்டரில் கடலோடு கலந்துவிடுகிறது. கரையோரத்திலுள்ள பலமான நீரோட்டங்கள் கழிவுநீரை பரவச் செய்கின்றன, உப்பு நீரின் இயல்பான துப்புரவாக்கும் தன்மை சுத்திகரிப்பு வேலையை முடித்துவிடுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் மீந்திருக்கும் சகதியோ அனரோபிக் டைஜஸ்டர்ஸ் என்ற பெரிய தொட்டிகளுக்குள் பம்ப் செய்யப்படுகிறது. இங்கே நுண்கிருமிகள், கரிம பொருட்களை மீத்தேன் வாயுவாகவும் இனியும் மாற்றமடையாத சகதியாகவும் சிதைக்கின்றன.
சகதி மண்ணாகிறது
ராஸ் என்னை நிலத்தடியிலிருந்து மீண்டும் மேல் பரப்பிற்கு அழைத்து வருகையில் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன். காற்று புகாத சகதி தொட்டிகள் ஒன்றின்மீது இருவரும் ஏறுகிறோம். அவர் தொடர்ந்து விளக்குகிறார்: “நுண்கிருமிகள் உண்டாக்கும் இந்த மீத்தேன் வாயு, மின்சார ஜெனரேட்டர்களை இயக்க உபயோகிக்கப்படுகிறது. இது, சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார தேவைகளில் 60 சதவிகிதத்திற்கும் அதிகத்தைப் பூர்த்திசெய்கிறது. சகதி கிருமிநீக்கம் செய்யப்பட்டு, சுண்ணாம்பு சேர்க்கப்பட்டவுடன் பிரயோஜனமான பொருளாக மாறுகிறது. பயோசாலிடுகள் (biosolids) என அழைக்கப்படும் இது தாவர ஊட்டச்சத்து மிக்கது. மலபார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே வருடத்தில் 40,000 டன் பயோசாலிடுகளை உற்பத்தி செய்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு, சுத்திகரிக்கப்படாத சகதி எரிக்கப்பட்டது அல்லது கடலில் கொட்டப்பட்டது. இன்றோ இது லாபகரமான விதத்தில் உபயோகிக்கப்படுகிறது.”
ராஸ் என் கையில் ஒரு புரோஷரை திணிக்கிறார். “பயோசாலிடு உரமிடப்பட்ட பிறகு [நியூ சௌத் வேல்ஸின்] காடுகள் 20 முதல் 35 சதவிகிதம் வரை அதிக வளர்ச்சியை காட்டுகின்றன” என்று அது விளக்குகிறது. ‘பயோசாலிடுகள் போடப்பட்ட நிலத்தில் விளையும் கோதுமை 70 சதவிகிதம் வரை அதிக மகசூலை தந்திருக்கிறது’ என்றும் அது கூறுகிறது. என் வீட்டு தோட்டத்திலுள்ள செடிகளுக்கு உரமாக பயோசாலிடுகளை உபயோகிப்பது பாதுகாப்பானதே என்பதை இப்போது உணருகிறேன்.
கண்ணைவிட்டு மறைந்தது, நினைவைவிட்டு மறையுமா?
பெயின்டுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் அல்லது எண்ணெய் போன்றவற்றை சாக்கடையில் ஊற்றினால் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள நுண்கிருமிகள் மடிந்துவிடலாம், இதனால் மறுசுழற்சி பாதிக்கப்படலாம் என டூர் முடிந்த பிறகு நமது வழிகாட்டி நினைப்பூட்டுகிறார். ‘எண்ணெய்யும் கொழுப்பும் நம் இரத்தக் குழாய்களை அடைப்பதுபோலவே பிளம்பிங் முறையின் குழாய்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடும். டயாப்பர்கள், துணி, பிளாஸ்டிக் போன்றவற்றை டாய்லெட்டில் ஃபிளஷ் செய்யும்போது அவை மாயமாய் மறைந்துவிடுவதில்லை. மாறாக குழாய்களை அடைத்துவிடுகின்றன’ என்பதை வலியுறுத்துகிறார். குப்பையை ஃபிளஷ் செய்தால் கண்ணைவிட்டு அது மறைந்துவிடலாம், ஆனால் சாக்கடை அடைத்துக்கொண்டு கழிவுநீர் எதிர்த்து வரும்போது மறந்துபோனது சீக்கிரம் உங்கள் நினைவிற்கு வரும். ஆகவே, நீங்கள் அடுத்த முறை குளிக்கும்போது, டாய்லெட்டை ஃபிளஷ் செய்யும்போது அல்லது தொட்டியில் எதையாவது கழுவும்போது அந்தத் தண்ணீர் எங்கே போகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். (g02 10/8)
[பக்கம் 25-ன் பெட்டி/படம்]
