எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
அம்மாவாக இருப்பது “அம்மாவாக இருக்க அபார திறமை தேவையா?” (மே 8, 2002) தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. வீட்டில் இருக்கும் தாய்மார்கள் வெளியில் வேலை செய்யும் தாய்மார்களைப் போல அவ்வளவு பிஸியாக இல்லை என்பது இன்று பலருடைய எண்ணம். எல்லா தாய்மார்களும் வேலை செய்யும் தாய்மார்களே என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ள உங்கள் கட்டுரை உதவியது!
டி.எம்.,ஐக்கிய மாகாணங்கள் (g02 11/22)
முதலில் என் கண்ணில் பட்டது பக்கம் 2-ல் காணப்படும் “சூப்பர்வுமன்” படம்தான். அந்தக் கட்டுரையை உடனடியாக வாசிக்க விரும்பினேன். இரண்டு சிறு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதால், ஒரு தாயின் அன்றாட வேலைகளை இந்தக் கட்டுரைகள் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டின என என்னால் சொல்ல முடியும்.
சி.எல்., ஜெர்மனி (g02 11/22)
நான் 12 வயது சிறுமி, இந்தப் பத்திரிகை கையில் கிடைத்தவுடனே அதை வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ‘டாடி’க்கும் எனக்கும், என்னுடைய ‘மம்மி’ என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இப்பொழுது நன்றாக புரிந்துகொண்டேன். அவர்களை பாராட்டுகிறேன், இப்பொழுது மம்மிக்கு கூடமாட அதிக உதவியும் செய்கிறேன்!
ஏ.எல்., ஐக்கிய மாகாணங்கள் (g02 11/22)
இரண்டு வருஷங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பையன் பிறந்தான். அதுவரை பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு முழுநேர பிரசங்கியாக இருந்தேன். என்னுடைய முன்னாள் வாழ்க்கைப் பாணிக்காக ஏங்கியதால், ஒரு தாயாக என்னுடைய கடமையை செய்ய லாயக்கற்றவளாக உணர்ந்தேன். எனக்கு மனதளவில் தெம்பு தேவைப்பட்டது, இந்தக் கட்டுரைகளைப் படித்தபோது அந்தத் தெம்பு கிடைத்தது.
எஸ்.டி., இத்தாலி (g02 11/22)
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உங்களது அறிவுரையை நான் இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருக்கிறேன். இந்தக் கட்டுரைகளை வாசிப்பதற்கு முன்னரே நான் இதை செய்ய ஆரம்பித்துவிட்டேன், ஆனால் அப்படி செய்ததால் எனக்கு குற்றவுணர்வு ஏற்பட்டது. சமநிலையை காத்துக்கொள்ளும்வரை அப்படி உணர வேண்டியதில்லை என்பதை புரிந்துகொள்ள உதவி செய்ததற்கு நன்றி.
சி.சி., ஐக்கிய மாகாணங்கள் (g02 11/22)
தங்களது கடின உழைப்புக்கு தகுந்த மரியாதை கிடைப்பதில்லை என தாய்மார்கள் சிலர் நினைக்கிறார்கள். இந்தக் கட்டுரைகள் அவர்களுக்குரிய மரியாதையை தந்தது. நான்கு பிள்ளைகளுக்கு தாயாக இருப்பதால், வீட்டு வேலையையும் ஆபீஸ் வேலையையும் சமநிலைப்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை அறிந்திருக்கிறேன். கடினமாக உழைக்கும் தாய்மார்களைப் பற்றிய விஷயங்களை சாலொமோன் எழுதும்படி யெகோவா செய்திருப்பது, எனக்கு ஆறுதலை அளித்து என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய உற்சாகத்தை தருகிறது.
