எய்ட்ஸ் ஆப்பிரிக்காவிற்குள் படையெடுக்கிறது
எய்ட்ஸ் ஆப்பிரிக்காவிற்குள் படையெடுக்கிறது
“நம்முடைய காலத்தில் அழிவுக்குரிய ஒரு பயங்கரமான சூழல் எங்கும் நிலவுகிறது.”
ஆப்பிரிக்காவில் எச்ஐவி/எய்ட்ஸ்-ற்கான ஐநா சிறப்பு தூதுவர் ஸ்டீவன் லூயஸ் சொன்ன இந்த வார்த்தைகள் ஆப்பிரிக்காவிலுள்ள சஹாராவின் தென்னக நாடுகளைச் சேர்ந்த பலருடைய பீதியைதான் எதிரொலிக்கின்றன.
எச்ஐவி பரவுவதற்கு எண்ணிறந்த காரணிகள் இருக்கின்றன. எய்ட்ஸ் மற்ற பிரச்சினைகளையும் மேலும் மோசமாக்கியுள்ளது. எய்ட்ஸ் மையம் கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிலும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படும் நிலைமைகளுக்கு பெரும்பாலும் காரணமாக அமைவது பின்வருபவையே.
ஒழுக்கநெறி. பாலுறவே எச்ஐவி தொற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் ஒழுக்க தராதரங்கள் தெளிவாக இல்லாதது இந்நோய் பரவுவதை தீவிரப்படுத்துகிறது. ஆனால் மணமாகாதவர்களிடம் பாலியல் ஈடுபாட்டை தவிர்க்கும்படி சொல்வது நடைமுறைக்கு
ஒத்துவராத விஷயம் என பலர் உணருகிறார்கள். தென் ஆப்பிரிக்க ஜோஹெனஸ்பர்க்கிலுள்ள த ஸ்டார் என்ற செய்தித்தாளில் “செக்ஸ் கூடாது என வெறுமனே எச்சரிப்பது டீனேஜர்களிடம் பலிக்காது” என எழுதுகிறார் ஃப்ரான்ஸ்வா ட்யுஃபூர். ஏனெனில் “தங்களுடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும், நடத்தை எப்படி இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை ஆபாசமான காட்சிகளை தினம் தினம் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள்.”இளைஞருடைய நடத்தையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு உறுதி செய்யப்படுவதாகவே தெரிகிறது. உதாரணமாக, 12 முதல் 17 வயது வரையான இளைஞரில் மூன்றில் ஒரு பங்கினர் பாலுறவில் ஈடுபட்டிருந்ததாக ஒரு நாட்டில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது.
தென் ஆப்பிரிக்காவில் கற்பழிப்பு என்பது ஒரு தேசிய நெருக்கடி என வருணிக்கப்படுகிறது. “இந்நாட்டு பெண்களுக்கு, முக்கியமாக சிறு பிள்ளைகளுக்கு, மற்ற வியாதிகளைவிட இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது” என ஜோஹெனஸ்பர்க்கிலுள்ள சிட்டிஸன் செய்தி அறிக்கை குறிப்பிட்டது. “சமீப காலங்களில் சிறு பிள்ளைகளை கற்பழிப்பது இருமடங்காகியுள்ளது . . . எச்ஐவி தொற்றியவர் ஒரு கன்னியை கற்பழித்தால் குணமாகிவிடுவார் என்ற தவறான நம்பிக்கையில்தான் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யப்படுவதாக தெரிகிறது” என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
பாலுறவால் கடத்தப்படும் நோய். இந்நாட்டில் பாலுறவால் கடத்தப்படும் நோய்களை உடையவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். “பாலுறவால் கடத்தப்படும் நோய், எச்ஐவி-1 என்ற தொற்றை இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வரை அதிகப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகிறது” என சௌத் ஆஃப்ரிக்கன் மெடிக்கல் ஜர்னல் குறிப்பிட்டது.
வறுமை. ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகள் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கின்றன; இது எய்ட்ஸ் பரவுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அடிப்படை தேவைகளாக கருதப்படுபவை வளர்ந்துவரும் பெரும்பாலான தேசங்களில் கிடைப்பதில்லை. பெரிய பெரிய சமுதாயங்களில் வசிப்பவர்களுக்கு மின் வசதியும் இல்லை, சுத்தமான குடிநீர் வசதியும் இல்லை. கிராமப்புறங்களில் போதுமான சாலை வசதிகள் இல்லை அல்லது சாலைகளே இல்லை. அநேகர் ஊட்டச்சத்து குறைவினால் அவதியுறுகிறார்கள்; போதுமான மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு இல்லை.
வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களையும் எய்ட்ஸ் பெருமளவு பாதித்துள்ளது. இந்நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுரங்க நிறுவனங்களின் உற்பத்தியை பாதிக்கிறது. ஆகவே ஆட்களை வைத்து தொழில் நடத்துவதற்கு பதிலாக மெஷின்களைப் பயன்படுத்தி, இழப்புக்கு ஈடுகட்டும் வழிகளைக் குறித்து சில நிறுவனங்கள் ஆலோசிக்கின்றன. 2000-ம் ஆண்டில் ஒரு பிளாட்டின சுரங்கத்தில் பணிபுரிந்தவர்கள் மத்தியில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இருமடங்கானது; மொத்தத்தில் சுமார் 26 சதவீத பணியாளர்களுக்கு இந்நோய் தொற்றியிருந்ததாக கணக்கிடப்பட்டது.
பெற்றோரை இந்நோய் காவுகொள்வதால் பெரும் எண்ணிக்கையான பிள்ளைகள் அநாதைகளாகிவிடுவதே எய்ட்ஸின் வேதனை தரும் விளைவுகளில் ஒன்று. பெற்றோரை இழந்து, காசு பணத்திற்கும் வழியின்றி தவிப்பதோடு, இந்தப் பிள்ளைகள் தங்களைத் தொற்றிக்கொண்ட எய்ட்ஸுடன் சேர்ந்துவரும் அவமானத்தையும் சகிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கான வசதியோ விருப்பமோ நெருங்கிய உறவினருக்கு அல்லது சமுதாயத்தினருக்கு இல்லை. அநாதைப் பிள்ளைகள் பலரும் பள்ளியிலிருந்து விலகுகிறார்கள். சில பிள்ளைகளோ விபச்சாரத்தில் ஈடுபட்டு இந்த வியாதியை இன்னும் பரவச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட அநாதைப் பிள்ளைகளுக்கு உதவ அநேக நாடுகள் அரசாங்க மற்றும் தனியார் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
அறியாமை. தங்களுக்கு எச்ஐவி தொற்றியிருப்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. அந்த நோய்க்கே உரிய அவப்பெயருக்கு பயந்து அநேகர் பரிசோதனை செய்ய விரும்புவதில்லை. “எச்ஐவி தொற்றியவர்கள் அல்லது தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு மருத்துவ துறை சிகிச்சை வழங்குவதில்லை, அவர்களுக்கு வீடோ வேலையோ கொடுக்கப்படுவதில்லை, உற்றார் உறவினர் பிரிந்துவிடுகிறார்கள், காப்பீடு வசதி மறுக்கப்படுகிறது, வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது” என இணை ஐக்கிய நாட்டு எச்ஐவி/எய்ட்ஸ் திட்டத்தின் (UNAIDS) செய்தி வெளியீடு கூறியது. சிலருக்கு எச்ஐவி இருப்பது தெரிய வந்ததும் அவர்களை கொலையே செய்துவிடுகிறார்கள்.
கலாச்சாரம். ஆப்பிரிக்காவின் எண்ணற்ற கலாச்சாரங்களில் பிற பெண்களிடம் சகவாசம் வைத்துக்கொள்வதைப் பற்றியோ, பாலுறவை தவிர்ப்பதை பற்றியோ அல்லது பாதுகாப்பான பாலுறவு பழக்கங்களைப் பற்றியோ ஆண்களிடம் பேச பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்களுடைய கலாச்சார நம்பிக்கைகள் அவர்கள் அறியாமையில் கிடப்பதையும் எய்ட்ஸ் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதையுமே காட்டுகின்றன. உதாரணமாக, பில்லிசூனியத்தால்தான் இந்த சுகவீனம் ஏற்படுகிறது என அவர்கள் நம்பி அதைக் குணப்படுத்த சூனிய வைத்தியர்களை நாடுகிறார்கள்.
குறைவான மருத்துவ வசதிகள். ஏற்கெனவே குறைந்த வசதிகளை உடைய மருத்துவமனைகள் எய்ட்ஸின் விளைவாக அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. உள்நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் எச்ஐவி பாஸிட்டிவ் நோயாளிகளே என இரண்டு பெரிய மருத்துவமனைகள் அறிவிக்கின்றன. 140 சதவீத கொள்ளளவுடன் தனது வார்டுகள் இயங்கி வருவதாக க்வாஸூலூ-நட்டால் என்ற மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறினார். சில சமயங்களில் இரு நோயாளிகள் ஒரு படுக்கையை பயன்படுத்த வேண்டியுள்ளது, மூன்றாவது நோயாளி வந்தால் அவர் அதற்கு கீழே தரையில்தான் படுக்க வேண்டியுள்ளது!—சௌத் ஆஃப்ரிக்கன் மெடிக்கல் ஜர்னல்.
ஆப்பிரிக்காவின் நிலைமை ஏற்கெனவே கவலைக்கிடமாக இருந்தாலும், அது இன்னும் மோசமடையலாம் என்றே அறிகுறிகள் காட்டுகின்றன. “நாம் இன்னும் இந்தக் கொள்ளை நோயின் ஆரம்ப நிலைகளில்தான் இருக்கிறோம்” என கூறினார் UNAIDS-ஐ சேர்ந்த பீட்டர் பியா.
சில நாடுகளில் இந்நோயை கையாளுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூன் 2001-ல் ஐக்கிய நாடுகளின் பொது சபை எச்ஐவி/எய்ட்ஸ் பற்றி கலந்துரையாட முதல் முறையாக ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தியது. மனித முயற்சிகள் வெற்றியை தேடித் தருமா? எய்ட்ஸ் மரண அணிவகுப்பு எப்போது தடுக்கப்படும்? (g02 11/8)
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
எய்ட்ஸ் நிவாரணி நெவைரப்பின்னும் தென் ஆப்பிரிக்காவின் குழப்பமான நிலையும்
நெவைரப்பின் என்பது என்ன? எழுத்தாளர் நிக்கால் இட்டானோ குறிப்பிடுகிறபடி, இது “ரெட்ரோ வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஒரு மருந்து; [தாயிடமிருந்து ] குழந்தைக்கு எய்ட்ஸ் கடத்தப்படும் வாய்ப்பை இது பாதிக்குப் பாதி குறைத்து விடலாம் என பரிசோதனைகள் காட்டியிருக்கின்றன.” ஒரு ஜெர்மானிய மருந்து கம்பெனி இந்த மருந்தை தென் ஆப்பிரிக்கர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க முன்வந்தது. ஆனாலும், ஆகஸ்ட் 2001-ல் அந்த வழங்கீட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்கு காரணம்?
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தென் ஆப்பிரிக்காவில் 47,00,000 பேருக்கு எச்ஐவி பாஸிட்டிவ் உள்ளது. லண்டனின் தி எக்கானமிஸ்ட் பிப்ரவரி 2002-ல் அறிவித்தபடி, தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி டாபா ம்பீகி, “எய்ட்ஸை எச்ஐவி கிருமியே உண்டாக்குகிறது என்ற பொதுவான கருத்தை சந்தேகிக்கிறார்”; அதோடு “எய்ட்ஸை தடுக்கும் மருந்துகளின் விலை, அவற்றின் பாதுகாப்பு, பயன் ஆகியவற்றைப் பற்றிய ஐயப்பாட்டையும் தெரிவிக்கிறார். அவர் அவற்றிற்கு தடை விதிக்கவில்லை, ஆனால் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் அவற்றை பயன்படுத்தாதிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.” இது ஏன் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது? ஏனெனில், தென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரமாயிரம் குழந்தைகள் எச்ஐவியுடன் பிறக்கின்றன, 25 சதவீத கர்ப்பிணிகள் அந்த வைரஸை சுமக்கிறார்கள்.
