Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிரந்தர சமாதானத்தை யார் தருவார்?

நிரந்தர சமாதானத்தை யார் தருவார்?

நிரந்தர சமாதானத்தை யார் தருவார்?

சமாதானத்திற்காக இவ்வுலகிலுள்ள பல்வேறு மதத் தலைவர்களால் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களுக்கு கடவுள் ஏன் பதிலளிக்கவில்லை? பைபிளில் மனதைக் கவரும் பதில் இருக்கிறது. சமாதானத்தின் மீது கடவுளுக்கு அக்கறை இல்லை என சொல்ல முடியாது; சொல்லப்போனால், சமாதானத்திற்காக ஜெபம் செய்கிற பாதிரிமார்களைவிட மிக அதிக அக்கறை அவருக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல, உலக சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு கடவுள் ஏற்கெனவே திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்துவிட்டார். அதை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளையும் ஏற்கெனவே எடுத்துவிட்டார். அதோடு, தம் நோக்கங்களை மனிதருக்கு தெளிவாக தெரியப்படுத்தியிருக்கிறார். ஆனால் கடவுள் தெரிவித்திருப்பதை இந்த உலக மதங்கள் அசட்டை செய்வது வருந்தத்தக்கதாகும்.

வெகு காலத்திற்கு முன்பே ஒரு ‘வித்துவை,’ அதாவது ஓர் ஆட்சியாளரைப் பற்றி கடவுள் வாக்குறுதி கொடுத்தார்; அவர் யார் என்பதைக் குறித்து பைபிள் படிப்படியாக விவரித்து, அவரது அடையாளங்களை மேன்மேலும் தெளிவாக்குகிறது. (ஆதியாகமம் 3:15; 22:18; 49:10) குறிப்பிடத்தக்க மேசியானிய தீர்க்கதரிசனங்களை வழங்கியதற்குப் பேர்போன தீர்க்கதரிசியாகிய ஏசாயா, முன்னறிவிக்கப்பட்ட இந்தத் தலைவர் பூமியின் மீது “சமாதானப் பிரபு”வாக இருப்பார் என்றும், அவருடைய ஆட்சியில் ‘சமாதானத்திற்கு முடிவிருக்காது’ என்றும் எழுதினார். (ஏசாயா 9:6, 7) பரலோக அரசராக பூமியின் விவகாரங்களில் தலையிட்டு, துன்மார்க்கத்தை ஒழித்து, அதை பரதீஸாக மாற்றுவார்; அவருடைய ஆட்சியில் அநீதியோ வியாதியோ வறுமையோ மரணமோ இருக்காது. சமாதானமும் நித்திய ஜீவனுமே நிலைத்திருக்கும். (சங்கீதம் 72:3, 7, 16; ஏசாயா 33:24; 35:5, 6; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:4) இது எப்பொழுது சம்பவிக்கும்?

உலக சமாதானம் அருகில்

இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவுக்கும் புதிய மனித சமுதாயத்தின் ஆரம்பத்திற்கும் முன்பு உலகை உலுக்கும் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறும் என்றும், இவை அனைத்தும் ஒன்றாக ஒரே சகாப்தத்தில் நடைபெறும் என்றும் இயேசு தமது சீஷர்களிடம் கூறினார். (மத்தேயு 24:3, 7-13) இந்த சம்பவங்களில் பல​—போர்கள், உணவுப் பற்றாக்குறைகள், பூமியதிர்ச்சிகள் ஆகியவை அவற்றில் சில​—ஒவ்வொரு சகாப்தத்திலும் அவ்வப்பொழுது ஏற்பட்டிருக்கின்றன, ஆனால் நம்முடைய சகாப்தத்தைப் போல அவையனைத்தும் ஒரே சமயத்தில் உலகளவில் ஒருபோதும் சம்பவிக்கவில்லை. மேலும், பூமியில் ஜனத்தொகை பெருகியிருப்பதால் இந்தப் பேரழிவுகளின் விளைவுகள் முன்பைவிட படு பயங்கரமாக இருக்கின்றன.

பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவம் சுற்றுச்சூழலை மனிதன் தொடர்ந்து நாசம் செய்துவருவதாகும். (வெளிப்படுத்துதல் 11:18) அதோடு, உலகளாவிய எச்சரிப்பு வேலை, அதாவது “ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி”யைப் பிரசங்கிக்கும் வேலை செய்து முடிக்கப்பட்ட பிறகே முன்னறிவிக்கப்பட்டபடி முடிவு வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கிலும் இந்த வேலையை செய்துவருகின்றனர்.​—மத்தேயு 24:14.

இந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதே உத்தம மனிதருக்கு நற்செய்தியாகும். தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட முழுமையான சமாதானம் தவழும் புதிய உலகம் அருகில் இருக்கிறது! பகைமையும் பயங்கரவாதமும் மீண்டும் தலையெடுக்காதபடி அடியோடு மறைந்துபோகும் என்ற உத்தரவாதத்தை அது அளிக்கும். பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”​—ஏசாயா 11:9.

கடவுள் செவிகொடுக்கும் ஜெபங்கள்

கடவுளிடம் ஜெபிப்பது பலன் தராத ஒரு செயலே அல்ல. அது ஓர் அர்த்தமற்ற சடங்கும் அல்ல. யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 65:2) ஆகவே எந்தவொரு சமயத்திலும், பூமியிலுள்ள நேர்மையான மக்கள் ஏறெடுக்கும் எண்ணற்ற ஜெபங்களை அவர் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஜெபங்களை அவர் கேட்பதற்கு நாம் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றனவா? கடவுளைப் பற்றிய பைபிள் சத்தியங்களை கற்றுக்கொள்ளும் நேர்மை இருதயமுள்ளவர்கள் அவற்றின்படி செயல்பட்டு, அவரை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கும் ‘மெய் வணக்கத்தாராக’ வேண்டும் என பைபிள் காட்டுகிறது. (யோவான் 4:23, NW) அவருடைய விருப்பங்களை மதிக்காதவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பதில்லை: “[தேவனுடைய] வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.”​—நீதிமொழிகள் 28:9.

வருத்தகரமான விஷயம் என்னவென்றால், சமாதானத்தை கொண்டுவருவதற்கு கடவுள் கொண்டுள்ள நோக்கத்தைப் பற்றி இன்று மதத் தலைவர்கள் அநேகர் கற்பிப்பதுமில்லை, அதற்காக ஜெபிப்பதுமில்லை. மாறாக, இத்தகைய பிரச்சினைகளை மனித அரசாங்கங்கள் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் ஜெபம் செய்கிறார்கள். ஆனால், “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என கடவுளுடைய வார்த்தை தெளிவாக சொல்கிறது.​—எரேமியா 10:23.

“கடைசி நாட்களில்,” அதாவது நம்முடைய சகாப்தத்தில், சமாதான பிரியர்கள் ‘யெகோவாவின் ஆலயமாகிய’ அடையாளப்பூர்வமான ‘மலைக்கு’​—மெய் வணக்கத்திற்கு⁠—⁠திரண்டு வருவார்கள் என முன்னுரைக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வார்கள் என்றும் சொல்லப்பட்டது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”​—ஏசாயா 2:2-4.

இந்த வார்த்தைகளுக்கு இசைவாக வாழ முயற்சி செய்யும் மதத் தொகுதி ஏதேனும் இன்று இருக்கிறதா? அல்லது எல்லா மதங்களும் ஏதோ பேச்சுக்கு சமாதானத்தைப் பற்றி சொல்லிக்கொண்டு உண்மையில் போரை தூண்டுகின்றனவா? அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகளை சந்திக்கும்போது, சமாதானம் என்ற விஷயத்தைப் பற்றி அவர்களிடம் பேசி, எந்த மதம் எல்லாரோடும் சமாதானமாக வாழ கற்பிக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். (g02 10/22)