குடிநீராக மாறும் கழிவுநீர்
ஐக்கிய மாகாணங்கள், கலிபோர்னியாவிலுள்ள ஆரஞ்சு கௌண்டியில் மழையின் அளவு மிகவும் குறைவு. அதனால், அங்குள்ள லட்சக்கணக்கான குடிமக்கள் கழிவுநீர் பிரச்சினையை சமாளிக்கும் ஒரு நவீன திட்டத்தினால் பயனடைந்து வருகிறார்கள். தினமும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீரை நேரடியாக கடலில் கொட்டுவதற்கு பதிலாக அதில் பெரும்பகுதி மறுபடியும் குடிநீராக மாற்றப்படுகிறது. பல வருடங்களாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமே இதை சாதித்து வருகிறது. கழிவுநீர் ஒரு முறை சுத்திகரிக்கப்பட்ட பிறகு இரண்டாவது, மூன்றாவது முறையாகவும் சுத்திகரிக்கப்படுகிறது. அதாவது, சாதாரண குடிநீர் அளவிற்கு தண்ணீரை சுத்தப்படுத்துவதை இது அர்த்தப்படுத்துகிறது. பிறகு, ஆழமான கிணற்றிலிருக்கும் தண்ணீரோடு சேர்க்கப்பட்டு நிலத்தடி நீரோடு கலந்துவிடுகிறது. இவ்வாறு நிலத்தடி நீரின் அளவும் அதிகரிக்கிறது, உப்புநீர் கசிந்து வந்து நிலத்தடி நீரை கெடுத்துவிடாதபடிக்கும் பாதுகாக்கிறது. மாவட்டத்தின் குடிநீர் தேவையில் 75 சதவிகிதம் வரைக்கும் இந்த நிலத்தடி நீர்தான் பூர்த்திசெய்கிறது.
[பக்கம் 27-ன் பெட்டி]
தண்ணீரை சேமிக்க ஐந்து வழிகள்
◼ ஒழுகும் வாஷர்களை மாற்றுங்கள்—ஒழுகும் குழாயிலிருந்து ஒரு வருடத்தில் 7,000 லிட்டர் தண்ணீர் வீணாகலாம்.
◼ உங்கள் டாய்லெட் ஒழுகாமல் இருக்கிறதா என்பதை சோதியுங்கள்—வருடத்திற்கு 16,000 லிட்டர் தண்ணீர் வீணாகலாம்.
◼ தண்ணீரை சேமிக்கும் ஷவரை உபயோகியுங்கள். சாதாரண ஷவரில் நிமிடத்திற்கு 18 லிட்டர் தண்ணீர் வரும்; நீர் மெதுவாக வரும் ஷவரில் 9 லிட்டரே வரும். நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் வருடத்தில் 80,000 லிட்டர் வரை சேமிக்கலாம்.
◼ உங்களிடம் இரட்டை ஃபிளஷ் டாய்லெட் இருந்தால் பொருத்தமான சமயங்களில் அரை ஃபிளஷ் பட்டனை உபயோகியுங்கள்—நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 36,000 லிட்டரை சேமிக்கலாம்.
◼ உங்கள் தண்ணீர் குழாய்களில் காற்றூட்டிகளை (aerator) பொருத்துங்கள்—அவை ஓரளவு மலிவானவை, தண்ணீரின் அளவை சுமார் பாதியாக குறைத்தாலும் உபயோகத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
உலக கழிவுநீர் பிரச்சினை
“120 கோடிக்கும் அதிகமானோருக்கு இன்னும் சுத்தமான குடிநீர் கிடைத்தபாடில்லை, 290 கோடி மக்களுக்கு கழிவை அப்புறப்படுத்த போதுமான வசதிகள் இல்லை. இது, தண்ணீரால் பரவும் வியாதிகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் பேர், அதில் பெரும்பாலும் குழந்தைகள், மரிப்பதில் விளைவடைகிறது.”—நெதர்லாந்திலுள்ள தி ஹாக்கில் நடந்த இரண்டாவது உலக குடிநீர் கருத்தரங்கு.
[பக்கம் 26-ன் படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மலபாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (எளிதாக்கப்பட்ட தோற்றம்)
1. கழிவுநீர் நிலையத்திற்குள் நுழைகிறது
↓
2. பிரித்தெடுத்தல்
↓
3. கிரிட் சேம்பர்கள் ⇨ ⇨ 4. நிலத்தை நிரப்பும் இடத்திற்கு
↓
5. படிவு தொட்டிகள் ⇨ ⇨ 6. கடலுக்கு
↓
7. அனரோபிக் டைஜஸ்டர்ஸ் ⇨ ⇨ 8. மின்சார ஜெனரேட்டர்கள்
↓
9. பயோசாலிடு சேகரிப்பு தொட்டி
[படங்கள்]
அனரோபிக் டைஜஸ்டர் தொட்டிகள் சகதியை உபயோகமான உரமாகவும் மீத்தேன் வாயுவாகவும் மாற்றுகின்றன
மீத்தேன் வாயு எரிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது