முப்பது வருடங்களுக்கு பிறகு அற்புத சந்திப்பு
முப்பது வருடங்களுக்கு பிறகு அற்புத சந்திப்பு
இரண்டு இளைஞர்கள் 1967-ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருவரும் ஒரே ரூமில் தங்க வேண்டியிருந்தது. அவர்களில் ஒருவர் டெனிஸ் ஷிட்ஸ்; இவர் ஒஹாயோவின் லைமா நகரைச் சேர்ந்தவர்; 18 வயது நிரம்பிய இவர் கானகவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் மார்க் ரூஜ். நியூ யார்க்கின் பஃபலோவை சேர்ந்த இவர் சிவில் இன்ஜினியரிங்கில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு கொஞ்ச கால பழக்கம்தான் ஏற்பட்டது. இருவருமே பல்கலைக்கழக படிப்பை தொடரவில்லை; மாறாக அவரவர் வழியைப் பார்த்து போய்விட்டனர். முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக உருண்டோடிவிட்டன. அதன்பின் ஒருநாள் டொமினிகன் குடியரசில் இருவரும் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. இந்த அற்புதமான சந்திப்பு தற்செயலாக நிகழ்ந்தது உண்மைதான். ஆனால் இதற்கு வேறு காரணமும் இருந்தது. அது என்ன? இதற்கு விடைகாண, இருவரது வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களை முதலில் கவனிக்கலாம்.
டெனிஸ் போருக்கு செல்கிறார்
முதல் ஆண்டு கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு டெனிஸ் வீடு திரும்பினார். அதன்பின் டிசம்பர் 1967-ல் ஐ.மா.-வின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, ஜூன் 1968-ல் அவர் வியட்நாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கே போரின் கோரக் காட்சிகளை கண்ணார கண்டார். அவரது ராணுவப் பணி 1969-ல் முடிவுக்கு வந்தபோது ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பினார். இறுதியில் ஒஹாயோவில் இருந்த ஒரு பெரிய கம்பெனியில் அவருக்கு வேலை கிடைத்தது. இருந்தாலும் திருப்தி கிடைக்கவில்லை.
“அலாஸ்காவிற்கு சென்று பண்ணை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்றுதான் சிறு வயதிலிருந்தே கனவு கண்டு கொண்டிருந்தேன்” என்கிறார் டெனிஸ். ஆகவே 1971-ல் அவரும் அவரது உயர்நிலைப் பள்ளித் தோழரும் அந்தக் கனவை நனவாக்க முற்பட்டனர். ஆனால் பண்ணை வைப்பதற்கு பதிலாக அவர் பல எடுபிடி வேலைகளை செய்தார். கொஞ்ச காலம் ஒரு கூடாரத்தில் தங்கி காட்டுத்தீ அணைப்பு பணியில் ஈடுபட்டார். தாடி வைத்துக்கொண்டு, தலைமுடியை நீளமாக வளர்த்தார், மாரிஜுவானா புகைக்கவும் ஆரம்பித்தார்.
1972-ல், மார்டி கிராஸ் என்ற விழாவில் கலந்துகொள்ள ஆங்கரேஜிலிருந்து லூயிஸியானாவின் நியூ ஆர்லியன்ஸுக்கு டெனிஸ் சென்றார். அதன்பின் அர்கன்ஸாஸின் காடுகளில் ஒரு சிறிய வீடு கட்டினார். அங்கே வீடுகளுக்கு சட்டங்கள் போடும் வேலையையும் கான்க்ரீட் பூசும் வேலையையும் செய்தார். 1973, ஜூன் மாதத்தில், வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என தெரிந்துகொள்ள ஓசி சவாரிகள் செய்து நாட்டைச் சுற்றிவந்தார்.