ஈ.எஸ்., ஜெர்மனி (g02 11/22)
மூன்று வயது பெண் குழந்தைக்கு தாயாக, எப்பொழுது பார்த்தாலும் நான் அதிக களைப்பாக இருக்கிறேன், இதனால் குற்றவுணர்வு என்னை அலைக்கழிக்கிறது. இப்படி ஏற்படுவது எனக்கு மட்டும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவி செய்தன; என்னுடைய நிலைமையை முன்னேற்றுவிக்க நான் என்ன செய்யலாம் என்பதற்கு மிக அருமையான ஆலோசனைகளையும் கொடுத்தன.
கே.ஜே., ஐக்கிய மாகாணங்கள் (g02 11/22)
ஒரு தாய் தன்னுடைய சிறுகுழந்தையை தூக்கி வைத்திருப்பது போல இந்தப் பத்திரிகையின் அட்டைப்படம் காட்டுகிறது. அந்தக் குழந்தை கையில் “ஹாட் டாக்” வைத்திருப்பது போல தோன்றுகிறது. குழந்தைகளுக்குரிய இதய-நுரையீரல் சார்ந்த மறு உயிர்விப்பு சிகிச்சைமுறையை (CPR) இப்பொழுதுதான் நானும் என்னுடைய மனைவியும் படித்து முடித்தோம். “ஹாட் டாக்” சாப்பிடுவதுதான் குழந்தைகளுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் மூச்சடைப்பு வருவதற்கு நம்பர் 1 காரணம் என அந்த ஆசிரியர் கூறினார். குழந்தைகளை “ஹாட் டாக்” சாப்பிட அனுமதிப்பதை அவர் கடுமையாக கண்டனம் செய்தார்.
ஜி.ஈ., ஐக்கிய மாகாணங்கள் (g02 11/22)
“விழித்தெழு!” பதில்: “ஹாட் டாக்” சாப்பிடுவது குழந்தைகளுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் மூச்சடைப்பை உண்டாக்கும் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். எங்களுடைய அட்டைப் படத்தில், தாயின் கைகளில் இருக்கும் குழந்தை உண்மையில் ஒரு கேரட்டைத்தான் சூப்பிக்கொண்டிருக்கிறது.
பூமியதிர்ச்சிகள் “பூமியதிர்ச்சியில் தப்பியவர்கள் சொல்லும் கதை” என்ற தொடர் கட்டுரைகளை நான் வாசித்தேன். (ஏப்ரல் 8, 2002) “20-ம் நூற்றாண்டு முழுவதிலும் 7.0 அதிர்வு அளவில் பதிவான பூமியதிர்ச்சிகளும் அதைவிட பெரிய பூமியதிர்ச்சிகளும் ‘பெரும்பாலும் ஒரே சீராக’ நடந்திருக்கின்றன” என்ற ஓர் ஆதாரத்தை நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் 1990-களில் பூமியதிர்ச்சிகளில் பெரும் அதிகரிப்பு இருந்திருப்பதாக 1999 உவர்ல்டு அல்மனாக் காட்டுகிறது.
எஃப்.ஏ., இத்தாலி (g02 11/08)
“விழித்தெழு!” பதில்: இந்தப் பிரச்சினையில் எந்தப் பக்கத்தையும் சாராமல், 20-ம் நூற்றாண்டில் பொதுவாக எத்தனை பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பது சம்பந்தமாக நிலநடுக்க ஆய்வாளர்கள் சிலருடைய கருத்தையே எங்களுடைய கட்டுரை சுட்டிக்காட்டியது. பூமியதிர்ச்சிகளின் எண்ணிக்கை ‘பெரும்பாலும் ஒரே சீராக’ இருந்ததாக ஒருவர் நம்பினாலும்கூட, மத்தேயு 24-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனம் நம்முடைய சகாப்தத்தில் நிறைவேறி வருகிறது என்ற குறிப்பையே நாங்கள் குறிப்பிட்டோம். ‘மகா பூமியதிர்ச்சிகள்’ உண்டாகும் என்று மட்டுமே இயேசு கூறினார்.—லூக்கா 21:11.