இந்தக் கருத்து வேற்றுமைகளின் விளைவாக, நெவைரப்பின் என்ற மருந்தை அரசாங்கம் வழங்க வேண்டுமென வற்புறுத்தி நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் சட்ட நீதிமன்றம், ஏப்ரல் 2002-ல் அதன் தீர்மானத்தை அறிவித்தது. “மருத்துவ உதவி அளிப்பதற்கு தகுதி பெற்ற மருத்துவ ஸ்தாபனங்களில் இந்த மருந்துகள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டதை த வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாளில் ராவி நெஸ்மன் குறிப்பிட்டார். தென் ஆப்பிரிக்க அரசாங்கம் அந்த மருந்தை நாடு முழுவதிலும் உள்ள 18 சோதனைத் தலங்களில் வழங்கிக்கொண்டிருந்தது; இந்தப் புதிய தீர்மானம் அத்தேசத்தில் எச்ஐவி பாஸிட்டிவ் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் நம்பிக்கை ஒளியை பிரகாசிக்கச் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
செல்லை ஏமாற்றும் ஒரு கள்ள வைரஸ்
மனித நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வைரஸின் (எச்ஐவி) சின்னஞ்சிறிய உலகுக்குள் ஒரு கணம் அடியெடுத்து வையுங்கள். “மின்னணு நுண்ணோக்கி வழியாக வைரஸ் நுண்மங்களை பல ஆண்டுகளாக உற்று கவனித்த பிறகும் ஆச்சரியம் தாளவில்லை; இவ்வளவு சின்னஞ்சிறிய ஒன்றின் துல்லியமும் நுணுக்கமுமான வடிவமைப்பு இன்னமும் என்னை மலைக்க வைக்கிறது” என ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார்.
மனிதனின் சராசரியான செல்லைவிட மிக மிகச் சிறியதே பாக்டீரியம். அதைவிட சிறியதுதான் வைரஸ். ஒரு பத்திரிகை குறிப்பிடுகிறபடி, “இந்த வாக்கியத்தின் முடிவிலுள்ள முற்றுப்புள்ளிக்குள் 23 கோடி [எச்ஐவி நுண்மங்கள்] கொள்ளும்” அளவுக்கு எச்ஐவி மிக மிக நுண்மையானது. வைரஸ் உடலிலுள்ள ஒரு செல்லுக்குள் தந்திரமாக நுழைந்து அதை அப்படியே தன் கைக்குள் போட்டுக்கொள்ளும் வரை பெருகுவதில்லை.
எச்ஐவி மனித உடலுக்குள் படையெடுக்கையில், அது நோயெதிர்ப்பு மண்டலத்திலுள்ள பெரிய சேனையோடு எதிர்த்துப் போராட வேண்டும். a இந்த பாதுகாப்பு மண்டலம், எலும்பு மஜ்ஜையால் உற்பத்தி செய்யப்படும் இரத்த வெள்ளை அணுக்களால் ஆனது. இந்த இரத்த வெள்ளை அணுக்களில் டி செல்கள், பி செல்கள் என அறியப்படும் இரு வகையான முக்கிய லிம்போசைட்டுகளும் அடங்கும். இன்னும் சில இரத்த வெள்ளை அணுக்கள் ஃபேகோசைட்டுகள் அல்லது “செல் உண்ணிகள்” என அழைக்கப்படுகின்றன.
டி செல்களில் பல்வேறு வகைகள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளை செய்கின்றன. உதவி டி செல்கள் என அழைக்கப்படுபவை இந்தப் போர்த் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. படையெடுத்து வரும் அந்நியர்களை அடையாளம் கண்டுபிடித்து அந்த எதிரிகளை தாக்கி அழித்துப்போடும் செல்களை உற்பத்தி செய்வதற்கு கட்டளைகளைப் பிறப்பிப்பதில் இந்த உதவி டி செல்கள் துணைபுரிகின்றன. எச்ஐவி தன் தாக்குதலில் முக்கியமாக குறிவைப்பது இந்த உதவி டி செல்களைதான். அந்நிய செல்களின் படையெடுப்பினால் பாதிப்புக்குள்ளான செல்களை அழிக்க கொலையாளி டி செல்களுக்கு தூண்டுதல் அளிக்கப்படுகிறது. தொற்றுகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், நோய் எதிர்ப்புப் பொருட்களை உற்பத்தி செய்வது பி செல்கள்.