போர் எதிர்ப்பு இயக்கத்தில் மார்க்
டெனிஸ் சென்றுவிட்ட பிறகு மார்க் அந்தப் பல்கலைக்கழகத்தில் இன்னும் சில செமஸ்டர்களுக்கு தங்கினார். ஆனால் போரை ஆதரித்த ஒரு அமைப்புமுறையின் பாகமாக இருக்கக்கூடாது என முடிவு செய்தார். அதனால் மறுபடியும் பஃபலோவுக்கு சென்று ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் ஃபோர்மேனாக சில காலம் வேலை செய்தார். போர் முயற்சிகளை இன்னும் ஜீரணிக்க முடியாதவராக, தன் வேலையை விட்டுவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு, நாட்டின் மறுமுனையிலுள்ள கலிபோர்னியாவின் சான் பிரான்ஸிஸ்கோவிற்கு சென்றார். டெனிஸும் மார்க்கும் ஒரே சமயத்தில் சான் பிரான்ஸிஸ்கோவில் கொஞ்ச காலம் இருந்தனர்; அது அப்போது அவர்களுக்கே தெரியாது.
டெனிஸைப் போலவே மார்க்கும் தாடியோடும் நீண்ட தலைமுடியோடும் இருந்தார், மாரிஜுவானா புகைக்கவும் ஆரம்பித்திருந்தார். ஆனால் மார்க் போர் எதிர்ப்பு இயக்கத்தில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந்தார், ஆர்ப்பாட்டங்களிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொண்டார். ராணுவத்தில் சேராமல் தப்பித்ததற்காக FBI அவரை வலைவீசி தேடியது; ஆகவே பிடிபடாமல் இருப்பதற்காக சில வருடங்களுக்கு அவர் போலிப் பெயர்களில் உலவினார். சான் பிரான்ஸிஸ்கோவில் ஹிப்பியாக வாழ்ந்தார். அங்கே 1970-ல் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவரை வீட்டில் சந்தித்தனர்.
மார்க் இவ்வாறு விளக்குகிறார்: “நான் கொஞ்சம் ஆர்வம்
காட்டியதாக அவர்கள் நினைத்திருப்பார்கள் போலும், அதனால் மறுபடியும் வந்தார்கள். ஆனால் நான் வீட்டில் இல்லாததால் ஒரு பச்சைநிற பைபிளையும் மூன்று புத்தகங்களையும் விட்டுச்சென்றார்கள்.” இருந்தாலும் அரசியல் கிளர்ச்சிகளிலும் ஜாலியாக பொழுது போக்குவதிலுமேயே அவர் மூழ்கியிருந்ததால் அந்தப் புத்தகங்களை வாசிக்கவில்லை. மேலும் FBI, விடாமல் அவரை தேடியது. ஆகவே இன்னொரு போலிப் பெயரில் வாஷிங்டன், டி.ஸி.-க்கு குடிமாறினார். அவரது கர்ல்பிரண்ட் காத்தி யானிஸ்கிவிஸ் அங்கே அவருடன் சேர்ந்துகொண்டார்; இருவருக்கும் பல்கலைக்கழகத்தில் பழக்கம் ஏற்பட்டிருந்தது.இறுதியாக 1971-ல் மார்க் FBI-யிடம் மாட்டிக்கொண்டார். இரண்டு FBI ஏஜென்டுகளின் காவலோடு வாஷிங்டன், டி.ஸி.-யிலிருந்து நியூ யார்க்கிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்; அவர் கனடாவிலுள்ள டோரான்டோவிற்கு செல்லும்படி அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். நாட்டின் ஒழுங்கிற்கு அவர் ஊறு விளைப்பதாக FBI நினைக்காததால் நாட்டை விட்டு வெளியேறும்படி மட்டுமே சொன்னார்கள். அதற்கடுத்த வருடம் காத்தியும் அவரும் மணம் செய்துகொண்டு கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் காப்ரியோலா தீவிற்கு சென்றார்கள். அவர்கள் சமுதாயத்தை விட்டு தப்பிக்க விரும்பினார்கள், ஆனாலும் வாழ்க்கைக்கு வேறு நோக்கம் இருக்க வேண்டுமென உணர்ந்தார்கள்.
சாட்சிகளானார்கள்
டெனிஸ் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி நாட்டை சுற்றிக்கொண்டிருந்தார் என்பது உங்கள் நினைவில் இருக்கும். அவர் மொன்டானாவிற்கு சென்று ஷனுக் பட்டணத்திற்கு வெளியே வேலை பார்த்துவந்தார்; ஒரு விவசாயிக்கு தானிய அறுவடையின்போது உதவிசெய்வதே அவர் வேலை. அந்த விவசாயியின் மனைவியும் மகளும் யெகோவாவின் சாட்சிகள். டெனிஸ் வாசிப்பதற்கு அவர்கள் ஒரு விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்திருந்தனர். சீக்கிரத்திலேயே, சாட்சிகள்தான் உண்மை மதத்தைக் கடைப்பிடித்தனர் என டெனிஸுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.
