Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்களில் மணியான கண்டுபிடிப்பு

கண்களில் மணியான கண்டுபிடிப்பு

கண்களில் மணியான கண்டுபிடிப்பு

பாலூட்டிகளின் கண்களில் ஒளி உணர்வுள்ள நரம்பணுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் பல காலமாக அறிந்திருக்கிறார்கள்; அவை உயிரியல் கடிகையை, அதாவது உடலின் இயற்கைக் கடிகாரத்தை செயல்பட வைப்பதையும் அறிந்திருக்கிறார்கள். குச்சி செல்கள் (rods), கூம்பு செல்கள் (cones) என அழைக்கப்படும் பார்வை செல்களே ஒளியை உணரும் பணியை செய்வதாக வெகு காலம் கருதப்பட்டது. ஆனால் 1999-⁠ல், “எவ்வித குச்சிகளும் கூம்புகளும் இல்லாத [இவ்வாறு பார்வையில்லாத] மரபு மாற்றப்பட்ட எலிகளுக்கு ஒளி உணர்வுள்ள இயற்கைக் கடிகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன” என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக சைன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்தது. ஆகவே “கண்களில் உள்ள வேறு செல்களே ஒளியை உணர வேண்டும்” என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தார்கள்.

சிக்கலான இந்த ஒளி உணர்வு செல்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிம்பங்களை உண்டாக்கும் குச்சிகளோடும் கூம்புகளோடும் இவை ஒன்றுகலந்திருந்தாலும் “ஒரு தனி சர்க்யூட்டாக செயல்படுகின்றன, பிம்பங்களை உண்டாக்கும் இந்தப் பார்வை அமைப்போடு ஒரேசமயத்தில் இணைந்து செயல்படுகின்றன” என சைன்ஸ் விளக்குகிறது. கண்மணியின் அளவை நிர்ணயிப்பது, மெலடோனின் ஹார்மோனை சுரக்கச் செய்வது, இரவு பகலுக்கு ஏற்ப மனித உடலின் இயற்கைக் கடிகாரத்தை செயல்பட வைப்பது போன்ற பணிகளையும் இன்னும் பல பணிகளையும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த சர்க்யூட் செய்கிறது. ‘மூட்’ மாற்றங்கள் ஏற்படுவதிலும் இதற்கு பங்கு இருக்கலாம்.

ஒளி உணர்வு செல்கள், சற்று நேரத்திற்கு பளிச்சிடும் ஒளியையெல்லாம் கண்டுகொள்வதில்லை; இவ்வாறு உடலின் இயற்கைக் கடிகாரத்தை குழப்புவதில்லை. ஆனால் ஒளியின் செறிவில் நீண்ட நேர மாற்றங்கள் ஏற்படும்போது அவை செயல்படுகின்றன. இது “மணியான” கண்டுபிடிப்பு என்றும், “பாலூட்டிகளில் ஒளியை உணர்வது எது என்ற ஆராய்ச்சியில் ஒப்பற்ற மைல்கல்” என்றும் ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார்.

உயிரைப் பற்றி நாம் அதிகமதிகமாக கற்றுக்கொள்ளும்போது, நுணுக்கமும் அதேசமயத்தில் புத்திக்கூர்மையும் பொதிந்த வடிவமைப்பின் அத்தாட்சியை அதிகமதிகமாக காண்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட ஆழமான விஷயங்களை அறிந்துகொள்கையில் அநேகர், பைபிளில் உள்ள இந்த வார்த்தைகளின்படி படைப்பாளருக்கு துதிகளை ஏறெடுக்க தூண்டப்பட்டிருக்கிறார்கள்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”​—சங்கீதம் 139:⁠14. (g02 11/22)