தந்திரமான ஒரு திட்டம்
எச்ஐவி ஒரு ரெட்ரோவைரஸ் என வகைப்படுத்தப்படுகிறது. எச்ஐவியின் மரபணு படிவம் டிஎன்ஏ (டிஆக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்) உருவில் அல்ல, ஆனால் ஆர்என்ஏ (ரிபோநியூக்ளிக் அமிலம்) உருவில் அமைந்துள்ளது. ரெட்ரோவைரஸ்களில் லென்டிவைரஸ்கள் என அறியப்படும் ஒரு குறிப்பிட்ட உட்பிரிவைச் சேர்ந்ததே எச்ஐவி; ஏனெனில் மிக மோசமான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் வரை அது நீடித்த காலத்திற்கு உடலுக்குள் பதுங்கியிருக்க முடியும்.
உடலிலுள்ள ஒரு செல்லுக்குள் எச்ஐவி நுழைந்ததும், அந்த செல்லின் நுட்பத்தைப் பயன்படுத்தி அது மேற்கொண்டு தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. அநேக எச்ஐவிகளை உற்பத்தி செய்வதற்காக அது அந்த செல்லின் டிஎன்ஏ-வை ‘புதிதாக புரோக்ராம்’ செய்கிறது. ஆனால் அதற்கு முன்பாக, எச்ஐவி ஒரு வித்தியாசமான “மொழியை” பயன்படுத்த வேண்டும். அது தன் ஆர்என்ஏ-வை டிஎன்ஏ-வாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அந்த செல்லின் அமைப்பு முறையால் இதை வாசித்து புரிந்துகொள்ள முடியும். இதற்காக, ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்டேஸ் என அழைக்கப்படும் ஒரு வைரஸ் என்ஸைமை எச்ஐவி பயன்படுத்துகிறது. முதலில் ஆயிரக்கணக்கான புதிய எச்ஐவி நுண்மங்களை உற்பத்தி செய்தபின்பு நாளடைவில் அந்த செல் செத்துவிடுகிறது. புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட இந்த நுண்மங்கள் பிற செல்களை தாக்குகின்றன.
உதவி டி செல்களின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்ததும் எதிர்த்து தாக்குவதற்கு ஏதுமின்றி பிற சேனைகள் படையெடுத்து உடலை பாழ்படுத்த முடிகிறது. உடல், எல்லா வகையான நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் ஆளாகிறது. தொற்றுக்கு ஆளானவருக்கு எய்ட்ஸ் முற்றிவிடுகிறது. இவ்வாறு எச்ஐவி, நோயெதிர்ப்பு மண்டலம் முழுவதையுமே முடமாக்கிவிடுகிறது.
இது ஓர் எளிய விவரிப்பு மட்டுமே. நோயெதிர்ப்பு மண்டலத்தையும் எச்ஐவி செயல்படுவதையும் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் நிறைய காரியங்கள் தெரியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இந்த சின்னஞ்சிறிய வைரஸ், உலகம் முழுவதிலும் முன்னணியில் இருக்கும் மருத்துவ ஆய்வாளர்களின் உடலையும் மனதையும் கசக்கி பிழிந்துள்ளது; இது பெரும் பணச் செலவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக எச்ஐவியைப் பற்றி அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. “மனித நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வைரஸைப் பற்றி . . . சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களும் அதன் தாக்குதலை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளின் வளர்ச்சியும் உண்மையில் மலைக்க வைக்கின்றன” என சில வருடங்களுக்கு முன்பு டாக்டர் ஷர்வன் பி. நியூலன்ட் என்ற அறுவை மருத்துவர் கூறினார்.
இருந்தாலும், எய்ட்ஸ் எனும் கொலையாளியின் மரண அணிவகுப்பு அத்துமீறி சென்றுகொண்டு இருக்கிறது.
[அடிக்குறிப்பு]
[படம்]
எச்ஐவி, நோயெதிர்ப்பு மண்டலத்திலுள்ள லிம்போசைட்டுகளுக்குள் நுழைந்து அவற்றை புதிதாக புரோக்ராம் செய்து எச்ஐவியை உற்பத்தி செய்கிறது
[படத்திற்கான நன்றி]
CDC, Atlanta, Ga.
[பக்கம் 7-ன் படம்]
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பைபிள் தராதரங்களின்படி வாழ்கிறார்கள்