டெனிஸ் ஒரு பைபிளை எடுத்துக்கொண்டு அந்த பண்ணையை விட்டு மொன்டானாவிலுள்ள காலஸ்பெல் என்ற நகருக்கு குடிமாறிச் சென்றார். அங்கே யெகோவாவின் சாட்சிகளது கூட்டங்களுக்கு முதன்முறையாக சென்றார். அந்த முதல் கூட்டத்திலேயே தனக்கு பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன் பின் கொஞ்ச காலத்திற்குள் தலைமுடியை வெட்டி, தாடியையும் எடுத்துவிட்டார். 1974 ஜனவரி மாதத்தில் முதல் முறையாக பிரசங்க ஊழியத்திற்குச் சென்றார்; 1974, மார்ச் 3 அன்று மொன்டானாவிலுள்ள போல்ஸன் நகரில் ஒரு தண்ணீர் தொட்டியில் முழுக்காட்டப்பட்டார்.
இதற்கிடையில் காப்ரியோலா தீவில் வாழ்ந்த மார்க்கும் காத்தியும் தங்களுக்கு சமயம் இருந்ததால் பைபிளை படித்துப் பார்க்கலாமென முடிவு செய்தனர். கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளை படிக்க ஆரம்பித்தனர்; ஆனால் அந்தப் பழங்காலத்து ஆங்கிலம் அவர்களுக்கு சரியாக புரியவில்லை. அப்போதுதான், சில வருடங்களுக்கு முன்பு சாட்சிகள் கொடுத்த பைபிளும் புத்தகங்களும் இன்னமும் தன்னிடம் இருந்தது மார்க்கிற்கு ஞாபகம் வந்தது. அவர்கள் பைபிளையும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் மற்றும் பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தையா? என்ற புத்தகங்களையும் படித்தனர். கற்றுக்கொண்ட விஷயங்கள் இருவரது மனங்களையும் வெகுவாக கவர்ந்தன.
மார்க் இவ்வாறு விளக்குகிறார்: “எந்த சந்தர்ப்பத்திலும் போருக்குச் செல்லாத கிறிஸ்தவ பிரிவினரைப் பற்றி சத்தியம் புத்தகம் குறிப்பிட்டதுதான் குறிப்பாக என் நெஞ்சத்தைத் தொட்டது. அப்படிப்பட்டவர்கள்தான் உண்மை கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறவர்கள் என்ற தெளிவு மனதில் பிறந்தது.” கொஞ்ச காலத்திற்குள் மார்க்கும் காத்தியும் மிச்சிகனிலுள்ள ஹோடனுக்கு திரும்பினர்; கைது செய்யப்படும் ஆபத்து இருந்தும், காத்தியின் குடும்பத்தாரை சந்திக்க அங்கு சென்றனர். அப்போதும் பார்ப்பதற்கு ஹிப்பிகளைப் போலவே இருந்த அவர்கள், சாட்சிகளுடைய ஒரு கூட்டத்திற்குச் சென்றனர். பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, மிச்சிகனில் தங்கிய அந்த மாதம் முழுவதும் பைபிள் படித்தனர்.
காப்ரியோலா தீவிற்கு திரும்பியபோது பிரிட்டிஷ் கொலம்பியாவின் நாநைமோ நகரின் தெருவில் ஒரு சாட்சியை சந்தித்தனர்; பைபிளைப் படிக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தனர். அதே நாளில் ஒரு கார்நிறைய சாட்சிகள் ஃபெர்ரி போட்டில் அவர்களை சந்திக்க வந்தனர், பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிற்பாடு மார்க்கும் காத்தியும் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து 1974, மார்ச் 10-ஆம் தேதியன்று இருவரும் முழுக்காட்டுதல் எடுத்தனர். டெனிஸ் முழுக்காட்டப்பட்டு சரியாக ஒரே வாரம்தான் ஆகியிருந்தது!
முழுநேர ஊழியராக டெனிஸ்
செப்டம்பர் 1974-ல் டெனிஸ் ஒரு பயனியராக, அதாவது முழுநேர ஊழியராக சேவைசெய்ய தொடங்கினார். “நான் சந்தோஷமாக பயனியர் ஊழியம் செய்தேன், ஆனாலும் என்
ஊழியத்தை இன்னமும் அதிகரிக்க விரும்பினேன்; அதனால் 1975 ஜூலை மாதம், நியூ யார்க்கின் புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது தலைமை அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பம் அனுப்பினேன். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் எனக்கு அழைப்பு வந்தது” என்கிறார் டெனிஸ்.டவர்ஸ் ஹோட்டலாக இருந்த கட்டிடத்தை தலைமையக ஊழியர்கள் தங்கும் இடமாக மாற்றுவதில் உதவிசெய்வதே டெனிஸுக்கு கிடைத்த முதல் நியமிப்பு. அங்கே அவர் பல வருடங்கள் வேலை செய்தார், டைல்ஸ் போடும் பணியாளர்களை கண்காணித்து வந்தார். அதன்பின் திருமணம் செய்துகொள்ள ஆசை வரவே, கலிபோர்னியாவுக்கு சென்றார். 1984-ல், கத்தீட்ரல் சிட்டி சபையில் மூப்பராக பணியாற்றிய சமயத்தில் காத்தி என்ஸ் என்ற பயனியரை மணம் முடித்தார்.
கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளில் முழுமையாக ஈடுபடுவதற்காக தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதென டெனிஸும் காத்தியும் தீர்மானம் செய்தார்கள். ஆகவே தென் கலிபோர்னியாவில் கட்டிட வேலையில் கட்டு கட்டாக பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் டெனிஸ் அவற்றை உதறித்தள்ளினார். 1988-ல் அவரும் காத்தியும் யெகோவாவின் சாட்சிகளது சர்வதேச கட்டுமான பணியில் ஈடுபட விண்ணப்பித்தனர். அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அவர்களுக்கு நியமிப்பு வந்தது; அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் அயர்ஸில் நடந்துவந்த கிளைக்காரியாலய கட்டுமான திட்டத்தில் பணிபுரியும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
1989-ல், யெகோவாவின் சாட்சிகளது கட்டுமான பணியில் நிரந்தர ஊழியர்களாக சேவிக்கும்படி டெனிஸுக்கும் காத்திக்கும் அழைப்பு வந்தது. இந்த விசேஷ முழுநேர ஊழியத்தில் அவர்கள் சூரினாமிலும் கொலம்பியாவிலும் இருமுறை பணியாற்றியிருக்கிறார்கள். ஈக்வடார், மெக்சிகோ, டொமினிகன் குடியரசு ஆகிய இடங்களில் கிளைக்காரியாலயங்கள் கட்டப்பட்டபோதும் அவர்கள் கைகொடுத்தனர்.
முழுநேர ஊழியராக மார்க்
1976-ல் மார்க்கிற்கும், கட்டாய ராணுவ சேவையை தவிர்ப்பதற்காக கனடாவிற்கு தப்பியோடிய ஆயிரக்கணக்கான மற்ற இளம் அமெரிக்கர்களுக்கும் ஐ.மா. அரசு பொது மன்னிப்பு வழங்கியது. மார்க்கும் காத்தியும்கூட ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்காக தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள விரும்பினர். ஆகவே மார்க் ஒரு சர்வேயராக பகுதிநேர வேலை பார்த்தார்; அவரும் காத்தியும், தங்கள் முழுக்காட்டுதலுக்கு முன்பு வாங்கிய அத்தனை கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்தார்கள்.
1978-ல் கனடாவிலிருந்த சாட்சிகள், ஒன்டாரியோவின் டோரான்டோவில் ஒரு புதிய கிளைக்காரியாலயத்தைக் கட்ட திட்டமிட்டனர்; அந்த சமயத்தில், அங்கு பணிபுரிவதற்கு முன்வரும் நிலையில் மார்க்கும் காத்தியும் இருந்தார்கள். சர்வே செய்வதில் மார்க்கிற்கு அனுபவம் இருந்ததால் அந்தக் கட்டுமான பணிக்கு இருவரும் அழைக்கப்பட்டனர். ஜார்ஜ்டவுனில் நடந்துவந்த கட்டுமான பணி 1981, ஜூனில் முடியும்வரை அவர்கள் அங்கு சேவை செய்தார்கள். அதன்பின் மறுபடியும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி ஹால் ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டார்கள். அது முடிவடைந்த போது கனடா கிளைக்காரியாலயத்தின் விஸ்தரிப்பு வேலைக்கு கைகொடுக்க மறுபடியும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
1986-ல், ஜார்ஜ்டவுனில் சில மாதங்கள் இருந்த பிற்பாடு மார்க்கும் காத்தியும் கனடா கிளைக்காரியாலயத்தின் நிரந்தர ஊழியர்களாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இன்றுவரை அவர்கள் அங்குதான் சேவை செய்துவருகிறார்கள். அதேசமயத்தில் இன்னும் அநேக நாடுகளில் நடைபெற்ற கட்டுமான வேலைகளில் பங்குகொள்ளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு ஏராளம் கிடைத்திருக்கிறது. சர்வே செய்வதில் மார்க்கிற்கு அனுபவம் இருப்பதால் தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளைக்காரியாலய கட்டிடங்களுக்காகவும் அசெம்பிளி மன்றங்களுக்காகவும் சர்வே செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
கடந்த பல ஆண்டுகளாக அவரும் காத்தியும் வெனிசுவேலா, நிகாரகுவா, ஹெய்டி, கயானா, பார்படோஸ், பஹாமாஸ், டொமினிகா, ஐக்கிய மாகாணங்கள் (ப்ளோரிடா), டொமினிகன் குடியரசு ஆகிய இடங்களில் சேவை செய்திருக்கின்றனர். இந்த விசேஷ முழுநேர ஊழியத்தினாலேயே டெனிஸை மார்க் மறுபடியும் சந்திக்க முடிந்தது.
டொமினிகன் குடியரசில் மீண்டும் சந்திப்பு
மார்க்கும் டெனிஸும் டொமினிகன் குடியரசில் ஒரேவித பணியில் ஈடுபட்டிருந்தனர்; அது அப்போது அவர்களுக்கே தெரியாது. ஒருநாள் சான்டோ டொமிங்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் இருவரும்
எதிர்பாராத விதமாக சந்தித்தனர். மறுபடியும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசியதில் அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். 33 வருடங்கள் ஓடிவிட்டனவே, அதனால் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. நீங்கள் மேலே படித்தபடி, நடந்ததையெல்லாம் இருவரும் மாறி மாறி சொல்ல, ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்தான். ஆனால் எல்லாவற்றையும்விட, அவர்கள் வாழ்க்கையில் பல ஒற்றுமைகள் இருந்ததுதான் அவர்களுக்கும் அவர்களது அனுபவத்தைக் கேட்ட அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.இருவருமே ஹிப்பிகளைப் போல் வாழ்ந்தார்கள். இருவருமே பொருளாசைமிக்க நவீன வாழ்க்கைமுறையையும் அதன் கவலைகளையும் விட்டு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு சென்றார்கள். காத்தி என்ற பெண்ணை டெனிஸ் மணந்தார்; மார்க் மணம் முடித்த பெண்ணின் பெயரும் காத்திதான். இருவருமே, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்கு முதன்முறையாக சென்ற போது பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டனர். இருவருமே மார்ச் 1974-ல் முழுக்காட்டப்பட்டார்கள். இருவருமே யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தின் அங்கத்தினர்களானார்கள்—டெனிஸ் ஐக்கிய மாகாணங்களிலும் மார்க் கனடாவிலும். இருவருமே, ஆவிக்குரிய இலக்குகளை அடைய தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். (மத்தேயு 6:22) இருவருமே சர்வதேச கட்டுமான பணியில் ஈடுபட்டு, அதற்காக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். டொமினிகன் குடியரசில் தற்செயலாக சந்தித்துக்கொண்ட சமயம் வரை, பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட தங்கள் பழைய நண்பர்கள் எவரையும் இருவருமே சந்திக்கவில்லை.
இப்படி தற்செயலாக நிகழ்ந்த அதிசய சம்பவங்களுக்கு காரணம் விதி என்று மார்க்கும் டெனிஸும் நினைக்கிறார்களா? இல்லவே இல்லை. பைபிள் சொல்கிறபடி, “சமயமும் எதிர்பாராத சம்பவமும் [நம்] அனைவருக்கும் நேரிடுகிறது,” அதுவும் சிலசமயங்களில் மிக சுவாரஸ்யமான விதங்களில் நேரிடுகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (பிரசங்கி 9:11, NW) அதேசமயத்தில், அவர்கள் மறுபடியும் சந்தித்ததற்கு வேறொரு காரணம் இருந்ததையும் ஒப்புக்கொள்கிறார்கள்: அதுதான், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள இருவருக்கும் இருந்த துடிப்பும் யெகோவா தேவன் மேல் இருவருக்கும் இருந்த அன்புமாகும்.
டெனிஸ் மற்றும் மார்க்கின் வாழ்க்கை அனுபவம், பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும் நேர்மை இருதயம் படைத்த அனைவருக்கும் பொதுவாக உள்ள சில விஷயங்களையும் சிறப்பித்துக் காட்டுகிறது. டெனிஸ் சொல்கிறார்: “மக்களுடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளை யெகோவா அறிந்திருக்கிறார், அவர்களது இருதயம் சரியான பக்குவமடையும்போது அவர்களை தம்மிடம் ஈர்த்துக்கொள்கிறார் என்பதை மார்க்கிற்கும் எனக்கும் ஏற்பட்ட அனுபவம் காட்டுகிறது.”—2 நாளாகமம் 16:9; யோவான் 6:44; அப்போஸ்தலர் 13:48, NW.
மார்க் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் தராதரங்களுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றியமைத்து, அவருக்கு ஒப்புக்கொடுத்து, அவரது சேவைக்கு நம்மையே அர்ப்பணிக்கும்போது, யெகோவா தம் மக்களின் நலனுக்காக உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்கையில் நம் திறமைகளையும் வரங்களையும் பயன்படுத்துவார் என்பதைக்கூட எங்கள் அனுபவம் உணர்த்தியிருக்கிறது.”—எபேசியர் 4:8.
யெகோவா தேவன் தம் மக்களின் இருதயப்பூர்வ சேவையை ஆசீர்வதிக்கிறார் என்பது அவர்களது அனுபவம் காட்டும் மற்றொரு உண்மை. அவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டதில் டெனிஸுக்கும் மார்க்கிற்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. டெனிஸ் இவ்வாறு சொல்கிறார்: “விசேஷ முழுநேர ஊழியத்தின் மூலம் ராஜ்ய அக்கறைகளுக்காக சேவை செய்வது பெரும் பாக்கியம். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்ததால் உற்சாகத்தைப் பரிமாறிக்கொண்டு சந்தோஷம் பெற முடிந்திருக்கிறது.”
மார்க் இவ்வாறு சொல்கிறார்: “ராஜ்யத்திற்கு முதலிடம் தருபவர்களை யெகோவா நிச்சயமாகவே ஆசீர்வதிக்கிறார். கனடா கிளை அலுவலகத்தில் அங்கத்தினராக இருப்பதற்கும் சர்வதேச கட்டுமான பணியில் ஈடுபடுவதற்கும் கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்.”
இது அற்புத சந்திப்பா? ஆம், மார்க் சொல்கிற விதமாக, “மறுபடியும் ஒருவரையொருவர் சந்தித்ததால் ஏற்பட்ட அளவில்லா பூரிப்புக்கு உண்மையான காரணம், இருவருமே ஈடிணையற்ற அற்புத கடவுளாகிய யெகோவாவை அறிந்து, நேசித்து, சேவிக்க முடிந்ததுதான்.” (g02 10/22)
[பக்கம் 21-ன் படம்]
டெனிஸ், 1966
[பக்கம் 21-ன் படம்]
மார்க், 1964
[பக்கம் 23-ன் படம்]
தென் டகோடாவில் டெனிஸ், 1974
[பக்கம் 23-ன் படம்]
ஒன்டாரியோவில் மார்க், 1971
[பக்கம் 24-ன் படம்]
2001-ல் தற்செயலாக சந்தித்த பின், டெனிஸும் மார்க்கும் தங்கள் மனைவிகளோடு